Hunters found Duryodhana! | Shalya-Parva-Section-30 | Mahabharata In Tamil
(ஹிரதப் பிரவேச பர்வம் - 2)
பதிவின் சுருக்கம் : தடாகத்தில் மறைந்திருந்த துரியோதனனிடம் பேசிய கிருபர் முதலானோர்; ஓரிரவு ஓய்ந்திருக்கப் போவதாகச் சொன்ன துரியோதனன்; இந்நிகழ்வை மறைந்திருந்து கவனித்த வேடர்கள், அதைப் பீமசேனனிடம் தெரிவித்தது; துரியோதனன் இருந்த இடத்திற்கு வந்த பாண்டவர்கள்; பாண்டவர்கள் வருவதை அறிந்து தப்பி ஓடிய அஸ்வத்தாமன் முதலானோர் ஓர் ஆலமரத்தை அடைந்து ஓய்ந்திருப்பது...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "போர்க்களத்தில் பாண்டு மகன்களால் கௌரவத் துருப்புகள் அனைத்தும் கொல்லப்பட்ட பிறகு, என் படையில் பிழைத்திருந்தவர்களான கிருதவர்மன், கிருபர் மற்றும் துரோணரின் வீர மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர் என்ன செய்தனர்? மேலும், தீய ஆன்மா கொண்ட மன்னன் துரியோதனன் அப்போது என்ன செய்தான்?" என்று கேட்டான்.(1,2)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அந்த உயர் ஆன்ம க்ஷத்திரியர்களின் மகளிர் தப்பி ஓடி, (கௌரவ) முகாம் முற்றிலும் வெறுமையான பிறகு, (நீர் குறிப்பிட்ட) அந்த மூன்று தேர்வீரர்களும் கவலையில் நிறைந்தனர்.(3) பாண்டு மகன்களின் வெற்றிக் கூச்சல்களைக் கேட்டும், மாலைவேளையில் முகாம் கைவிடப்பட்டதைக் கண்டும், மன்னனைக் காக்க விரும்பியும், களத்தில் நிற்க முடியாமலும், நமது தரப்பின் அந்த மூன்று தேர்வீரர்களும் அந்தத் தடாகத்தை நோக்கிச் சென்றனர்.(4) வெற்றி ஆன்மா கொண்ட யுதிஷ்டிரன், அந்தப் போரில் தன் சகோதரர்களுடன் சேர்ந்து பெரும் மகிழ்ச்சியை உணர்ந்து, துரியோதனனைக் கொல்லும் விருப்பத்தில் களமெங்கும் திரிந்து கொண்டிருந்தான்.(5) கோபத்தால் நிறைந்தவர்களும், வெற்றியை விரும்பியவர்களுமான பாண்டவர்கள் உமது மகனைத் தேடினர். அவர்கள் மிகக் கவனமாகத் தேடிய போதிலும் அவர்களால் (குரு) மன்னனை {துரியோதனனைக்} கண்டுபிடிக்க முடியவில்லை.(6)
கையில் கதாயுதத்துடன், பெரும் வேகத்துடன் போர்க்களத்தில் இருந்து தப்பிச் சென்ற அவன் {துரியோதனன்}, தனது மாய சக்திகளின் உதவியால் தடாகத்தின் நீரைக் கட்டி அதற்குள் ஊடுருவினான்.(7) இறுதியாகப் பாண்டவர்களின் விலங்குகள் மிகவும் களைத்தபோது, அவர்கள் தங்கள் முகாமுக்குச் சென்று அங்கே தங்கள் படைவீரர்களுடன் ஓய்வெடுத்தனர்.(8) பார்த்தர்கள் முகாமுக்குச் சென்ற பிறகு, கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மற்றும் சாத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோர் மெதுவாகத் தடாகத்தை நோக்கிச் சென்றனர்.(9) மன்னன் இருந்த அந்தத் தடாகத்தை அணுகிய அவர்கள், நீருக்குள் உறங்கிக் கொண்டிருந்தவனும், வெல்லப்பட முடியாதவனுமான அந்த மனிதர்களின் ஆட்சியாளனிடம் {துரியோதனனிடம்}, "ஓ! மன்னா, எழுவாயாக. எங்களோடு சேர்ந்து யுதிஷ்டிரனிடம் போரிடுவாயாக. வெற்றியை அடைந்து பூமியை அனுபவிப்பாயாக, அல்லது, ஓ! துரியோதனா, கொல்லப்பட்டு சொர்க்கத்திற்குச் செல்வாயாக.(11) ஓ! துரியோதனா, பாண்டவர்களின் படைகள் அனைத்தும் கூட உன்னால் கொல்லப்பட்டிருக்கின்றன. அவர்களில் உயிரோடிருப்பவர்களும் மிகவும் சிதைக்கப்பட்டிருக்கின்றனர்.(12) ஓ! ஏகாதிபதி, அவர்களால் உனது வேகத்தைத் தாங்கிக் கொள்ள இயலாது. அதிலும் குறிப்பாக எங்களால் நீ பாதுகாக்கப்படும்போது அவர்களால் தாங்கிக் கொள்ளவே இயலாது. எனவே, ஓ! பாரதா, எழுவாயாக" என்றனர்.(13)
