Duryodhana rose from water! | Shalya-Parva-Section-32 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 1)
பதிவின் சுருக்கம் : ஒவ்வொருவராகத் தன்னோடு போரிடலாம் என்று நீருக்குள் மறைந்திருந்தபடியே பாண்டவர்களை அழைத்த துரியோதனன்; பலர் சேர்ந்து அபிமன்யுவைக் கொன்றதைத் துரியோதனனுக்குச் சுட்டிக் காட்டிய யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரன் கொடுத்த வரங்கள்; நீரிலிருந்து எழுந்த துரியோதனன், பாண்டவர்களை ஒவ்வொருவர் பின் ஒருவராகப் போரிட வரும்படி அழைத்தது...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "இவ்வாறு (தன் எதிரிகளால்) கடிந்துரைக்கப்பட்ட போது, எதிரிகளை எரிப்பவனும், கோபம் நிறைந்த இயல்பைக் கொண்டவனும், வீரனுமான என் அரச மகன் {துரியோதனன்} எவ்வாறு நடந்து கொண்டான்?(1) அவன் இதற்குமுன் ஒருபோதும் இதுபோன்ற கடிந்துரைகளைக் கேட்டதில்லை. மேலும் அவன், மன்னனுக்குரிய மரியாதையுடனேயே பிறரால் நடத்தப்பட்டிருக்கிறான்.(2) ஒரு குடையின் நிழலில் நின்றால், பிறரின் புகலிடத்தை எடுத்துக் கொண்டதாகிவிடும் என்று நினைத்து, அதில் நிற்க முன்பு துயரப்பட்டவனும், தன்னுணர்வுமிக்கச் செருக்கின் விளைவால் சூரியனின் பிரகாசத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாதவனுமான அவனால், தன் எதிரிகளின் வார்த்தைகளை எவ்வாறு பொறுத்துக் கொள்ள முடிந்தது?(3) மிலேச்சர்கள் மற்றும் நாடோடி இனங்களுடன் கூடிய மொத்த பூமியும் அவனுடைய அருளை நம்பி இருந்ததை நீயே உன் கண்களால் கண்டிருக்கிறாய்.(4) தொண்டர்கள் மற்றும் பணியாட்களை இழந்து ஒரு தனிமையான இடத்தில் மறைந்து கிடக்கையில், அந்த இடத்தில் வைத்து, குறிப்பாகப் பாண்டு மகன்களால் இவ்வாறு நிந்திக்கப்பட்ட போது, ஐயோ, அவன், வெற்றியாளர்களான தன் எதிரிகளால் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட கசப்பான குற்றச்சாட்டுகளைக் கேட்டு, அவர்களுக்கு என்ன பதிலைச் சொன்னான்? ஓ! சஞ்சயா, அது குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டான்.(5,6)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "யுதிஷ்டிரனாலும், அவனது தம்பிகளாலும் இவ்வாறு நிந்திக்கப்பட்ட உமது அரச மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி, ஓ! மன்னர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த நீர்நிலைக்குள் கிடந்தபடியே அந்தக் கசப்பான வார்த்தைகளைக் கேட்டு மிகுந்த அவலமான நிலையை அடைந்தான். சூடான நீண்ட பெருமூச்சுகளை மீண்டும் மீண்டும் விட்டுக்கொண்டிருந்த அம்மன்னன் {துரியோதனன்}, தன் கரங்களை மீண்டும் மீண்டும் அசைத்து, போரில் தன் இதயத்தை நிலைக்கச் செய்து, நீருக்குள் இருந்தவாறே பாண்டுவின் அரச மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} இவ்வாறு பதிலளித்தான்.(7-9)
