The name of Vasuki's Sister is also Jaratkaru
| Adi Parva - Section 14 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 2)
பதிவின் சுருக்கம் : தனக்கான மணப்பெண்ணைத் தேடி உலகம் முழுவதும் அலைத்த ஜரத்காரு; வாசுகி என்ற பாம்பு தன் தங்கையை ஜரத்காருவுக்கு அளிக்கச் சம்மதித்தது; ஜரத்காருவின் திருமணம்...
சௌதி சொன்னார், "அந்தக் கடுமையான விரதங்களை மேற்கொள்ளும் பிராமணன் {ஜரத்காரு}, உலகம் முழுதும் தேடி அலைந்தும் மனைவி கிடைத்தாளில்லை.(1) ஒருநாள், அடர்ந்த கானகத்தின் ஆழத்திற்குள் சென்று, தனது மூதாதையர் சொன்னதை நினைவுகூர்ந்து, மெல்லிய குரலில் தனக்கு மனைவி வேண்டும் என்று மூன்று முறை வேண்டினார்.(2) அப்பொழுது வாசுகி {என்ற பாம்பு மன்னன்} எழுந்து, தனது தங்கையை {மனைவியாக} ஏற்றுக்கொள்ள அந்த முனிவருக்கு {ஜரத்காருவிற்குக்} கொடுத்தான். ஆனால், அந்தப் பிராமணர் அவளுக்கும் தனது பெயர் {ஜரத்காரு என்று} இருக்காது என்று நினைத்து அவளைப் பெற்றுக் கொள்ளத் தயங்கினார்.(3) அந்த உயரான்ம ஜரத்காரு தனக்குள் 'எனது பெயரில்லாத எந்தப் பெண்ணையும் நான் ஏற்க மாட்டேன்' என நினைத்துக் கொண்டு,(4) வாசுகியிடம், "ஓ பாம்பே, உனது தங்கையின் பெயர் என்ன என்ற உண்மையைக் கூறுவாயாக" என்று கேட்டார் {ஜரத்காரு}.(5)
வாசுகி, "ஓ ஜரத்காரு, இவள் எனது தங்கையாவாள், இவளது பெயரும் ஜரத்காருவே. இந்தக் கொடியிடை மங்கையை உமது மனைவியாக நான் உமக்குக் கொடுக்கிறேன்; ஏற்றுக்கொள்வீராக. ஓ பிராமணர்களில் சிறந்தவரே, உமக்காகவே இவளை வளர்த்தேன். அதனால் இவளை ஏற்றுக் கொள்வீராக" என்று கூறி தன் அழகான தங்கையைக் கொடுத்தான். பின் ஜரத்காருவும் அவளை உரிய சடங்குகளுடன் மணம் செய்து கொண்டார். {என்றார் சௌதி}.(6,7)
ஆங்கிலத்தில் | In English |