Soul and the Supreme Soul! | Vana Parva - Section 199c | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
சுத்தங்கள் குறித்தும், ஆத்மா மற்றும் பரமாத்மா குறித்தும் மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது...
யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}, "ஓ! பெரும் ஞானம் கொண்டவரே {மார்க்கண்டேயரே}, அந்தணன் தன்னை எப்போதும் சுத்தனாக வைத்துக் கொள்வதற்கு என்ன சுத்திகரிப்பு முறை உள்ளது?! ஓ அறம்சார்ந்த அனைத்து மனிதர்களிலும் முதன்மையானவரே {மார்க்கண்டேயரே}, நான் அதை உம்மிடம் இருந்து கேட்க விரும்புகிறேன்" என்றான்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, "பேச்சுச் சுத்தம், செயல் சுத்தம், நீரைப் பயன்படுத்துவதால் வரும் சுத்தம் எனச் சுத்தம் மூன்று வகைப்படும். இந்த மூன்று வகைச் சுத்திகரிப்புகளையும் செய்யும் ஒருவன் சந்தேகமற சொர்க்கத்தை அடைகிறான். காலையிலும் மாலையிலும் சந்தியா தேவியை வணங்கி {சந்தியா வந்தனம் செய்து}, வேதங்களின் தாயான புனிதமான காயத்ரி தேவியைத் தியானத்தன்மையோடு உரைக்கும் {காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும்} அந்தணன், அவளால் சுத்திகரிக்கப்பட்டு, அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுவான். கடல்களோடு கூடிய இந்த முழு உலகையும் அவன் தானமாகப் பெற்றிருந்தாலும், அதன்காரணமாக அவன் மகிழ்ச்சியின்மையை அனுபவிக்க மாட்டான்.
சூரியன் உள்ளிட்ட தெய்வீகக் கோள்கள் அமங்களமாகி, ஒருவனுக்குப் பகையாக இருந்தாலும், இது போன்ற அவனது செயல்களால் அவை விரைவில் மங்களகரமானவையாகவும், சாதகமாகவும் மாறும். அதே வேளையில், ஏற்கனவே மங்களகரமாகவும் சாதகமாகவும் அந்த நட்சத்திரங்கள் இருந்தால், இதுபோன்ற அவனது செயல்களால், அவை மேலும் அதிக மங்களகரமாகவும், அதிகச் சாதகமாகவும் மாறும். விலங்குகளை உணவாக உண்ணும் பயங்கரமான ராட்சசர்களும், கடும் முகம் படைத்தவர்களும், பருத்த உடல் உடையவர்களும் இதுபோன்ற தூய்மையைப் பயிலும் அந்தணனுக்குத் தீங்கு செய்ய இயலாது.
அந்தணர்கள் சுடர்விட்டெரியும் நெருப்பைப் போன்றவர்கள். கல்வி கொடுப்பதாலோ, வேள்வி நடத்துவதாலோ, தானம் பெறுவதாலோ அவர்கள் எந்தக் குறைவும் அடைய மாட்டார்கள். அந்தணன் வேதமறிந்திருக்கிறானோ, அறியாதிருக்கிறானோ, சுத்தமாக இருக்கிறானோ, அசுத்தமாக இருக்கிறானோ, அந்தணர்கள் நெருப்பைப் போன்றவர்கள் என்பதால், எப்போதுமே அவர்கள் அவமதிக்கப்படக் கூடாது. இறந்தவர்களின் உடலை எரிக்க இடப்படும் நெருப்புத் தூய்மையற்றதாகக் கருதப்படுவதில்லை. அதே போல, ஒரு அந்தணன் கற்றவனோ, அறியாதவனோ அவன் எப்போதும் சுத்தனே ஆவான். அவன் பெரியவனும், தேவனுமாவான். சுவர்களாலும், வாயில்களாலும், அரண்மனைகளாலும் நிறைந்த நகரங்கள், அந்தணர்களற்று இருந்தால், தங்களது அழகை இழக்கும். உண்மையில், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தங்கள் வகைக்குரிய கடமைகளைச் சரியாகச் செய்து, கல்வி கற்று, தவத்தகுதியுடன் இருக்கும் வேதமறிந்த அந்தணர்கள் வசித்தால்தான் அது நகரமாகும். ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே யுதிஷ்டிரா}, கற்ற அந்தணன் வசிக்கும் இடம், காடாகவோ, புல்வெளியாகவோ இருந்தால்கூட அது நகரம் என்று அழைக்கப்படும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவ்விடம் தீர்த்தமாகவும் ஆகும்.
பாதுகாப்பைக் கொடுக்கும் மன்னனையும், தவத்தகுதி படைத்த அந்தணனையும் அணுகி, அந்த இருவருக்கும் வழிபாட்டைச் செலுத்தும் ஒருவன், தனது பாவங்கள் அனைத்தையும் உடனே அழிக்கிறான்.
