Kesini met Nala! | Vana Parva - Section 74 | Mahabharata In Tamil
(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)
தமயந்தி கேசியினை பாகுகனிடம் தூதாக அனுப்புதல்; கேசினி பாகுகனிடம் வந்து விசாரித்தல்; நளனின் துயரம்…
தமயந்தி சொன்னாள், "ஓ கேசினி, பார்வைக்குச் சகிக்காதபடி, நீளம் குறைந்த கைகளுடன் தேரின் அருகே அமர்ந்திருக்கும் அந்தத் தேரோட்டியிடம் சென்று அவர் யார் என்பதை அறிந்து வா. ஓ அருளப்பட்டவளே, ஓ குறைகளற்றவளே, அவரை அணுகி, தகுந்த வார்த்தைகளுடனும், எச்சரிக்கையுடன், வழக்கமாக விசாரிப்பது போல விசாரித்து, அவர் குறித்த அனைத்து உண்மையான விவரங்களையும் கேள். எனது மனம் கொள்ளும் திருப்தியான உணர்வையும், எனது இதயம் உணரும் மகிழ்ச்சியையும் கருதி, இவரே மன்னன் நளர் என்று நினைத்து நான் அஞ்சுகிறேன். மேலும், ஓ குறையற்றவளே, அவரது நலத்தை விசாரித்த பிறகு, பர்ணாதன் சொன்ன வார்த்தகளை அவரிடம் சொல். ஓ அழகானவளே, அவர் சொல்லும் மறுமொழியைப் புரிந்து கொண்டு, என்னிடம் வந்து சொல்" என்றாள் {தமயந்தி}.
இப்படி உத்தரவிடப்பட்ட அந்தப் பெண் தூதுவர், எச்சரிக்கையுடனேயே சென்றாள். அப்படிச் சென்ற கேசினி பாகுகனிடம் {நளனிடம்} பேசுவதை, தமயந்தி மாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள். கேசினி, "ஓ மனிதர்களில் முதன்மையானவரே, உமது வரவு நல்வரவாகுக. நான் உமது மகிழ்ச்சியை விரும்புகிறேன். ஓ மனிதர்களில் காளையே, தமயந்தின் வார்த்தைகளை இப்போது கேளும். நீ எப்போது கிளம்பினீர்கள்? என்ன காரியத்துக்காக இங்கே வந்தீர்கள்? எங்களுக்கு உண்மையைச் சொல்லும். விதரப்ப்பத்தின் இளவரசி {தமயந்தி} இவற்றைக் கேட்க விரும்புகிறார்" என்றாள். அதற்கு பாகுகன், "கோசலத்தின் சிறப்பு மிகுந்த மன்னன் {ரிதுபர்ணன்}, தமயந்தியின் இரண்டாவது சுயம்வரம் நடைபெறப் போவதாக ஒரு அந்தணன் மூலம் அறிந்தார். அதைக் கேள்விப்பட்டே, காற்றின் வேகம் கொண்டு, நூறு யோஜனை தூரம் செல்லக்கூடிய அற்புதமான புரவிகளின் உதவியுடன் அவர் இங்கு வந்திருக்கிறார். நான் அவரது தேரோட்டி" என்று பதில் சொன்னான்.
பிறகு கேசினி, "உங்களில் மூன்றாமவர் எங்கிருந்து வருகிறார்? அவர் யாருடையவர் (யாருடைய மகன்}? நீர் யாருடைய மகன்? இந்த வேலையைச் செய்ய எப்படி நீர் வந்தீர்?" என்று கேட்டாள். இப்படிக் கேட்கப்பட்டு பாகுகன், "(நீ விசாரிக்கும்) அவன் {வார்ஷ்ணேயன்}, அறம்சார்ந்த நளனின் தேரோட்டியாக இருந்து, வார்ஷ்ணேயன் என்ற பெயரால் அனைவராலும் அறியப்பட்டவன் ஆவான். ஓ அழகானவளே, நளன் நாட்டைவிட்டு சென்றதும், அவன் பங்காசூரனின் மகனிடம் {ரிதுபர்ணரிடம்} வந்தான். நான் குதிரைகளைப் பற்றி நன்கு அறிந்த நிபுணன் ஆகையால், தேரோட்டியாக அமர்த்தப்பட்டேன். உண்மையில், மன்னன் ரிதுபர்ணரே என்னை அவரது தேரோட்டியாகவும், சமையற்காரனாகவும் தேர்ந்தெடுத்தார்" என்று மறுமொழி கூறினான் {பாகுகனாக இருக்கும் நளன்}.
