Yudhishthira spoke to Duryodhana! | Shalya-Parva-Section-31 | Mahabharata In Tamil
(ஹிரதப் பிரவேச பர்வம் - 3)
பதிவின் சுருக்கம் : துவைபாயனத் தடாகத்தின் கரைக்கு வந்து யுதிஷ்டிரனும், கிருஷ்ணனும் பேசிக்கொண்டது; நீரிலிருந்து வெளியே வருமாறு துரியோதனனைக் கேட்டுக் கொண்ட யுதிஷ்டிரன்; ஓய்வைக் கேட்ட துரியோதனன்; மறுத்த யுதிஷ்டிரன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அந்த மூன்று தேர்வீரர்களும் அவ்விடத்தைவிட்டு அகன்ற பிறகு, பாண்டவர்கள், துரியோதனன் ஓய்ந்திருந்த அந்தத் தடாகத்திற்குப் வந்தனர்.(1) அந்தத் துவைபாயனத் தடாகத்தின் கரையை அடைந்த அவர்கள், ஓ! குரு குலத்தின் தலைவரே {திருதராஷ்டிரரே}, உமது மகனால் கவர்ந்திழுக்கப்பட்ட அந்த நீர்க்கொள்ளிடத்தைக் கண்டனர். அப்போது யுதிஷ்டிரன், வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்},(2) "இந்த நீரில் துரியோதனன், தன் மாய சக்தியைப் பயன்படுத்தியிருப்பதைப் பார். நீர்நிலையைக் கவர்ந்திழுத்து {ஸ்தம்பனம் செய்து} அதனுள் அவன் கிடக்கிறான். இப்போது அவனுக்கு மனிதர்களிடம் இருந்து எந்த அச்சமும் இல்லை.(3) அவன் {துரியோதனன்}, தெய்வீக மாயை இருப்புக்கு அழைத்து இப்போது இந்த நீர்நிலைக்குள் இருக்கிறான். அனைத்து வஞ்சகச் செயல்களையும் அறிந்தவனான அந்தப் பொல்லாதவன், இந்த வஞ்சச் செயலால் இப்படிப்பட்ட புகலிடத்தை அடைந்திருக்கிறான். எனினும், அவனால் உயிருடன் தப்ப முடியாது.(4) போரில் அவனது உதவிக்கு வஜ்ரதாரியே {இந்திரனே} வந்தாலும், ஓ! மாதவா {கிருஷ்ணா}, இன்று அவன் கொல்லப்படுவதை மக்கள் காண்பார்கள்" என்றான்.(5)
வாசுதேவன் {கிருஷ்ணன்}, "ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, உமது மாயசக்தியைப் பயன்படுத்தி, மாயாவியான துரியோதனனின் இந்த மாயை அழிப்பீராக. மாயையை அறிந்த ஒருவனை அந்த மாயையைக் கொண்டே கொல்ல வேண்டும். ஓ! யுதிஷ்டிரரே, இதுவே உண்மையாகும் {சத்தியமாகும்}.(6) ஓ! பாரதர்களின் தலைவரே, செயல்கள் மற்றும் வழிமுறைகளைக் கொண்டும், இந்நீர்நிலையில் உமது மாயசக்தியைப் பயன்படுத்தியும் மாய ஆன்மாவேயான அந்தச் சுயோதனனைக் கொல்வீராக.(7) செயல்கள் மற்றும் வழிமுறைகளைக் கொண்டுதான் தைத்தியர்களையும், தானவர்களையும் இந்திரன் கொன்றான். பலியும் {பலி சக்கரவர்த்தியும்} கூடப் பல செயல்கள் மற்றும் வழிமுறைகளைக் கொண்டே அந்த உயரான்மாவால் (உபேந்திரனால்) கட்டப்பட்டான்.(8) பெரும் அசுரனான ஹிரண்யாக்ஷனும், மற்றுமொருவனான ஹிரண்யகசிபுவும் பல செயல்கள் மற்றும் வழிமுறைகளின் உதவியைக் கொண்டே கொல்லப்பட்டனர்.(9)
