Jarasandha given life by Jara! | Sabha Parva - Section 17 | Mahabharata In Tamil
(ராஜசூய ஆரம்ப பர்வம் - 04)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனை ஜராசந்தனுக்கு எதிராக கிருஷ்ணன் தூண்டுதல்; ஜராசந்தன் யார் என்று யுதிஷ்டிரன் கேட்டல்; ஜராசந்தனின் பிறப்பு ரகசியத்தை கிருஷ்ணன் சொல்லல்…
வாசுதேவன், "பாரத குலத்தில் பிறந்தவன், அதிலும் குறிப்பாக குந்தியின் மகனாக இருப்பவன், என்ன செய்ய வேண்டும் என்பதை அர்ஜுனன் சொல்லிவிட்டான்.(1) நம்மை மரணம் எப்போது வந்தடையும்? இரவிலா, பகலிலா என்பதை நாம் அறியோம். போரில் இருந்து விலகுவதால் சாகா வரம் பெறுவோம் என்பதையும் எப்போதும் நாம் கேள்விப்பட்டதில்லை.(2) எனவே, விதிப்படி அனைத்து எதிரிகளையும் தாக்குவது மனிதர்களின் கடமையாகிறது. இது எப்போதும் நமது இதயத்துக்கு நிறைவைத் தருகிறது.(3) விதியின் காரணமாக வெறுப்படையாமல், நல்ல கொள்கையின் துணை கொண்டு பணியை மேற்கொண்டால் நிச்சயம் நாம் வெற்றி மகுடத்தை அடைவோம். இதே தகுதிகளைக் கொண்ட இரு தரப்புகள், போரில் ஒருவருக்கொருவர் மோதும்போது, யாராவது ஒருவர் சிறப்படைந்தே ஆக வேண்டும், இருவரும் வெல்லவோ அல்லது இருவரும் தோற்கவோ முடியாது.(4)
தீய கொள்கையால் வழிநடத்தப்பட்ட ஒரு போரென்பது, நன்கறியப்பட்ட கலைகளற்று தோல்வியையோ அழிவையோ கொடுக்கும். இரு கட்சிகளும் ஒரே சூழ்நிலையில் சமமாக இருந்தால், பலன் சந்தேகத்திற்கிடமாகிறது. இருப்பினும் இருவரும் ஒரே நேரத்தில் வெல்ல முடியாது.(5) அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒரு நதியின் நீரோட்டம் ஒரு மரத்தை வேரோடுப் பிடுங்குவதுபோல நாம் ஏன் நல்ல கொள்கைகளைக் கொண்டு, எதிரியை நேரடியாக அணுகி அழிக்கக்கூடாது?(6) நமது தவறுகளை மறைத்து, எதிரியின் குறைகளில் மேலாண்மை பெற்று, நாம் எதிரியைத் தாக்கினால், நாம் ஏன் வெல்ல மாட்டோம்? உண்மையில், புத்திசாலி மனிதர்களின் கொள்கைகள், மிகுந்த பலசாலிகளான, பெரும் சக்திகளின் துணை கொண்டு தலைமையில் இருக்கும் எதிரிகளை நேரிடையாக வெளிப்படைத்தன்மையுடன் தாக்கக்கூடாது என்றே சொல்கிறது. இது எனது கருத்துமாகும்.(7) இருப்பினும், எதிரியின் வசிப்பிடத்திற்கும் ரகசியமாகச் சென்று தாக்கினால், நாம் இகழப்பட மாட்டோம்.(8) அனைத்து உயிர்களின் இதயத்தில் மகிழ்ச்சியாக இருப்பவன் போல {இறைவனைப் போல} மனிதர்களில் காளையான ஜராசந்தன் மங்காத புகழை அனுபவிப்பவன். ஆனால், நான் அவனது {ஜராசந்தனது} அழிவை என் முன் காண்கிறேன்.(9) நமது உறவினர்களைக் காக்கும் பொருட்டு நாம் அவனை {ஜராசந்தனைக்} கொல்வோம், அல்லது கடைசியாக அவனால் கொல்லப்பட்டு விண்ணுலகை அடைவோம்" என்றான் {கிருஷ்ணன்}.(10)
அதற்கு யுதிஷ்டிரன், "ஓ கிருஷ்ணா ஜராசந்தன் என்பவன் யார்? அவனது வலிமையும் சக்தியும் எப்படிப்பட்டது? உன்னைத் தீண்டியதும், நெருப்பைத்தொட்ட பூச்சி போல அவன் ஏன் எரிந்து சாகவில்லை?", என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(11)
