Kausika went to the fowler! | Vana Parva - Section 206a | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
கற்புக்கரசியின் சொல் கேட்ட கௌசிகர், வேடனை {தர்மவியாதனைத்} தேடிச் செல்வது; அவ்வேடன் கௌசிகருக்கு அனைத்து அறங்களையும் சொல்வது…
கௌசிகரும் வேடனும் {தர்மவியாதரும்} |
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "தொடர்ந்து அந்தப் பெண்ணின் சொற்பொழிவை நினைத்துக் கொண்டிருந்த கௌசிகர் தன்னைத் தானே நிந்தித்துக் கொண்டு, குற்ற உணர்வு கொண்ட மனிதரைப் போல இருந்தார். அறநெறிகள் மற்றும் அறத்தின் நுட்பமான வழிகளைக் குறித்துத் தியானித்த அவர் {கௌசிகர்}, தனக்குள்ளேயே, "அந்த மங்கை சொன்னதை மரியாதையுடன் நான் ஏற்க வேண்டும். எனவே நான் மிதிலைக்குச் செல்ல வேண்டும். நிச்சயம் அந்நகரத்தில் {மிதிலையில்} ஆன்மாவை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனும், அறம் மற்றும் அறநெறிகளின் மர்மங்களை அறிந்தவனுமான வேடன் இருப்பான். இந்த நாளிலேயே நான் துறவை செலவமாகக்கொண்ட அவனிடம் {வேடனிடம்} அறம் குறித்து விசாரிக்கச் செல்ல வேண்டும்" என்று சொன்னார். பெண் கொக்கின் மரணத்தை அறிந்த அவளது {கற்புக்கரசியின்} ஞானத்தைக் கொண்டும், அவள் சொன்ன இனிமையான அற்புதமான சொற்களைக் கொண்டும், அவருக்கு {கௌசிகருக்கு}, அவள் மேல் இருந்த நம்பிக்கை உறுதியானது. இப்படிச் சிந்தித்த கௌசிகர் அவள் சொன்ன அனைத்தையும் மரியாதையுடன் நினைத்துப் பார்த்து ஆவல் நிறைந்து மிதிலைக்குப் பயணப்பட்டார்.
பல காடுகளையும், கிராமங்களையும், நகரங்களையும் கடந்து சென்று கடைசியாக {மன்னன்} ஜனகனால் ஆளப்பட்ட மிதிலையை அடைந்தார் {கௌசிகர்}. பல்வேறு நம்பிக்கைகள் {மதங்களுக்காகக் கூட இருக்கலாம்} சம்பந்தமான கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட அந்நகரத்தைக் கண்டார். வேள்விகள் மற்றும் விழாக்களின் சத்தங்கள் நிறைந்த அந்த அழகான நகரம் {மிதிலை} அற்புதமான வாயில்களுடன் இருப்பதை அவர் கண்டார். அது {அந்நகரம் மிதிலை} அரண்மனை போன்ற வசிப்பிடங்களால் நிறைந்து, அனைத்து பக்கங்களிலும் சுவர்களால் பாதுகாக்கப்பட்டிருந்தது; கர்வப்படுவதற்க் கென்று அற்புதமான பல கட்டடங்களை அந்நகர் {மிதிலை} கொண்டிருந்தது. காண்பதற்கினிய அந்நகரத்தில் {மிதிலையில்} எண்ணிலடங்கா தேர்களும் இருந்தன. அதன் தெருக்களும் சாலைகளும் நிறைய இருந்தன.. அவை சரியாகப் போடப்பட்டிருந்தன. பலவற்றில் வழிநெடுக கடைகளாக இருந்தன. அது குதிரைகள், ரதங்கள், யானைகள், போர்வீரர்கள் என நிறைந்திருந்தது. அந்நகரத்தின் குடிமக்கள் ஆரோக்கியமானவர்களாகவும், மகிழ்ச்சிகரமானவர்களாகவும் எப்போதும் ஏதாவதொரு விழாவில் ஈடுபட்டுக் கொண்டும் இருந்தனர். அந்த நகரத்தில் நுழைந்ததும், அந்த அந்தணர் {கௌசிகர்} பலவற்றைக் கண்டார்.