புனிதத் தீர்த்தங்களின் நீர்க்காணிக்கைகள் {பானபலி} செலுத்துவதையும், புனிதமானவர்களின் பெயர்களைச் சொல்வதையும், நல்லவர்கள் மற்றும் அறம்சார்ந்தவர்களுடன் உரையாடுவதையும் பாராட்டுக்குரிய தகுதிவாய்ந்த செயல்கள் என்று கற்றவர்கள் சொல்கிறார்கள். அறம்சார்ந்து நேர்மையாக இருப்பவர்கள், தங்களைப் போன்றோருடன் இருக்கும் தங்கள் தோழமையை எப்போதும் பரிசுத்தமான நீரால் புண்ணியமாக்கப்பட்ட புனிதத் தொடர்பாகக் கருதுகிறார்கள். திரி தண்டம் சுமந்து , நோன்புகள் பயின்று, நீர்க்காணிக்கைகள் கொடுத்து, நெருப்பை வணங்கி, கானகத்தில் வசித்து, உடல் மெலிந்து போவதெல்லாம், ஒருவன் இதயச் சுத்தம் இல்லாமல் இருந்தால் பயனில்லாமலேயே போகும். இன்ப நுகர் பொருட்களில் சுத்தம் எதிர்பார்க்கப்படவில்லையென்றால், அதில் ஆறு புலன்களின் {அறிவுகளின்} ஈடுபாடு எளிதானதே. எனினும், சுத்தம் இல்லாமை கடினமானதே; சுத்தமில்லாமல் கிடைக்கும் சுகம் எளிதானது கிடையாது {சுத்தமில்லாமல் சுகம் கிடைக்காது. அது மோட்சத்தைக் கொடுக்காது}.
நீர்க்காணிக்கைகள் {பானபலி} |
ஓ! மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரா}, ஆறு புலன்களின், மனது மட்டுமே எளிதாகத் தூண்டப்படும். அதுவே மிக ஆபத்தானதும் கூட வார்த்தையாலோ, செயலாலோ, ஆன்மாவாலோ பாவமிழைக்காத உயர் ஆன்ம மனிதர்கள் தவங்களில் ஈடுபடுவதாகச் சொல்லப்படுகிறதே ஒழிய, உடலை அழிக்கும் உபவாசங்களையோ நோன்புகளையோ அவர்கள் செய்வதில்லை. தனது உறவினர்களிடம் அன்பில்லாத ஒருவன், தனது உடலை சுத்தமாக வைத்திருந்தாலும் பாவத்திலிருந்து விடுபட மாட்டான். கடும் இதயமே ஒருவனது தவத்திற்கு எதிரியாகும். தவம் என்பது உலக இன்பங்களில் இருந்து விடுபடுவது மட்டுமல்ல. எப்போதும் சுத்தமாகவும், அறம்சார்ந்தும் இருப்பவனும், தனது வாழ்நாள் முழுவதும் அன்பைப் பயில்பவனும் இல்லற வாழ்வு வாழ்ந்தாலும் முனிவரே ஆவர். அப்படிப்பட்ட மனிதன் தனது பாவங்கள் அனைத்தையும் அழிக்கிறான். உபவாசங்களும், பிற நோன்புகளும் பாவங்களை அழிக்காது. இருப்பினும், அவற்றைப் பலமிழக்கச் செய்யும். மேலும் உடலின் சதைகளையும் இரத்தத்தையும் சுண்டச் செய்யும்.
புனிதமற்ற இதயம் கொண்டவன், நோன்புகளின் பொருளை உணராமல் அவற்றை மேற்கொள்வது, தன்னைத்தானே சித்திரவதை செய்து கொள்வதாகும். அத்தகு செயல்களைச் செய்வதால் அவன் அவனது பாவங்களில் இருந்து விடுபடுவதில்லை. அவன் வழிபடும் நெருப்பு, அவனது பாவங்களை உட்கொள்வதில்லை. புனிதத்தன்மையாலும், அறத்தாலும் மட்டுமே ஒரு மனிதன் அருள் உலகங்களை அடைகிறான். உபவாசங்களும் நோன்புகளும் பயனற்றுப் போகும். கனிகளும், கிழங்குகளும் மட்டுமே உண்பது, மௌன விரதமிருப்பது, காற்றை மட்டுமே உண்பது, சிகை மழித்து {மொட்டையடித்து} இருப்பது, நிலையான வீட்டைப் புறக்கணிப்பது, தலையில் சடா முடி தரிப்பது, வானம் பார்க்கப் படுப்பது, தினமும் உபவாசம் இருப்பது, நெருப்பை வழிபடுவது, நீரில் மூழ்குவது, வெறுந்தரையில் படுப்பது ஆகியன மட்டுமே அதுபோன்ற பலனைத் தராது {அருள் உலகங்களை அடைய முடியாது}. அறிவாலும் செயலாலும் புனிதத்தன்மையடைபவர்கள் மட்டுமே, நோய், பலவீனம், மரணம், உயர்ந்த நிலையை அடைதல் ஆகியவற்றை வெல்கிறார்கள். நெருப்பால் சுடப்பட்ட விதைகள் முளைக்காததைப் போல, அறிவால் சுடப்பட்ட வலிகள் ஆன்மாவைப் பாதிக்காது. குறைந்த காலம் வாழும் கடலின் நுரை போலவே, ஆன்மா இல்லாத செயலற்ற {மந்தமான} உடலும் மரக்கட்டை போன்றதே.
