Nothing is greater than gift in three worlds! | Vana Parva - Section 199d | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
எந்தெந்த காலங்களில் தானம் செய்தால் எவ்வளவு பலன் கிடைக்கும் என்பது குறித்து மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! பெரும் மன்னா {ஜனமேஜயா}, இப்படிச் சொல்லப்பட்ட பெரும் புகழுடைய யுதிஷ்டிரன், "ஓ! புனிதமானவரே {மார்க்கண்டேயரே}, மதிப்பைத் தரும் தானத்தின் விதிகளை நான் கேட்க விரும்புகிறேன்" என்று கேட்டான்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பெரும் மன்னா, ஓ! யுதிஷ்டிரா, நீ கேட்க விரும்பும் தானத்தின் விதிகளை நான் எப்போதும் உயர்வாக மதித்து வந்திருக்கிறேன். ஸ்ருதி மற்றும் ஸ்மிருதிகளில் விவரிக்கப்பட்டுள்ள தானத்தின் மர்மங்களை {ரகசிங்களை} இப்போது கேள். கஜச்சாயை என்று சொல்லப்படும் இடைவேளைகளில், அரச மரத்தின் இலைகளால் {காற்று} வீசப்பட்டு {விசிறப்பட்டு} சிரார்த்தம் செய்யும் ஒரு மனிதன், ஓ! யுதிஷ்டிரா, அதன் பலன்களை நூறாயிரம் கல்பங்களுக்கு அடைந்து மகிழ்கிறான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு தர்மசாலையை நிறுவி, அனைத்தையும் பார்த்துக் கொள்ள ஒரு மனிதனை அதில் நியமிப்பவன், அனைத்து வேள்விகளையும் செய்த தகுதியைப் பெறுகிறான். நதியின் ஓட்டம் தனக்கு எதிராக ஓடும் தீர்த்தத்தில் ஒரு குதிரையைத் தானமளிப்பவன், வற்றாத தகுதியை அடைகிறான்.
ஒருவனது வீட்டிற்கு உணவுக்காக வரும் விருந்தாளி இந்திரனைத் தவிர வேறில்லை. அவனை உணவால் மகிழ்ச்சியடையச் செய்தால், இந்திரனே வற்றாத சிறந்த தகுதியை {உணவளிப்பவனுக்கு} அளிக்கிறான். மனிதர்கள் கப்பல்கள் மூலம் கடலைக் கடப்பது போல, மேலே சொல்லப்பட்ட தானம் செய்பவர்கள் தங்கள் அனைத்துப் பாவங்களிலிருந்தும் காக்கப்படுகிறான். அந்தணர்களுக்கு, தயிர் போன்ற எதைத் தானமளித்தாலும், அவை வற்றாத தகுகளைக் கொடுக்கின்றன. குறிப்பிட்ட சந்திர நாளில் {பாவ காலங்களில்} செய்யப்படும் தானம், பிற நாட்களில் செய்யப்படும் தானங்களை விட இரட்டிப்பு மடங்கு பலனை அளிக்கும். குறிப்பிட்ட காலத்தில் செய்யப்படும் தானம், மற்ற காலங்களில் செய்யப்படுவதை விடப் பத்து மடங்கு பலன்களைத் தரும். குறிப்பிட்ட வருடத்தில் {ருது அயணம் காலத்தில்} செய்யப்படும் தானம் மற்ற வருடங்களைக் காட்டிலும் நூறு மடங்கு பலன்களைத் தரும். ஒரு வருடத்தின் கடைசி மாதத்தில் கடைசி நாளில் செய்யப்படும் தானம், வற்றாத தகுதிகளையும் பலன்களையும் தரும்.
கதிர்திருப்பம் சார்ந்த இடங்களில் சூரியன் நிற்கும்போது செய்யப்படும் தானமும், துலாம், மேஷம், மிதுனம், கன்னி, மீனம் ஆகிய ராசிகளில் சூரியன் தங்கும் கடைசி நாளில் செய்யப்படும் தானமும், சந்திரன் மற்றும் சூரிய கிரஹணங்களின் போது செய்யப்படும் தானமும் வற்றாத பலனைத் தரும். பலன் தரும் காலங்களில் செய்யப்படும் தானம் பத்து மடங்கும், பருவ நிலை மாறும்போது செய்யப்படும் தானம் நூறு மடங்கும், ராகு காட்சி தரும் நாட்களில் {கிரஹண காலங்களில்} செய்யப்படும் தானங்கள் ஆயிரம் மடங்கும் பலன்களைத் தரும் என்று கற்றவர்கள் சொல்கிறார்கள். துலாம் மற்றும் மேஷ ராசிகளில் சூரியன் தங்கும் கடைசி நாளில் செய்யப்படும் தானம் தரும் பலன்கள் அழிவை அறியாது.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நிலத்தினால் உண்டாகும் பலன்களை ஒருவன் நிலத்தைத் தானம் செய்யாமல் அடைய முடியாது. வாகனங்களில் செல்லும் பலன்களை, ஒருவன் வாகனத்தைத் தானம் செய்யாமல் பெற முடியாது. உண்மையில் ஒரு மனிதன் ஒரு அந்தணனுக்குத் தானம் செய்யும்போது என்ன நோக்கத்தோடு தானம் செய்தானோ, அவை அவனது மறுபிறப்பில் பலன்களைக் கொடுக்கும். தங்கம் நெருப்பில் இருந்தே எழுந்தது; பூமி விஷ்ணுவிடமிருந்தும், பசுக்கள் சூரியனிடம் இருந்தும் எழுந்தன. எனவே, தங்கம், பூமி, பசுக்களைத் தானம் செய்வோர், அக்னி, விஷ்ணு மற்றும் சூரியலோகங்களை அடைவார்கள். தானம் செய்வதை விட நித்தியமானது {அழியாத்தன்மை கொண்டது} வேறு எதுவும் இல்லை. எனவே, மூவுலகிலும் இதைவிட வேறு மங்களகரமானவது வேறெங்கும் இருக்கிறதா? ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இதற்காகவே, பெரும் புத்திக்கூர்மை கொண்டவர்கள், தானத்தை விட உயர்ந்ததோ, பெரிதானதோ மூவுலகிலும் இல்லை என்று சொல்கிறார்கள்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.