Generations of Bhrigu! | Adi Parva - Section 5 | Mahabharata In Tamil
(பௌலோம பர்வம் - 2)
பதிவின் சுருக்கம் : பிருகு குலத்தின் வரலாற்றைக் கேட்ட சௌனகர்; அவற்றைச் சௌனகருக்குச் சொன்ன சௌதி; புலோமையை மணந்த பிருகு; அக்னியிடம் கேள்வி கேட்ட ராட்சசன்...
"சௌனகர் சொன்னார், "குழந்தாய் {சௌதியே}, முன்பு, உன் தகப்பனார் அனைத்துப் புராணங்களையும், பாரதத்தையும் கிருஷ்ண துவைபாயனரிடம் கற்றுத் தேர்ந்திருந்தார். நீயும் அவற்றைக் கற்றறிந்திருக்கிறாயா?(1) அந்தப் பண்டைய ஆவணங்களில் வரிசை படுத்தப்பட்டிருப்பனவான, ஆர்வத்தைத் தூண்டும் கதைகள், விவேகமுள்ள முதல் தலைமுறையினரின் வரலாறுகள் ஆகிய அனைத்தையும் உன் தந்தை திரும்பக் கூறும்போது நாங்கள் கேட்டிருக்கிறோம்.(2) முதலில், பிருகு குலத்தின் வரலாற்றையே நான் அறிய விரும்புகிறேன். அந்த வரலாற்றை மறுபடியும் நீ விவரித்துச் சொல்வாயாக, நீ சொல்வதை நாங்கள் கவனத்துடன் கேட்போம்" என்றார்.(3)
சௌதி சொன்னார், "முன்பு வைசம்பாயனர் {வியாசரின் சீடர்} உட்பட உயர்-ஆன்ம அந்தணர்கள் படித்து ஓதியதையெல்லாம் நானும் கற்றிருக்கிறேன்;(4) என் தந்தை {ரோமஹர்ஷணர்} கற்றிருந்ததையெல்லாம் நானும் கற்றிருக்கிறேன். ஓ பிருகு பரம்பரையின் வழித்தோன்றலே {சௌனகரே}! இந்திரனாலும், தேவர்களாலும், முனிவர் குழுக்களாலும், மருத்துகளாலும் (காற்று) போற்றத்தக்க பிருகு குலத்தைக் குறித்தவற்றைக் கேட்பீராக.(5,6) ஓ பெருமுனிவரே, இந்தக் குடும்பத்தின் கதையைப் புராணங்களில் விவரித்திருப்பது போல விவரிக்கிறேன். நாம் அறிந்தவரையில், அருள்நிறைந்த பெருமுனிவர் பிருகு[1], தான்தோன்றியாகத் {சுயம்புவாகத்} தன்னாலேயே நிலைத்திருக்கும் பிரம்மனிடம் இருந்து வருணனின் வேள்வி ஒன்றில் பிறந்தவர் ஆவார். பிருகுவிற்குச் சியவனன் என்று ஒரு மகன் இருந்தான்; அவர் {பிருகு} அவன்மீது {சியவனன் மீது} மிகுந்த அன்புடனிருந்தார்.(7,8) சியவனனுக்கு நற்குணமிக்க பிரம்மாதி {பிரமதி} என்று ஒருவன் பிறந்தான். பிரம்மாதிக்கு தேவலோக நடனமாது கிரிடச்சி {கிருதாசி} மூலம் ருரு என்றொரு மகன் பிறந்தான்.(9) ருருவுக்கு, பிரமத்வரை என்ற தன் மனைவி மூலம் சுனகன் என்றொரு மகன் பிறந்தான். ஓ சௌனகரே![2] உமது பெரும் மூதாதையான அவர் {சுனகர்} தன் வழிகளில் மிகவும் நற்குணமிக்கவராகத் திகழ்ந்தார்.(10) தன்னைத் தவத்திற்கு {ஆன்மிகத்திற்கு} அர்ப்பணித்திருந்த அவர் {சுனகர்}, நற்பெயருடன், நீதிமானாக, வேதம் அறிந்தவர்களில் மேம்பட்டவராக இருந்தார். அவர் நற்குணமுள்ளவராக, உண்மையானவராக, ஒழுக்கமுடையவராகவும் இருந்தார்" என்று பதிலுரைத்தார் {சௌதி}.(11)
[1] பிருகு [அ] ப்ருகு என்றால் தானே தோன்றியவர் என்பது பொருளாம்.
