Ruru's vow for the destruction of the serpent-race! | Adi Parva - Section 9 | Mahabharata In Tamil
(பௌலோம பர்வம் - 6)
பதிவின் சுருக்கம் : ருருவின் புலம்பல்; ருருவின் பாதி ஆயுளைக் கொண்டு மீண்டும் உயிர்பெற்ற பிரமத்வரை; ருரு பிரமத்வரை திருமணம்; துந்துபா பாம்பைக் கண்ட ருரு...
சௌதி சொன்னார், "பிரமத்வரையின் உயிரற்ற சடலத்தைச் சுற்றி புகழ்பெற்ற பிராமணர்கள் அமர்ந்திருக்கும்போது, பெரும் துக்கமடைந்த ருரு அடர்ந்த கானகத்தின் ஆழத்துக்குச் சென்று சத்தம்போட்டு கதறி அழுதான்.(1) துயரத்தால் உந்தப்பட்டுப் பரிதாபகரமாக ஒப்பாரி வைத்தான். தன் அன்பிற்குரியவளான பிரமத்வரையை நினைத்த ருரு தன் துக்கத்தைத் தீர்த்துக்கொள்ளப் பின் வரும் வார்த்தைகளில்,(2) “ஐயோ! {அந்தப்} பேரழகி இப்படிக் கட்டாந்தரையில் கிடந்து என் துயரைப் பெருகச் செய்தாளே! இதைவிட எங்களுக்கும், அவள் நண்பர்களுக்கும் துயர் தருவது ஏது?(3) நான் கொடையளித்திருந்தால், தவம் செய்திருந்தால், மேலோரை எப்போதும் மதித்திருந்தால், இந்தச் செயல்களின் புண்ணியம் என் அன்பிற்குரியவளை உயிர்மீட்டுத் தரட்டும்!(4) நான் பிறந்ததிலிருந்து ஆசைகளை அடக்கி, நோன்புகளைக் கடைப்பிடித்திருந்தேன் என்றால் அந்த அழகான பிரமத்வரை தரையிலிருந்து எழுந்திருக்கட்டும்” என்று புலம்பினான்.(5)
தன் துணையை இழந்ததினால் ருரு இப்படிக் கதறிக்கொண்டிருக்கையில், தேவலோகத் தூதுவன் ஒருவன், அந்தக் கானகத்துக்கு வந்து, அவனிடம் {ருருவிடம்},(6) "ஓ ருருவே, உனது துயர் மேலீட்டால் நீ இப்போது உதிர்த்தாயே வார்த்தைகள், அவை பயனற்றவை. ஓ நல்லவனே, இந்த உலகத்தில் உள்ளவர்களுக்கு நாட்கள் முடிந்தால், அவர்கள் திரும்பி வருவதில்லை.(7) கந்தர்வருக்கும், அப்சரசுக்கும் பிறந்த அந்தப் பரிதாபத்திற்குரிய குழந்தையின் நாட்கள் முடிந்துவிட்டன. அதனால் மகனே, நீ உன் இதயத்தைத் துயருக்குப் பறிகொடுக்காதே.(8) இருந்தாலும், ஒப்பற்ற தேவர்கள் அவளது உயிரை மீட்கும் வழி குறித்து முன்பே சொல்லி வைத்துள்ளனர். நீ அதன்படி நடந்தால் பிரமத்வரை {மீண்டும்} கிடைக்க வாய்ப்பிருக்கிறது" என்றான்.(9)
ருரு, "ஓ தேவலோகத் தூதுவரே! அந்தத் தேவர்கள் என்னதான் கட்டளையிட்டிருகின்றனர். முழுவதும் {முழு விவரம்} கூறினால், நான் (அதைக் கேட்டு) அப்படியே நடந்துகொள்வேன். என்னைத் துன்பத்திலிருத்து விடுவிப்பதே உமக்குத் தகும்” என்றான்.(10) அதற்குத் தேவதூதுவன், "உனது வாழ்நாட்களில் பாதியை உனது துணைக்குக் கொடுக்க வேண்டும். பிருகுவின் பரம்பரையில் வந்த ஓ ருருவே, உனது பிரமத்வரை தரையில் இருந்து எழுந்து வருவாள்" என்றான்.(11)
