Brothers deceased due to lust! | Adi Parva - Section 214 | Mahabharata In Tamil
(ராஜ்யலாப பர்வம் - 05)
பதிவின் சுருக்கம் : சுந்தனும், உபசுந்தனும் பெரும் இன்பத்துடன் போதையில் இருப்பது; அவர்கள் இருக்கும் இடத்திற்குத் திலோத்தமை சென்றது; அவள் காரணமாக அவர்களுக்குள் மோதல் ஏற்படுவது; இருவரும் அழிவது; நாரதர் பாண்டவர்களுக்குள் ஒரு விதியை ஏற்படுத்த வலியுறுத்துவது; அவர் முன்னிலையிலேயே அவர்களுக்குள் ஒரு விதி பிறப்பது...
நாரதர் தொடர்ந்தார், "அதே வேளையில் அசுரச் சகோதரர்கள் {சுந்தனும், உபசுந்தனும்} முழு உலகத்தையும் அடக்கி எதிரிகள் அற்று இருந்தனர். மூன்று உலகங்களையும் தங்கள் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு, தங்கள் முயற்சிகளால் ஏற்பட்ட களைப்பும் நீங்கிய பிறகு, அவர்களால் இனி செய்யப்பட வேண்டியது எதுவும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது.(1) கந்தர்வர்கள், யக்ஷர்கள், நாகர்கள், ராட்சசர்கள், பூமியை ஆண்ட மன்னர்கள் ஆகியோரின் செல்வங்களையெல்லாம் அபகரித்து வந்து, தங்கள் நாட்களை மகிழ்ச்சியுடன் கழித்தனர்.(2) அவர்கள் தங்களுக்கு (மூன்று உலகிலும்) எதிரிகளே இல்லை என்று கண்டபோது, இன்பத்திற்கும் மகிழ்ச்சிக்கும் தங்களை அர்ப்பணித்து, மற்ற முயற்சிகள் அனைத்தையும் கைவிட்டுத் தேவர்களைப் போல வாழ்ந்தனர்.(3) அவர்கள், பெண்கள், வாசனைப் பொருட்கள், பூ மாலைகள், இசை, குடி என அனைத்து வகை இன்பங்களையும், அனைத்து புலன் நுகர் பொருட்களையும் தாராளமாக அனுபவித்தனர்.(4) தேவர்களைப் போல அவர்கள் அபரிமிதமான இன்பங்களையும், கேளிக்கையையும் அனுபவித்துக் கொண்டு வீடுகளிலும், தோப்புகளிலும், நந்தவனங்களிலும், காடுகளிலும், மலைகளிலும் என அவர்கள் விரும்பிய இடங்களில் எல்லாம் திரிந்து கொண்டிருந்தனர்.(5)