அங்கே {மிதிலையில்}, அந்த அந்தணர் {கௌசிகர்}, அறம்சார்ந்த வேடனைக் {தர்மவியாதனைக்} குறித்து விசாரித்தார். சில இருபிறப்பாள மனிதர்கள் அவரைக் குறித்துச் சொல்லினர். அந்த இருபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} சொன்ன இடத்திற்குச் சென்ற அந்த அந்தணர் {கௌசிகர்}, அந்த வேடன் கசாப்புக்கடை முற்றத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்தத் தவசியான வேடன் அப்போது மான் இறைச்சியையும், எருமை இறைச்சியையும் விற்றுக் கொண்டிருந்தான். {இறைச்சியை} விலைக்கு வாங்குவோர், வேடனைச் சுற்றி பெரிய படையாகக் கூடியிருந்ததால், கௌசிகர் சற்றுத் தொலைவில் நின்றார். அந்த அந்தணர் தன்னைக் காணவே வந்திருக்கிறார் என்று அறிந்து கொண்ட வேடன், திடீரெனத் தனது ஆசனத்தில் இருந்து எழுந்து, அந்த அந்தணர் {கௌசிகர்} இருந்த அந்தக் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து அவரை {கௌசிகரை} அணுகினான். வேடன் {தர்மவியாதன்} அவரிடம் {கௌசிகரிடம்}, "ஓ! புனிதமானவரே! நான் உம்மை வணங்குகிறேன். ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {கௌசிகரே} உமக்கு நல்வரவு. நீர் அருளப்பட்டிரும். நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைக் கட்டளையிடும். "மிதிலைக்குச் செல்லும்" என்ற கற்புள்ள பெண்ணின் வார்த்தைகளை நான் அறிவேன். நீர் என்ன காரியத்திற்காக இங்கு வந்திருக்கிறீர் என்பதையும் நான் அறிவேன்" என்றான். வேடனின் {தர்மவியாதனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த அந்தணர் {கௌசிகர்} ஆச்சரியத்தில் மூழ்கினார். அவர் {கௌசிகர்}, தனக்குள்ளேயே, "உண்மையில் இது நான் காணும் இரண்டாவது அதிசயமாகும்!" என்று நினைத்தார். பிறகு அந்த வேடன் அந்த அந்தணரிடம் {கௌசிகரிடம்}, "ஓ! பாவமற்றவரே {கௌசிகரே} உமக்குத் தகாத இடத்தில் நீர் இப்போது நின்று கொண்டிருக்கிறீர். ஓ! புனிதமானவரே, நீர் விரும்பினால், நாம் எனது இல்லத்திற்குச் செல்லலாம்" என்றான் {வேடன் தர்மவியாதன்}.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அப்படியே ஆகட்டும்" என்று அந்த அந்தணர் மகிழ்ச்சியுடன் அவனிடம் சொன்னார். அதன்பேரில் அந்த வேடன், தனக்கு முன்னால் அந்த அந்தணரை நடக்க விட்டு தனது இல்லத்துக்குச் சென்றான். காண்பதற்கினிய இல்லத்தில் நுழைந்த அந்த வேடன், தனது விருந்தாளிக்கு {கௌசிகருக்கு} ஆசனத்தைக் கொடுத்து மரியாதையுடன் நடத்தினான். பிறகு அவன் {தர்மவியாதன்} கால்களையும் முகத்தையும் கழுவி கொள்ள நீரும் கொடுத்தான். இவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்ட அந்த அந்தணர்களில் சிறந்தவர் {கௌசிகர்}, வசதியாக அமர்ந்தார். பிறகு அவர் {கௌசிகர்}, அந்த வேடனிடம் {தர்மவியாதனிடம்}, "உமது தொழில் உமக்குப் பொருத்தமானது அல்ல எனத் தெரிகிறது. ஓ! வேடா, இத்தகு கொடுந்தொழிலை நீ செய்ய நேர்வதைக் கண்டு நான் ஆழமாக வருந்துகிறேன்" என்றார். அந்தணரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட வேடன், "இது எனது குலத்தொழில். நான் இதை எனது பாட்டன்கள் மற்றும் முப்பாட்டன்களிடம் இருந்து மரபுரிமையாகச் செய்து வருகிறேன். ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே கௌசிகரே}, பிறப்பால் ஏற்பட்ட எனது கடமைகள் குறித்து எனக்காக நீர் வருந்தாதீர். படைப்பாளனால் முன்பே எனக்காக விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதற்காக, நான் எனக்கு மேன்மையானவர்களுக்கும், முதியவர்களுக்கும் கவனமாகச் சேவை செய்கிறேன். ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, நான் எப்போதும் உண்மையே பேசுகிறேன், பிறரை எப்போதும் பகைப்பதில்லை; எனது சக்திக்குத்தக்க சிறந்த வகையில் தானம் செய்கிறேன். தேவர்கள், விருந்தினர்கள், என்னை நம்பியிருப்பவர்கள் ஆகியோருக்குச் சேவை செய்து போக மீதம் வருவதிலேயே {மீதம் வருவதை உண்டே} நான் வாழ்கிறேன்.
