Thursday, January 03, 2013

பர்வத் திரட்டு! | ஆதிபர்வம் - பகுதி 2 ஈ

Sangraha Parva! | Adi Parva - Section 2d | Mahabharata In Tamil

(பர்வசங்கிரகப் பர்வம்)

பதிவின் சுருக்கம் : ஒன்பதாவது முதல் பதினெட்டாவது பர்வங்கள் வரையிலான  சுருக்கங்கள்; பாரதம் படிப்பதன் பலன்...

அடுத்ததாக அற்புதமான பர்வமான சல்லிய பர்வம் உரைக்கப்படுகிறது. பெரும் போர்வீரர்கள் அனைவரும் வீழ்ந்துவிட்ட நிலையில், மத்ர மன்னன் சல்லியன் {கௌரவப்} படையின் தலைவனாகிறான்.(278) தேர்வீரர்களுக்கிடையில் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறும் மோதல்கள் இங்கே விளக்கப்படுகின்றன.(279) பெரும் சல்லியன், நீதிமானான யுதிஷ்டிரனின் கையில் வீழ்கிறான். இந்தப் பர்வத்தில்தான் சகாதேவனின் கையால் சகுனி மரணத்தைத் தழுவுகிறான்.(280) பேரழிவுக்குப்பின்னர் சில துருப்புகளே எஞ்சியிருக்கும் நிலையில் தடாகத்திற்குச் சென்ற துரியோதனன், அந்த நீர் நிலைக்குள் ஓர் அறையை உண்டாக்கிக் கொண்டு அங்கே சிறிது நேரம் படுத்துக் கிடக்கிறான்.(281) வேடர்களிடம் இருந்து பீமனுக்கு இந்தச் செய்தி கிடைப்பது உரைக்கப்படுகிறது; நுண்ணறிவு கொண்ட யுதிஷ்டிரனுடைய அவமதிப்பான பேச்சுகளால் தூண்டப்பட்டு, அந்த அவமதிப்புகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் நீர்நிலையில் இருந்து துரியோதனன் வெளிவருவது. அதன் பிறகு பீம துரியோதன கதாயுதப் போர்;(282,283) இத்தகு மோதல் நடந்து கொண்டிருக்கும்போது பலராமன் வருகை; சரஸ்வதி நதியின் புனிதத்தன்மை விவரிக்கப்படுகிறது;(284) கதாமோதல் தொடர்வது; போரில் தன் கதாயுதத்தால் {அதன் பயங்கர வீச்சால்} பீமன் துரியோதனனின் தொடைகள் முறிப்பது. இவை அனைத்தும் இந்த அற்புதமான ஒன்பதாவது பர்வத்தில் விளக்கப்படுகின்றன.(285,286) மொத்தம் ஐம்பத்து ஒன்பது {59} பகுதிகளில்[11] மூவாயிரத்து இருநூற்று இருபது {3220} பாடல்களில் {சுலோகங்களில்} கௌரவர்களின் புகழைப் பரப்புபவரான பெரும் வியாசர் இவற்றை விவரிக்கிறார்.(287,288)

[11] கங்குலியில் சல்லிய பர்வத்தில் 65 பகுதிகளும் 3503 ஸ்லோகங்களும் இருக்கின்றன.

இதன் பிறகு பயமுறுத்தும் நிகழ்வுகள் கொண்ட சௌப்திக பர்வத்தைக் குறித்து நான் விளக்கப் போகிறேன். பாண்டவர்கள் சென்றவுடன், பெரிய வீரர்களான கிருதவர்மன், கிருபர், துரோண மைந்தன் {அஸ்வத்தாமன்} ஆகியோர், தொடை உடைந்து இரத்தத்தில் நனைந்து கிடக்கும் துரியோதனனைக் காண்கின்றனர். இந்தக் காட்சியைக் கண்ட துரோணரின் மைந்தன் {அசுவத்தாமன்} கோபங்கொண்டு "பாஞ்சாலர்கள், திருஷ்டத்யுமனன், பாண்டவர்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளைக் கொல்லாமல் என் கவசம் களைவதில்லை" என்று சபதமேற்கிறான்.(289-292) பிறகு மூவரும் துரியோதனனை விட்டுவிட்டு கதிர் அடங்கும் வேளையில் கானகத்துக்குள் நுழைகின்றனர்.(293)

