The duty of a woman is difficult! | Vana Parva - Section 204 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
பெண்களின் கடமைகள் குறித்தும், க்ஷத்திரியர்களின் கடமை குறித்தும் யுதிஷ்டிரன் கேட்க, மார்க்கண்டேயர் அவனுக்கு விளக்கம் அளிப்பது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, மன்னன் யுதிஷ்டிரன், அறநெறி சம்பந்தமான கடினமான கேள்வியைச் சிறப்புமிக்க மார்க்கண்டேயரிடம் கேட்டான். அவன் {யுதிஷ்டிரன் மார்க்கண்டேயரிடம்}, "ஓ! புனிதமானவரே {மார்க்கண்டேயரே}, உயர்வானதும் அற்புதம் வாய்ந்ததுமான பெண்களின் அறம் குறித்து நான் கேட்க விரும்புகிறேன். ஓ! அந்தணரே {மார்க்கண்டேயரே}, நான் உம்மிடம் இருந்து அறநெறி சம்பந்தமான நுட்பமான உண்மைகளின் சொற்பொழிவைக் கேட்க விரும்புகிறேன். ஓ! மறுபிறப்பாள முனிவரே {பிராமண முனிவரே, மார்க்கண்டேயரே}, ஓ! மனிதர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே} சூரியன், சந்திரன், காற்று, பூமி, நெருப்பு, தந்தை, தாய், குரு ஆகியவர்களும், தேவர்களால் விதிக்கப்பட்ட சில பொருட்களும் {சிலரும்}, தெய்வமே உருவம் கொண்டு வந்தது போல நமக்குத் தெரிகின்றனர். நமது மதிப்பிற்குரிய இவர்கள் அனைவரும் நமது சிறப்பான கவனத்திற்கு தகுதிவாய்ந்தவர்களே. ஒரே தலைவனை வணங்கும் {அன்பொழுகும்} பெண்களும் அப்படியே {கவனத்திற்குச் சிறந்த தகுதிவாய்ந்தவர்களே}. கற்புள்ள மனைவியர், கணவர்களுக்கு வழங்கும் வழிபாடு, பெறும் சிரமம் கொண்டது என நான் கருதுகிறேன்.
ஓ! அந்தணரே {மார்க்கண்டேயரே}, நன்னடத்தைக் கொண்ட பெண்கள் காட்டும் அக்கறையும், அதன் தொடர்ச்சியாகத் தங்கள் தாய் தந்தையரைக் கவனிக்கும் நல்ல மகன்களின் நடத்தையும் மிகவும் கடினமான செயல்திறன் கொண்டவை என எனக்குத் தோன்றுகிறது. ஓ! அந்தணரே {மார்க்கண்டேயரே}, எப்போதும் உண்மை பேசி, முழுப் பத்து மாதங்கள் கருவுற்ற காலத்தைக் கழித்து, ஒரே தலைவனுக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் அனைத்துப் பெண்களின் காரியங்களும், எதையும் விட கடினமானவையே. ஓ! போற்றுதலுக்குரியவரே, ஓ! அந்தணர்களில் காளையே {மார்க்கண்டேயரே} பெரும் சிரமத்திற்குள்ளாகி, பெரும் வலியை உணரும் {அனுபவிக்கும்} பெண்கள், தங்கள் வாரிசுகளை ஈன்றெடுத்து பாசத்துடன் வளர்க்கிறார்கள். எப்போதும் தீச்செயல்களில் ஈடுபட்டு, அதனால் பொதுவெறுப்புக்கு உள்ளானவர்களாக {அப்பெண்கள்} இருந்தாலும், மிகவும் கடினம் என நான் கருதும் அவர்களது கடமைகளைச் சாதித்து வெற்றியடைகிறார்களே!