துரியோதனன், "பார்த்தர்களே, நீங்கள் அனைவரும் நண்பர்களையும், தேர்களையும், விலங்குகளையும் கொண்டுள்ளீர்கள். எனினும் நானோ, ஒரு தேரும், ஒரு விலங்கும் கூட இல்லாமல் உற்சாகமற்றவனாகவும், தனியொருவனாகவும் இருக்கிறேன்.(10) ஆயுதங்களை இழந்து, தனியொரு காலாளாக நிற்கும் நான், நன்கு ஆயுதம் தரித்தவர்களும், தேர்களை உடையவர்களுமான எண்ணற்ற எதிரிகளை எதிர்த்து எவ்வாறு போரிடத் துணிவேன்?(11) எனினும், ஓ! யுதிஷ்டிரா, நீங்கள் ஒவ்வொருவராக என்னுடன் போரிடலாம். துணிச்சலுடன் கூடிய பலருடன் ஒருவன் போரிடுவது முறையாகாது,(12) அதிலும் குறிப்பாகக் கவசமில்லாமல், களைத்தவனாக, பேரிடரால் பீடிக்கப்பட்டவனாக, அங்கங்கள் மிகவும் சிதைந்தவனாக, விலங்குகள் மற்றும் துருப்புகள் ஆகிய இரண்டையும் இழந்தவனாக இருக்கும் ஒருவனுக்கு அது முறையாகாது.(13) நான் உன்னிடமோ, பிருதையின் மகனான விருகோதரனிடமோ {பீமனிடமோ}, பல்குனனிடமோ {அர்ஜுனனிடமோ}, வாசுதேவனிடமோ {கிருஷ்ணனிடமோ}, பாஞ்சாலர்கள் அனைவரிடமோ, இரட்டையரிடமோ {நகுலன் மற்றும் சகாதேவனிடமோ}, யுயுதானானிடமோ {சாத்யகியிடமோ},(14) பிற துருப்புகள் அனைத்திடமோ போரிட சற்றும் அஞ்சவில்லை. போரில் தனியொருவனாகவே நின்று, உங்கள் அனைவரையும் நான் தடுப்பேன்.(15)
ஓ! மன்னா, அறவோரனைவரின் புகழுக்கும், அறமே அடிப்படையாகும். அறம் மற்றும் புகழ் ஆகியவற்றை நோற்கும் உன்னிடம் நான் இவை யாவற்றையும் சொல்கிறேன்.(16) நான் (இத்தடாகத்தில் இருந்து) எழுந்து உங்கள் அனைவருடனும் போரிடுவேன். பருவங்கள் அனைத்தையும் அடுத்தடுத்தாகச் சந்திக்கும் ஒரு வருடத்தைப் போல, நான் உங்கள் அனைவரையும் போரில் சந்திப்பேன்.(17) பாண்டவர்களே காத்திருப்பீராக. அதிகாலையில் விண்மீன்கள் {நட்சத்திரங்கள்} அனைத்தின் ஒளியையும் தன் சக்தியால் அழிக்கும் சூரியனைப் போல, இன்று ஆயுதமற்றவனாக, தேரற்றவனாக நான் இருப்பினும், தேர்களையும், குதிரைகளையும் கொண்டிருக்கும் உங்கள் அனைவரையும் நான் அழிப்பேன்.(18) சிறப்புமிக்க க்ஷத்திரியர்களான பாஹ்லீகர், துரோணர், பீஷ்மர், உயர் ஆன்மக் கர்ணன், வீர ஜெயத்ரதன், பகதத்தன், மத்ரர்களின் ஆட்சியாளரான சல்லியர், பூரிஸ்ரவஸ், என் மகன்கள், ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, சுபலரின் மகனான சகுனி, என் நண்பர்கள், நலன்விரும்பிகள் மற்றும் உறவினர்கள் ஆகியோர் அனைவருக்கும் நான் பட்டிருக்கும் கடனிலிருந்து இன்று நான் விடுபடப் போகிறேன்.(19-21) உன்னையும், உனது சகோதரர்களையும் கொன்று, நான் பட்டிருக்கும் கடனிலிருந்து இன்று நான் விடுபடுவேன்" என்று சொன்னான். இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த (குரு) மன்னன் {துரியோதனன்} பேசுவதை நிறுத்திக் கொண்டான்.(22)
