Jaratkaru and Yayavaras | Adi Parva - Section 13 | Mahabharata In Tamil
(ஆஸ்தீகப் பர்வம் - 1)
பதிவின் சுருக்கம் : தன் மூதாதையர்களான யாயாவரர்களைக் கண்ட ஜரத்காரு; ஜரத்காருவை நிந்தித்த யாயாவரர்கள்; திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த ஜரத்காரு...
சௌனகர் {சௌதியிடம்}, "மன்னர்களில் புலியான மன்னன் ஜனமேஜயன், எக்காரணம் கொண்டு பாம்புகளின் இனத்தை அழிக்கும் குறிக்கோளுடன் வேள்வி நடத்தினான்?(1) ஓ சௌதி, முழுக்கதையையும் எங்களுக்குச் சொல்வாயாக. இருபிறப்பாளரில் சிறந்தவரும், துறவிகளில் முதன்மையானவருமான ஆஸ்தீகர், சுடர்விட்டெரியும் நெருப்பிலிருந்து பாம்புகளை ஏன் காப்பாற்றினார்?(2) அந்தப் பாம்பு வேள்வியை நடத்திய ஏகாதிபதி {ஜனமேஜயன்} யாருடைய மைந்தன்? அந்த இருபிறப்பாளரில் {பிராமணர்களில்} சிறந்தவர் {ஆஸ்தீகர்} யாருடைய மைந்தன்? எங்களுக்குச் சொல்வாயாக" என்றார்.(3)
சௌதி, "ஓ பேச்சாளர்களில் சிறந்தவரே, இந்த ஆஸ்தீகரின் கதை மிக நீண்டதாகும். நான் உள்ளபடிக்கு முழுவதும் சொல்கிறேன் கேட்பீராக" என்றார்.(4)
சௌனகர், "அந்தப் புகழ்பெற்ற பிராமணரான ஆஸ்தீக முனிவரின் அழகான கதையை முழுவதும் கேட்க ஆவலாக உள்ளேன்" என்றார்.(5)
சௌதி சொன்னார், "கிருஷ்ண துவைபாயனரால் {வியாசரால்} (முதலில்) ஓதப்பட்ட இந்த வரலாற்றை, புராணம் என்றும் பிராமணர்கள் கூறுவார்கள். இதற்கு முன், என் தந்தையும், வியாசரின் சீடருமான ரோமஹர்ஷணர்[1] நைமிசாரண்யவாசிகளின் வேண்டுகோளுக்கிணங்க, இஃதை அவர்களுக்கு ஓதியிருக்கிறார்.(6,7) அப்படி ஓதப்பட்ட போது, நானும் அங்கே இருந்தேன். ஓ சௌனகரே, நீர் கேட்டுக் கொண்டதால், ஆஸ்தீகரின் வரலாற்றை நான் கேட்டவாறே சொல்லப் போகிறேன்.(8) பாவங்களை அழிக்கும் கதையைச் நான் முழுவதுமாகச் சொல்லும்போதே கேட்பீராக.
[1] ஜனமேஜயன் வேள்வியில் மகாபாரதம் உரைத்த வைசம்பாயனரும், நைமிசாரண்யத்தில் மகாபாரதம் உரைத்த சௌதியின் தந்தை ரோமஹர்ஷணரும் வியாசரின் சீடர்கள் என்றால் இரண்டுக்கும் இடையில் ஒரு தலைமுறை இடைவெளியே உள்ளது என்பது இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது. அஃது அவ்வாறு ஒரு தலைமுறை இடைவெளி அல்ல, பல தலைமுறைகள் இடைவெளி கொண்டது. சௌதி மிக நீண்ட ஆயுள் படைத்தவர். அவரை ஒரு தலைமுறை என்று கொள்ளக்கூடாது என்ற கருத்தும் இருக்கிறது..
