A Woman reproached Kausika! | Vana Parva - Section 205 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
காட்டில் கௌசிகர் என்ற அந்தணரின் மேல் கொக்கு எச்சமிடுவது; கோபப்பார்வை பார்த்து அந்தணர் அந்தக் கொக்கை எரிப்பது; ஒரு கிராமத்திற்குள் சென்று ஓர் இல்லத்தரசியிடம் அந்தணர் பிச்சை கேட்பது; அவள் பிச்சையிட தாமதப்படுத்துவது; அந்தணர் கோபம்; அவள் அவரது கோபத்தைத் தணித்துப் புத்தி சொல்லி அனுப்புவது…
கௌசிகரும் கற்புக்கரசியும் |
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, கௌசிகர் என்ற பெயரில் ஓர் அறம் சார்ந்த துறவி இருந்தார். அவர் தன்னை வேத கல்விக்கு அர்ப்பணித்துக் கொண்டு, துறவை செல்வமாகக் கொண்டு அந்தணர்களில் வெகு மேன்மையானவராக இருந்தார். அந்த அந்தணர்களில் சிறந்தவர் {கௌசிகர்} அனைத்து வேதங்களையும், அங்கங்களையும், உபநிஷத்துகளையும் கற்றறிந்தார். ஒரு நாள் அவர் {கௌசிகர்} ஒரு மரத்தின் அடியில் நின்று கொண்டு வேதம் உரைத்துக் கொண்டிருந்தபோது, அந்த மரத்தின் மேலே ஒரு பெண் கொக்கு இருந்தது. அந்நேரத்தில் அந்தப் பெண் கொக்கு அந்த அந்தணன் மீது எச்சமிட்டது. கொக்கைக் கண்ட அந்த அந்தணர் மிகவும் கோபம் கொண்டு அதற்குக் காயமேற்படுத்த எண்ணி, தனது கோபப்பார்வையை அந்தக் கொக்கின் மீது செலுத்தி, மனதால் தீங்கை நினைத்தார். அந்தக் கொக்கு உடனே தரையில் விழுந்தது.
அப்படி அந்தக் கொக்கு மரத்தில் இருந்து விழுந்து, இறந்து போய் உணர்வற்றுக் கிடப்பதைக் கண்ட அந்த அந்தணர் {கௌசிகர்}, மனதால் இரக்கம் கொண்டார். பிறகு இறந்து போன கொக்கைக் கண்ட அந்த மறுபிறப்பாளர் {பிராமணர்}, "ஐயோ, கோபத்தாலும் துர்க்குணத்தாலும் ஒரு தீச்செயலைச் செய்துவிட்டேனே" என்று சொல்லி அழுதார்"
கொக்கு - Crane |
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இந்த வார்த்தைகளைப் பலமுறை சொன்ன அந்தக் கற்ற அந்தணர் {கௌசிகர்}, பிறகு பிச்சை எடுப்பதற்காக ஒரு கிராமத்திற்குள் நுழைந்தார். ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, நற்குலத்தில் பிறந்தவர்களின் வீடுகளில் பிச்சையெடுக்கச் சென்ற அந்த அந்தணர் {கௌசிகர்}, முன்பே தான் அறிந்த ஒரு வீட்டினுள் நுழைந்தார். அவர் அந்த வீட்டினுள் நுழைந்ததுமே, "{பிச்சை} கொடு" என்று கேட்டார். அவருக்கு ஒரு பெண், "நில்லும்" என்ற வார்த்தையால் பதிலுரைத்தாள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்த இல்லத்தரசி, பிச்சையிடுவதற்கான பாத்திரத்தைக் கழுவி கொண்டிருந்த போது, பசியால் துன்பப்பட்ட அவளது கணவன் திடீரென வீட்டினுள் நுழைந்தான். அந்தக் கற்புடைய இல்லத்தரசி, தனது கணவனைக் கண்டதும், அந்தப் பிராமணனைக் கவனியாமல், தனது தலைவனுக்குக் கால்களையும் முகத்தையும் கழுவ நீர் கொடுத்து, இருக்கையும் கொடுத்தாள். பிறகு அந்தக் கருவிழி மங்கை, தனது