Creatures dragging Jayadratha's body to jungle! | Stri-Parva-Section-22 | Mahabharata In Tamil
(ஸ்திரீவிலாப பர்வம் - 07) [ஸ்திரீ பர்வம் - 13]
பதிவின் சுருக்கம் : அவந்தியின் மன்னன் மற்றும் பிரதீபனின் மகனான பாஹ்லீகர் ஆகியோர் இறந்து கிடப்பதைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; ஜெயத்ரதன் பாண்டவர்களால் மன்னிக்கப்பட்டதையும், பிறகு அவர்களுடைய மகனைக் கொன்றதால் அவனை மன்னிக்காததையும் சொன்னது; துச்சலையில் நிலையை எடுத்துரைத்த காந்தாரி...
காந்தாரி {கிருஷ்ணனிடம்}, "பீமசேனனால் கொல்லப்பட்டு, அவந்தியின் தலைவன் இங்கே கிடப்பதைப் பார். கழுகுகள், நரிகள் மற்றும் காகங்கள் அந்த வீரனை உண்கின்றன. அவன் பல நண்பர்களைக் கொண்டவனென்றாலும் இப்போதோ முற்றிலும் நண்பர்களற்றவனாகக் கிடக்கிறான்.(1) ஓ! மதுசூதனா, எதிரிகளைப் பேரழிவுக்கு உள்ளாக்கிய அந்தப் போர்வீரன், இப்போது குருதியால் மறைக்கப்பட்டு வீரனின் படுக்கையில் கிடப்பதைப் பார்.(2) நரிகள், கங்கங்கள் மற்றும் பல்வேறு ஊனுண்ணும் பிற உயிரினங்களும் அவனை இப்போது இழுத்துக் கொண்டிருக்கின்றன. காலத்தால் கொண்டவரப்பட்ட மாறுபாடுகளைப் பார்.(3) உயிரோடிருக்கும்போது எதிரிகளைப் பயங்கரமாகக் கொல்பவனும், இப்போது வீரனின் படுக்கையில் கிடப்பவனுமான அவனைச் சுற்றிலும் அவனது மனைவியர் ஒன்றாகச் சேர்ந்து அமர்ந்து கொண்டு துயருடன் அழுதுகொண்டிருக்கின்றனர்.(4)
பிரதீபரின் மகனும், பெரும் சக்தி கொண்டவரும், வலிமைமிக்க வில்லாளியுமான பாஹ்லீகர், ஓர் அகன்ற தலைக் கணையால் கொல்லப்பட்டு, உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு புலியைப் போல இப்போது தரையில் கிடக்கிறார்.(5) உயிரை இழந்திருந்தாலும், அவரது முகத்தின் நிறமானது, வளர்பிறையின் பதினைந்தாவது நாளில் முழுமையானதாக எழும் சந்திரனைப் போலவே இன்னும் மிகப் பிரகாசமாக இருக்கிறது.(6)
தன் மகனின் மரணம் குறித்த துயரத்தால் எரிந்தும், தன் நோன்பை நிறைவேற்ற விரும்பியும், அந்த இந்திரனின் மகன் (அர்ஜுனன்}, அங்கே அந்தப் பிருஹத்க்ஷத்திரனின் மகனை {ஜெயத்ரதனைக்} கொன்றான்.(7) சிறப்புமிக்கத் துரோணரால் பாதுகாக்கப்பட்ட ஜெயத்ரதன், தன் சபதத்தை நிறைவேற்ற விரும்பிய பார்த்தனால் {அர்ஜுனனால்}, பதினோரு அக்ஷௌஹிணிகளின் துருப்புகளை ஊடுருவிவந்து கொல்லப்பட்டான்.