யுதிஷ்டிரன் {துரியோதனனிடம்}, "ஓ! சுயோதனா, நற்பேறாலேயே ஒரு க்ஷத்திரியனின் கடமைகளை நீ அறிந்து வைத்திருக்கிறாய். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நற்பேறாலேயே உன் இதயம் போரிட விரும்புகிறது.(23) நற்பேறாலேயே நீ வீரனாயிருக்கிறாய், ஓ! குரு குலத்தோனே, நற்பேறாலேயே போரிட நீ அறிந்திருக்கிறாய். தனியொருவனாய் இருந்தாலும் நற்பேறாலேயே எங்கள் அனைவரோடும் நீ போரிட விரும்புகிறாய்.(24) நீ விரும்பும் ஆயுதம் எதையும் எடுத்துக் கொண்டு, எங்களில் யாருடன் வேண்டுமானாலும் நீ போரிடலாம். நாங்கள் அனைவரும் இங்கே பார்வையாளர்களாக நிற்போம்.(25) ஓ! வீரா, (இன்னும்) உன் இதயத்தில் இருக்கும் மற்றொரு விருப்பத்தையும் நான் உனக்குக் கொடுக்கிறேன். எங்களில் எவரொருவரை கொன்றாலும் நீ மன்னனாகலாம். அல்லது எங்களால் கொல்லப்பட்டுச் சொர்க்கத்திற்குச் செல்வாய்" என்றான்.(26)
துரியோதனன் {யுதிஷ்டிரனிடம்}, "உங்களில் ஒருவனுடன் மட்டும் போரிடும் உகப்பைக்[1] கொடுத்தால் நீ துணிச்சல்மிக்கவனே, நான் கையில் கொண்டிருக்கும் இந்தக் கதாயுதமே நான் தேர்ந்தெடுத்திருக்கும் ஆயுதமாகும்.(27) எனக்கு இணையானவன் என்று உங்களில் எவன் தன்னை நினைப்பானோ, அவன் என் முன்னே வந்து, கதாயுதந்தரித்து, காலாளாக என்னுடன் போரிடட்டும். தேர்களைக் கொண்டு பல அற்புதமான தனிப்போர்கள் நேர்ந்தன. அற்புதமானதும், பெரியதுமான இந்தக் கதாயுதப் போர் இன்று நடைபெறட்டும்.(29) மனிதர்கள் (போரிடும்போது) ஆயுதங்களை மாற்றிக் கொள்ள விரும்புவார்கள். அப்படிப் போரிடும் தன்மையானது, உன் அனுமதியுடன் இன்று மாற்றப்படட்டும்.(30) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, இன்று என் கதாயுதத்தைக் கொண்டு உன்னையும், உன் தம்பிகள் அனைவரையும், பாஞ்சாலர்கள் மற்றும் சிருஞ்சயர்கள் அனைவரையும், இன்னும் நீ கொண்டிருக்கும் பிற துருப்புகள் அனைத்தையும் என்னால் வெல்ல முடியும். ஓ! யுதிஷ்டிரா, சக்ரனிடம் {இந்திரனிடம்} கூட நான் சிறிதும் அச்சமடைவதில்லை" என்றான்.(31)
யுதிஷ்டிரன் {துரியோதனனிடம்}, "எழு, ஓ! காந்தாரியின் மகனே, ஓ! சுயோதனா, எழுந்து என்னுடன் போரிடுவாயாக. தனியொருவனாக இருக்கும் நீ, ஓ! பெரும் வலிமை கொண்டவனே, கதாயுதம் தரித்துக் கொண்டு, ஒரு நேரத்தில் ஒருவரோடு மோதும் வகையில் {ஒருவர் பின் ஒருவராக} எங்களோடு போரிடுவாயாக.(32) ஓ! காந்தாரியின் மகனே, ஆண்மையுடனும், நல்ல கவனத்துடனும் போரிடுவாயாக. இன்று இந்திரனே உன் கூட்டாளியாக வந்தாலும் நீ உன் உயிரை விடுவாய்" என்றான்".(33)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "மனிதர்களில் புலியான உமது மகனால் {துரியோதனனால்} யுதிஷ்டிரனின் இந்த வார்த்தைகளைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பொந்துக்குள் இருக்கும் வலிமைமிக்கப் பாம்பொன்றைப் போல அந்த நீருக்குள் இருந்தபடியே அவன் நீண்ட கடும் மூச்சுகளை விட்டுக் கொண்டிருந்தான்.(34) உயர்ந்த குலத்தில் பிறந்த ஒரு குதிரையால் சாட்டை அடியைப் பொறுத்துக் கொள்ள முடியாததைப் போலவே, இவ்வாறாக மீண்டும் மீண்டும் தாக்கப்பட்ட அவனால் அந்த வார்த்தை அங்குசங்களைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(35)