தலைவனுக்கு முன்னால் சுவை நிறைந்த உணவையும், பானத்தையும் வைத்து, அவனது தேவைகளைக் கவனிக்க விரும்பி, அடக்கத்துடன் அவன் {கணவன்} அருகில் நின்றாள். ஓ! யுதிஷ்டிரா, கீழ்ப்படிதலுள்ள மனைவியான அவள் தினமும் தனது கணவன் உண்ட தட்டில் உள்ள மிச்சத்தை உண்டாள். தனது கணவனின் விருப்பங்களுக்கு எப்போதும் கீழ்ப்படியும் நடத்தை கொண்டவளான அவள், எப்போதும் தனது கணவனை மதித்து வந்தாள். அவளது இதயத்தின் அன்பு முழுவதும் தனது தலைவனை {கணவனை} நோக்கியே இருந்தது. புனிதமான நடத்தையாலும், இல்லறக் கடமைகளில் நிபுணத்துவத்தோடும், விருந்தினர்களைக் கவனித்துக் கொண்டும், தனது கணவனுக்கு நன்மை பயப்பதையும், ஏற்புடையதையுமே அவள் எப்போதும் செய்து வந்தாள். அவள் கவனம் நிறைந்த உணர்வுகளுடன் தேவர்களை வணங்கி, விருந்தினர்கள், பணியாட்கள், மாமியார் மற்றும் மாமனாரின் தேவைகளை உணர்ந்து நடந்து கொண்டாள்.
அந்த அழகிய விழிகளைக் கொண்ட மங்கை, தனது தலைவனின் {கணவனின்} சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அவள், பிச்சைக்காகக் காத்துக் கொண்டிருக்கும் அந்தணரைக் கண்டாள். அவரைக் கண்ட பிறகுதான், அவரைக் காத்திருக்கச் சொன்னது அவளுக்கு நினைவுக்கு வந்தது. இவை அனைத்தையும் நினைவுகூர்ந்த அவள், {தான் மறந்ததை நினைத்து} வெட்கமடைந்தாள். பிறகு ஓ! பாரதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, அந்தப் பெரும் புகழுடைய கற்புள்ள பெண், பிச்சைக்காகக் கொடுக்க வேண்டியதை எடுத்துக் கொண்டு வெளியே வந்து அந்த அந்தணருக்குக் {பிச்சையைக்} கொடுத்தாள். அவள் அந்த அந்தணர் முன்பு வந்த போது, அவர் {கௌசிகர்}, "ஓ! பெண்களில் சிறந்தவளே, ஓ! அருளப்பட்டவளே! நான் உனது நடத்தையைக் கண்டு வியக்கிறேன்! "நில்லும்" என்று சொல்லி என்னை நிறுத்திவிட்டு, இன்னும் என்னை அனுப்பாமல் இருக்கிறாய்!" என்றார் {கௌசிகர்}.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, அந்த அந்தணர் கோபத்தால் நிறைவதைக் கண்ட அந்தக் கற்புள்ள பெண் அவரைச் சமாதானம் படுத்த எண்ணி, "ஓ! கற்றவரே, என்னை மன்னிப்பதே உமக்குத் தகும். எனது கணவரே எனக்குத் தலைமையான தெய்வம். அவர் பசியோடும் களைப்போடும் வந்தார். அதனால் நான் அவருக்குச் சேவை செய்து அவருக்காகக் காத்திருந்தேன்" என்றாள். இதைக் கேட்ட அந்தணர், "உனக்கு, பிராமணர்கள் உயர்ந்த மதிப்பிற்குத் தகார். அவர்களுக்கு மேலாக உனது கணவனை உயர்த்துகிறாயா? இல்லற வாழ்வு வாழும் நீ, பிராமணர்களை அவமதிக்கிறாயா? அவர்களை {பிராமணர்களை} இந்திரனே கூட வணங்குவான். அப்படியிருக்கும்போது பூமியில் இருக்கும் மனிதர்களைக் குறித்து நான் என்ன சொல்வேன். கர்வம் கொண்ட பெண்ணே, பிராமணர்கள் நெருப்பைப் போன்றவர்கள் அவர்கள் முழு உலகத்தையும் எரித்து விடுவார்கள் என்பதை நீ அறியவில்லையா? அதை இதுவரை நீ கேள்விப்பட வில்லையா?" என்று கேட்டார்.