[2] சுனகரின் வழிவந்தவர் என்பதால் சௌனகர்
சௌனகர், "ஓ சூத மைந்தனே {சௌதியே}, புகழ்பெற்ற பிருகுவின் மைந்தனுக்குச் சியவனன் என்று ஏன் பெயர் சூட்டப்பட்டது? அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக!" என்று கேட்டார்.(12)
சௌதி சொன்னார், "பிருகுவுக்குப் புலோமை என்ற பெயரில் ஒரு மனைவியிருந்தாள். பிருகு அவளிடம் {புலோமையிடம்} அன்புடன் இருந்தார். பிருகுவின் மைந்தனை {சியவனனை} சுமந்து அவள் {புலோமை} பெரிய உருவம் பெற்றாள்.(13) அந்த அறம்சார்ந்த இடத்தில் புலோமை அந்நிலையில் இருந்த போது, ஒருநாள், தன்னறத்திற்கு உண்மையுடன் இருப்பவர்களில் மேன்மையான பிருகு, அவளை {புலோமையை} வீட்டில் விட்டுவிட்டு, நீராடுவதற்காக {தன்னைத் தூய்மைப்படுத்திக்கொள்ள} வெளியே சென்றார். அப்போதுதான், புலோமன் என்றழைக்கப்பட்ட {அவள் பெயரையே கொண்ட} ராட்சசன் ஒருவன், பிருகுவின் இல்லத்திற்கு வந்தான்.(14,15) முனிவரின் இல்லத்திற்குள் நுழைந்த ராட்சசன் {புலோமன்}, எவ்விதத்திலும் களங்கமில்லாத பிருகுவின் மனைவியைக் {புலோமையைக்} கண்டான். அவளைக் கண்டதும் காமத்தில் நிறைந்து தன் அறிவை இழந்தான்.(16) அழகான புலோமை, கானகத்தின் கிழங்குகளையும், கனிகளையும் கொடுத்து அந்த ராட்சசனை உபசரித்தாள்.(17)
ஓ நன்முனிவரே {சௌனகரே}! அவளை {புலோமையைப்} பார்த்ததுமுதல் காமத்தீயில் வெந்துகொண்டிருந்த அந்த ராட்சசன் {புலோமன்} மிகவும் மகிழ்ந்து, அனைத்து வகையிலும் களங்கமில்லாத அவளை {புலோமையை} அபகரிப்பது எனத் தீர்மானித்தான்.(18) "என் திட்டம் நிறைவேறியது" என்று சொன்ன அந்த ராட்சசன் {புலோமன்}, அந்த அழகான பெண்ணை அபகரித்துச் செல்ல எண்ணினான். உண்மையில், மனதிற்கினிய புன்னகைக் கொண்ட அவளை {புலோமையை} அவளது தந்தை முன்னர் அவனுக்கு {ராட்சசன் புலோமாவிற்குத்தான்} நிச்சயித்திருந்தாலும்[3], பின்னர், முறையான சடங்குகளுடன் பிருகுவிற்கே அவளை {புலோமையை} அளித்தார். ஓ பிருகுகுலத்தவரே {சௌனகரே}, ஆழமான இந்தக் காயம் {புலோமையை பிருகுவிடம் இழந்தது} அந்த ராட்சசன் மனத்தைப் பெரும் பாடுபடுத்தியது, அந்தக் கணமே, அந்த மங்கையைக் {புலோமையைக்} கடத்துவதற்கு மிகவும் சிறந்த சந்தர்ப்பம் என்று நிச்சயித்தான். அறையின் மூலையில் வேள்வித்தீ சுடர்விட்டு எரிவதை அந்த ராட்சசன் {புலோமன்} கண்டான்.(19-21)
[3] புலோமையின் குழந்தைப் பருவத்தில் அவள் அழுது கொண்டிருந்த போது, அவளை அச்சுறுத்துவதற்காக, "ராட்சசா, இவளைப் பிடித்துக் கொள்!" என்று அவளது தந்தை சொன்னார். அப்போது, அங்கு மறைந்திருந்த புலோமன் என்ற ராட்சசன் அதைக் கேட்டு அவளையே தன் மனைவியாக நினைத்தான்.