ஒரு பெரிய ஆலமரத்தடியில் அவர்கள் மூவரும் உட்கார்ந்திருக்கையில், ஓர் ஆந்தை பல காக்கைகளை ஒன்றன்பின் ஒன்றாகக் கொல்வதைக் காண்கின்றனர்.(294) இக்காட்சியைக் கண்ட அஸ்வத்தாமன், இதயம் நிறைந்த கோபத்தால், தன் தந்தையைக் கொன்ற பாஞ்சாலர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது, அவர்களைப் பழி வாங்குவது என்று தீர்மானிக்கிறான்.(295) பாசறையின் வாசலை பயங்கரமான ஓர் இராட்சசன் காவல் காப்பதைக் காண்கிறான்.(296) தன் போர்க்கருவிகள் அவனிடம் செயலிழப்பதைக் கண்ட துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} மனத்தில் முக்கண் ருத்திரனை வழிபட்டு அவனைக் {ருத்திரனைக்} குளிர்விக்கிறான்.(297)

பிறகு கிருதவர்மனையும், கிருபரையும் அழைத்துக் கொண்டு இரவு வேளையில் யாரும் எதிர்பாராத நேரத்தில், திரௌபதி மைந்தர்கள் அனைவரையும், திருஷ்டத்யும்னனுடன் கூடிய பாஞ்சாலர்கள் அனைவரையும், அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது, அவர்களது உறவினர்களுடன் சேர்த்துக் கொல்கிறான். ஐந்து பாண்டவர்களையும், சாத்யகியையும் தவிர்த்து மற்ற அனைவரும் அந்தப் பயங்கர இரவில் இறக்கின்றனர். கிருஷ்ணனின் ஆலோசனைப்படி தப்பியவர்களிடம்,(298-300) உறங்கிக் கொண்டிருக்கும்போது துரோணர் மகனால் பாஞ்சாலர்கள் கொல்லப்பட்டதைத் திருஷ்டத்யும்னனின் தேரோட்டி சொல்கிறான். பிள்ளைகள், தமையன், தந்தை ஆகியோரின் பிரிவால் துயருற்ற திரௌபதி உண்ணாதிருந்து சாக முடிவு செய்து, தனது கணவர்களின் முன்னால் அமர்கிறாள். திரௌபதியின் வார்த்தைகளில் இரக்கமடைந்த பீமசேனன், அவளை நிறைவு செய்ய எண்ணி, தனது கதாயுதத்தை எடுத்துக் கொண்டு ஆயுதாசானின் மகனைத் {அசுவத்தாமனை} தேடுகிறான்.(301-303) பீமசேனன் மீதிருக்கும் பயத்தாலும், விதியின் வசத்தாலும் அசுவத்தாமன் பாண்டவர்கள் அனைவரையும் அழிக்கும்படி, “இது பாண்டவர்கள் அனைவரின் அழிவுக்காக” எனச் சொல்லி தெய்வீகக் கணையொன்றை ஏவுகிறான்;(304) கிருஷ்ணன் அசுவத்தாமனின் வார்த்தைகளைக் கேட்டு "இது நடக்காது" என்று சொல்லி அந்தக் கணையை அர்ஜுனனைக் கொண்டு செயலிழக்க வைக்கிறான்.(305) துவைபாயனரும் {வியாசரும்}, கிருஷ்ணனும் அழிவு நோக்கம் கொண்ட அசுவத்தாமனுக்குச் மாறி மாறி சாபம் கொடுக்கின்றனர். அஸ்வத்தாமனும் பதிலுக்குச் சாபமிடுகிறான்.(306) அஸ்வத்தாமனிடம் அவனது தலையில் பிறப்பிலிருந்தே இருக்கும் நகையொன்றை அறுத்தெடுத்து, மிகவும் மகிழ்ச்சியடைந்து, தங்கள் வெற்றி குறித்துப் பெருமை பேசி, துயரத்தில் இருக்கும் திரௌபதிக்கு அதை {அந்நகையைப்} பரிசளிக்கின்றனர் பாண்டவர்கள்.(307) இப்படியே சௌப்திகம் என்று அழைக்கப்படும் இந்தப் பத்தாவது பர்வம் உரைக்கப்படுகிறது. மொத்தம் பதினெட்டு {18} பகுதிகளில்[12] எண்ணூற்று எழுபது {870} பாடல்களில் {சுலோகங்களில்} சௌப்திக பர்வத்தை விவரிக்கிறார் பெரும் வியாசர்.(308,309) இந்தப் பர்வத்தில் சௌப்திக மற்றும் ஐஷிக பர்வங்கள் பெருமுனிவரால் சேர்க்கப்பட்டிருக்கிறது.

[12] கங்குலியில் சௌப்திக பர்வத்தில் 18 பகுதிகளும், 791 ஸ்லோகங்களும் இருக்கின்றன.