நான் எதைக் குறித்தும் சிறுமையாகவோ பெருமையாகவோ பேசுவதில்லை; எதையும் நிந்திப்பதில்லை. ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, முந்தைய பிறவியின் செயல்கள், அவற்றைச் செய்தவனைத் தொடர்கின்றன. இவ்வுலகத்தில் வேளாண்மை {விவசாயம்}, {ஆடு, மாடு போன்ற} கால்நடை வளர்ப்பு, வணிகம் ஆகிய மூன்று முதன்மைத் {முக்கிய} தொழில்கள் இருக்கின்றன. மறு உலகத்தைப் பொறுத்தவரை, மூன்று வேதங்கள், ஞானம், அறநெறி அறிவியல் ஆகியன பயனளிக்கக்கூடியவை. (மூன்று வகையினருக்கும் {வர்ணத்தாருக்கு}} சேவை செய்வது சூத்திரர்களுக்கு விதிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது. வேளாண்மை வைசியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. போர்த்தொழில் க்ஷத்திரியர்களுக்கும், பிரம்மச்சரிய நோன்பு பயில்தல், துறவு, மந்திரங்கள் உச்சரித்தல், சத்தியம் ஆகியன பிராமணர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன. சரியான கடமைகளைச் செய்யும் குடிமக்களை, ஒரு மன்னன் அறம் சார்ந்து ஆள வேண்டும். தங்கள் வகைக்கான கடமைகளில் இருந்து விழுந்தவர்களைச் சரியான பாதையில் அவன் {மன்னன்} செலுத்த வேண்டும்.
தங்கள் குடிமக்களுக்குத் தலைவர்களாக இருப்பதால் மன்னர் அஞ்சத்தக்கவர்களாக இருக்கிறார்கள். மான்களைக் கணைகளால் அடக்குவதைப் போல, தங்கள் கடமைகளில் இருந்து விழுந்த குடிமக்களை அவர்கள் {மன்னர்கள்} அடக்க வேண்டும். ஓ! மறுபிறப்பாள முனிவரே {கௌசிகரே}, பிறப்பால் ஏற்பட்ட கடமைகளில் தவறும் ஒரு குடிமகன் கூட ஜனகனின் இந்த நாட்டில் கிடையாது. ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, நால்வகை மக்களும் தங்களுக்குரிய கடமைகளை உறுதியுடன் பற்றுகிறார்கள். தீயவர்களை மன்னன் ஜனகன் தண்டிக்கிறான். அவன் தனது சொந்த மகனாகவே இருப்பினும் அவனைத் தண்டிக்கிறான். ஆனால், அறம்சார்ந்தவர்களுக்கு அவன் {ஜனகன்} தீங்கிழைப்பதில்லை. நல்ல திறமையான ஒற்றர்களை நியமித்து, நடுநிலை தவறாத பார்வையுடன் அனைத்தையும் கவனிக்கிறான். ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {கௌசிகரே} செழிப்பு, அரசு, தண்டிக்கும் திறன் ஆகியவை க்ஷத்திரியர்களுக்கு உரியது. தங்களுக்குரிய கடமைகளைப் பயில்வதன் மூலம் மன்னர்கள் உயர்ந்த செழிப்பை விரும்புகிறார்கள். ஒரு மன்னனே நால் வகை மனிதர்களுக்கும் பாதுகாவலனாக இருக்கிறான்.