அதேபோலவே தான், புலஸ்திய குலத்தைச் சேர்ந்த ராட்சசன் ராவணனும், அவனது சொந்தங்கள் மற்றும் தொண்டர்களுடன் சேர்த்து ராமனால் கொல்லப்பட்டான். நடைமுறைகள் மற்றும் சூழ்ச்சித்திட்டங்களைக் கொண்டு நீரும் உமது ஆற்றலை வெளிப்படுத்துவீராக.(10) பெரும் பலம் கொண்டவர்களும், பழங்காலத்து தைத்தியர்களுமான தாரகன் மற்றும் விப்ரசித்தி ஆகிய இருவரும், ஓ! மன்னா, செயல்கள் மற்றும் வழிமுறைகளின் துணையைக் கொண்டே பழங்காலத்தில் கொல்லப்பட்டனர்.(11) அதே போலவே, வாதாபி, இல்வலன், திரிசரஸ், அசுரர்களான சுந்தன் மற்றும் உபசுந்தன் ஆகிய அனைவரும், ஓ! தலைவா, வழிமுறைகளின் துணைகொண்டே கொல்லப்பட்டனர்.(12) இந்திரனே கூட, செயல்கள் மற்றும் வழிமுறைகளின் உதவியால்தான் சொர்க்கத்தை அனுபவிக்கிறான். ஓ! யுதிஷ்டிரரே செயல்களே விளைவுகளைத் தரவல்லவை. அவற்றைப் போல வேறெதுவும் விளைவைத் தராது.(13) தைத்தியர்கள், தானவர்கள், ராட்சசர்கள் மற்றும் மன்னர்கள் ஆகியோர் செயல்கள் மற்றும் வழிமுறைகளின் உதவியால் கொல்லப்பட்டுள்ளனர். எனவே நீர், செயல்களின் உதவியை நாடுவீராக" என்றான் {கிருஷ்ணன்}".(14)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "வாசுதேவனால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், கடும் நோன்புகளைக் கொண்டவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, சிரித்துக் கொண்டே, ஓ! ஏகாதிபதி, அந்தத் தடாகத்தின் நீருக்குள் இருந்தவனும், பெரும் வலிமைமிக்கவனுமான உமது மகனிடம் {துரியோதனனிடம்} பேசினான்,(15) "ஓ! சுயோதனா, க்ஷத்திரியர்கள் அனைவரையும் அழியச் செய்து, உனது குலத்தையே அழிவடையச் செய்துவிட்டு, ஓ! மன்னா, இந்நீரை ஏன் நீ இவ்வாறு செய்திருக்கிறாய்?(16) இன்று நீ உனது உயிரைக் காத்துக் கொள்ள விரும்பி ஏன் இத்தடாகத்திற்குள் நுழைந்திருக்கிறாய்? ஓ! மன்னா, ஓ! சுயோதனா, எழுந்து எங்களுடன் போரிடுவாயாக.(17) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, இந்நீரைக் கவர்ந்திழுத்து அதற்குள் இப்போது கிடக்கிறாயே, உன் செருக்கும், கௌரவமும் இப்போது எங்கே சென்றன?(18) சபைகளில் மனிதர்கள் அனைவரும் உன்னை வீரன் என்று சொல்கிறார்கள். எனினும், நீ இந்த நீருக்குள் மறைந்திருப்பதால் அது முற்றான பொய்மை என்று நான் நினைக்கிறேன்.(19) ஓ! மன்னா, உன்னதக் குலத்தில் பிறந்த க்ஷத்திரியனாக எழுந்து போரிடுவாயாக. அதிலும் குறிப்பாக நீ ஒரு கௌரவேயனும் ஆவாய். உன் பிறப்பை நினைவுகூர்வாயாக.(20)
