Garuda's Hunt! | Adi Parva - Section 28 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 16)
பதிவின் சுருக்கம் : அமுதத்தைத் தேடிச் சென்ற கருடனுக்குத் தாயின் அறிவுரை; நிஷாதர்களைக் கொன்று தின்ற கருடன்...
வினதையிடம் விடைபெற்று சென்ற கருடன் |
பிராமணன் எல்லா உயிரினங்களுக்கும் தலைவனாகச் சொல்லப்படுகிறான். இதற்காகவும், பிற காரணங்களுக்காகவும் ஒழுக்கம் மிகுந்தவர்களிடையே பிராமணன் போற்றப்படுகிறான்.(4) அதனால் பிராமணர்களுடன் பகை என்பது எந்தச் சூழ்நிலையிலும் நல்லதல்ல. ஓ மகனே! உனக்குக் கோபம் உண்டானாலும், பிராமணர்களைக் கொல்லாதிருப்பாயாக.(5) ஓ பாவங்களற்றவனே! கடுமையான விரதங்கள் இருந்த ஒரு பிராமணனின் கோபம் எரிப்பது போல, சூரியனாலும் அக்னியாலும் கூட எரிக்க முடியாது.(6) இது போன்ற பல குறிப்புகளைக் கொண்டு ஒரு நல்ல பிராமணனை நீ அறியலாம். பிராமணனே எல்லா உயிர்களிலும் முன் பிறந்தவன். நான்கு வர்ணங்களில் முதன்மையானவன். அவன் எல்லா உயிரினங்களுக்கும் தந்தையும் தலைவனும் ஆகிறான்" என்றாள்.(7)
கருடன், "ஓ தாயே! {வினதையே}, பிராமணன் என்பவன் எந்த உருவத்தில் இருப்பான்? அவனுடைய நடத்தை எப்படியிருக்கும்? எந்தச் சக்திகள் கொண்டவனாக இருப்பான்? அவன் நெருப்பைப் போல ஒளிர்வானா? அல்லது அவன் அமைதிமிக்கவனா?(8) ஓ தாயே, எந்தச் சிறந்த அறிகுறிகளைக் கொண்டு ஒரு பிராமணனை அடையாளம் காண முடியும்? எனக்கு நீ பதில் சொல்வதே உனக்குத் தகும்" என்று கேட்டான்.(9) வினதை, "ஓ குழந்தாய்! உனது தொண்டையில் நுழைந்தவுடன், மீன்முள் தைத்தது போலவோ, நிலக்கரி எரிவது போலவோ உனக்குத் துன்பத்தை ஏற்படுத்துபவனை, பிராமணர்களில் சிறந்தவனாக நீ அறிந்து கொள்வாயாக.(10) கோபத்தால் எந்த ஒரு பிராமணனையும் நீ கொல்லக்கூடாது" என்றாள்.
வினதை தனது மகன் {கருடன்} மீது கொண்ட பாசத்தால் மீண்டும்,(11) "உனது குடலால் செரிக்கப்பட முடியாதவனை நல்ல பிராமணனாக அறிந்து கொள்வாயாக" என்றாள்.(12) பாம்புகளால் ஏமாற்றப்பட்டு, பெருந்துன்பத்திற்கு உள்ளான வினதை, தனது மகனின் {கருடனின்} ஒப்பற்ற பலத்தை அறிந்திருந்தாலும் அவனை முழு மனதோடு ஆசிர்வதித்தாள்.(13) "மாருதன் (காற்று தேவதை) உனது சிறகுகளைக் காக்கட்டும், உனது முதுகெலும்பை சூரியனும் சந்திரனும் காக்கட்டும். அக்னி உனது தலையைக் காக்கட்டும், வசுக்கள் உனது முழு உடலையும் காக்கட்டும்.(14) நானும் உனது நன்மைக்காக இங்கே அமர்கிறேன். ஓ குழந்தாய்! பத்திரமாகச் சென்று உன் காரியத்தை முடிப்பாயாக" என்று கூறினாள்."(15)
சௌதி தொடர்ந்தார், "தன் தாயின் இந்த வார்த்தைகளைக் கேட்ட கருடன், தனது சிறகுகளை விரித்து, வானத்தில் உயர்ந்தான். அந்தப் பெரும்பலம் வாய்ந்தவன், பசித்தவன், விரைவாகச் சென்று இன்னொரு எமனைப் போல நிஷாதர்கள் மீது விழுந்தான்.(16)
நிஷாதர்களைக் கொல்ல விரும்பிய அவன் {கருடன்}, அந்த இடத்தில் பெரும் தூசிப்படலத்தைக் கிளப்பி ஆகாயத்தை மறைத்தான். கடலிலிருந்து தண்ணீரை உறிஞ்சி எடுத்து {கடலை வற்ற செய்து}, மலைகளில் வளரும் மரங்களைக் குலுக்கினான்.(17) அந்தப் பறவைகளின் மன்னன் {கருடன்}, தனது வாயால் {அலகால்}, நிஷாதர்களுடைய நகரத்தின் முக்கிய வாயில்களை அடைத்து அந்த வாயைப் பெரிதாக்கினான். அந்த நிஷாதர்கள் பெரும் வேகத்துடன் பாம்பை உண்ணும் அவனது {கருடனின்} திறந்த வாய் இருக்கும் திசை நோக்கியே ஓடினர்.(18) காற்றினால் அசைக்கப்பட்ட காட்டு மரங்களிலிருந்து எப்படி ஆயிரக்கணக்கான பறவைகள் பெரிதும் கலக்கமுற்று விண்ணில் எழுமோ, அவ்வாறே அந்த நிஷாதர்கள், புயலினால் உண்டான புழுதியில் குருடாகி அவர்களை வரவேற்க விரிந்து திறந்திருந்த கருடனின் வாயில் போய் விழுந்தனர்.(19) பிறகு அந்த எதிரிகளை அழிப்பவனும், பெரும் பலம் பொருந்தியவனும், தன் காரியத்தை முடிக்கப் பெரும் லாகவத்தோடு நகர்பவனும், பசித்தவனுமான அந்த விண்ணோடிகளின் தலைவன் (கருடன்}, மீன்பிடி தொழிலைச் செய்துவந்த எண்ணற்ற நிஷாதர்களைத் தன் வாயை மூடி கொன்றான்" {என்றார் சௌதி}.(20)
ஆங்கிலத்தில் | In English |