ருரு, "ஓ தேவதூதர்களில் சிறந்தவரே, நான் எனது வாழ்நாளில் பாதியை எனது துணைக்கு அதிவிருப்பத்துடன் கொடுப்பேன். எனது அன்புக்குரியவளை மறுபடியும் அவளது {பழைய} உடைகளுடனே, அழகான அவள் தோற்றத்துடனே எழுப்புவீராக" என்றான்."(12)
சௌதி சொன்னார், "பிறகு நற்குணங்கள் கொண்டவர்களாகிய கந்தர்வ மன்னனும் (பிரமத்வரையின் தகப்பனும்), தேவதூதனும், இருவரும் தர்மதேவனிடம் சென்று,(13) "ஓ அறமன்னா {தர்மராஜா}, உமக்கு விருப்பமிருந்தால் {சம்மதமிருந்தால்} ருருவுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த இனிமையான பிரமத்வரையை, அவனது {ருருவின்} பாதி வாழ்நாட்களைக் கொண்டு உயிர்ப்பிப்பாயாக" என்றான்.(14) அதற்கு அந்த அறமன்னன், "ஓ தேவதூதா, உனது விருப்பத்தின்படியே, ருருவின் பாதி ஆயுளைக் கொண்டு, அவனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பிரமத்வரை எழுந்திருக்கட்டும்" என்றான்."(15)
சௌதி தொடர்ந்தார், "அறமன்னன் இவ்வாறு சொன்னதும், தேர்ந்த நிறமுடைய அந்த மங்கை பிரமத்வரை, ருருவின் பாதி ஆயுளை எடுத்துக் கொண்டு, தூக்கத்திலிருந்து எழுவதைப் போல் எழுந்தாள்.(16) ருரு தனது பாதி ஆயுளைத் தனது துணை உயிர்த்தெழ தந்ததால், பின்னர் அவனது ஆயுள் சுருங்கியது.(17)
ஒரு நன்னாளில், அவர்களது தந்தைமார், அவர்களுக்கு முறையான சடங்குகளுடன் திருமணம் செய்து வைத்தனர். அந்தத் தம்பதியினரும் ஒருவருக்கொருவர் அர்ப்பணிப்புடன் தங்கள் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தனர்.(18) அவ்வளவு அழகான, கிடைப்பதற்கரிதான, தாமரை இதழ்களின் காந்தியை ஒத்த மங்கையை மணந்து கொண்ட பிறகும் கூட, ருரு {பாம்பினத்தின் மீது கொண்ட கோபம் காரணமாக} பாம்பினத்தையே அழிப்பதாக உறுதியேற்றான்.(19) எப்பொழுதெல்லாம் அவன் பாம்பைக் கண்டானோ அப்பொதெல்லாம் பெரும்கோபத்தில் நிறைந்து, ஒரு ஆயுதத்தை எடுத்து அந்தப் பாம்பைக் கொன்று வந்தான்.(20)
ஓ பிராமணரே {சௌனகரே}, ஒரு நாள் ருரு ஒரு பெரிய கானகத்திற்குள் நுழைந்தான். அங்கே ஒரு வயதான துந்துபா {டுண்டுப} வகையைச் {நீர்பாம்பு வகை} சார்ந்த ஒரு பாம்பு தரையில் கிடப்பதைக் கண்டான்.(21) கோபத்தால் உந்தப்பட்ட ருரு, அந்தப் பாம்பைக் கொல்ல மரணக்கோல் {யமனின் தண்டத்தைப்} போல இருந்த தன் தடியை உயத்தினான். அப்போது அந்தத் துந்துபா {தண்ணீர்ப்பாம்பு} ருருவிடம்,(22) "ஓ பிராமணா! நான் உனக்கு எந்தக் கெடுதலையும் செய்யவில்லையே. பிறகு ஏன் கோபங்கொண்டு என்னைக் கொல்ல வருகிறாய்" என்றது" {என்றார் சௌதி}.(23)
ஆங்கிலத்தில் | In English |