அச்சத்தால் போரில் இருந்து ஓடி இந்தத் தடாகத்தின் ஆழத்திற்குள் மறைந்து கொண்டு, குரு குலத்தில் பிறந்ததைக் குறித்து நீ எவ்வாறு தற்பெருமை பேச முடியும்?(21) ஒரு க்ஷத்திரியனின் நித்திய கடமையானது போரில் இருந்து விலகியிருப்பதல்ல. மதிக்கத்தக்கவர்களின் நடைமுறையானது போரில் இருந்து ஓடுவதல்ல; அது சொர்க்கத்திற்கும் வழிவகுக்காது.(22) வெற்றியில் விருப்பமுள்ளவனும், மகன்கள், சகோதரர்கள், தந்தைமார், உறவினர்கள், நண்பர்கள், தாய்மாமன்கள் மற்றும் சொந்தங்கள் கொல்லப்படுவதைக் கண்டவனுமான நீ, இப்போது இந்தப் போரின் முடிவை எட்டாமல் இந்தத் தடாகத்தில் எவ்வாறு இருக்கிறாய்?(23,24) வீரனாக இல்லாவிட்டாலும், உனது துணிவைக் குறித்து எப்போதும் தற்பெருமை பேசுகிறாய். ஓ! பாரதா, ஓ! தீய புரிதலைக் கொண்டவனே, மனிதர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கையில் உன்னை நீ வீரன் என்று பொய்யாகச் சொல்லிக் கொள்கிறாய்.(25)
எதிரிகள் பார்த்துக் கொண்டிருக்கையில் வீரர்கள் ஒருபோதும் தப்பி ஓடமாட்டார்கள். அல்லது, ஓ! வீரா, நீ போரில் இருந்து தப்பியதன் விளைவாக உனக்கு உண்டான துணிவைக் குறித்து எங்களுக்குச் சொல்வாயாக.(26) ஓ! இளவரசனே, உன் அச்சங்களைக் கைவிட்டு எழுந்து போரிடுவாயாக. உனது துருப்புகள் மற்றும் உனது தம்பிகள் அனைவரும் கொல்லப்படக் காரணமாக இருந்த நீ, ஓ! சுயோதனா,(27) நியாயமான நோக்கங்களைக் கொண்டிருந்தாயானால், உன் உயிரைக் காத்துக் கொள்ள நினைக்க மாட்டாய். ஓ! சுயோதனா, க்ஷத்திரியக் கடமைகளைப் பின்பற்றும் உன்னைப் போன்ற ஒருவன், இவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது.(28) கர்ணன் மற்றும் சுபலனின் மகனான சகுனி ஆகியோரை நம்பி, மூடத்தனத்தால் உன்னை அழிவற்றவனாகக் கருதிக் கொண்ட நீ, உன்னை நீயே புரிந்து கொள்ளத் தவறிவிட்டாய்.(29) இவ்வளவு பயங்கரமான பாவத்தைச் செய்தவனான நீ, ஓ! பாரதா, இப்போது போரிடுவாயாக.(30)
ஓ! ஐயா உனது ஆண்மை எங்கே? ஓ! சுயோதனா, உன்னால் பேணப்பட்ட அந்தச் செருக்கு எங்கே? இப்போது உனது ஆற்றல் எங்கே? உன்னில் பெருகியிருந்த அந்தப் பெருஞ்சக்தி எங்கே?(31) உன் ஆயுத சாதனைகள் எங்கே? நீ ஏன் இப்போது இந்தத் தடாகத்திற்குள் கிடக்கிறாய்? ஓ! பாரதா, க்ஷத்திரியக் கடமைகளை நோற்று எழுந்து போரிடுவாயாக.(32) எங்களை வென்று இந்தப் பரந்த பூமியை ஆள்வாயாக, அல்லது, ஓ! பாரதா, எங்களால் கொல்லப்பட்டு வெறுந்தரையில் உறங்குவாயாக.(33) இதுவே சிறப்புமிக்கப் படைப்பாளனாலேயே விதிக்கப்பட்ட உயர்ந்த கடமையாகும். சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி உண்மையாக நடந்து கொள்வாயாக. ஓ! பெரும் தேர்வீரா, மன்னனாகச் செயல்படுவாயாக" என்றான் {யுதிஷ்டிரன்}".(34)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "ஓ! ஏகாதிபதி, தர்மனின் புத்திசாலி மகனால் {யுதிஷ்டிரனால்} இவ்வாறு சொல்லப்பட்ட உமது மகன் {துரியோதனன்}, நீருக்குள் இருந்தவாறே இவ்வார்த்தைகளைச் சொல்லி பதிலளித்தான்.(35)
