The hostile army agitated by Mleccha Shalva! | Shalya-Parva-Section-20 | Mahabharata In Tamil
(சல்லிய வத பர்வம் - 20)
பதிவின் சுருக்கம் : பாண்டவப் படையை எதிர்த்து வந்த மிலேச்சன் சால்வன்; படையைக் கலங்கடித்த சால்வனின் பெரும் யானை; பாண்டவப் படையைப் பிளந்த சால்வன்; சால்வனை எதிர்த்த திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனின் தேரை நொறுக்கிய யானை; யானையைக் கொண்ட திருஷ்டத்யும்னன்; சால்வனைக் கொன்ற சாத்யகி...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "(குரு) படை மீண்டும் அணிதிரண்டபிறகு, மிலேச்சர்களின் ஆட்சியாளனான சால்வன், சினத்தால் நிறைந்து, அங்கங்களில் மதநீர் சொரிந்ததும், மலையைப் போலத் தெரிந்ததும், செருக்கு நிறைந்ததும், {இந்திரனின் யானையான} ஐராவதனுக்கு ஒப்பானதும், பகைவரின் பெருங்கூட்டத்தை நொறுக்கவல்லதுமான ஒரு பெரிய யானையைச் செலுத்திக் கொண்டு, பாண்டவர்களின் பெரும்படையை எதிர்த்து விரைந்தான்.(2) அந்தச் சால்வனின் விலங்கானது {யானையானது} உன்னதமான உயர்ந்த குலத்தில் {பத்ர குலத்தில்} பிறந்ததாகும். அஃது எப்போதும் திருதராஷ்டிரன் மகனால் {துரியோதனனால்} வழிபடப்பட்டதாகும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அது யானை பழக்குவதை நன்கறிந்தோரால் சரியாக ஆயத்தம் செய்யப்பட்டு, போருக்காகச் சரியாகப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. அந்த யானையைச் செலுத்தி வந்த அந்த மன்னர்களில் முதன்மையானவன் {சால்வன்} கோடையின் நெருக்கத்தில் உள்ள காலை சூரியனைப் போலத் தெரிந்தான்.(3) அந்த முதன்மையான யானையில் ஏறிய அவன் {சால்வன்}, ஓ! ஏகாதிபதி, பாண்டவர்களை எதிர்த்துச் சென்று, சக்தியில் இந்திரனின் வஜ்ரத்துக்கு ஒப்பானவையும், பயங்கரமானவையுமான கூரிய கணைகளால் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவர்களைத் துளைத்தான்.(4) அந்தப்போரில் அவன் {சால்வன்} தன் கணைகளை ஏவி, பகைவீரர்களை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பியபோது, ஓ மன்னா, பழங்காலத்தில் வஜ்ரதாரியான வாசவன் {இந்திரன்}, தைத்தியர்களின் படைகளை நொறுக்குகையில் ஏற்பட்ட தைத்தியர்களின் நிலையைப் போலக் கௌரவர்களாலோ, பாண்டவர்களாலோ அவனிடம் எந்தக் குறையையும் {கவனக்குறைவையும்} காணமுடியவில்லை.(5)
பாண்டவர்கள், சோமகர்கள் மற்றும் சிருஞ்சயர்கள், ஆயிரம் யானைகளைப் போலத் தங்களைச் சுற்றித் திரிந்து கொண்டிருந்த அந்த யானையை, பழங்காலப் போரில் இந்திரனின் யானையைத் தேவர்களின் எதிரிகள் கண்டதைப் போலக் கண்டார்கள்.(6) (அந்த விலங்கால்) கலங்கடிக்கப்பட்டிருந்த பகைவரின் படை அனைத்துப் பக்கங்களிலும் உயிரை இழந்ததைப் போலத் தெரிந்தது. போரில் நிற்க இயலாமல், ஒருவரையொருவர் மிதித்து நசுக்கிக் கொண்டே பேரச்சத்துடன் தப்பி ஓடினார்கள்.