The confusion led by the rattle of the car | Vana Parva - Section 73 | Mahabharata In Tamil
(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)
மாலைப்பொழுதிலேயே நளன் தேரை விதரப்ப்ப நாட்டிற்குக் கொண்டு வருவது; அந்தத் தேரொலியால் அங்கிருந்த விலங்குகள் கூட நளன் வந்துவிட்டானா என்று குழம்புவது; தமயந்தியும் நளன் வந்துவிட்டான் என்று நம்புவது; பின்பு நளன் இல்லாததைக் கண்டு வருந்தி ஒரு பெண் தூதுவரை நளனைத் தேடி அனுப்புவது…
பிருகதஸ்வர் தொடர்ந்தார், "கலங்கடிக்க முடியாத வீரம் கொண்ட ரிதுபர்ணன் மாலைப்பொழுதில் விதரப்ப்ப நகரத்திற்கு வந்து சேர்ந்ததும், அந்நகரத்து மக்கள் மன்னன் பீமனிடம் {ரிதுபர்ணன் வந்த இச்செய்தியை} அறிவித்தார்கள். பீமனின் அழைப்பின் பேரில் அந்த {அயோத்தி நகர} மன்னன், தனது தேரொலியால் அடிவானத்தையும், {அண்டத்தின்} பத்து புள்ளிகள் அனைத்தையும் நிறைத்து, குண்டினம் {விதரப்ப்பத்தின் தலைநகரம்} என்ற அந்த நகரத்திற்குள் நுழைந்தான். அந்த நகரத்தில் {குண்டினத்தில்} இருந்த நளனின் குதிரைகள், அந்தச் சத்தத்தைக் கேட்டு, நளன் இங்கிருந்த போது எப்படி மகிழ்ந்தனவோ அப்படி மகிழ்ந்தன.
கர்ஜனையுடன் வரும் மழைக்கால மேகம் போல, நளன் விரட்டி வந்த அந்தத் தேரின் ஒலியை தமயந்தியும் கேட்டாள். பீமனும், (நளனின்) குதிரைகளும், முன்பொரு காலத்தில் நளன் இங்கிருந்த போது கேட்டது போலவே அந்தத் தேரொலியைக் கேட்டனர். மாடியில் இருந்த மயில்களும், கொட்டில்களில் இருந்த யானைகளும், குதிரைகளும், ரிதுபர்ணனின் தேரொலியைக் கேட்டன. ஓ மன்னா {யுதிஷ்டிரா} மேகங்களின் கர்ஜனையைப் போலக் கேட்ட அந்த ஒலியால் யானைகளும், மயில்களும், {தேர் வந்த} அந்த திக்கை நோக்கி, உண்மையான மேக கர்ஜனையைத் தாங்கள் கேட்டது போல மகிழ்ச்சியுடன் கதறின.
தமயந்தி, "முழு உலகத்தையும் நிறைத்து வரும் இந்தத் தேரொலியால் எனது இதயம் மகிழ்வதால், வருவது மன்னன் நளராகத் தான் இருக்கும். எண்ணிலடங்கா அறங்களைக் கொண்ட வீரரும் சந்திரனைப் போன்ற பிரகாசத்துடன் இருக்கும் முகத்தைக் கொண்டவருமான நளரை நான் காணவில்லை என்றால், நான் நிச்சயம் இறப்பேன். நான் இன்று அந்த வீரரின் ஆர்வமானத் தழுவலுக்கு ஆட்படவில்லை என்றால், நான் நிச்சயம் இருக்க மாட்டேன். மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலைக் கொண்ட அந்த நைஷாதர் {நளர்} இன்று என்னிடம் வரவில்லையென்றால், நான் நிச்சயம் தங்கமாகப் பிரகாசிக்கும் நெருப்புக்குள் புகுவேன். மன்னர்களில் முதன்மையானவரும், சிம்மம் போன்ற பலம் நிறைந்தவரும், மதம் கொண்ட யானையின் பலம் கொண்டவருமான அவர் தன்னை என் முன் வெளிப்படுத்த வில்லையென்றால், நான் நிச்சயம் வாழ மாட்டேன். அவரிடம் ஒரு பொய்மையையும் நான் கண்டதில்லை. அவர் யாருக்கும் ஒரு தீங்கு செய்வதையும் நான் கண்டதில்லை. அவர் கேலிக்காகக் கூட பொய்மை பேசியதில்லை. ஓ, எனது நளர் மேன்மையானவர், மன்னிக்கும் தன்மை கொண்டவர், வீரர், அனைத்து மன்னர்களிலும் மேன்மையானவர். அவர் {நளர்} ஏற்றுக்கொண்டிருக்கும் {ஏகபத்தினி} விரதத்தால், மற்ற பெண்களின் மத்தியில் பேடியாக அறியப்படுகிறார். இரவும் பகலும் அவரையே சிந்திக்கும் எனது இதயம், அந்த அன்பானவர் இல்லாததால், துயரத்தில் வெடிக்கப் போகிறது" என்று சொன்னாள்.