இதன்பிறகு துயர்நிறைந்த பர்வமான ஸ்த்ரீ பர்வம் உரைக்கப்படுகிறது.(310) மைந்தர்களின் பிரிவால் துயருற்றிருந்த, முன்னறி கண் கொண்ட திருதராஷ்டிரன் முன்னால் "இது பீமன்" என்று கிருஷ்ணன் ஓர் இரும்புச் சிலையைக் காட்ட, பீமன் மீதிருந்த கோபத்தால் அந்தச் சிலையை இறுகப் பற்றித் தூள் தூளாக்குகிறான் திருதராஷ்டிரன். விதுரன் திருதராட்டிரனின் கோபத்தை அமைதிப்படுத்தி, உலகப்பற்றை விடச்சொல்லி விவேகம் நிறைந்த அந்த ஏகாதிபதிக்கு அறிவுறுத்துகிறான்.(311-313) அடுத்து திருதராஷ்டிரன் தனது இல்லத்தில் உள்ள பெண்மணிகளை அழைத்துக் கொண்டு, போர் நடந்த இடத்திற்குச் செல்லும் காட்சி விவரிக்கப்படுகிறது.(314) இதைத் தொடர்ந்து கொல்லப்பட்ட வீரர்களுடைய மனைவியரின் துயரமான ஓலங்களும், புலம்பல்களும் சொல்லப்படுகின்றன. காந்தாரியும் திருதராஷ்டிரனும் கோப மிகுதியால் மயக்கம் கொண்டு நினைவிழப்பது.(315) திரும்பி வராதவர்களான தங்கள் மகன்கள், சகோதரர்கள் மற்றும் தந்தைகள் போர்க்களத்தில் கொல்லப்பட்டுக் கிடப்பதை க்ஷத்திரியப் பெண்மணிகள் காண்கின்றனர்.(316) மகன்களும், பேரப்பிள்ளைகளும் கொல்லப்பட்ட காந்தாரிக்கு கிருஷ்ணன் ஆறுதல் வார்த்தைகள் சொல்வது.(317) இறந்த மன்னர்களின் சடலங்களுக்கு, பெரும் ஞானியும், அறவோர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்} உரிய இறுதிச்சடங்குகளைச் செய்வது.(318) கமுக்கத்தில் தனக்கு மகனாய் பிறந்த கர்ணனை அங்கீகரிக்கும் குந்தியின் கதை.(319) இவையாவும் பெரும் முனிவரான வியாசரால் இந்தப் பதினோராவது பர்வத்தில் விளக்கப்படுகிறது.(320) உணர்வுள்ள நெஞ்சங்களில் கவலையையும், கண்ணீரையும் வர வைக்கும் பர்வம் இது. மொத்தம் இருபத்து ஏழு {27} பகுதிகளில்[13] எழுநூற்று எழுபத்தைந்து {775} பாடல்களில் {சுலோகங்களில்} இந்தப் பர்வம் விவரிக்கப்படுகிறது.(321,322)

[13] கங்குலியில் ஸ்திரீ பர்வத்தில் 27 பகுதிகளும், 803 ஸ்லோகங்களும் இருக்கின்றன.

பனிரெண்டாவதாகப் பர்வமாக, புரிதலை {அறிவை} அதிகரிக்க வல்லதும், தன் தந்தைமார், சகோதரர்கள், மகன்கள், தாய்மாமன்கள், மற்றும் சம்பந்திகள் கொல்லப்பட்ட யுதிஷ்டிரனின் மனத்தளர்ச்சி சம்பந்தமானதுமான சாந்தி பர்வம் வருகிறது. இந்தப் பர்வத்தில், அறிவை விரும்பும் மன்னர்களுக்குத் தகுந்த பல்வேறு கடமைகளைக் குறித்துப் பீஷ்மர் தன் கணைப்படுக்கையில் இருந்து எவ்வாறு விளக்குகிறார் என்பது சொல்லப்பட்டுள்ளது; ஆபத்துக் காலங்களுக்கு உகந்த கடமைகளையும், காலம் மற்றும் அறிவு ஆகியவற்றையும் முழுமையாக விளக்குகிறது இந்தப் பர்வம்.(323-325) இதைப் புரிந்து கொள்வதன் மூலம் ஒரு மனிதன் முழுமையான அறிவை அடைகிறான். இறுதி விடுதலை {முக்தி} குறித்தும் இந்தப் பர்வத்தில் விவரிக்கப்படுகிறது. இதுவே ஞானிகளுக்குப் பிடித்தமான பனிரெண்டாவது பர்வமாகும். மொத்தம் முந்நூற்று முப்பத்தொன்பது {339} பகுதிகளில்[14] பதினாலாயிரத்து எழுநூற்று முப்பத்திரண்டு {14732} பாடல்களில் {சுலோகங்களில்} இது விவரிக்கப்படுகிறது.

[14] கங்குலியில் சாந்தி பர்வத்தில் 366 பகுதிகளும் 13682 ஸ்லோகங்களும் இருக்கின்றன.