தண்ணீரைப் பெரும் வேகத்தோடு கலங்கடித்த அந்தப் போர்வீரன், தடாகத்திலிருந்து எழும் யானைகளின் இளவரசனைப் போல, சினத்தால் பெருமூச்சுவிட்டபடியே, வஜ்ரம் போன்று பலமானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான தன் கனத்த கதாயுதத்துடன் எழுந்தான்.(36) உமது மகன் {துரியோதனன்}, கட்டப்பட்டிருக்கும் அந்த நீரைத் துளைத்துக் கொண்டும், முழுக்க இரும்பாலான தன் கதாயுதத்தைத் தோளில் தாங்கியபடியும், கதிர்களால் அனைத்தையும் எரிக்கும் சூரியனைப் போல எழுந்தான்.(37) பெரும் பலமும், பெரும் நுண்ணறிவும் கொண்ட உமது மகன், இரும்பாலானதும், தாங்கு கயிறுடன் கூடியதுமான தன் கனத்த கதாயுதத்தைக் கையாளத் தொடங்கினான்.(38) சிகரத்துடன் கூடிய மலைக்கோ, வாழும் உயிரினங்களின் மேல் தன் கோபப்பார்வையைச் செலுத்தும் திரிசூலபாணியான ருத்ரனுக்கோ ஒப்பாகக் கதாயுதத்துடன் இருக்கும் அந்தப் பாரதத் தலைவனைக் கண்ட அவர்கள், வானத்தில் உள்ள தகிக்கும் சூரியனைப்போலத் தன்னைச் சுற்றி பிரகாசத்தைப் பொழிந்தான். உண்மையில், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான அவன், தோளில் கதாயுதத்துடன் நீரில் இருந்து எழுந்து நின்ற போது, உயிரினங்கள் அனைத்தும் தண்டத்துடன் கூடிய அந்தகனைப் போல அவனைக் கண்டன.(39-41)
உண்மையில் அப்போது, பாஞ்சாலர்கள் அனைவரும், வஜ்ரதாரியான சக்ரனையோ {இந்திரனையோ}, திரிசூலபாணியான ஹரனையோ போல உமது அரச மகனை {துரியோதனனைக்} கண்டன.(42) எனினும், நீரில் இருந்து எழும் அவனைக் கண்ட பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரும், தங்கள் கரங்களைப் பற்றிக் கொண்டு மகிழ்ச்சியுறத் தொடங்கினர்[1].(43) உமது மகன் துரியோதனன், பார்வையாளர்களின் அந்தச் செயல்பாட்டைத் தனக்கு எதிரான அவமதிப்பாகக் கருதினான். பார்வையாலேயே பாண்டவர்களை எரித்துவிடுபவனைப் போலக் கோபத்தால் தன் விழிகளை உருட்டி, தன் புருவ அசைவால் நெற்றியை மூன்றாகச் சுருக்கி, மீண்டும் மீண்டும் தன் கீழுதட்டைக் கடித்தபடியே,(44,45) "பாண்டவர்களே, இந்தப் பரிகாசத்திற்கான கனியை நீங்கள் சுமப்பீர்கள். என்னால் இன்று கொல்லப்படும் நீங்கள், பாஞ்சாலர்களுடன் சேர்ந்து யமனின் வசிப்பிடத்தை அடைவீர்கள்" என்றான்."(46)