துரியோதனன், "மனிதர்களில் காளைகளே, பாண்டவர்களுக்கும், குருக்களுக்கும் இடையில் நடந்த இந்த அழிவைத் தரும்போரில் உயிரோடு நீங்கள் வந்திருப்பதை நற்பேறாலேயே நான் காண்கிறேன்.(14) நாம் சற்றே ஓய்ந்து, நம் களைப்பகன்றதும், எதிரியோடு மோதி நாம் அவனை வெல்வோம். நீங்களும் களைப்பாக இருக்கிறீர்கள். நானும் மிகவும் சிதைக்கப்பட்டிருக்கிறேன். பாண்டவர்களின் படையோ வலிமையில் பெருகியிருக்கிறது. இக்காரணங்களுக்காவே நான் இப்போது போரிட விரும்பவில்லை.(15) வீரர்களே, உங்களது உன்னத இதயங்களின் காரணமாக உங்கள் பங்கிற்கு நீங்கள் சொல்லும் இந்த அறிவுரைகள் உங்களுக்கு {உங்கள் தரத்திற்கு} அற்புதமானவையல்ல. என்னிடம் நீங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்புணர்வும் பெரியதே. எனினும், இஃது ஆற்றலை வெளிக்காட்டும் நேரமில்லை.(16) இந்த ஓரிரவில் நான் ஓய்ந்திருந்து, நாளை உங்களுடன் சேர்ந்து எதிரியோடு போரிடுவேன். இதில் எவ்வையமும் கிடையாது" என்றான்."(17)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "இவ்வாறு சொல்லப்பட்ட துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, போரில் வெல்லப்பட முடியாத அம்மன்னனிடம் {துரியோதனனிடம்}, "ஓ! மன்னா, எழுவாயாக, நீ அருளப்பட்டிருப்பாயாக. இப்போதும் நாம் எதிரியை வெல்லலாம்.(18) என் அறச்செயல்கள் அனைத்தின் மீதும், உண்மையில் நான் கொடுத்துள்ள கொடைகள் அனைத்தின் மீதும், என் மௌனத் தியானங்களின் மீதும் ஆணையிட்டுச் சொல்கிறேன், ஓ! மன்னா, நான் இன்று சோமகர்களைக் கொல்வேன்.(19) நான் போரில் பாண்டவர்களைக் கொல்லாமல் இவ்விரவு கழியுமேயானால், வேள்விகள் செய்வதன் மூலம் விளையும் மகிழ்ச்சியும், பக்திமான்கள் அனைவராலும் உணரப்படும் மகிழ்ச்சியும் எனக்குக் கிடைக்காமல் போகட்டும்.(20) ஓ! தலைவா, பாஞ்சாலர்கள் அனைவரையும் கொல்லாமல் நான் எனது கவசத்தைக் களைய மாட்டேன். இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே, என்னை நம்புவாயாக" என்றான்.(21)
அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, சில வேடர்கள் அங்கே வந்தனர். தாங்கள் சுமந்து வந்த இறைச்சியின் கனத்தால் களைத்துப் போயிருந்த அவர்கள், குறிப்பிட்ட எந்தக் காரியத்திற்காகவும் இல்லாமல் தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்வதற்காக அங்கே வந்தனர்.(22) ஓ! தலைவா, ஓ! மன்னா, அந்த வேடர்கள் தினந்தோறும் பெரும் மதிப்புடன் பீமசேனனுக்காகக் கூடைகூடையாக இறைச்சியைக் கொண்டு வந்து கொடுப்பவர்களாவர்.(23) அத்தடாகத்தின் கரையில் மறைவாக அவர்கள் அமர்ந்தபோது, துரியோதனனுக்கும், அந்தப் போர்வீரர்களுக்கும் இடையில் நடந்த அந்த உரையாடலின் ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டனர்.(24) போரிட விரும்பாத குரு மன்னனைக் கண்டவர்களும், போரிட விரும்பியவர்களுமான அந்தப் பெரும் வில்லாளிகள், தங்கள் ஆலோசனைகளைப் பின்பற்றும்படி அவனைப் பெரிதும் தூண்டத் தொடங்கினர்.(25)