வரிசையில் அடுத்தது அற்புதமான அனுசாசன பர்வம் ஆகும்.(328-329) பாகீரதியின் {கங்கையின்} மைந்தனான பீஷ்மரால் விளக்கப்பட்டுக் கடமைகளை {நீதிகளைக்} கேட்டு குருக்களின் மன்னனான யுதிஷ்டிரன் எவ்வாறு தன்னைச் சீர்படுத்திக் கொண்டான் என்பது இதில் விளக்கப்படுகிறது.(330) தர்மம் {அறம்} மற்றும் அர்த்தம் {பொருள்} ஆகியவற்றின் விதிகளும்; கொடை {தானம்} மற்றும் தகுதிகளின் {புண்ணியங்களின்} விதிகளும்; தானம் பெறுபவர்களின் தகுதிகளும், தானம் செய்வதற்கான முக்கியமான விதிமுறைகளும் இப்பர்வத்தில் விவரமாக விளக்கப்படுகின்றன. மேலும் இந்தப் பர்வத்தில், சடங்குகளில் ஒரு தனி மனிதனின் கடமை, நடத்தை விதிகள் மற்றும் ஒப்பற்ற வாய்மையின் தகுதி {சத்தியத்தின் பயன்} ஆகியனவும் விளக்கப்படுகின்றன.(331,332) மேலும் இந்தப் பர்வம், பிராமணர்கள் மற்றும் பசுக்களின் பெரும் தகுதியை {மகிமையை} வெளிப்படுத்தி, காலம் மற்றும் இடம் தொடர்பான கடமைகளின் புதிர்களைக் கட்டவிழ்க்கிறது.(333) இவையே, பல்வேறு நிகழ்வுகளைக் கொண்ட அனுசாசனம் என்றழைக்கப்படும் இந்த அற்புத பர்வத்தின் உள்ளடக்கங்களாகும். பீஷ்மர் சொர்க்கத்திற்கு உயர்வதும் இந்தப் பர்வத்தில்தான் விளக்கப்படுகிறது.(334) நூற்று நாற்பத்தாறு {146} பகுதிகளில்[15] எட்டாயிரம் {8000} பாடல்களில் {சுலோகங்களில்} இந்தப் பர்வம் விவரிக்கப்படுகிறது.

[15] கங்குலியில் அனுசாசன பர்வத்தில் 168 பகுதிகளும் 7670 ஸ்லோகங்களும் இருக்கின்றன.

அதன்பிறகு வருவது பதினான்காவது பர்வமான அஸ்வமேத பர்வம் ஆகும். (335,336) இதில் சம்வர்த்தர் மற்றும் மருத்தத்தனின் அற்புதமான கதை விவரிக்கப்படுகிறது. அதன்பிறகு (பாண்டவர்கள்) தங்கக் கருவூலங்களைக் கண்டடைவது; அஸ்வத்தாமனின் (தெய்வீக) ஆயுதத்தால் {கருவில்} எரிக்கப்பட்ட பரீக்ஷித் கிருஷ்ணனால் மீட்கப்பட்டுப் பிறப்பை அடைவதும் விவரிக்கப்படுகிறது. அவிழ்த்துவிடப்பட்ட வேள்விக் குதிரையைப் பின்தொடர்ந்து செல்கையில், அதைக் கோபத்துடன் கைப்பற்றிய பல்வேறு இளவரசர்களுடன், பாண்டுவின் மகனான அர்ஜுனன் செய்த போர்கள் சொல்லப்படுகின்றன. மணிப்பூரின் தலைவனுடைய மகளான சித்திராங்கதையின் (அர்ஜுனன் மூலம் பிறந்த) மகனான பப்ருவாகனனுடன் மோதி பேராபத்தை அடையும் அர்ஜுனனின் நிலை விவரிக்கப்படுகிறது. அதன் பிறகு குதிரை வேள்வியில் கீரிப்பிள்ளையின் கதை சொல்லப்படுகிறது.(337-340) இதுவே அஸ்வமேதிகம் என்றழைக்கப்படும் மிக அற்புதமான பர்வமாகும். இதில் நூற்று மூன்று {103} பகுதிகள் இருக்கின்றன[16].(341) உண்மை ஞானம் கொண்ட வியாசரால் (இதில்) தொகுக்கப்பட்ட சுலோகங்களின் எண்ணிக்கை மூவாயிரத்து முன்னூற்று இருபது {3320} ஆகும்.(342)

[16] கங்குலியில் அஸ்வமேத பர்வத்தில் 92 பகுதிகளும், 2844 ஸ்லோகங்களும் இருக்கின்றன.