மேலும், ஓ! மறுபிறப்பாளரே {மார்க்கண்டேயரே}, க்ஷத்திரிய வகைக்கான {வர்ணத்துக்கான} கடமைகள் குறித்த உண்மைகளை எனக்குச் சொல்லும். ஓ இரு பிறப்பாளரே {மார்க்கண்டேயரே}, தங்கள் {க்ஷத்திரிய} வகைக்குரிய கடமைகளின் தன்மையால் கொடூரமானதைச் செய்யக் கடன்பட்ட அந்த உயர் ஆன்மா கொண்டவர்கள் {க்ஷத்திரியர்கள்}, அறத்தை {தர்மத்தை} அடைவது கடினமே! ஓ! புனிதமானவரே {மார்க்கண்டேயரே}, இக்கேள்விகள் அனைத்துக்கும் விடை பகர வல்லவராயிருக்கிறீர்; நான் இவை அனைத்தையும் குறித்த உமது சொற்பொழிவைக் கேட்க விரும்புகிறேன். ஓ! பிருகு குலத்தில் முதன்மையானவரே, அற்புத உறுதிகளை {நோன்புகளை} நோற்பவரே {மார்க்கண்டேயரே}, உமக்காக மரியாதையுடன் காத்திருந்து, இவையனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன்" என்றான் {யுதிஷ்டிரன்}.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, உனது கேள்வி எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், நான் உண்மையில் அவை அனைத்தையும் குறித்துச் சொற்பொழிவாற்றுவேன். எனவே, {அவற்றை} நான் உனக்குச் சொல்லும்போது, நீ கேள். சிலர் தாயை மேன்மையானவராகக் கருதுகிறார்கள், சிலர் தந்தையை அப்படிக் கருதுகிறார்கள். இருப்பினும், வாரிசைப் பெற்று வளர்த்தெடுக்கும் தாயின் செயல் அதிகக் கடினமானதே. தந்தையரும், ஆன்மத் தவங்களாலும், தெய்வ வழிபாடுகளாலும், குளிர் வெப்பத்தைத் தாங்கிக் கொள்வதாலும், மந்திரங்கள் உச்சரிப்பதாலும், வேறு வழிகளாலும் பிள்ளைகளைப் பெறவே விரும்புகின்றனர்.
இப்படிப்பட்ட வலிகளை உணர்ந்து {அனுபவித்து}, அடைவதற்கு அரிதான பிள்ளைகளை அடைந்த பிறகும், ஓ! வீரா {யுதிஷ்டிரா}, எப்போதும் தங்கள் மகன்களின் எதிர்காலம் குறித்தே {தாயும் தந்தையும்} கவலை கொள்கிறார்கள். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, தந்தை, தாய் ஆகிய இருவரும் தங்கள் மகன்கள் புகழுடனும், சாதனைகளுடனும், செழிப்புடனும், வாரிசுகளுடனும், நல்லொழுக்கத்துடனும் {அறத்துடனும்} இருப்பதைக் காணவே விரும்புகிறார்கள். தனது பெற்றோரின் {தாய் தந்தையரின்} எதிர்பார்ப்புகளை உணரும் மகன் அறம் சார்ந்தவனாவான். ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, தந்தையும் தாயும் எந்த மகனிடம் திருப்தி கொள்கின்றனரோ, அவன் {அந்த மகன்} நித்தியமான புகழையும், நித்தியமான அறத்தையும் {கீர்த்தியையும் தர்மத்தையும்} இங்கேயும், இதற்கு அடுத்த உலகத்திலும் {இம்மையிலும் மறுமையிலும்} அடைகிறான். பெண்களைப் பொறுத்தவரை, வேள்விகளாலோ, சிரார்த்தங்களாலோ, அல்லது உண்ணா நோன்புகளாலோ {விரதங்களாலோ} எந்தப் பலாபலனும் கிடையாது. தங்கள் கணவர்களுக்குச் சேவை செய்வதன் மூலமே அவர்கள் {பெண்கள்} சொர்க்கத்தை வெல்கிறார்கள். ஓ! மன்னா, ஓ! யுதிஷ்டிரா, இதை மட்டுமே நினைவில் கொண்டு, கற்புடைய பெண்டிரின் {பதிவிரதைகளின்} கடமைகளைக் கவனத்துடன் கேள்" என்றார் {மார்க்கண்டேயர்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.