அந்த வேடர்கள், கௌரவப்படையைச் சேர்ந்த அந்தத் தேர்வீரர்களைக் கண்டும், போரிட விரும்பாத மன்னன் {துரியோதனன்} நீருக்குள் இருப்பதைப் புரிந்து கொண்டும்,(26) அந்தப் போர்வீரர்களுக்கும், தடாகத்தின் ஆழங்களுக்குள் இருக்கும் அவர்களது தலைவனுக்கும் இடையில் நடந்த அந்த உரையாடலைக் கேட்டும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உண்மையில், தடாகத்திற்குள் இருப்பவன் துரியோதனனே என்பதைத் தெளிவாகக் கண்டும் ஒரு தீர்மானத்தைச் செய்தனர்.(27) சிறிது நேரத்திற்கு முன்புதான், மன்னனைத் தேடிக் கொண்டிருந்த பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, இம்மனிதர்களைச் சந்தித்து, அவர்களிடம் துரியோதனன் இருக்கும் இடத்தைக் குறித்த விசாரித்திருந்தான்.(28) பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} சொன்ன அந்த வார்த்தைகளை நினைவுகூர்ந்த அந்த வேடர்கள், ஓ! மன்னா, ஒருவொருக்கொருவர் கிசிகிசுத்தபடியே,(29) "(பாண்டவர்களிடம்) துரியோதனனை வெளிப்படுத்துவோம். அந்தப் பாண்டுவின் மகன் நமக்குச் செல்வத்தைத் தருவான். கொண்டாடப்படும் மன்னன் துரியோதனன் இங்கிருப்பது நமக்குத்தெளிவாகத் தெரிகிறது.(30) பழியுணர்ச்சி கொண்ட துரியோதனன் இந்தத் தடாகத்தின் நீருக்குள் மறைந்திருப்பதைச் சொல்வதற்காக மன்னன் யுதிஷ்டிரன் இருக்குமிடத்திற்கு நாம் அனைவரும் செல்வோம்.(31) மேலும், நாம் அனைவரும் சென்று, பெரும் வில்லாளியும், புத்திசாலியுமான பீமசேனனிடமும், திருதராஷ்டிரன் மகன் இந்தத் தடாகத்தின் நீருக்குள் மறைந்திருக்கிறான் என்பதைச் சொல்வோம்.(32) நம்மிடம் மனநிறைவு கொள்ளும் அவன் {பீமன்}, நமக்கு இன்னும் அதிகச் செல்வத்தைக் கொடுப்பான். பிறகு, இவ்வளவு கடினமாக உழைத்து, நாளுக்கு நாள் இறைச்சியை அடைந்து, இப்படிக் களைப்படைய வேண்டிய தேவை நமக்கு என்ன இருக்கிறது?" என்றனர்.(33)
இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த வேடர்கள் மகிழ்ச்சியால் நிறைந்து, செல்வத்துக்காக ஏங்கி, தங்கள் இறைச்சிக்கூடைகளை எடுத்துக் கொண்டு (பாண்டவ) முகாமை நோக்கிச் சென்றனர்.(34) இலக்கில் துல்லியமும், தாக்குவதில் திறனும் கொண்ட பாண்டவர்கள், ஓ! ஏகாதிபதி, அப்போது மறைந்திருந்த துரியோதனனைக் களத்தில் காணாது, தங்கள் முகாமில் ஓய்ந்திருந்தனர்.(35) அந்தப் பொல்லாத பாவியின் தீய கொள்கைக்கு ஒரு முடிவை அடைய விரும்பிய அவர்கள், போர்க்களத்தின் அனைத்துத் திசைகளுக்கும் ஒற்றர்களை அனுப்பிக் கொண்டிருந்தனர்.(36) எனினும், அக்காரியத்திற்காக அனுப்பப்பட்ட படைவீரர்கள் அனைவரும், ஒன்றாக முகாமுக்குத் திரும்பி வந்து, மன்னன் துரியோதனன் குறித்த எத்தடயத்தையும் காண முடியவில்லை என்று நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் தெரிவித்தனர்.(37) திரும்பி வந்த தூதர்களின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் யுதிஷ்டிரன், ஓ! பாரதக் குலத்தின் காளையே, பெரும் கவலையால் நிறைந்து, கடும் மூச்சு விடத் தொடங்கினான்.(38)
ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பாண்டவர்கள் இவ்வாறு உற்சாகமற்றிருந்தபோது, ஓ! தலைவா, தடாகக் கரையில் இருந்து பெரும் வேகத்துடன் வந்த அந்த வேடர்கள்,(39) துரியோதனனைக் கண்டுபிடித்திருந்ததால் மகிழ்ச்சியால் நிறைந்தவர்களாக முகாமை அடைந்தனர். முகாமுக்குள் நுழைய தடுக்கப்பட்டாலும், பீமசேனன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர்கள் உள்ளே நுழைந்தனர்.(40) பாண்டுவின் வலிமைமிக்க மகனான பீமசேனனை அடைந்த அவர்கள், தாங்கள் கண்டது மற்றும் கேட்டது அனைத்தையும் சொன்னார்கள்.(41) பிறகு எதிரிகளை எரிப்பவனான விருகோதரன் {பீமன்}, அவர்களுக்குப் பெரும் செல்வத்தைக் கொடுத்து, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் அனைத்தையும் சொல்லும் வகையில்,(42) "ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, எனக்கு இறைச்சி கொடுக்கும் வேடர்களால் துரியோதனன் கண்டுபிடிக்கப்பட்டார். ஓ! மன்னா, யாருக்காக நீர் இவ்வளவு கவலைப்படுகிறீரோ, அவன் {துரியோதனன்} இப்போது தடாகத்தின் நீரைக்கட்டி அதற்குள் இப்போது கிடக்கிறான்" என்றான்.(43)
பீமசேனனின் இந்த இனிமையான வார்த்தைகளைக் கேட்டவனும், குந்தியின் மகனுமான அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்}, தன் தம்பியர் அனைவருடன் சேர்ந்து மகிழ்ச்சியால் நிறைந்தான்.(44) வலிமைமிக்க வில்லாளியான துரியோதனன், தடாகத்தின் நீருக்குள் ஊடுருவியிருப்பதை அறிந்த அம்மன்னன், ஜனார்த்தனனை {கிருஷ்ணனைத்} தன் தலைமையாகக் கொண்டு, பெரும் வேகத்துடன் அந்த இடத்திற்குச் சென்றான்.(45) அப்போது, ஓ! ஏகாதிபதி, மகிழ்ச்சியால் நிறைந்திருந்த பாண்டவர்கள் மற்றும் பாஞ்சாலர்கள் அனைவருக்கும் மத்தியில் ஆரவாரவொலி எழுந்தது.(46) ஓ! பாரதக் குலத்தின் காளையே, போர்வீரர்கள் சிங்க முழக்கங்களைச் செய்து உரக்கக் கூச்சலிட்டனர். க்ஷத்திரியர்கள் அனைவரும், ஓ! மன்னா, துவைபாயனம் {த்வைபாயனஹ்ரதம்} என்றழைக்கப்பட்ட அந்தத் தடாகத்திற்குப் பெரும் வேகத்துடன் சென்றனர்.(47) மகிழ்ச்சியடைந்த சோமகர்கள், "பாவியான திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} கண்டுபிடிக்கப்பட்டான்" என்று சுற்றிலும் மீண்டும் மீண்டும் கூச்சலிட்டனர்.(48) ஓ! ஏகாதிபதி, பெரும் வேகத்துடன் வந்த அந்த மூர்க்கமான தேர்வீரர்களின் தேர்களால் உண்டான பேரொலி சொர்க்கங்களையே எட்டியது.(49) அவர்கள் அனைவரின் விலங்குகளும் களைத்திருந்தாலும், துரியோதனனைக் கண்டுபிடிப்பதில் முனைப்புடன் இருந்த மன்னன் யுதிஷ்டிரனின் பின்னால் அவர்கள் வேகமாகத் தொடர்ந்து சென்றனர்.(50)
அர்ஜுனன், பீமசேனன், பாண்டுவுக்கும் மாத்ரிக்கும் பிறந்த இரு மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, பாஞ்சால இளவரசன் திருஷ்டத்யும்னன், வெல்லப்பட முடியாதவனான சிகண்டி,(51) உத்தமௌஜஸ், யுதாமன்யு, வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி, திரௌபதியின் மகன்கள் (ஐவர்), பாஞ்சாலர்களில் இன்னும் உயிரோடு எஞ்சிருந்தவர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரும், அவர்களது யானைகளும், நூற்றுக்கணக்கான காலாட்படை வீரர்களும் யுதிஷ்டிரனுடன் சென்றனர்.(52) பெரும் வீரம் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், ஓ! ஏகாதிபதி, அப்போது துரியோதனன் எதற்குள் இருந்தானோ அந்தத் துவைபாயனம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட தடாகத்தை வந்தடைந்தான். பெருங்கடலைப் போலப் பரந்திருந்த அதன் {அத்தடாகத்தின்} தன்மை இனிமையானதாகவும், அதன் நீர் தெளிவானதாகவும், குளுமையானதாகவும் இருந்தது.