துரியோதனன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, வாழும் உயிரினங்களின் இதயங்களில் அச்சம் நுழைவது ஒருபோதும் ஆச்சரியமானதில்லை. எனினும், ஓ! பாரதா, என்னைப் பொறுத்தவரை, என் உயிரின் மீது கொண்ட அச்சத்தால் தூண்டப்பட்டு போர்க்களத்தைவிட்டு நான் தப்பி ஓடி வரவில்லை.(36) என் தேர் அழிக்கப்பட்டது, என் அம்பறாத்தூணிகளும் இல்லை, என் பார்ஷினி தேரோட்டிகளும் கொல்லப்பட்டனர். நான், போரில் ஒரே ஒரு தொண்டனுமின்றி தனியொருவனாக இருந்தேன். அதற்காகவே நான் சிறிது ஓய்வெடுக்க விரும்பினேன்.(37) ஓ! மன்னா நான் இந்த நீருக்குள் புகுந்தது, என் உயிரைக் காத்துக் கொள்வதற்காக அல்ல, அச்சத்தாலுமல்ல, துயராலுமல்ல. களைப்பின் விளைவால் மட்டுமே நான் அப்படிச் செய்தேன்.(38) ஓ! குந்தியின் மகனே, உன்னைப் பின்தொடர்பவர்களுடன் நீ சற்று ஓய்ந்திருப்பாயாக. இந்தத் தடாகத்தில் இருந்து எழுந்து, நிச்சயம் உங்கள் அனைவருடனும் நான் போரிடுவேன்" என்றான்.(39)
யுதிஷ்டிரன் {துரியோதனனிடம்}, "நாங்கள் அனைவரும் போதுமான அளவுக்கு ஓய்ந்திருக்கிறோம். நீண்ட நேரமாக நாங்கள் உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறோம். ஓ! சுயோதனா, இப்போதே எழுந்து எங்களுக்குப் போரைத் தருவாயாக.(40) பார்த்தர்களைக் கொன்று செழிப்பான இந்த நாட்டை உனதாக்கிக் கொள்வாயாக, அல்லது போரில் எங்களால் கொல்லப்பட்டு வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் உலகங்களை அடைவாயாக" என்றான்.(41)
துரியோதனன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! குரு குலத்தோனே, ஓ! மன்னா, குருக்களில் நான் யாருக்காக அரசுரிமையை விரும்பினேனோ அந்தச் சகோதரர்கள் அனைவரும் களத்தில் இறந்து கிடக்கின்றனர்.(42) செல்வத்தை இழந்து, மேன்மையான க்ஷத்திரியர்களற்று, விதவையைப் போல இருக்கும் இந்தப் பூமியை இனிமேலும் நான் அனுபவிக்க விரும்பவில்லை.(43) எனினும், ஓ! யுதிஷ்டிரா, ஓ! பாரதக் குலத்தின் காளையே, உன்னை வென்று, பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டுக்களின் செருக்கை அடக்குவேன் என இன்னும் நம்புகிறேன்.(44) இருப்பினும், துரோணரும், கர்ணனும் ஒழிக்கப்பட்டு, நமது பாட்டன் பீஷ்மரும் கொல்லப்பட்ட பிறகு போருக்கான எந்தத் தேவையும் இல்லை.(45) ஓ! மன்னா, வெறுமையாய் இருக்கும் இந்தப் பூமி இப்போது உனக்காகவே இருக்கிறது. நண்பர்களும், கூட்டாளிகளும் அற்ற நாட்டை ஆள எந்த மன்னன்தான் விரும்புவான்?(46)