அதன்பிறகு வருவது பதினைந்தாவது பர்வமான ஆஸ்ரமவாஸிக பர்வம் ஆகும். இதில், திருதராஷ்டிரன் நாட்டைத்துறந்து, தனது மனைவி காந்தாரி மற்றும் விதுரனுடன் காட்டுக்குச் செல்வது விளக்கப்படுகிறது. இதைக் கண்டவளும், மூத்தவர்களைப் பேணிக் காப்பதில் எப்போதும் ஈடுபடுபவளுமான நல்லாள் பிருதையும் {குந்தியும்} அந்த முதிர்ந்த தம்பதியினரை {திருதராஷ்டிரனையும், காந்தாரியையும்} பின்தொடர்ந்து செல்வது.(343-345) வியாசரின் கருணையால், மன்னன் (திருதராஷ்டிரன்) கொல்லப்பட்ட தன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் பிற இளவரசர்களின் ஆவிகளைச் சந்திக்கும் அற்புத நிகழ்வு விளக்கப்படுகிறது.(346) பிறகு தன் கவலைகளை அனைத்தையும் கைவிட்ட அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, தன் புண்ணியச் செயல்களின் உயர்ந்த கனிகளைத் தன் மனைவியுடன் சேர்ந்து அடைந்தான். இந்தப் பர்வத்தில், தன் வாழ்வு முழுவதும் அறவோனாக வாழ்ந்த விதுரன் பெரும் அருள்நிலையை அடைந்தான்.(347) கல்விமானும், அமைச்சர்களில் முதன்மையானவனும், கவல்கணன் மகனுமான சஞ்சயன், ஆசைகளைத் தன் முழுக் கட்டுக்குள் கொண்டு வந்து, அருள் நிலையை அடைந்தது இந்தப் பர்வத்தில் சொல்லப்படுகிறது. இதில் நீதிமானான யுதிஷ்டிரன், நாரதரைச் சந்தித்து, விருஷ்ணிகளின் குலம் அழிந்ததைக் குறித்து அவரிடம் இருந்து கேள்விப்படுகிறான். இதுவே ஆஸ்ரமவாசிகம் என்றழைக்கப்படும் மிக அற்புதமான பர்வமாகும்.(348,349) உண்மையை அறிந்தவரான வியாசரால் நாற்பத்திரண்டு {42} பகுதிகளில்[17], ஆயிரத்து ஐநூற்று ஆறு {1506} பாடல்களில் {சுலோகங்களில்} இந்தப் பர்வம் விவரிக்கப்படுகிறது.(350.,351)

[17] கங்குலியில் ஆஸ்ரமவாஸிக பர்வத்தில் 39 பகுதிகளும், 1081 ஸ்லோகங்களும் இருக்கின்றன.

அதன்பிறகு வருவது வலிநிறைந்த நிகழ்வுகள் கொண்ட மௌஸல பர்வம் ஆகும். இதில், சிங்கம் போன்ற இதயம் கொண்டவர்களும், பல போர்களங்களில் பெற்ற விழுப்புண்களை மார்பில் கொண்டவர்களுமான விருஷ்ணி குல {யாதவக் குல} நாயகர்கள் {சாத்யகியும், கிருதவர்மனும்}, ஓர் அந்தணனின் சாபத்தால், குடிவெறியில் மதியிழந்து, வஜ்ரத்தைப் போன்ற நிலையை அடைந்த சவட்டைக்கோரைப் புற்களால் (கையில் கொண்டு, அவற்றால்) ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு உப்புக்கடலருகே அழிந்து போவது விளக்கப்படுகிறது.(352,353) பலராமனும், கேசவனும் (கிருஷ்ணனும்) தங்கள் குலம் அழியக் காரணமாக அமைந்து, தங்கள் நேரம் வந்ததும், அனைத்தையும் அழிக்கும் காலத்திற்கு முன் மேன்மையாக எழாமலே சென்றனர்.(354) மனிதர்களில் முதன்மையான அர்ஜுனன் தூவாராவதிக்கு {துவாரகைக்குச்} சென்று, விருஷ்ணிகள் இல்லாத நகரத்தின் வெறுமையைக் கண்டு துயருறுதல் இதில் விவரிக்கப்படுகிறது.(355) யதுக்களில் (விருஷ்ணிகளில்) முதன்மையானவரான தன் தாய்மாமன் வசுதேவரின் இறுதிச்சடங்கைச் செய்த அவன் {அர்ஜுனன்}, யது குலத்தின் வீரர்கள் எங்குக் குடித்தனரோ அங்கேயே இறந்து கிடப்பதைக் கண்டான்.(356) பிறகு அவன் {அர்ஜுனன்}, சிறப்புமிக்கக் கிருஷ்ணன், பலராமன் மற்றும் விருஷ்ணி குலத்தின் முக்கிய உறுப்பினர்களின் உடல்களை எரியூட்ட {தகனம் செய்ய} ஏற்பாடு செய்தான்.(357) பிறகு அவன் {அர்ஜுனன்}, யது குலத்தில் எஞ்சியவர்களான மகளிர், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பலவீனமானவர்கள் ஆகியோருடன் பயணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு பேரிடரைச் சந்திக்கிறான். பிறகு அவன், தன் வில்லான காண்டிவம் அவமதிக்கப்படுவதையும், தன் தெய்வீக ஆயுதங்கள் பயனற்றுப் போவதையும் காண்கிறான். இவையாவற்றையும் கண்டு, மனக்குழப்பமடையும் அர்ஜுனன், வியாசரின் அறிவுரைக்கிணங்க, யுதிஷ்டிரனிடம் சென்று, சந்நியாச வாழ்வு முறையைப் பின்பற்ற அனுமதி கோருகிறான்.(358-360) இதுதான் பதினாறாவது {16} பர்வமான மௌசல பர்வம் ஆகும். உண்மையை அறிந்தவரான வியாசர், எட்டு {8} பகுதிகளில்[18] முன்னூற்று இருபது {320} பாடல்களில் {சுலோகங்களில்} இந்தப் பர்வத்தை விளக்குகிறார்.