அந்த நெருப்பிடம் அந்த ராட்சசன், "ஓ அக்னியே சொல், நியாயமாக இந்தப் பெண் யாருடைய மனைவி என்பதை எனக்குச் சொல்வாயாக.(22) நீயே தேவர்களின் வாயாக இருக்கிறாய்; அதனால் என் கேள்விக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறாய். மேலான நிறமுடைய இந்த பெண் முதலில் என்னால்தான் மனைவியாக வரிக்கப்பட்டாள், ஆனால் பிறகு இவள் தந்தை பொய்யனான பிருகுவிடம் இவளை ஒப்படைத்தான். இவளைத் தனிமையில் கண்ட நான், ஆசிரமத்திலிருந்து வலுக்கட்டாயமாக அபகரித்து செல்லத் தீர்மானித்திருப்பதால், பிருகுவின் மனைவியாக இவ்வழகிக் கருதத்தக்கவளா என்பதை எனக்கு உண்மையாகச் சொல்வாயாக. முதலில் எனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த இந்தக் மெல்லிடையாளைப் பிருகு அடைந்தான் என்று நினைக்கும் போதே கோபத்தால் என் இதயம் எரிகிறது" என்றான் {புலோமன்}.(23-25)
"சௌதி தொடர்ந்தார், "இந்த வகையிலே அந்த ராட்சன் {புலோமன்}, தழலுடன் கூடிய அந்த நெருப்பு தேவனிடம் {அக்னியிடம்}, அந்த மங்கை பிருகுவின் மனைவிதானா என்று மீண்டும் மீண்டும் கேட்டான்.(26) அந்தத் தேவனோ {அக்னி} பதில் கூற அச்சப்பட்டான். “ஓ நெருப்பு தேவா {அக்னியே}" என்று சொன்ன அவன் {ராட்சசன் புலோமன்}, "ஒவ்வொரு உயிரினத்திற்குள்ளும் எப்போதும் உறைந்திருந்து அவன் அல்லது அவளின் நற்செயல்களுக்கும், தீச்செயல்களுக்கும் சாட்சியாக இருப்பவன் நீ. ஓ மரியாதைக்குரியவனே {அக்னியே}! என் கேள்விக்கு உண்மையான பதிலைக் கூறுவாயாக.(27) என் மனைவியாக நான் தேர்ந்தெடுத்திருந்தவளை பிருகு அபகரிக்கவில்லையா? நான் முதலில் தேர்ந்தெடுத்ததால் இவள் என்னுடைய மனைவிதான் என்ற உண்மையை அறிவிப்பாயாக.(28) இவள் பிருகுவின் மனைவிதானா என்று நீ பதிலுரைத்த பின்பு, உன் கண்ணெதிரிலேயே இவளை இந்த ஆசிரமத்திலிருந்து நான் தூக்கிச் செல்வேன். எனவே நீ உண்மையுடன் பதிலுரைப்பாயாக” {என்று அந்த ராட்சசன் சொன்னான்}.(29)
சௌதி தொடர்ந்தார் “ஏழு தழல்களைக் கொண்ட அந்தத் தேவன் {அக்னி} அரக்கனின் வார்த்தைகளைக் கேட்டு பொய்யுரைக்கவும் அஞ்சி, அதேயளவு பிருகுவின் சாபத்திற்கும் அஞ்சி பெரும் துயருக்கு ஆளானான். நீண்ட நேரத்திற்குப் பிறகு அந்தத் தேவன் {அக்னி} மென்னொலி வார்த்தைகளால் பதிலளித்தான். (30)
"ஓ ராட்சசா {புலோமா}, இந்தப் புலோமையை முதலில் நீயே தேர்ந்தெடுத்தாய். ஆனால் முறையான புனிதமான சடங்குகளுடனும், வேண்டுதல்களுடனும் நீ அவளை {புலோமையை} ஏற்கவில்லை.(31) அருள் கிடைக்கும் என்ற விருப்பத்தில், வெகுதொலைவுக்கும் புகழ்மிகுந்த இந்த மங்கையை {புலோமையை}, பிருகுவுக்கு அவளது தகப்பன் அளித்தான்.(32) ஓ ராட்சசா, அவள் {புலோமா} உனக்கு அளிக்கப்படவில்லை. வேதச்சடங்குகளுடன், என் முன்னிலையில்தான் இந்த மங்கை பிருகு முனிவரால் முறையாக தன் மனைவியாக வரிக்கப்பட்டாள்.(33) இவளே அவள் என்று நானறிவேன். பொய்ம்மை பேச நான் துணிய மாட்டேன். ஓ ராட்சசர்களில் சிறந்தவனே, பொய்ம்மைக்கு இந்த உலகில் மதிப்பில்லை" என்று பதிலளித்தான் {அக்னி}.(34)
ஆங்கிலத்தில் | In English |