ஆஸ்தீகரின் தந்தை, பிரஜாபதியை {பிரம்மனைப்} போன்ற சக்தி படைத்தவர்.(9) அவர் தவத்தில் உறுதிமிக்க ஒரு பிரம்மச்சாரி. காமத்தைத் தன் கட்டுக்குள் வைத்திருந்த மிகப்பெரிய துறவியான அவர், சிறிதளவே உண்பார். அவர் ஜரத்காரு என்ற பெயரால் அறியப்பட்டிருந்தார்.(10) யாயாவரர்களில் முதன்மையான அவர் {ஜரத்காரு}, ஒழுக்கமானவர்; கடுமையான விரதங்களை நோற்பவர்; பெரும் ஆன்மசக்திகளைக் கொண்டவர், மிகச்சிறந்த முறையில் அருளப்பட்டவராவார்.(11) அவர் ஒரு முறை உலகம் முழுவதும் பயணம் செய்தார். பலவகைப்பட்ட இடங்களுக்குச் சென்றார்; பலவகைப்பட்ட புனித ஆறுகளில் நீராடினார். பொழுது எங்கே இருட்டுகிறதோ அங்கே இளைப்பாறினார்.(12) பெரும் சக்தி கொண்ட அவர், ஆத்மாவை {மனதை} அடக்காத மனிதர்களால் செய்யமுடியாத கடுமையான விரதங்களை நோற்றார். அவர் காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்தார். தூக்கத்தை எப்போதும் துறந்தார்.(13)
அப்படிப் பிரகாசமான நெருப்பு போல் அவர் திரிந்து கொண்டிருந்த போது, ஒருநாள் ஒரு பெரிய குழிக்குள் தனது மூதாதையர்கள் தலைகீழாகவும் கால்மேலாகவும் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டார். அவர்களைக் கண்டதும், ஜரத்காரு,(14,15) "அனைத்துப் பக்கங்களிலும் எலி கடிக்கப்படும் விரானா {விலாமிச்சை} மர நாறுகளில் {வைக்கோலில்}, யாரும் அறியாதவாறு இந்தக் குழிக்குள் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கும் நீங்கள் யார்?" என்று கேட்டார்.(16)
அதற்கு மூதாதையர்கள், "நாங்கள் கடுந்தவங்களைச் செய்த யாயாவர முனிவர்கள் ஆவோம். சந்ததி இல்லாததால் நாங்கள் பூமிக்குள் புதைந்து கொண்டிருக்கிறோம்.(17) எங்களுக்கு ஜரத்காரு என்று ஒரு மகன் இருக்கிறான். அவனால்தான் எங்களுக்குக் கேடு வந்தது. அந்த மோசமானவன் தவம் மற்றும் சடங்குகளில் மட்டும் நாட்டம் கொண்டு அலைகிறான்.(18) அந்த மடையன் திருமணம் செய்து கொண்டு சந்ததியைப் பெருக்கவில்லை. அவனால் {ஜரத்காரு}, எங்கள் குலம் அழியப்போகிறது. அதனால்தான் நாங்கள் இந்தக் குழிக்குள் தொங்கிக் கொண்டிருக்கிறோம்.(19) வழியிருந்தும் இல்லாத பேறிலிகளைப் {அதிர்ஷ்டமற்றவர்களைப்} போல நாங்கள் இருக்கிறோம். ஓ அருமையானவரே, எங்களுக்கு நண்பர் போல் வந்து எங்களுக்காக வருந்தும் நீர் யார்?(20) ஓ பிராமணரே, எங்கள் அருகில் நிற்கும் நீர் யார் என்பதை அறிய விரும்புகிறோம். எங்களைப் போன்ற பேறிலிகளுக்காக நீர் ஏன் வருந்துகிறீர்?" என்று கேட்டனர்.(21)
ஜரத்காரு, "நீங்களே எனக்குத் தாத்தனும் பாட்டனும் ஆவீர்கள். நானே அந்த ஜரத்காரு ஆவேன். உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்றார்.(22)
அதற்கு அந்த மூதாதையர்கள், "ஓ குழந்தாய் {ஜரத்காரு}, ஒரு மகனைப் பெற்று, நமது பரம்பரையின் நீட்சிக்கு உன்னால் முடிந்ததை முயற்சி செய்வாயாக. அப்படிச் செய்தாயானால், நீ உனக்கும், எங்களுக்கும் பெரிய நன்மையைச் செய்தவனாவாய்.(23) குழந்தைக்குத் தகப்பனாவதில் கிடைக்கும் பலனை, சிறந்த ஒழுக்கத்தாலும், தவங்களைக் கடைப்பிடிப்பதாலும் கூட ஒருவன் அடைய முடியாது.(24) எனவே, ஓ குழந்தாய், இஃது எங்கள் உத்தரவு. திருமணம் செய்து குழந்தைப் பெறுவதில் உன் இதயத்தை நிறுத்துவாயாக {மனதைச் செலுத்து}. இதுவே நீ எங்களுக்குச் செய்யும் மிகப்பெரிய உதவி ஆகும்" என்றனர்.(25)
ஜரத்காரு, "எனக்காக நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். எனது இன்பத்திற்காக நான் செல்வம் ஈட்ட மாட்டேன். உங்களின் நலனுக்காகவே அவற்றைச் செய்யப் போகிறேன்.(26) இந்தப் புரிதலின் அடிப்படையில், முக்தி பெறுவதற்காகவே, சாத்திரங்களுக்கு உட்பட்டு ஒரு மனைவியைப் பெறப் போகிறேன். நான் இதற்குப் புறம்பாக நடக்க மாட்டேன். எனது பெயரையே கொண்ட ஒரு மணப்பெண்ணை, அவளது உற்றார் {உறவினர்கள்}, முழு மனதுடன் எனக்குப் பிச்சைப் பரிசாகத் தர வேண்டும். அப்படிப்பட்டவளையே நான் மணமுடிப்பேன்.(27-28) ஆனால் என்னைப் போன்ற ஓர் ஏழைக்கு எந்த மனிதன் தன் பெண்ணைக் கொடுப்பான்? ஆனால் பிச்சையாகக் கொடுக்கப்படும் எந்தப் பெண்ணையும் நான் ஏற்பேன்.(29) இதன்படியே நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முயல்வேன். நான் ஒரு சொல்லைச் சொல்லிவிட்டு அதற்கு மாறாக எப்போதும் நடக்க மாட்டேன். உங்களை மீட்டு, நிலைபெற்ற இன்ப உலகங்களுக்கு அனுப்புவதற்காக நான் அந்தப் பெண்ணிடம் சந்ததியை உண்டாக்குவேன்” என்றார் {ஜரத்காரு}" {என்றார் சௌதி}.(30,31).
ஆங்கிலத்தில் | In English |