[18] கங்குலியில் மௌஸல பர்வத்தில் 8 பகுதிகளும், 288 ஸ்லோகங்களும் இருக்கின்றன.

அடுத்தது, மஹாப்ரஸ்தானிகம் என்றழைக்கப்படும் பதினேழாவது பர்வம் ஆகும்.(361,362) மனிதர்களில் சிறந்தவர்களான பாண்டவர்கள் தங்கள் நாட்டைத் துறந்து, திரௌபதியுடன் சேர்ந்து மஹாபிரஸ்தானம் என்றழைக்கப்படும் தங்கள் நெடும்பயணத்தைச் செய்கின்றனர்.(363) சிவப்பு நீர் கொண்ட கடலின் கரையை அடைந்த அவர்கள் அக்னியை சந்திக்கின்றனர். அக்னியை முறையாக வழிபட்ட அர்ஜுனன், அக்னி தேவனின் வேண்டுகோளுக்கிணங்க சிறந்ததும், தெய்வீகமான வில்லுமான காண்டீவத்தை அவனிடமே ஒப்படைக்கிறான். ஒருவர் பின் ஒருவராக விழும் தனது தம்பிகளையும், அடுத்து விழும் திரௌபதியையும் விட்டு விட்டு ஒரு முறைகூடத் திரும்பிப் பார்க்காமல் யுதிஷ்டிரன் செல்கிறான். இதுவே மஹாபிரஸ்தானிகம் என்று அழைக்கப்படும் பதினேழாவது பர்வமாகும்.(364-366) இது மூன்று {3} பகுதிகளாகப் பிரிக்கட்டிருக்கிறது.[19] உண்மையை அறிந்தவரான வியாசரால், முன்னூற்று இருபது {320} பாடல்களில் {சுலோகங்களில்} இது விவரிக்கப்படுகிறது.(367)

[19] கங்குலியில் மஹாப்ரஸ்தானிக பர்வத்தில் 3 பகுதிகளும், 109 ஸ்லோகங்களும் இருக்கின்றன.

அடுத்து வரும் பர்வம் இயல்புக்குமீறிய தெய்வீக நிகழ்வுகள் கொண்ட சுவர்க்கம் என்றழைக்கப்படும் பர்வம் ஆகும். யுதிஷ்டிரனை அழைத்துப் போக தெய்வலோகத் தேர் வந்தும், தன்னுடன் கடைசி வரை வந்த நாய் மீது எற்பட்ட அன்பால், அதில் அவன் ஏற மறுக்கிறான். சிறப்புமிக்க யுதிஷ்டிரனின் நிலையான அறப்பற்றைக் கண்டு தனது மாற்றுருவத்தைக் களைத்து தர்மதேவன் காட்சி அளிக்கிறான். அதன் பிறகு நல்லுலகம் ஏறும் வழியில் மிகுந்த வலியை உணர்கிறான் யுதிஷ்டிரன்.(368-370) தெய்வீகத் தூதுவர் ஒரு மாயச் செயலால் நரகத்தை அவனுக்குக் காண்பிக்கின்றனர். அப்போது நீதியின் ஆன்மாவான யுதிஷ்டிரன், யமனின் ஆட்சிக்குட்பட்ட அந்தப் பகுதியில், இதயத்தைப் பிளக்கும் வகையில் தனது தம்பிகளின் அழுகுரல்களைக் கேட்கிறான். பிறகு தர்மதேவனும், இந்திரனும் பாவிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தைக் காண்பிக்கின்றனர். அதன்பிறகு தெய்வீகக் கங்கையில் {ஆகாயக் கங்கையில்} மூழ்கித் தனது மனித உடலைத் துறந்த யுதிஷ்டிரன், தன் புண்ணியச் செயல்களுக்கான பகுதியை அடைந்து, இந்திரன் முதலான தேவர்களுடன் இன்பமயமாக இருக்கிறான். சிறப்புமிக்க வியாசரால் உரைக்கப்படும் இது பதினெட்டாவது பர்வம் ஆகும். பெருமுனிவரால் {ஆறு {6} பகுதிகளாக[20] பிரிக்கப்பட்ட இதில்} தொகுக்கப்பட்ட பாடல்களின் {சுலோகங்களின்} எண்ணிக்கை இருநூற்று ஒன்பது {209} ஆகும்.