(8) ஓ! ஜனார்த்தனா, மங்கலமற்ற கழுகுகள், செருக்கும் சக்தியும் நிறைந்தவனும், சிந்து-சௌவீரர்களின் தலைவனுமான ஜெயத்ரதனை உண்கின்றன.(9) ஓ! அச்யுதா, அர்ப்பணிப்புமிக்க அவனது மனைவிகள் காக்க முயன்றாலும், ஊனுண்ணும் உயிரினங்கள் அருகில் இருக்கும் காட்டுக்கு அவனது உடலை இழுத்துச் செல்கின்றன.(10) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், சிந்துக்கள் மற்றும் சௌரவீரர்களின் தலைவனுமான அவனது {ஜெயத்ரதனின்} காம்போஜ மற்றும், யவன மனைவியர், (அந்தக் காட்டு விலங்குகளிடம் இருந்து) அவனைப் பாதுகாக்கின்றனர்.(11)
ஓ! ஜனார்த்தனா, கேகயர்கள் துணையுடன் அவன் {ஜெயத்ரதன்} திரௌபதியை அபகரிக்க முயற்சித்த போதே அவன் பாண்டவர்களால் கொல்லத்தக்கவனானான்.(12) எனினும், துச்சலையின் மீது கொண்ட மதிப்பால் அவர்கள் அந்தச் சந்தர்ப்பத்தில் அவனை {ஜெயத்ரதனை} விடுவித்தனர். ஓ! கிருஷ்ணா, மீண்டும் துச்சலையின் மீது அதே மதிப்பை ஏன் அவர்கள் காட்டவில்லை?(13) இளம் வயதையுடைந்த அந்த என் மகள் {துச்சலை} இப்போது அழுது கொண்டிருக்கிறாள். அவள், தன் கரங்களால் தன் உடலை அடித்துக் கொண்டு, பாண்டவர்களை நிந்தித்துக் கொண்டிருக்கிறாள்[1].(14) ஓ! கிருஷ்ணா, இளம் வயதையுடைய என் மகள் {துச்சலை} விதவையாகவும், என் மருமகள்கள் அனைவரும் தலைவர்களற்றவர்களாகவும் செய்யப்பட்டதைவிட வேறு என்ன பெரிய துயரம் எனக்கு இருக்க முடியும்?(15)
[1] கும்பகோணம் பதிப்பில், "சிறுமியான என் புத்ரியானவள், ஸைந்தவனைக் குறித்துத் துக்கிக்கின்றவளாக அதிகமாகத் தடுமாற்றமுள்ளவள்போலவும் பாண்டவர்களை நிந்திக்கின்றவள் போலவும் தன்னை மாய்க்க ப்ரயத்னப்படுகிறாள்" என்றிருக்கிறது.
ஐயோ, ஐயோ, என் மகள் துச்சலை, துயரம் மற்றும் அச்சமனைத்தையும் கைவிட்டு, தன் கணவனின் தலையைத் தேடி அங்கேயும், இங்கேயும் ஓடிக் கொண்டிருப்பதைப் பார்.(16) தங்கள் மகனை {அபிமன்யுவைக்} காக்க விரும்பிய பாண்டவர்கள் அனைவரையும் எவன் தடுத்து நிறுத்தினானோ, எவன் ஒரு பரந்த படையைக் கொல்லும் காரணமாக அமைந்தானோ, அவன் {ஜெயத்ரதன்}, இறுதியாக மரணத்திற்கு அடிபணிந்தான்.(17) ஐயோ, சந்திரனைப் போன்ற அழகிய முகங்களைக் கொண்ட அவனது மனைவியர், மதங்கொண்ட யானைக்கு ஒப்பானவனான அந்தத் தடுக்கப்பட முடியாத வீரனைச் சுற்றிலும் அமர்ந்து, அழுதுகொன்றிருக்கின்றனர்" என்றாள் {காந்தாரி}.(18)
ஸ்திரீ பர்வம் பகுதி – 22ல் உள்ள சுலோகங்கள் : 18
ஆங்கிலத்தில் | In English |