ஓ பாரதா {யுதிஷ்டிரா}, இப்படி உணர்வை இழந்து துக்கப்பட்ட தமயந்தி, நீதிமானான நளனைக் காண (தனது மாளிகையின்) மாடிக்கு ஏறினாள். மாளிகையின் மத்தியில் இருந்த முற்றத்தில், அவள் {தமயந்தி} அந்தத் தேரில் மன்னன் ரிதுபர்ணனையும், வார்ஷ்ணேயனையும், பாகுகனையும் கண்டாள். வார்ஷ்ணேயனும், பாகுகனும் {நளனும்}, அந்த அற்புதமான வாகனத்தில் இருந்து இறங்கி, குதிரைகளை நுகத்தடியில் இருந்து கழற்றி, அந்த வாகனத்தை {தேரை} சரியான இடத்தில் நிறுத்தினர். மன்னன் ரிதுபர்ணனும் தேரில் இருந்து இறங்கி, கடும் பராக்கிரமம் கொண்ட மன்னன் பீமன் முன்னிலையில் நின்றான். பெருமை நிறைந்தவர்கள் அகாலத்தில் (விருந்தினராக) வருவது கிடையாது என்பதால், பீமன் அவனை பெரும் மதிப்புடன் வரவேற்றான். பீமனால் இப்படி மதிக்கப்பட்ட ரிதுபர்ணன் திரும்பத் திரும்பப் பார்த்தான். ஆனால் சுயம்வரத்திற்கான எந்தத் தடயத்தையும் அவன் காணவில்லை.
ஓ பாரதா {யுதிஷ்டிரா}, விதரப்ப்பத்தின் ஆட்சியாளன் {பீமன்}, ரிதுபர்ணனை அணுகி, "நல்வரவு! உமது இந்த வருகைக்கான நிகழ்ச்சி {விசேஷம்} என்ன?" என்று கேட்டான். தனது மகளின் கரத்தைப் பெறுவதற்காகவே மன்னன் ரிதுபர்ணன் வந்திருக்கிறான் என்று அறியாத மன்னன் பீமன் இப்படிக் கேட்டான். கலங்கடிக்க முடியாத பராக்கிரமமும், புத்திசாலித்தனத்தைக் கொடையாகவும் கொண்ட மன்னன் ரிதுபர்ணன், அங்கே பிற மன்னர்களோ, இளவரசர்களோ இல்லாததைக் கண்டான். சுயம்வரத்தைக் குறித்து யாரும் பேசிக் கொள்வதைக் கூட அவன் கேட்கவில்லை. அந்தணர்க் கூட்டத்தையும் அவன் காணவில்லை. இதனால் கோசலத்தின் அந்த மன்னன் {ரிதுபர்ணன்} நீண்ட நேரம் சிந்தித்து, "நாம் உமக்கு மரியாதை செலுத்தவே வந்தேன்" என்றான்.
இதனால் ஆச்சரியமடைந்த மன்னன் பீமன், நூறு யோஜனைக்கு மேல் கடந்து வந்திருக்கும் ரிதுபர்ணனின் வருகையைக் குறித்து சிறிது நேரம் சிந்தித்தான். அவன் தனக்குள், "மற்ற அரசாங்கங்களையும், எண்ணிலடங்கா நாடுகளையும் கடந்து, எனக்கு மரியாதை செலுத்த வந்ததாகச் சொல்வது சரியல்ல. இவர் வந்திருப்பதற்கான காரணம் புதிராகவே இருக்கிறது. இருப்பினும், உண்மையான காரணத்தைப் பின்பு நான் அறிவேன்" என்று நினைத்தான். மன்னன் பீமன் இப்படி நினைத்தாலும், அவன் ரிதுபர்ணனை ஒட்டுமொத்தமாக விட்டுவிடவில்லை. அவன் ரிதுபர்ணனிடம், "நீர் களைத்திருக்கிறீர். ஓய்வெடும்" என்றுத் திரும்பத் திரும்பச் சொன்னான். இப்படி திருப்தி கொண்ட பீமனால் மரியாதை செலுத்தப்பட்ட மன்னன் ரிதுபர்ணனும் திருப்தியடைந்து, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவனுக்கென ஒதுக்கிய மாளிகையில் பீமனின் பணியாட்களுடனும், மன்னனின் உறவினர்களுடனும் சென்றான்.
பிருகதஸ்வர் தொடர்ந்தார், "ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இப்படி ரிதுபர்ணன் சென்றதும், வார்ஷ்ணேயனும், பாகுகனும் {நளனும்} தேரைக் கொட்டிலுக்குக் கொண்டு சென்றனர். அங்கே குதிரைகளை விடுவித்து, முறைப்படி அவற்றைக் கவனித்து, அவற்றுக்கு ஆறுதல் அளித்து, தேருக்குப் பக்கத்தில் அமர்ந்தனர். அதே நேரத்தில் பெரும் துயரத்தில் இருந்த விதரப்ப்ப இளவரசி தமயந்தி, பங்காசூரனின் மகனையும் {ரிதுபர்ணனையும்}, சூத குலத்தைச் சார்ந்த வார்ஷ்ணேயனையும், மாற்றுருவத்தில் இருந்த பாகுகனையும் கண்டு, "இந்தத் தேரொலி யாருடையது? நளருடைய தேரைப் போன்றே சத்தம் பலமாக இருந்ததே. ஆனால் அந்த நிஷாதர்களின் ஆட்சியாளரை {நளரை} நான் காணவில்லையே. நிச்சயமாக வார்ஷ்ணேயன் நளரிடம் இருந்த அந்தக் கலையைக் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். அதனால்தான் அந்தத் தேரின் ஒலி நளரின் தேரொலி போலக் கேட்டிருக்கிறது. அல்லது ரிதுபர்ணன் நளரைப் போன்ற நிபுணராகி, நளரைப் போன்ற தேரொலியை எழுப்பினானா?" என்று தனக்குள் நினைத்துக் கொண்ட அந்த அருளப்பட்ட அழகான மங்கை, ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்த நிஷாதனைத் {நளனைத்} தேடி ஒரு பெண் தூதரை அனுப்பினாள்
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.