கொக்கு என்று நினைத்தாயோ கௌசிக முனிவா! |
ஆனால், ஓ! அந்தணரே, மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} கோபத்தில் பெரியவர்களாக இருந்தாலும், அதே அளவு மன்னிப்பதிலும் பெரியவர்களாக இருக்கிறார்கள். எனவே, ஓ! பாவமற்றவரே, இக்காரியத்தில் எனது குற்றத்திற்காக நீர் என்னை மன்னிப்பதே தகும். எனது கணவருக்குச் சேவை செய்வதாற்க்காக கிடைக்கும் தகுதியையே நான் உயர்வாகக் கருதுகிறேன். நான் எனது கணவரையே தேவர்களில் உயர்ந்தவராகக் கருதுகிறேன். ஓ! அந்தணர்களில் சிறந்தவரே, உயர்ந்த தெய்வமாக நான் கருதும் எனது கணவருக்குப் பணிவிடை செய்வதையே நான் பெரும் தகுதியாக நினைக்கிறேன். ஓ! மறுபிறப்பாளரே, ஒருத்தி கணவருக்குச் செய்யும் பணிவிடையால் கிடைக்கும் தகுதியைப் {பலனைப்} பாரும்! நீர் உமது கோபத்தால் ஒரு பெண் கொக்கை எரித்து வந்தீர் என்பதை அறிந்திருக்கிறேன். ஆனால், ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, ஒருவரால் பேணப்படும் கோபமே அவனது பெரிய எதிரியாகும்.
கோபத்தையும் ஆசையையும் கைவிட்டவனையே, தேவர்கள் அந்தணன் என்று அறிகிறார்கள். எப்போதும் உண்மையைப் பேசுபவர்கள், குருவைத் திருப்தி செய்பவர்கள், தான் காயப்பட்டாலும் பதிலுக்குப் பிறருக்குக் காயமேற்படுத்தாதவர்கள் ஆகியோரையே, தேவர்கள் அந்தணர்கள் என்று அறிகிறார்கள். தனது புலன்களை {உணர்வுகளை} முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவன், அறம்சார்ந்து சுத்தனாக இருப்பவன், வேத கல்விக்குத் தன்னை அர்ப்பணிப்பவன், கோபம் மற்றும் காமத்தை ஆளுமை செய்பவன் ஆகியோரையே தேவர்கள் அந்தணர்கள் என்று அறிகிறார்கள். அறநெறிகள் அறிந்தவர்கள், மனோ சக்தி கொண்டவர்கள், அறத்தால் அனைவருக்கும் பொதுவானவன் {Catholic in religion என்கிறார் கங்குலி}, அனைவரையும் தனக்குச் சமமாக நினைப்பவன் ஆகியோரையே தேவர்கள் அந்தணர்கள் என்று அறிகிறார்கள். தானே பயின்று, மற்றவர்களுக்குப் பயிற்றுவிப்பவன், தானே வேள்விகள் செய்பவன், தானே முன்வந்து அடுத்தவர்களின வேள்விகளைச் செய்து தருபவன், தன்னால் இயன்ற அளவு தானம் செய்பவன் ஆகியோரையே தேவர்கள் அந்தணர்கள் என்று அறிகிறார்கள். ஆன்ம சுதந்திரம் கொண்டு, பிரம்மச்சரிய நோன்பு பயின்று, கல்விக்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவன், உண்மையில், விழிப்பான வேத கல்விக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் மறுபிறப்பாளர்களில் காளையையே தேவர்கள் அந்தணன் என்று அறிகிறார்கள்.