[20] கங்குலியில் சுவர்க்க பர்வத்தில் 6 பகுதிகளும், 316 ஸ்லோகங்களும் இருக்கின்றன.

மேற்குறிப்பிட்டவையே பதினெட்டு {18} பர்வங்களின் உள்ளடக்கமாகும்.(375,376) பின்னிணைப்பில் (கிலத்தில்) ஹரி வம்சம், பவிஷ்யம் ஆகியன வருகின்றன. ஹரி வம்சத்தில் பனிரெண்டாயிரம் {12000} பாடல்கள் {சுலோகங்கள்} உள்ளன. பர்வ சங்கிரகம் என்றழைக்கப்படும் இந்தப் பகதியின் உள்ளடக்கங்களை இவையே[21].(377,378)

[21] ஆகமொத்தமாகச் சௌதி இங்கே சொல்லியிருப்பது 18 பர்வங்களில் 1934 பகுதிகளும், 84835 பாடல்களுமாகும்; ஹரிவம்சத்துடன் 96835 பாடல்களுமாகும். சில பாடல்கள் Coupletகளாக இல்லாமல் tripletகளாக இருப்பதாகக் கங்குலி ஆங்காங்கே கோடிட்டுக் காட்டுகிறார். அந்த வகையில் மகாபாரதம் ஒரு லட்சம் சுலோகங்களைக் கொண்டதாக இருக்கலாம். கங்குலியில் ஹரிவம்சத்தைச் சேர்க்காமலேயே 2114 பகுதிகள் வருகின்றன. சுலோகங்களின் எண்ணிக்கையைப் பின்னர்தான் பார்க்க வேண்டும். பிபேக் திப்ராயின் பதிப்பில் 18 பர்வங்கள் மட்டும் 1995 பகுதிகளும், 73784 சுலோகங்களும் இருக்கின்றன. ஹரிவம்சத்தையும் சேர்த்து மொத்தமாக 2113 பகுதிகளும், 79,857 சுலோகங்களும் உள்ளன.