அதற்கு கிருஷ்ணன், "ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, ஜராசந்தன் யார், அவனது சக்தியும் ஆற்றலும் எப்படிப்பட்டது? அவன் நமக்குத் தொடர்ந்து குற்றம் புரிந்திருந்தாலும், அவன் நம்மால் ஏன் கொல்லப்படாமல் காக்கப்பட்டிருக்கிறான் என்பதைச் சொல்கிறேன் கேட்பீராக.(12) மகதர்களின் தலைவனும், பிருஹத்ரதன் என்ற பெயர் கொண்டவனும், பெரும் பலம் வாய்ந்தவனுமான மன்னன் ஒருவன் இருந்தான். போரில் பெருமை கொள்பவனான அவன் மூன்று அக்ஷௌணி துருப்புகளைக் கொண்டிருந்தான்.(13) பெரும் சக்தியும், அழகும், அளவுக்கதிகமான ஆற்றலும் கொண்டிருந்த அவன், வேள்விகளால் ஏற்பட்ட குறிகளை {வடுக்களை} உடலெங்கும் தாங்கியபடி இரண்டாவது இந்திரனைப் போல இருந்தான்.(14) புகழால் சூரியனைப் போலவும், மன்னிக்கும் இயல்பால் பூமியைப் போலவும், கோபத்தால் அழிப்பவனான யமனைப் போலவும், செல்வத்தால் வைஸ்ரவணனை {குபேரனைப்} போலவும் இருந்தான்.(15)
ஓ பாரத குலத்தில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, இந்த முழு உலகமும் அவனது குணத்தால் நிறைந்திருந்தது. அவனது {பிருஹத்ரதனது} நீண்ட பரம்பரையில் வந்த மூதாதையர்கள், சூரியனில் இருந்து வரும் கதிர்களைப் போல அவனுக்குள் பிரகாசித்துக் கொண்டிருந்தனர்.(16) ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, பெரும் சக்தி கொண்ட அந்த ஏகாதிபதி {பிருஹத்ரதன்}, காசி மன்னனின் மகள்களான பெரும் அழகைச் செல்வமாகக் கொண்ட இரட்டையர்களான அந்தப் பெண்களை மணந்து கொண்டான். மனிதர்களில் காளையான அவன் {பிருஹத்ரதன்} தனது மனைவிகளிடையே, அவர்கள் இருவரிடமும் சம அன்பு கொண்டு இருப்பதாகவும், யாருக்கும் யாரைவிட அதிக சலுகை கொடுக்க மாட்டேன் என்றும் ரகசியமாக ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டான். தான் அன்பாக நேசித்த அன்பு மனைவிகளுடன் அந்த பூமியின் அதிபதி ஒரு பெரும் ஆண் யானை இரு பெண் யானைகளுடன் சுகித்து இருப்பது போலவும், கங்கையாலும் யமுனையாலும் திருப்தி கொண்ட சமுத்திரம் போலவும் ஆனந்தமாக இருந்தான்.(17-20) இருப்பினும் அந்த ஏகாதிபதியின் இளமை இப்படியே கொண்டாட்டங்களுடன், தனது குலத்தை விரித்தி செய்ய ஒரு மகன் இல்லாமல் கடந்து போயிற்று. அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன் {பிருஹத்ரதன்}, ஏராளமான சடங்குகளும், ஹோமங்களும், வேள்விகளும் செய்தும் தனது குலத்தை விரித்தி செய்ய ஒரு மகனை அடையாமல் இருந்தான்.(21)
ஒரு நாள் அந்த மன்னன் {பிருஹத்ரதன்}, உலகெங்கும் திரிந்து வந்தவரும், கௌதம குலத்தைச் சேர்ந்தவரும், கக்ஷீவானின் மகனுமான உயர் ஆன்ம சண்டகௌசிகர் தன் வழியில் அவனது தலைநகருக்கு வந்து, ஒரு மாமரத்தின் அடியில் இருப்பதாக அறிந்தான். அந்த மன்னன் {பிருஹத்ரதன்}, அந்த முனிவரிடம் {சண்டகௌசிகரிடம்} தனது இரு மனைவிகளையும் அழைத்துக் கொண்டு, அவருக்கு நகைகளும், மதிப்பு மிக்க பொருள்களும் கொடுத்து அவரை நிறைவடையச் செய்து வழிபட்டான்.(22,23) வாய்மைநிறை பேச்சும், வாய்மையில் பற்றும் கொண்ட அந்த முனிவர்களில் சிறந்தவர் {சண்டகௌசிகர்} அந்த மன்னனிடம், "ஓ மன்னர்களின் மன்னா {பிருஹத்ரதா}, நான் உன்னால் நிறைவடைந்தேன். ஓ சிறந்த நோன்புகளைக் கொண்டவனே, நீ ஒரு வரத்தைக் கேட்பாயாக" என்றார்.(24)