எதுவெல்லாம் அந்தணர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமோ அவற்றை இவற்றுக்கு முன்பாக எப்போதும் சொல்ல வேண்டும். உண்மையில் இன்பம் கொள்கிறவர்களின் இதயம் பொய்மையில் இன்பத்தைக் காணாது. ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, வேத கல்வி, ஆன்ம அமைதி, எளிய நடத்தை, புலன்களை ஒடுக்குதல் ஆகியன அந்தணர்களின் நித்திய கடமைகளாகும். அறமும் அறநெறிகளும் அறிந்தவர்கள், உண்மையும் நேர்மையும் உயர்ந்த அறங்கள் என்று சொல்கின்றனர். நித்தியமான அறம் புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமானது. ஆனால், அஃது எதுவாக இருந்தாலும், அஃது உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. பழங்காலத்தவர்கள், அறம் எனப்பட்டது சுருதியை நம்பி இருக்கிறது என்று தீர்மானித்திருக்கின்றனர். ஆனால், ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே {கௌசிகரே}, சுருதியில் வெளிப்படுத்தப்பட்டுள்ள அறம் பலவகைப்பட்டதாகத் தோன்றுகிறது. எனவே, புரிந்து கொள்வதற்கு அது மிகவும் நுட்பமானது. ஓ! புனிதமானவரே {கௌசிகரே} நீர் அறம் மற்றும் சுத்தம் ஆகியவற்றை அறிந்தவர். வேத கல்விக்கு உம்மை அர்ப்பணித்திருப்பவர். எனினும், ஓ! புனிதமானவரே {கௌசிகரே}, உண்மையில் அறத்தை நீர் அறியவில்லை என்றே நான் நினைக்கிறேன். ஓ! மறுபிறப்பாளரே {கௌசிகரே}, நீர் உண்மையில் உயர்ந்த அறம் எவற்றால் ஆனது என்பதை அறியவில்லையெனில், மிதிலை நகரத்திற்குச் சென்று அறம் சார்ந்த வேடனிடம் {தர்மவயாதனிடம்} விசாரியும். அங்கே மிதிலையில் பெற்றோருக்கு சேவை செய்வதற்குத் தன்னை அர்ப்பணித்து உண்மையுள்ளவனாக, புலன்களை முழுக் கட்டுக்குள் வைத்திருப்பவனாக ஒரு வேடன் இருக்கிறான். அறம் சம்பந்தமான சொற்பொழிவை அவன் உனக்காக ஆற்றுவான். ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, நீர் அருளப்பட்டிரும். நீர் விரும்பினால் அங்கே செல்லும். ஓ! களங்கமற்றவரே {கௌசிகரே}, நான் சொன்னது உமக்கு உகந்ததாக இல்லையென்றாலும், நீர் என்னை மன்னிப்பதே உமக்குத் தகும். ஏனென்றால், அறம் கொள்ள விரும்புபவர்களால் ஒரு பெண்ணெக்குத் தீங்கிழைக்க இயலாது!" என்றாள்.
கற்புள்ள பெண்ணின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தணர் {கௌசிகர்}, "நான் உன்னிடம் திருப்தி அடைந்தேன். நீ அருளப்பட்டிரு; ஓ! அழகானவளே, எனது கோபம் தணிந்தது. உன்னால் சொல்லப்பட்ட கண்டனம் {நீ செய்த கண்டிப்பு}, எனக்கு உயர்ந்த பலனையே தரும். நீ அருளப்பட்டிரு, ஓ! அழகானவளே, நான் இப்போது சென்று, என் நன்மைக்குகந்ததைச் சாதிக்கப் போகிறேன்" என்றார் {கௌசிகர்}".
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அவளால் விடை கொடுக்கப்பட்ட மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரான கௌசிகர், அவ்வீட்டை விட்டு வந்து, தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டு, தனது வசிப்பிடத்திற்குத் திரும்பினார்".
கொக்கை கொங்கணவர் என்ற சித்தர் எரித்தார், என்று சித்தர் இலக்கியம் சொல்கிறது.
"கொக்கல்ல கொங்கணவா எரிவதற்கு" என்று பத்தினி சொன்னதாக அவ்விலக்கியம் சொல்லும்
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.