ஓ! அந்தணரே {கௌசிகரே}, என்னைப் பொறுத்த வரை நான் எப்போதும் பன்றி மற்றும் எருமை இறைச்சியை விற்கிறேன். அவ்விலங்கள் என்னால் கொல்லப்படுவதில்லை. ஓ! மறுபிறப்பாள முனிவரே {கௌசிகரே}, நான் மற்றவர்களால் கொல்லப்படும் விலங்குகளின் இறைச்சியையே விற்கிறேன். எப்போதுமே நான் ஊண் {இறைச்சி} உண்பதில்லை; அவளது {ருது} காலத்தைத் தவிர மற்ற காலங்களில் நான் எனது மனைவியிடம் செல்வதில்லை; ஓ! மறுபிறப்பாளரே {கௌசிகரே}, நான் பகலில் {உண்ணா} விரதமிருந்து, இரவில் உண்கிறேன். ஒருவனின் வகைக்கான நடத்தை தீயவையாக இருந்தாலும், அவன் நன்னடத்தைக் கொண்டவனாக இருக்கலாம். அப்படியே ஒரு மனிதன் தொழிலால் விலங்குகளைக் கொல்பவனாக இருப்பினும், அவன் அறம் சார்ந்தவன் ஆகிறான். மன்னர்களில் பாவச்செயல்களின் தொடர்ச்சியாகவே அறம் பெருமளவு குறைந்து, பாவம் வளர்கிறது. இவை அனைத்தும் ஒரு நாட்டில் உள்ள குடிமக்களிடம் ஏற்பட்டால், அது நாட்டை அழிக்கிறது. ஓ! அந்தணரே {கௌசிகரே}, அப்போதுதான், காணக் கொடூரமானவர்கள், குள்ளர்கள், கூனர்கள், கனத்த தலை கொண்ட மனிதர்கள், குருடர்கள், செவிடர்கள், கோணல் கண் கொண்டவர்கள், இனப்பெருக்க சக்தியை இழந்தவர்கள் {நபும்சகர்கள்} ஆகியோர் பிறக்க ஆரம்பிக்கின்றனர். மன்னர்களின் பாவங்களினாலேயே எண்ணிலடங்கா துயர்களைக் குடிமக்கள் சந்திக்கின்றனர். ஆனால், எங்கள் மன்னன் ஜனகன், அனைத்துக் குடிமக்கள் மீதும் அறம்சார்ந்த பார்வையைச் செலுத்துகிறான். உரிய கடமைகளைத் தானே செய்பவர்களை அவன் எப்போதும் அன்புடன் நடத்துகிறான்.
என்னைப் பொறுத்தவரை, நான் எப்போதும் நற்செயல்கள் புரிகிறேன். என்னை நிந்திப்பவர்களையும் நான் நிந்திப்பதில்லை. தங்களுக்கு உரிய கடமைகளைத் தாங்களே செய்யும் மன்னர்கள், நன்மையான நேர்மையான செயல்களைப் பயில்வதில் எப்போதும் ஈடுபடுபவர்கள், தங்கள் ஆன்மாவை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்கள், எப்போதும் தயாராகச் சுறுசுறுப்பாக இருப்பவர்கள் ஆகியோர் எப்போதும் தங்கள் சக்தியைத் தாங்குவதற்கு எதையும் நம்பியிருப்பதில்லை. தனது சக்திக்குத் தக்க சிறந்த வகையில் அன்னதானம் செய்வது, வெப்பம் மற்றும் குளிரில் உறுதியுடன் இருப்பது, அறத்தில் உறுதியோடு இருப்பது, அனைத்து உயிர்களிடமும் அன்புடன் இருப்பது ஆகிய இந்தக் குணங்கள் அத்தனையும், இவ்வுலகத்தில் இருந்து தனித்து இருப்பவனைத் தவிர வேறு எவரிடமும் காண முடியாது. ஒருவன் தனது பேச்சில் பொய்மையைத் தவிர்த்து, நன்மையைத் தயங்காமல் செய்ய வேண்டும். ஆசையாலோ, கோபத்தாலோ, துன்பத்தாலோ ஒருவன் அறத்தைக் கைவிடக்கூடாது. நல்ல காலத்தில் அளவுக்கதிகமான இன்பத்தையும், கெட்ட காலத்தில் அளவுக்கதிகமான துன்பத்தையும் ஒருவன் அடையக்கூடாது. வறுமை வரும்போது ஒருவன் தாழவோ, அல்லது அறத்தின் பாதையைக் கைவிடவோ செய்யக்கூடாது. ஒருவன் எப்போதாவது தவறு செய்தாலும், அதே போன்ற தவறை மீண்டுமொருமுறை அவன் செய்யக்கூடாது. தான் நன்மை என்று கருதும் காரியத்திலேயே ஒருவன் தனது ஆன்மாவை ஊக்கப்படுத்த வேண்டும்"
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.