தன் மனைவிகளுடன் இருந்த மன்னன் பிருஹத்ரதன் மிகவும் தாழ்மையாகப் பணிந்து வணங்கி, அந்த முனிவரிடம் குழந்தையின்மையால் தான் அடையும் துன்பத்தைக் கண்ணீருடன் சொன்னான்.(25) {அவன்}, "ஓ புனிதமானவரே, நான் எனது நாட்டைக் கைவிட்டு, கடுந்தவம் பயில கானகத்திற்குச் செல்ல இருக்கிறேன். நான் மகனில்லாத கொடும்பேறு பெற்றவன். எனவே நான் நாட்டை வைத்துக் கொண்டும், வரத்தாலும் என்ன காரியத்தை அடைய முடியும்?", என்று கேட்டான் {பிருஹத்ரதன்}.(26)
கிருஷ்ணன் தொடர்ந்தான், "{மன்னனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டு, மாமரத்தின் நிழலில் அமர்ந்திருந்த அந்த முனிவர் {சண்டகௌசிகர்} தனது புற உணர்வுகளை அடக்கி, தியான யோகத்திற்குள் புகுந்தார்.(27) அப்படி அமர்ந்திருந்த அந்த முனிவரின் மடியில், கிளியின் அலகால் தீண்டப்படாத சாறுகொண்ட ஒரு மாங்கனி விழுந்தது.(28) முனிவர்களில் சிறந்தவரான அவர், அந்தக் கனியை எடுத்து, மனத்திற்குள் சில மந்திரங்களை உச்சரித்து, அந்த மன்னனுக்கு {பிருஹத்ரதனுக்கு} மகப்பேறு உண்டாக அவனிடம் கொடுத்தார்.(29) இயல்புக்கு மிக்க ஞானம் கொண்ட அந்தப் பெரும் முனிவர் {சண்டகௌசிகர்} அந்த ஏகாதிபதியிடம் {பிருஹத்ரதனிடம்}, "ஓ மன்னா, உனது விருப்பம் ஈடேறி திரும்பு. கானகம் செல்லும் உனது முடிவை மாற்றிக் கொள்வாயாக" என்றார்.(30)
முனிவரின் வார்த்தைகளைக் கேட்ட பெரும் ஞானமுள்ள அந்த ஏகாதிபதி {பிருஹத்ரதன்}, அவரது பாதங்களை வணங்கி, தனது வசிப்பிடம் திரும்பினான்.(31) ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, தன் மனைவிகளுக்குத் தான் கொடுத்த உறுதிமொழியை நினைத்துப் பார்த்த அந்த மன்னன் {பிருஹத்ரதன்}, மனைவிகள் இருவரையும் அழைத்து அந்தக் கனியைக் கொடுத்தான்(32). அவனது அழகான ராணிகள், அந்த ஒரு பழத்தை இரண்டாகப் பிரித்து உண்டனர். அந்தக் கனியை உண்டதாலும் அந்த முனிவரின் வார்த்தைகளின் பலத்தாலும், அந்த இருவரும் கர்ப்பவதியானார்கள். அந்த நிலையில் அவர்களைக் கண்ட மன்னன் பெருமகிழ்ச்சி அடைந்தான்.(33,34) பிறகு ஓ ஞானமுள்ள ஏகாதிபதியே, சிறிது காலம் கடந்து, நேரம் வந்ததும், அந்த ராணிகள் இருவரும் ஒரே உடலின் இரண்டு பாகத்தை ஈன்றெடுத்தனர்.(35) அந்த ஒவ்வொரு துண்டிலும் ஒரு கண், ஒரு கரம், ஒரு கால், அரை வயிறு, அரை முகம் அரை குதம் {ஆசனவாய்} ஆகியன இருந்தன. அந்தத் துண்டு உடல்களைக் கண்ட அந்தத் தாய்மார்கள் மிகவும் நடுக்கமுற்றனர்.(36) அந்த ஆதரவற்ற சகோதரிகள் இருவரும் தங்களுக்குள் கலந்து ஆலோசித்து, அந்த உயிருள்ள உடல் துண்டுகளைக் கைவிட்டனர். பேறு கால மருத்துவச்சிகளான இரண்டு பேர் அந்தத் துண்டுகளை துணியில் சுற்றி, அரண்மனையின் பின் வாயில் வழியாக வந்து அந்தத் துண்டுகளைத் தூக்கி வீசிவிட்டு விரைவாகத் திரும்பி வந்தனர்.(37,38)