சௌதி சொன்னார் "பதினெட்டு அக்ஷௌஹிணி படைகள் இந்தப் போரில் கலந்து கொண்டன. இந்தப் போர் பதினெட்டு நாட்கள் கொடூரமாக நடந்தது. நான்கு வேதங்களையும், அதன் அங்கங்கள் மற்றும் உபநிஷத்துகளுடன் அறிந்திருந்தாலும், (பாரதம் என்ற) இந்த வரலாற்றை அறியாமல் இருந்தால் அவன் ஞானியாகக் கருதப்படமாட்டான்.(380) அளவிலா நுண்ணறிவைக் கொண்ட வியாசர், அர்த்தம் {பொருள்}, தர்மம் {அறம்}, காமம் {இன்பம்} ஆகியவற்றின் ஆய்வாகவே மஹாபாரதத்தை உரைக்கிறார்.(381) உண்மையில், ஆண் கோகிலத்தின் {ஆண்குயிலின்} இனிய குரலைக் கேட்டவர்களால், கா என்ற காகத்தின் இசையொவ்வாமையைக் கேட்க முடியாததைப் போலவே, இந்த வரலாற்றை {மஹாபாரதத்தைக்} கேட்டவர்களுக்குப் பிறவற்றைக் கேட்கப் பிடிக்காது.(382) ஐம்பூதங்களில் இருந்து மூவுலகங்களும் உண்டானதைப் போலவே, அனைத்துப் புலவர்களின் அகத்தூண்டுதல்களும் இந்தச் சிறந்த தொகுப்பில் இருந்தே எழுகின்றன.(383) ஓ பிராமணர்களே, (ஈன்று பிறப்பவை, [முட்டை] பொரித்துப் பிறப்பவை, வெப்ப ஈரப்பதத்தில் பிறப்பவை [புழுக்கள்] மற்றும் பூமியைப் பிளந்து பிறப்பவை [தாவரங்கள்] ஆகிய} நால்வகை உயிரினங்களும் தங்கள் இருப்புக்காக வெளியை {ஆகாயத்தைச்} சார்ந்திருப்பதைப் போலவே, புராணங்களும் இந்த வரலாற்றைச் சார்ந்தே இருக்கின்றன.(384) புலன்கள் அனைத்தும் தங்கள் செயல்பாட்டுக்கு, மனத்தின் பல்வேறு மாற்றங்களைச் சார்ந்திருப்பதைப் போலவே, அனைத்துச் செயல்பாடுகளும் (சடங்குகளும்), ஒழுக்கத்தன்மைகளும் இந்த ஆய்வைச் சார்ந்தே இருக்கின்றன.(385) உடலானது எவ்வாறு தான் உட்கொள்ளும் உணவைச் சார்ந்திருக்கிறதோ, அவ்வாறே இந்த வரலாற்றைச் சாராத எந்தக் கதையும் இப்போதும் உலகில் இல்லை. {உணவைச் சாராமல் உடலில்லாததைப் போல, இவ்வரலாற்றைச் சாராத எந்தக் கதையும் இப்போதும் இவ்வுலகில் இல்லை}.(386) மேன்மையை அடைய விரும்பும் பணியாட்களால் நல்ல குலத்தில் பிறந்த தலைவர்கள் கவனிக்கப்படுவதைப் போலவே பாரதத்தை அனைத்துப் புலவர்களும் மனத்தில் கொள்கின்றனர்.(387) அருளப்பட்ட குடும்ப ஆசிரமத்தை {இல்லறத்தை} ஒரு போதும் மற்ற மூன்று ஆசிரமங்களால் (வாழ்வியல் முறைகளால்) விஞ்சமுடியாததைப் போலவே, இந்தச் செய்யுள் தொகுப்பை எந்தப் புலவர்களாலும் விஞ்ச இயலாது.(388)

தவசிகளே செயலின்மைகள் அனைத்தையும் உதறுவீராக. {விடாமுயற்சி கொள்வீராக}. அடுத்த உலகத்திற்குச் செல்பவனுக்கு உற்ற ஒரே நண்பன் அறமேயாதலால், அறத்தில் உங்கள் இதயங்களை நிலைக்கச் செய்வீராக. மிகப் புத்திசாலிகளே கூட, செல்வத்தையும் மனைவியரையும் விரும்பினாலும் இவற்றை {செல்வம் மற்றும் மனைவிகள் ஆகியவற்றைத்} தங்களுடையதாக்கிக் கொள்ளவும் முடியாது, இந்த உடமைகளை நிலைத்திருக்கவும் செய்யாது.(389)

துவைபாயனரின் உதடுகளால் உச்சரிக்கப்பட்ட பாரதம் இணையற்றதாகும்; அது தானே அறமாகவும், புனிதமானதாகவும் இருக்கிறது. அது பாவத்தை அழித்து நன்மையை உண்டாக்குகிறது. அஃது உரைக்கப்படும்போது கேட்டவன், புஷ்கரங்களின் புனித நீர்களில் நீராட வேண்டிய அவசியம் இல்லை.(390) பகல் பொழுதில் தன் புலன்களால் ஒரு பிராமணன் எந்தப் பாவங்களைச் செய்தாலும், மாலையில் பாரத்தைப் படிப்பதால் அவை அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான்.(391) செயல்கள், வார்த்தைகள் அல்லது மனம் ஆகியவற்றால் இரவில் எந்தப் பாவங்களைச் செய்தாலும், முதல் சந்தியில் (அதிகாலையில்) பாரதத்தைப் படிப்பதால் அவனை அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான்.(392) வேதங்கள், மற்றும் கல்வியின் அனைத்துக் கிளைகள் ஆகியவற்றை நன்கறிந்த ஒரு பிராமணனுக்குத் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொம்புகளுடன் கூடிய நூறு பசுக்களைத் தானமளிக்கும் ஒருவனும், பாரதத்தின் புனித விவரிப்புகளைத் தினமும் கேட்பவன் ஆகிய இருவரும் சம தகுதியையே {புண்ணியத்தையே} அடைகின்றனர்.(393) மரக்கலங்களைக் கொண்டோரால் பரந்த பெருங்கடலை எளிதாகக் கடக்க முடிவதைப் போலவே, பர்வ சங்கிரகம் என்றழைக்கப்படும் இந்த மிக முக்கியமான பகுதியின் {அத்தியாயத்தின்} உதவியுடன், மிகச் சிறப்பானதும், விரிவானதுமான இந்த வரலாற்றைக் கடக்கலாம்.(394)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்