என்னைப் போன்ற நண்பர்களைக் கொல்லச் செய்து, மகன்கள், தம்பிகள் மற்றும் தந்தைமாரையும் கொல்லச் செய்து, என் நாடும் உன்னால் பறிக்கப்பட்ட பிறகு, என்னைப் போன்ற ஒருவன் எவ்வாறு உயிர்வாழ விரும்புவான்?(47) மான் தோலுடுத்திக் கொண்டு நான் காட்டுக்குச் செல்வேன். ஓ! பாரதா, நண்பர்களையும், கூட்டாளிகளையும் இழந்திருக்கும் எனக்கு நாட்டின் மீது எந்த விருப்பமுமில்லை.(48) ஓ! மன்னா, நண்பர்கள், கூட்டாளிகள் ஆகியோரையும், குதிரைகள், யானைகள் ஆகியவற்றையும் கிட்டத்தட்ட மொத்தமாக இழந்திருக்கும் இந்தப்பூமி உனக்காகவே இருக்கிறது.(49) என்னைப் பொறுத்தவரை, மான்தோலுடுத்திக் கொண்டு நான் காட்டுக்குச் செல்லப் போகிறேன். ஓ! தலைவா, நண்பர்களற்றவனான எனக்கு உயிர்வாழ எந்த விருப்பமும் இல்லை.(50) செல்வாயாக, ஓ! ஏகாதிபதி, தலைவர்களற்றதும், போர்வீரர்கள் இல்லாததும், செல்வத்தை இழந்ததும், கோட்டைகள் இல்லாததுமான பூமியை நீ தேர்ந்தெடுத்தவாறே ஆள்வாயாக" என்றான்".(51)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "கடும் வருத்தத்துடன் கூடிய இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், சிறப்புமிக்கவனுமான யுதிஷ்டிரன், இன்னும் நீருக்குள்ளேயே இருந்த உமது மகன் துரியோதனனிடம்,(52) "ஓ! ஐயா, நீருக்குள் இருந்து கொண்டு இவ்வாறு துயரில் பிதற்றாதே. இத்தகு வார்த்தைகளைக் கேட்கும் நான், ஓ! மன்னா, சகுனியைப் போல உன்னிடம் இரக்கமேதும் கொள்ள மாட்டேன்.(53) ஓ! சுயோதனா, இப்போது நீ இந்தப் பூமியை எனக்குக் கொடையளிக்க விரும்பலாம். இருப்பினும், இவ்வாறு உன்னால் கொடுக்கப்படும் பூமியை ஆள நான் விரும்பவில்லை.(54) உன்னிடம் இருந்து இந்தப் பூமியைக் கொடையாகப் பெற்று என்னால் பாவம் செய்ய முடியாது. ஓ! மன்னா, ஒரு க்ஷத்திரியனுக்குக் கொடையை ஏற்பது கடமையாக விதிக்கப்படவில்லை.(55) எனவே, உன்னால் இவ்வாறு கொடுக்கப்படும் இந்தப் பரந்த பூமியைப் பெற நான் விரும்பவில்லை. மறுபுறம், போரில் உன்னை வென்ற பிறகு அதை நான் அடைவேன்.(56)
இப்போது நீ பூமியின் தலைவனில்லை. உன் ஆட்சிப்பகுதியாக இல்லாத ஒன்றை நீ ஏன் கொடையாகக் கொடுக்க விரும்புகிறாய்? ஓ! மன்னா, நீதியின் விதிகளை நோற்று, நம் குலத்தின் நன்மையை விரும்பி உன்னிடம் எங்கள் பங்கை நாங்கள் இரந்து கேட்ட போது, இந்தப் பூமியை நீ ஏன் எங்களுக்குத் தரவில்லை?(57) வலிமைமிக்கக் கிருஷ்ணனின் கோரிக்கையை முதலில் மறுத்துவிட்டு, இப்போது நீ ஏன் பூமியைக் கொடுக்க விரும்புகிறாய்? உனக்கு ஏன் இந்த மூடத்தனம்?