(53) உண்மையில், அற்புத வழிமுறையான தனது மாய சக்தியால் அதன் நீரைக் கட்டிய உமது மகன் துரியோதனன், ஓ! பாரதரே, அந்தத் தடாகத்திற்குள்ளேயே இருந்தான்.(54) உண்மையில், ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, ஓ! தலைவா, எம்மனிதனாலும் வெல்லப்பட முடியாதவனான அம்மன்னன் {துரியோதனன்} தன் கதாயுதத்துடன் அந்த நீருக்குள்ளேயே கிடந்தான்.(55) அத்தடாகத்தின் நீருக்குள் இருந்த மன்னன் துரியோதனன், மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பாக (பாண்டவப் படை உண்டாக்கிய) அந்த ஆரவாரப் பேரொலியைக் கேட்டான்.(56) அப்போது யுதிஷ்டிரன், ஓ! மன்னா, துரியோதனனைக் கொல்லும் விருப்பத்துடன் தன் தம்பிகளோடு அந்தத் தடாகத்திற்கு வந்தான்.(57) அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, தன் தேர்ச்சக்கரங்களின் ஒலியாலும், தன் சங்கின் உரத்த முழக்கத்தாலும் பூமியை நடுங்கச் செய்தபடியே அடர்த்தியான புழுதியை எழுப்பினான்.(58)
யுதிஷ்டிரனின் படையால் உண்டாக்கப்பட்ட அவ்வொலியைக் கேட்ட பெரும் தேர்வீரர்களான கிருதவர்மன், கிருபர் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர், அந்தக் குரு மன்னனிடம் {துரியோதனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னார்கள்:(59) "மகிழ்ச்சியால் நிறைந்தும், வெற்றிக்கான ஏக்கத்துடனும் பாண்டவர்கள் இங்கே வருகின்றனர். எனவே, நாங்கள் இந்த இடத்தை விட்டகல்கிறோம். இதை நீ அறிவாயாக. {எங்களுக்கு விடை கொடுப்பாயாக}" என்றனர்.(60) பெரும் சுறுசுறுப்புடைய அவ்வீரர்கள் வார்த்தைகளைக் கேட்ட அவன், "அப்படியே ஆகட்டும்" என்று அவர்களுக்குப் பதிலளித்து, (முன்பு போலவே) தன் மாயசக்தியால் நீரைக் கட்டி அதற்குள்ளேயே இருந்தான்.(61) கிருபரின் தலைமையிலான அந்தத் தேர்வீரர்கள், துயரால் நிறைந்து, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னனிடம் {துரியோதனனிடம்} விடைபெற்றுக் கொண்டு, அந்த இடத்தில் இருந்து தொலைவான ஓரிடத்திற்குச் சென்றுவிட்டனர்.(62)
தொலைவாகச் சென்ற அவர்கள், ஓ! ஐயா, ஓர் ஆலமரத்தைக் கண்டு, அதன் நிழலில் நின்றனர். மிகவும் களைத்துப் போய், மன்னனைக் குறித்த கவலையில் இருந்த அவர்கள், இத்தகு சிந்தனைகளில் ஈடுபட்டனர்:(63) ‘வலிமைமிக்கத் திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, தடாகத்தின் நீரைக் கட்டி அதன் அடியில் கிடக்கிறான். பாண்டவர்களோ போரிடும் விருப்பத்துடன் அந்த இடத்தை அடைந்திருக்கின்றனர்.(64) போர் எவ்வாறு நடைபெறும்? மன்னனுக்கு {துரியோதனனுக்கு} என்ன ஆகும்? குரு மன்னனைப் பாண்டவர்களால் எவ்வாறு கண்டுபிடிக்க முடியும்?’ {என்று நினைத்தனர்}.(65) இவற்றை நினைத்த கிருபர் முதலான அந்த வீரர்கள், தங்கள் தேர்களில் இருந்து தங்கள் குதிரைகளை விடுவித்து, சிறிது நேரம் ஓய்வெடுக்க ஆயத்தமாகினர்" {என்றான் சஞ்சயன்}.(66)
---------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 30ல் உள்ள சுலோகங்கள் : 66
---------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 30ல் உள்ள சுலோகங்கள் : 66
ஆங்கிலத்தில் | In English |