அனைவருக்குள்ளும் வசிக்கும் ஆன்மா; அந்த ஆன்மாவின் காட்சி {தரிசனம்} பெற்றவன், (வேதங்களின்} ஒரு தாள வரி {ஸ்லோகம் எனக் கொள்க} அல்லது பாதியின் உதவி பெற்றவன் ஆகியோருக்கு வேறு எதன் தேவையுமில்லை. சிலர் (வேதங்களின்} இரண்டே எழுத்துகளால் பரமாத்மாவின் அறிவைப் பெறுகிறார்கள்; சிலர் நாற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலுமான தாள வரிகளால் {சுலோகங்களால்} முக்தியை அடைகிறார்கள். பரமாத்மாவை அறிதலே {அறியும் அறிவே} முக்திக்கான குறியீடாகும். தனித்தன்மையான ஞானம் கொண்ட பழங்கால மனிதர்கள், சந்தேகங்களால் சலனப்படுபவனுக்கு இவ்வுலகமும் கிடையாது; அடுத்த உலகமும் கிடையாது; அருளுலகமும் கிடையாது என்று சொல்கின்றனர். பரமாத்மாவில் தன்னைக் காண்பவனின் நம்பிக்கையே முக்திக்குக் குறியீடாகும். வேதங்களின் உண்மையான பொருளை அறிந்தவன், அதன் உண்மையான பயன்பாட்டைப் புரிந்து கொள்கிறான். அப்படிப்பட்ட மனிதன், எரியும் காட்டைப் பார்க்கும் மனிதனைப் போல, வேதச் சடங்குகளைப் {வேதங்களில் சொல்லப்பட்டுள்ள கர்மங்களைப் {செயல்களைப்]} பார்த்து அஞ்சுகிறான்.
வறண்ட சொற்போர்களைத் தவிர்த்து, சுருதி மற்றும் ஸ்மிருதிகளில் ஆர்வம் செலுத்து. அறிவின் துணை கொண்டு, இரண்டாவதற்ற அழிவற்றவனை {பரமாத்மாவை} அறி. (அதை அறிந்த பிறகு) ஒருவனின் தேடல், குறைபாடுடைய வழிமுறைகளின் மூலம் வீணாகிறது. எனவே, ஒருவன் வேதங்களின் துணை கொண்டு அந்த அறிவை அடைய முயல வேண்டும். வேதங்களே பரமாத்மா; அவையே அவனது உடல்; அவையே உண்மை. விலங்கின் தன்மையால் கட்டுப்பட்டுள்ள ஆன்மா, வேதங்களில் கலந்திருக்கும் அவனை {பரமாத்மாவை} அறிய இயலாததாக இருக்கிறது. எனினும், அந்தப் பரமாத்மா சுத்தமான அறிவால் அறியத்தக்கவனாவான். வேதங்களில் சொல்லப்பட்டுள்ளபடி தேவர்களின் இருப்பும், உடல்களால் செய்யப்படும் செயல்களின் திறனும், செயல்பாட்டின் திறனும் அனைத்து யுகங்களிலும் கவனிக்கப்பட்டுள்ளது. இவற்றை விட்டுவிடுவதும், நிர்மூலமாக்குவதும் புலன்களின் {அறிவுகளின்} சுத்தத்தால் கோரப்படுகிறது. எனவே, புலன்களின் செயல்பாட்டை இடைநிறுத்தம் செய்வதே {நிறுத்துவதே} உண்மையான உபவாசமாகும். ஒருவன் தவத்தின் மூலம் சொர்க்கத்தை அடையலாம். ஒருவன் தானம் செய்வதால் இன்பநுகர் பொருட்களை அடையலாம். தீர்த்தங்களில் நீர்க்கடன் செலுத்துவதால் ஒருவனின் பாவங்கள் அழிக்கப்படலாம். ஆனால், முழுமையான விடுதலை என்பது, ஞானத்தைத் தவிர வேறெதாலும் அடைய முடியாது.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.