(58) எதிரியால் தாக்கப்பட்ட எந்த மன்னன்தான் தன் நாட்டைக் கொடுக்க விரும்புவான்? ஓ! குரு குலத்தின் மகனே, நீ இன்று பூமியைக் கொடுப்பதற்குத் தகுந்தவனல்ல.(59) உனக்கு அதிகாரம் இல்லாத ஒன்றை நீ ஏன் கொடையளிக்க விரும்புகிறாய்? போரில் என்னை வென்று இந்தப் பூமியை ஆள்வாயாக.(60) ஊசியின் முனையில் மறைக்கப்படும் அளவு நிலத்தை எனக்குக் கொடுப்பதைக்கூட நீ முன்பு ஏற்கவில்லை.(61) ஓ! ஏகாதிபதி, பிறகு எப்படி நீ முழுப் பூமியையும் எனக்குக் கொடையாகக் கொடுக்கிறாய்? ஊசியின் முனை மறைக்கக்கூடிய அளவு நிலத்தைக் கூட முன்பு கைவிட முடியாத நீ, இப்போது மொத்த பூமியையும் கைவிட எவ்வாறு விரும்புகிறாய்?(62) இத்தகு செழிப்பையடைந்து மொத்த பூமியையையும் ஆண்ட எவன்தான், தன் எதிரிகளுக்கு அந்தப் பூமியைக் கொடையளிக்கும் அளவுக்கு மூடனாக இருப்பான்?(63)
மடமையினால் மலைத்திருக்கும் நீ, இதில் ஒழங்கற்ற முறைமையைக் காணவில்லை. நீ இந்தப் பூமியைக் கொடுத்துவிட விரும்பினாலும் உன்னால் உயிரோடு தப்ப முடியாது.(64) எங்களை வென்று இந்தப் பூமியை ஆள்வாயாக, அல்லது எங்களால் கொல்லப்பட்டு அருள் உலகங்களை அடைவாயாக.(65) நான், நீ என நாமிருவரும் உயிரோடிருந்தால், வெற்றியானது யாருக்குச் சொந்தம் என்பதில் உயிரினங்கள் அனைத்தும் ஐயங்கொள்ளும்.(66) ஓ! குறைந்த முன்னறிதிறன் கொண்டவனே, இப்போது உன் உயிரானது என்னை நம்பியே இருக்கிறது. நான் விரும்பினால் உன்னை உயிரோடு விடலாம், ஆனால் நீயோ உன்னைக் காத்துக் கொள்ள இயன்றவனில்லை.(67) நீ எங்களை எரித்துக் கொல்லவும், பாம்புகளைக் கொண்டு, பிற வகை நஞ்சுகள் மூலம், நீரில் எங்களை மூழ்கச் செய்து எனப் பலமுறை எங்கள் உயிரை எடுக்கவும் முயற்சி செய்தாய்.(68) ஓ! மன்னா, எங்கள் நாட்டைப் பறித்ததன் மூலமும், உன்னால் பேசப்பட்ட கொடுஞ்சொற்கள் மூலமும், திரௌபதியை முறையற்ற வகையில் நீ நடத்தியதன் மூலமும் உன்னால் நாங்கள் தீங்கிழைக்கப்பட்டோம்.(69) ஓ! இழிந்தவனே, இக்காரணங்களுக்காக உனது உயிர் பறிக்கப்பட வேண்டும். எழு, எழுந்து, எங்களுடன் போரிடுவாயாக. உனக்கான நன்மையை அதுவே தரும்" என்றான் {யுதிஷ்டிரன்}".(70)
சஞ்சயன் தொடர்ந்தான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெற்றியில் கொழித்த பாண்டவர்கள் அங்கே இவ்வாறே (துரியோதனனை கடிந்துரைத்தவாறும், கேலிசெய்தவாறும்) மீண்டும் மீண்டும் பேசினார்கள்" {என்றான் சஞ்சயன்}.(71)
-------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 31ல் உள்ள சுலோகங்கள் : 71
-------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 31ல் உள்ள சுலோகங்கள் : 71
ஹிரதப் பிரவேச பர்வம் முற்றும்
ஆங்கிலத்தில் | In English |