(7) மன்னன் சால்வனால் பிளக்கப்பட்ட பாண்டவர்களின் அந்தப் பெரும் படையானது, அந்த யானையின் மூர்க்கத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் திடீரென அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடியது.(8) பாண்டவப்படை பிளந்து வேகமாகத் தப்பி ஓடுவதைக் கண்ட உமது படையின் முதன்மையான தேர்வீரர்கள் அனைவரும் மன்னன் சால்வனை வழிபட்டு, சந்திரனைப் போல வெண்மையான தங்கள் சங்குகளை முழக்கினர்.(9) சங்குகளை முழக்கிக் கொண்டு கௌரவர்கள் மகிழ்ச்சியால் கூச்சலிடுவதைக் கேட்டவனும், பாண்டவ மற்றும் சிருஞ்சயப் படைகளின் தலைவனுமான பாஞ்சால இளவரசனால் (திருஷ்டத்யும்னனால்) அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(10)
அப்போது சிறப்புமிக்கத் திருஷ்டத்யும்னன், இந்திரனோடு கூடிய மோதலில் அசுரன் ஜம்பன், இந்திரன் செலுத்தி வந்த யானைகளின் இளவரசனான ஐராவதனை எதிர்த்துச் சென்றதைப் போல அந்த யானையை வெல்வதற்காகச் சென்றான்.(11) பாஞ்சாலர்களின் ஆட்சியாளன் தன்னை எதிர்த்து மூர்க்கமாக விரைந்து வருவதைக் கண்டவனும், மன்னர்களில் சிங்கமுமான சால்வன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருபதன் மகனை {திருஷ்டத்யும்னனை} அழிப்பதற்காகத் தன் யானையை விரைவாகத் தூண்டினான்.(12) பின்னவன் {திருஷ்டத்யும்னன்}, குப்புற வீழ்வதுபோலத் தன்னை அணுகி வந்த அந்த விலங்கை, கொல்லன் கையால் பளபளக்காப்பட்டவையும், சுடர்மிக்கவையும், கடுஞ்சக்தி கொண்டவையும், நெருப்பின் காந்திக்கும் ஒப்பானவையுமான முதன்மையான மூன்று கணைகளால் துளைத்தான்.(13) பிறகு அந்தச் சிறப்புமிக்க வீரன், கூராக்கப்பட்ட முதன்மையான ஐந்து கணைகளால் அவ்விலங்கின் மத்தகத்தைத் தாக்கினான். அவற்றால் துளைக்கப்பட்ட அந்த யானைகளின் இளவரசன், போரில் இருந்து புறமுதுகிட்டு பெரும் வேகத்தோடு ஓடியது.(14) எனினும் சால்வன், அதீதமாகச் சிதைக்கப்பட்டிருந்ததும், பின்வாங்கச்செய்யப்பட்டுதுமான அந்த முதன்மையான யானையைத் திடீரெனத் தடுத்துத் திரும்பச் செய்து, அந்த மதங்கொண்ட விலங்குக்குப் பாஞ்சால மன்னனின் {திருஷ்டத்யும்னனின்} தேரைக் காட்டி, அங்குசங்கள் மற்றும் கூரிய வேல்களால் அத்தேரை எதிர்த்துச் செல்லத் தூண்டினான்.(15)
