Carnivorous creatures fed the body of Karna! | Stri-Parva-Section-21 | Mahabharata In Tamil
(ஸ்திரீவிலாப பர்வம் - 06) [ஸ்திரீ பர்வம் - 12]
பதிவின் சுருக்கம் : கர்ணனின் உடலைக் கண்டு, கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; கர்ணனின் மனைவிகளான விருஷசேனனின் தாயும், சுஷேனனின் தாயும் வந்து அழுதது; விலங்குகளால் உண்ணப்பட்டு எஞ்சியிருந்த கர்ணனின் உடலைக் கண்ட அவனது மனைவிகள் ...
காந்தாரி {கிருஷ்ணனிடம்}, "பெரும் வில்லாளியும், வலிமைமிக்கவனுமான கர்ணன் அங்கே தரையில் கிடக்கிறான். போரில் அவன் சுடர்மிக்க நெருப்பைப் போன்றவனாக இருந்தான். எனினும், அந்த நெருப்பு, பார்த்தனின் {அர்ஜுனனின்} சக்தியால் அணைக்கப்பட்டது.(1) பல அதிரதர்களைக் கொன்றவனான அந்த விகர்த்தனன் மகன் கர்ணன், குருதியில் நனைந்தபடி, வெறுந்தரையில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடப்பதைப் பார்.(2) கோபம் நிறைந்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான அவன், பெரும் வில்லாளியாகவும், வலிமைமிக்கத் தேர்வீரனாகவும் இருந்தான். அவன், காண்டீவதாரியால் {அர்ஜுனனால்} போரில் கொல்லப்பட்டு, இப்போது தரையில் உறங்கிக் கொண்டிருக்கிறான்.(3) வலிமைமிக்கத் தேர்வீரர்களான என் மகன்கள், யானை மந்தையானது தங்கள் தலைவனை முன்னணியில் கொண்டு போரிடுவதைப் போலப் பாண்டவர்களிடம் கொண்ட அச்சத்தினால், கர்ணனைத் தங்கள் தலைமையில் நிறுத்திக் கொண்டு போரிட்டனர்.(4) ஐயோ, சிங்கத்தால் கொல்லப்பட்ட ஒரு புலியைப் போலவோ, மதங்கொண்ட யானையால் கொல்லப்பட்ட மற்றொரு யானையைப் போலவோ அந்தப் போர்வீரன் {கர்ணன்}, சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டிருக்கிறான்.(5)
ஓ! மனிதர்களில் புலியே {கிருஷ்ணா}, கலைந்த கேசத்துடன், உரத்தத் துன்ப ஓலத்துடனும், ஒன்றுகூடியிருப்பவர்களான அந்தப் போர்வீரனின் மனைவியர், வீழ்ந்துவிட்ட அந்த வீரனைச் சுற்றிலும் அமர்ந்திருக்கின்றனர்.(6) அந்தப் போர்வீரனைக் குறித்த எண்ணங்களால் உண்டான கவலையில் நிறைந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனுக்கு, {கர்ணன் மீது கொண்ட அச்சத்தால்} பதிமூன்று ஆண்டுகளாகக் கண்சிமிட்டும் நேர உறக்கமும் கிட்டவில்லை.(7) போரில் பகைவர்களால் தடுக்கப்பட முடியாதவனும், எதிரிகளால் வெல்லப்பட முடியாதவனுமான மகவத்தை {இந்திரனைப்} போலவே, கர்ணனும், அண்ட முடிவில் கடுந்தழல்களுடன் அனைத்தையும் எரிக்கும் நெருப்பைப் போன்றவனாகவும், அசையாமல் நிற்கும் இமயத்தைப் போன்றவனாகவும் இருந்தான்.(8) ஓ! மாதவா {கிருஷ்ணா}, அந்த வீரனே திருதராஷ்டிரர் மகனின் பாதுகாவலனாகவும் இருந்தான். ஐயோ, காற்றால் வீழ்த்தப்பட்ட மரத்தைப் போலவே அவன் இப்போது உயிரையிழந்து வெறுந்தரையில் கிடக்கிறான்.(9)
கர்ணனின் மனைவியான, விருஷசேனனின் தாய், பரிதாபகரமாக அழுது புலம்பி தரையில் விழுவதைப் பார்.(10) அவள் இப்போது, "உனது ஆசானின் {பரசுராமரின்} சாபம் உம்மைப் பின்தொடர்ந்தது என்பதில் ஐயமில்லை. உமது தேரின் சக்கரம் பூமியால் விழுங்கப்பட்டபோது, கொடூரனான தனஞ்சயன் {அர்ஜுனன்} உமது தலையை ஒரு கணையால் அறுத்துவிட்டான்.(11) ஐயோ, வீரத்திற்கும் திறனுக்கும் ஐயோ" என்று சொல்கிறாள்.
சுஷேனனின் தாயான {மற்றொரு} மங்கை, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், துணிச்சல்மிக்கவனுமான கர்ணன், இடுப்பில் சுற்றிய தங்கக் கச்சையுடன் தரையில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடப்பதைக் கண்டு மிகவும் பீடிக்கப்பட்டவளாக, துன்பத்தால் கதறியபடியே, தன் உணர்வுகளை இழந்து கீழே விழுகிறாள்.(12)
ஊனுண்ணும் உயிரினங்கள் அந்தச் சிறப்புமிக்க வீரனின் {கர்ணனின்} உடலை உண்டு, அதை {அவ்வுடலை} மிகச் சிறிய அளவாகக் குறைத்தன[1]. தேய்பிறையின் பதினாலாம் இரவில் வரும் நிலவைப் போன்ற அந்தக் காட்சி மகிழ்ச்சியளிப்பதாக இல்லை. தன் மகனின் {சுஷேனின்} மரணத்தால் துயரில் எரிந்து கொண்டிருந்த அவள், தன் தலைவனின் {கர்ணனின்} அருகில் வந்து அவனது முகத்தை முகர்கிறாள்" என்றாள் {காந்தாரி}.(14)
[1] கும்பகோணம் பதிப்பில், "நாற்பக்கங்களிலும் சரீரங்களைத் தின்கின்ற மிருகபக்ஷிகளால் மஹாத்மாவான கர்ணன் சிறிது மிகுந்திருக்கும்படி செய்யப்பட்டானன்றோ?" என்றிருக்கிறது.
ஸ்திரீ பர்வம் பகுதி – 21ல் உள்ள சுலோகங்கள் : 14
ஆங்கிலத்தில் | In English |