[1] கும்பகோணம் பதிப்பில், "கரியில் வந்திருக்கிருக்கின்ற அந்தத் துர்யோதனனைக் கண்டு, பாஞ்சாலர்களும், பாண்டவ வீரர்களுமாகிய எல்லாரும் ஸந்தோஷித்தார்கள். அவர்கள் (ஆனந்தத்தினால்) ஒருவர்க்கொருவர் உள்ளங்கைகளைக் கொடுத்துக் கொண்டார்கள்" என்றிருக்கிறது.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "நீரில் இருந்து எழுந்த உமது மகன் துரியோதனன், கதாயுதத்தைத் தரித்து, குருதியால் குளித்த அங்கங்களுடன் அங்கே நின்று கொண்டிருந்தான்.(47) குருதியால் மறைக்கப்பட்டு, நீரில் நனைந்திருந்த உடலுடன் கூடிய அவன், நீர்ப்பெருக்குடன் கூடிய {அருவிகளைக் கொண்ட} ஒரு மலையைப் போலத் தெரிந்தான்.(48) கதாயுதத்துடன் அவன் நின்று கொண்டிருந்தபோது, பாண்டவர்கள், கிங்கரம்[2] என்றழைக்கப்படும் தண்டாயுதம் தரித்தவனும், கோபக்காரனுமான சூரியனின் மகனை {யமனைப்} போலவே அவனைக் கருதினர்.(49) பெரும் ஆற்றலைக் கொண்டவனான துரியோதனன், தன் கதாயுதத்தைத் தரித்துக் கொண்டு, மேகங்களையோ, அல்லது மகிழ்ச்சியுடன் முழங்கும் ஒரு காளையையோ போன்ற ஆழ்ந்த குரலுடன் பார்த்தர்களைப் போருக்கழைத்தான்.(50)
[2] யமதண்டத்தின் பெயரே கிங்கரம் Kinkara என இங்கே விளக்குகிறார் கங்குலி
துரியோதனன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! யுதிஷ்டிரா, நீங்கள் ஒவ்வொருவராகவே என்னுடன் மோத வேண்டும். ஒரு வீரன், ஒரே நேரத்தில் பலரோடு மோதுவது முறையாகாது,(51) அதிலும் குறிப்பாகக் கவசமிழந்து, முயற்சியால் களைத்து, நீரால் நனைக்கப்பட்டு, அங்கங்கள் மிகவும் சிதைக்கப்பட்டு, தேர்கள், விலங்குகள் மற்றும் துருப்புகளையும் இழந்திருக்கும் ஒருவனுக்கு {பலரோடு மோதுவது} முறையாகாது.(52) எந்தக் கருவியுமற்றவனாக, கவசம் மற்றும் ஆயுதங்களை இழந்தவனாக இருந்தும் தனியொருவனாகப் போரிடும் என்னைச் சொர்க்கத்தில் இருக்கும் தேவர்கள் காணட்டும்.(53) நான் நிச்சயம் உங்கள் அனைவருடனும் போரிடுவேன். அனைத்தின் முறைமை மற்றும் முறையின்மைகளைக் குறித்த தேவையான தகுதிகளைக் கொண்டிருக்கும் நீ நடுவராக இருப்பாயாக" என்றான்.(54)
யுதிஷ்டிரன் {துரியோதனனிடம்}, "ஓ! துரியோதனா, பெருந்தேர்வீரர்கள் பலர் ஒன்றுசேர்ந்து போரில் அபிமன்யுவைக் கொன்றபோது இந்த அறிவு உனக்கு இல்லாமல் போனது எவ்வாறு?(55) எதையும் கருத்தில் கொள்ளாத, சிறு கருணையும் இல்லாத க்ஷத்திரியக் கடமைகள் மிகக் கொடூரமானவையாகும். இல்லையெனில், அந்தச் சூழ்நிலையில் அபிமன்யுவை நீங்கள் எவ்வாறு கொன்றிருக்க முடியும்?(56) நீங்கள் அனைவரும் நீதியை அறிந்தவர்களாவீர். நீங்கள் அனைவரும் வீரர்களுமாவீர். நீங்கள் அனைவரும் போரில் உங்கள் உயிர்களைக் கொடுக்கவும் ஆயத்தமாக இருந்தீர்கள். நேர்மையாகப் போரிடுபவர்களுக்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் உயர்ந்த முடிவானது சக்ரனின் {இந்திரனின்} உலகத்தை அடைவதேயாகும்.(57) ஒருவன் பலரால் ஒருபோதும் கொல்லப்படலாகாது என்பது உங்கள் கடமையாக இருந்தால், உன் ஆலோசனைகளின்படி செயல்பட்ட பலரால் அபிமன்யு ஏன் கொல்லப்பட்டான்?(58) கடினமான காலத்தில் அனைத்து உயிரினங்களும் அறக் கருத்துகளை மறக்கின்றன. பிறகு மறுவுலகத்தின் வாயில்கள் அடைக்கப்பட்டிருப்பதை அவை காண்கின்றன.