சிறிது நேரம் கழித்து, ஓ மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரரே}, இறைச்சியை உண்டும், குருதியைக் குடித்தும் வாழும் ஜரை என்ற ராட்சசி நாற்சந்தியில் போடப்பட்ட துண்டுகளை எடுத்தாள்.(39) விதியின் சக்தியால் உந்தப்பட்ட மனித ஊனுண்ணியான அந்தப் பெண், தூக்கிச் செல்வதற்கு வசதியாக அந்த இரண்டு துண்டுகளையும் இணைத்தாள்.(40) ஓ மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரரே}, அந்த இரண்டு துண்டுகளும் இணைந்ததும், ஓர் உடலாகி கட்டுறுதி வாய்ந்த (உயிருள்ள) குழந்தையானது.(41) ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, பிறகு அந்த பெண் நரமாமிச உண்ணி {ஜரை}, வஜ்ரத்தைப் போன்ற உறுதியான உடல் கொண்ட அந்தக் குழந்தையைத் தூக்கிச் செல்ல முடியாமல் வியப்பால் கண்களை அகலவிரித்தாள்.(42) அந்தக் குழந்தை தாமிரம் போன்ற சிவந்த தனது முட்டிகளை மடித்து அவற்றைத் தனது வாய்க்குள் நுழைத்து, மழை நிறைந்த மேகம் முழங்குவதைப் போல பயங்கரமாக முழங்கியது.(43) அவ்வொலியால் அச்சமடைந்த அந்த அரண்மனைவாசிகள், ஓ மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரரே}, ஓ எதிரிகளைக் கொல்பவனே, மன்னனுடன் {பிருஹத்ரதனுடன்} சேர்ந்து வெளியே வந்தனர்.(44) பாலால் நிறைந்த மார்புகளுடன், ஆதரவற்று, மிகுந்த துயரத்தில் இருந்த ராணிகளும் தங்கள் குழந்தையை மீட்க திடீரென வெளியே வந்தனர்.(45)
ராணிகளின் இந்த நிலையையும், வாரிசை விரும்பிய மன்னனையும், மிகுந்த பலசாலியான அந்தக் குழந்தையையும் கண்டவளும், மனித ஊனுண்ணியுமான அந்த பெண் {ஜரை}, தனக்குள், "வாரிசை விரும்பும் இந்த மன்னனின் நாட்டுக்குள் தான் நான் வாழ்கிறேன். அதனால் இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த அறம் சார்ந்த மன்னனின் குழந்தையை நான் கொல்லலாகாது" என்று நினைத்தாள்.(46,47)) பிறகு அந்த ராட்சசப் பெண் {ராட்சசி ஜரை}, மனித வடிவம் ஏற்று, சூரியனை மூடும் மேகங்கள் போல அக் குழந்தையைத் தாங்கி வந்து, அந்த மன்னனிடம்,(48) "ஓ பிருஹத்ரதா, இது உனது குழந்தை. இவனை நான் உன்னிடம் கொடுக்கிறேன். எடுத்துக் கொள். பெரும் பிராமணரின் கட்டளையால் உனது இரு மனைவியருக்கும் பிறந்தவன் இவன். மருத்துவச்சிகளால் தூக்கி எரியப்பட்ட இவனை, நான் காத்து எடுத்து வந்திருக்கிறேன்" என்றாள் {ஜரை}.(49)
கிருஷ்ணன் தொடர்ந்தான், "ஓ பாரத குலத்தில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, காசி மன்னனின் அழகிய மகள்கள், தங்கள் குழந்தையைப் பெற்றுக் கொண்டு தங்கள் பால் ஊற்றால் அவனை நனைத்தனர்.(50) அனைத்தையும் உறுதி செய்து கொண்ட மன்னன் {பிருஹத்ரதன்} மகிழ்ச்சியால் நிறைந்து, தங்க நிறம் கொண்ட மனித வடிவில் இருந்த மனித ஊனுண்ணியான அந்த பெண்ணிடம்,(51) "தாமரை இதழ்களின் நிறம் கொண்டவளே, எனக்கு இந்தக் குழந்தையைக் கொடுக்கும் நீ யார்? ஓ அதிர்ஷ்டமானவளே, இந்தப் பகுதியில் இன்பமாகச் சுற்றித் திரியும் தேவதையாகத் தெரிகிறாயே!", என்று கேட்டான் {பிருஹத்ரதன்}.(52)

ஆங்கிலத்தில் | In English |