கேசினி மீண்டும், "வார்ஷ்ணேயன், தனது மன்னன் நளன் எங்கு சென்றிருக்கிறார் என்பதை அறிவானோ. ஓ பாகுகரே, அவன் (தனது தலைவரைக்) இது குறித்து உம்மிடம் பேசியிருக்கலாமே" என்றாள். அதற்கு பாகுகன், "அற்புதமான செயல்கள் செய்து நளனுடைய பிள்ளைகளை இங்கே கொண்டு வந்து விட்டுவிட்டு, வார்ஷ்ணேயன் தற்போது இருக்கும் இடத்திற்கு சென்றுவிட்டான். அவனுக்கு {வார்ஷ்ணேயனுக்கு} அந்த நைஷாதன் {நளன்} எங்கிருக்கிறான் என்பது தெரியாது. ஓ சிறப்பானவளே, நளன் தனது அழகை (உண்மையான உருவை) இழந்து, மாற்றுருவத்தில் உலகம் முழுவதும் திரிந்து வருவதால் அவன் எங்கிருக்கிறான் என்பது யாருக்கும் தெரியாது. நளனை நளன் மட்டுமே அறிவான். நளனுக்கு உரிய அடையாளங்கள் எங்கும் அவனைக் காட்டாது {அவனது அடையாளங்களை வைத்து, அவனை எங்கும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது}." என்றான் {நளன்}.
இப்படிச் சொல்லப்பட்ட கேசினி மறுபடியும், "அவன் முன்பு இங்கிருந்து அயோத்தியாவுக்குச் சென்ற ஒரு அந்தணன், பெண்ணின் உதடுகளுக்குரிய வார்த்தைகளை "ஓ அன்புக்குரிய சூதாடியே, அர்ப்பணிப்பும் அன்பும் கொண்ட உமது மனைவியான நான் கானகத்தில் தூங்கிக் கொண்டிருக்கும்போது எனது பாதி ஆடையை வெட்டி எடுத்துக் கொண்டு என்னைக் கைவிட்டு எங்கே சென்றீர்? அந்தப் பெண், உம்மால் உத்தரவிடப்பட்டபடியே உம்மை எதிர்பார்த்து, பாதி ஆடையுடனும், இரவும் பகலும் எரியும் துயரத்துடனும் உமக்காகக் காத்திருக்கிறாள்! ஓ மன்னா {நளரே}, ஓ வீரரே, எப்போதும் துயரத்துடன் அழுது கொண்டே இருக்கும் அவளிடம் கருணை கொண்டு பதிலளியும். ஓ சிறப்பானவரே, அந்தப் பழியில்லாதவள் கேட்பதற்காக குழம்பி அலையும் ஏற்புடைய வார்த்தைகளை அவளுக்குச் சொல்லும்" என்ற அவளது வார்த்தைகளைச் சொல்லியிருந்தான். அந்த அந்தணனின் இவ்வார்த்தைகளை முன்பே கேட்ட நீர் அதற்கு மறுமொழி கூறினீர்! விதரப்ப்பத்தின் இளவரசி {தமயந்தி}, நீர் அப்போது சொன்ன அவ்வார்த்தைகளை மறுபடியும் கேட்க விரும்புகிறார்" என்று கேட்டாள்.
பிருகதஸ்வர் தொடர்ந்தார், "ஓ குருகுலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, கேசினியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட நளனின் இதயம் வலித்தது. அவனது கண்கள் கண்ணீரால் நிரம்பின. தனது துயரத்தை அடக்கிக் கொண்ட அம்மன்னன் {நளன்}, எரியும் துயரத்துடன் மறுபடியும் அவ்வார்த்தைகளை, கண்ணீரால் தடைபட்ட குரலுடன், "என்னதான் துயரத்தில் விழுந்தாலும், கற்புடைய மங்கையர் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு நிச்சயம் சொர்க்கத்தை அடைவார்கள். கற்புடைய பெண்கள், அறம்சார்ந்த நடத்தை என்ற கவசத்துடன் தங்களது வாழ்வை நடத்துவதால், அவர்கள் தங்கள் தலைவர்களால் கைவிடபட்டாலும், அதன் காரணமாக அவர்கள் {அவன் மீது} கோபங்கொள்ள மாட்டார்கள். அனைத்து அருளையும் இழந்து, துயரத்தில் மூழ்கிய பிறகே அவன் {நளன்} அவளை {தமயந்தியைக்} கைவிட்டதால், அவள் கோபம் கொள்ளக்கூடாது. வாழ்வாதரத்தைப் பெற முயன்றபோது, பறவைகளால் ஆடை களவாடப்பட்டு துயரத்தில் மூழ்கியவன் மீது அழகு நிறைந்த அறம்சார்ந்த பெண் கோபமடையக்கூடாது. தான் {கணவனால்} நன்றாக நடத்தப்பட்டாலும், இல்லையென்றாலும், நாடிழந்து, செழிப்பெல்லாம் இழந்து, பசியால் ஒடுக்கப்பட்டு, பேரிடரில் மூழ்கிய தனது கணவனை அந்த இழிந்த நிலையில் கண்டும், அப்படிப்பட்ட {அறம்சார்ந்த} ஒரு மனைவி, ஒருபோதும் தன்னைக் {அவனுக்கெதிரான} கோபத்தில் ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது" என்றான்.
ஓ பாரதா {யுதிஷ்டிரா}, துயரத்தால் ஒடுக்கப்பட்ட, நளன் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போது, அவன் தனது கண்ணீரை அடக்க முடியாமல் அழத்தொடங்கினான். அதன்பிறகு கேசினி, இந்த உரையாடல் மூலம் அனைத்தையும் அறிந்து, அவனின் {பாகுகனின் - நளனின்} வருத்தத்தையும் ஆவேசத்தையும் அறிந்து தமயந்தியிடம் திரும்பினாள்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.