(59) ஓ! வீரா {துரியோதனா}, உன் கவசத்தைப் பூட்டுவாயாக, உன் குழல்களை {கேசத்தைக்} கட்டுவாயாக. ஓ பாரதா, உனக்குத் தேவையான அனைத்தையும் எடுத்துக் கொள்வாயாக.(60) ஓ! வீரா, மேலும் கூடுதலாக, பாண்டவர்கள் ஐவரில் நீ மோத விரும்பும் ஒருவனை உன்னால் கொல்ல முடிந்தால்கூட, நீயே மன்னனாகலாம் என்ற உனது மற்றொரு விருப்பத்தையும் உனக்கு நான் அளிக்கிறேன். அல்லது (அவனால்) கொல்லப்படும் நீ சொர்க்கத்திற்குச் செல்வாய். ஓ! வீரா, உனது உயிரைத் தவிர எங்களால் கொடுக்க இயலும் எந்த வரத்தையும் நீ எங்களிடம் கேட்கலாம்" என்றான் {யுதிஷ்டிரன்}".(61,62)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "அப்போது உமது மகன் {துரியோதனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கத்தாலான கவசத்தைத் தன் உடலில் பூட்டிக் கொண்டு, பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்ட அழகிய கிரீடம் ஒன்றையும் அணிந்து கொண்டான்.(63) பிரகாசமான தங்கக்கவசத்தைப் பூண்டிருந்த அவன், அந்தத் தலைக்கவசத்தையும் சூட்டிக் கொண்டான். உண்மையில், ஓ! மன்னா, உமது மகன் ஒரு தங்கச் சிகரத்தைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(64) கவசம்பூட்டி, கதாயுதம் தரித்து, பிற கருவிகளுடன் போர்க்கோலம் பூண்ட உமது மகன் துரியோதனன், ஓ! மன்னா, களத்தில் நின்றபடியே பாண்டவர்கள் அனைவரிடமும்,(65) "சகோதரர்களில் (ஐவரில்), கதாயுதம் தரித்துக் கொண்டு எவனொருவனும் என்னோடு போரிடலாம். என்னைப் பொறுத்துவரை, நான் சகாதேவனோடோ, பீமனோடோ, நகுலனோடோ,(66) பல்குனனோடோ {அர்ஜுனனோடோ}, உன்னோடோ இன்று போரிடவே விரும்புகிறேன். ஏற்றுக் கொண்ட மோதலின்படி உங்களில் ஒருவனோடு போரிடும் நான் இக்களத்தில் வெற்றியையடைவேன் என்பது உறுதியானதாகும்.(67)
தங்கத்துணியால் போர்த்தப்பட்டிருக்கும் என் கதாயுதத்தின் துணையுடன் அடைவதற்கரிதான இந்தப் பகைமைகளின் முடிவை இன்று நான் அடைவேன்.(68) கதாயுத மோதலில் எனக்கு இணையானவனாக ஒருவனையும் நான் நினைக்கவில்லை. என் கதாயுதத்தைக் கொண்டு ஒருவர் பின் ஒருவராக நான் உங்கள் அனைவரையும் கொல்வேன்.(69) உங்கள் அனைவரிலும் என்னோடு நியாயமாகப் போர் செய்யத் தகுந்தவன் ஒருவனுமில்லை. என்னைக் குறித்து இத்தகு செருக்கு நிறைந்த வார்த்தைகளைப் பேசுவது எனக்கு முறையாகாது. இருப்பினும், என் இந்த வார்த்தைகளை உங்கள் முன்னிலையில் நான் உண்மையாக்குவேன்.(70) இந்த நேரத்திற்குள்ளாகவே {முகூர்த்தத்திற்குள்ளாகவே} அந்த வார்த்தைகள் உண்மையாகவோ, பொய்யாகவோ ஆகலாம். உங்களில் கதாயுதத்தை எடுத்துக் கொள்ளக்கூடியவன் என்னோடு போரிடுவானாக" என்றான் {துரியோதனன்}.(71)
-----------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 32ல் உள்ள சுலோகங்கள் : 32
-----------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 32ல் உள்ள சுலோகங்கள் : 32
ஆங்கிலத்தில் | In English |