அவ்விலங்கு தன்னை நோக்கி மூர்க்கமாக விரைவதைக் கண்ட வீரத் திருஷ்டத்யும்னன், ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, அச்சத்தால் அங்கங்கள் திகைத்துப் போய், தன் தேரில் இருந்து கீழே பூமியில் குதித்தான்.(16) அதே வேளையில் அந்தப் பெரும் யானையானது, குதிரைகள் மற்றும் சாரதியுடன் கூடியதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்தத் தேரைத் திடீரெனத் தன் துதிக்கையால் தூக்கி பூமியில் அடித்து நொறுக்கியது. பாஞ்சால மன்னனின் சாரதி, அந்த யானையால் இவ்வாறு நசுக்கப்பட்டதைக் கண்ட பீமன், சிகண்டி மற்றும் சிநியின் பேரன் {சாத்யகி} ஆகியோர் அவ்விலங்கை எதிர்த்துப் பெரும் வேகத்தோடு விரைந்தனர்.(18) மூர்க்கமாக முன்னேறிவரும் அவ்விலங்கைத் தங்கள் கணைகளால் வேகமாகத் தடுத்தனர். அந்தத் தேர்வீரர்களால் இவ்வாறு எதிர்க்கப்பட்டு, போரில் அவர்களால் தடுக்கப்பட்ட அந்த யானையானது நடுங்கத் தொடங்கியது.(19) அதே வேளையில், மன்னன் சால்வன், அனைத்துப் பக்கங்களிலும் கதிர்களைப் பொழியும் சூரியனைப் போலத் தன் கணைகளை ஏவத் தொடங்கினான். அந்தக் கணைகளால் தாக்கப்பட்ட (பாண்டவத்) தேர்வீரர்கள் தப்பி ஓடத் தொடங்கினர்.(20)
சால்வனின் அந்த அருஞ்செயலைக் கண்ட பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள் மற்றும் மத்ஸ்யர்கள் ஆகியோர், ஓ! மன்னா, அந்தப் போரில் ஓ! என்றும், ஐயோ! என்றும் உரக்கக் கூச்சலிட்டனர்.(21) அப்போது, அந்தத் துணிச்சல்மிக்கவனான பாஞ்சால மன்னன் {திருஷ்டத்யும்னன்}, உயர்ந்த மலைச்சிகரத்திற்கு ஒப்பான தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு அங்கே தோன்றினான். ஓ! மன்னா, எதிரிகளைத் தாக்குபவனான அந்த வீரன், அச்சமில்லாமல் அந்த யானையை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(22) பெரும் சுறுசுசுறுப்புடன் கூடிய அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, மலையைப் போலப் பெரியதாக இருந்ததும், மழைபொழியும் மேகங்களைப் போல மதநீரைப் பெருக்கியதுமான அந்த யானையைத் தன் கதாயுதத்தால் தாக்கத் தொடங்கினான்.(23) மலையைப் போன்ற அந்தப் பெரும் விலங்கானது, திடீரென மத்தகம் பிளக்கப்பட்டு, உரக்கப் பிளிறிக் கொண்டே பெரும் அளவிலான குருதியைக் கக்கி, நிலநடுக்கத்தின் போது கீழே விழும் மலையைப் போலத் திடீரெனக் கீழே விழுந்தது.(24) அந்த யானைகளின் இளவரசன் விழுந்த காட்சியைக் கண்டு உமது மகனின் துருப்புகள் ஓலமிட்டபோது, சிநிகுலத்தப் போர்வீரர்களில் முதன்மையானவன் {சாத்யகி}, ஒரு கூரிய அகன்ற தலைக் கணையால் {பல்லத்தால்}, மன்னன் சால்வனின் தலையை அறுத்தான்.(25) சாத்வத வீரனால் {சாத்யகியால்} அந்தச் சால்வனின் தலை வெட்டப்பட்டப்பட்டதும், தேவர்களின் தலைவன் வீசிய வஜ்ரத்தால் திடீரெனப் பிளக்கப்பட்ட ஒரு மலைச்சிகரத்தைப் போல அவன், யானைகளின் இளவரசனான தன் யானையுடன் சேர்ந்து கீழே பூமியில் விழுந்தான்" {என்றான் சஞ்சயன்}.(26)
-------------------------------------------------------------------------------------------சல்லிய பர்வம் பகுதி – 20ல் உள்ள சுலோகங்கள் : 26
ஆங்கிலத்தில் | In English |