The knowledge of the fowler | Vana Parva - Section 206b | Mahabharata in Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
அறம் சார்ந்தவர்களின் நடத்தை குறித்து வேடன் கௌசிகருக்குச் சொன்னது...
கௌசிகரும் வேடனும் |
வேடன் {தர்மவியாதன் கௌசிகரிடம்}, "தனக்குச் செய்யப்பட்ட தீங்குக்குப் பதிலாக மற்றுமொரு தீங்கையே செய்யாமல், ஒருவன், தனக்குத் தீங்கிழைத்தவர்களிடம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். பாவகரமான காரியத்தைச் செய்ய விரும்பும் இழிந்த மனிதன் தன்னைத் தானே கொல்கிறான். பாவம் செய்து, "அறம் என்பதே இல்லை" என்று சொல்லி, நல்லவர்களையும், சுத்தர்களையும் கேலி செய்து, தீயப் பாவியைப் போல நடந்து கொள்பவன், சந்தேகமற அழிவையே சந்திக்கிறான். காற்றடைத்த தோல் பையைப் {துருத்தியைப்} போல ஒரு பாவி வீங்குகிறான் {பருக்கிறான்}. கர்வமும் மூடத்தனமும் நிறைந்த இந்தப் பாவிகளின் எண்ணங்கள் பலவீனமானவையும் லாபமற்றதாகவும் இருக்கும். இதயம், உள்ளுறைந்திருக்கும் ஆன்மா {உள்ளுணர்வு} ஆகியவையே, பகலில் சூரியன் உருவங்களைக் கண்டுபிடிப்பதைப் போல முட்டாளைக் கண்டுபிடிப்பவை.
கர்வத்தினால் ஒரு மூடன் இவ்வுலகில் எப்போதும் பிரகாசிப்பதில்லை. கற்றவன், அழகற்றவனாக இருப்பினும், பிறரைப் பழித்துப் பேசுவது, தன்னைப் புகழ்ந்து பேசுவது ஆகியவற்றில் இருந்து விலகி இருப்பதால் காந்தியுடன் {பிரகாசத்துடன்} இருப்பான். தங்கள் நற்பெயரைப் பறைசாற்றும் நடவடிக்கைகளைக் கொண்ட மனிதர்கள், குணம் நிறைந்தவர்களாக இருப்பினும், அவர்கள் இவ்வுலகில் பிரகாசித்ததற்கான ஓர் உதாரணமும் கிடைக்காது. தான் செய்த தீங்கிற்காக ஒருவன் வருந்தவானேயானால், அந்த வருத்தமே அவனது பாவத்தைக் கழுவிவிடும். ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, சாத்திரங்களால் சொல்லப்படும் சில பரிகாரங்களைச் செய்து பாவத்தில் இருந்து விடுபடுவதைப் போலவே, மீண்டும் அத்தீங்கைச் செய்வதில்லை என்று அவன் எடுக்கும் தீர்மானம் அவனை எதிர்காலப் பாவத்திலிருந்து காக்கும்.
ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே-கௌசிகரே}, இதுவும் அறம் சம்பந்தமாகக் காணப்படும் ஸ்ருதி என்று ஆகிறது. முன்பு அறம்சார்ந்து இருந்தவன், பாவமிழைத்தாலோ, அல்லது அதைத் தெரியாமல் செய்தாலோ, {அவன் கடைப்பிடித்த அறம்} அந்தப் பாவங்களை அழிக்கும். ஓ அந்தணரே {கௌசிகரே}, மனிதர்கள் அறியாமையில் செய்யும் பாவங்களை அறம் விரட்டியடிக்கும். ஒரு பாவத்தை இழைத்த மனிதன், அதற்கு மேலும் தன்னை மனிதன் என்று கருதுவதை நிறுத்த வேண்டும். எந்த மனிதனும் அவனது பாவங்களை மறைக்க முடியாது. ஒருவன் என்ன செய்கிறான் என்பதை அவனுக்குள் இருப்பவனும் {பரமாத்மாவும்}, தேவர்களும் காண்கின்றனர். பக்தி கொண்ட கறையில்லா மனிதன், தனது ஆடையில் இருக்கும் ஓட்டைகளை மறைப்பதைப் போல, நேர்மையானவர்களின் குறைகளை மறைக்க வேண்டும். அப்படிப்பட்டவன் நிச்சயம் முக்தியை அடைவான். பாவம் செய்த ஒரு மனிதன், அதிலிருந்து மீள நினைத்தால், சந்தேகமற அவனது பாவங்கள் எல்லாம் அழிந்து போகும். அவன் மேகங்களில் இருந்து விடுபட்டு, உதிக்கும் சந்திரனைப் போலப் பிரகாசமாகவ்வும் சுத்தமானவனாகவும் இருப்பான். இருளை விலக்கும் உதயசூரியன் போல, தனது பாவங்களில் இருந்து மீள நினைக்கும் மனிதன் அவற்றைக் கழுவிக் கொள்கிறான். ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, மோகமே பாவங்களுக்கு அடிப்படையாக இருக்கிறது. அறியாமையில் இருக்கும் மனிதர்கள் மோகத்தின் பயனால் மட்டுமே பாவமிழைக்கின்றனர். புற்களால் மறைக்கப்பட்டுள்ள கிணறுகளின் வாய் போல, பொதுவாக, பாவிகள் தங்களை அறம் சார்ந்தவர்களாக வெளியில் காட்டிக் கொள்வார்கள். வெளிப்பார்வைக்கு அவர்கள் தன்னடக்கம் கொண்டவர்களாகவும், புனிதமானவர்களாகவும் தங்களைக் காட்டிக் கொண்டு தங்கள் வாயினால் அறம் சார்ந்த பேச்சுகளைத் அர்த்தமில்லாமல் உதிர்க்கிறார்கள். உண்மையில் அவர்களிடம் அனைத்துமே காணப்படும், ஆனால் உண்மையான அறம் மட்டும் காணப்படாது.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! மனிதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, வேடனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பெரும் ஞானம் கொண்ட அந்தணர் {கௌசிகர்}, மீண்டும் அந்த வேடனிடம் {தர்மவியாதனிடம்}, "அறம்சார்ந்த நடத்தையை நான் எப்படி அறிவது? ஓ! அறம்சார்ந்தவர்களில் முதன்மையானவனே, நீ அருளப்பட்டிரு. நான் இதை உன்னிடம் இருந்து கேட்க விரும்புகிறேன். எனவே, ஓ மேன்மையான ஆன்மா கொண்டவனே, அது குறித்த உண்மைகள் அனைத்தும் எனக்குச் சொல்" என்று கேட்டார். இந்த வார்த்தைகளைக் கேட்ட வேடன், "ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, வேள்விகள், தானம், துறவு, வேதங்கள், சத்தியம் ஆகிய ஐந்தும் புனிதமானவை, இவை அறம் சார்ந்தவர்கள் என்று அழைக்கப்படுபவர்களிடம் என்றும் இருக்கும். காமம், கோபம், பேராசை, குறுக்குபுத்தி ஆகியவற்றை வென்று, அறம் சார்ந்த ஒன்று என்பதாலேயே அந்த அறத்தில் இன்புறுபவர்களே உண்மையில் அறம்சார்ந்தவர்களின் புகழ்ச்சிக்குத் தகுதியானவர்களும், அறம்சார்ந்தவர்களும் ஆவர். வேள்விகளுக்கும், வேத கல்விக்கும் தங்களை அர்ப்பணிக்கும் இம்மனிதர்கள் சுதந்திரமான நடத்தையற்றவர்களாவர். அவர்கள் நேர்மையானவர்கள் மற்றும் நல்லவர்கள் ஆகியோரின் நடத்தைகளை மட்டுமே பின்பற்றுகிறார்கள். இதுவே {நேர்மையானவர்கள் மற்றும் நல்லவர்களைப் பின்பற்றுவதே} உண்மையில் அறம்சார்ந்தவர்களின் இரண்டாவது பண்பு ஆகும்.
பெரியவர்களுக்காகக் காத்திருத்தல், சத்தியம், கோபத்தில் இருந்து விடுதலை, தானம் ஆகிய நான்கும், ஓ! அந்தணரே {கௌசிகரே}, அறம்சார்ந்தவர்களின் நடத்தையில் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதபடி இணைந்திருப்பதாகும். நற்பெயர் பெறுவதற்காக ஒரு மனிதன், அறம் சார்ந்த நடத்தையில் தனது இதயத்தை நிலைநிறுத்துகிறான். அப்படி அதை உறுதியாகப் பற்றுவது கடினமானதும் அடைவதற்கு அரிதுமாகும். ஆனால் மேற்சொன்ன நான்கு அறங்களையும் செய்தால் அதை {நற்பெயரை} அடையலாம். வேதங்களின் சாரம் சத்தியமாகும். சத்தியத்தின் சாரம் தன்னடக்கமாகும். தன்னடக்கத்தின் சாரம் உலக இன்பங்களைத் துறப்பதாகும். இவை அனைத்தையும் அறம்சார்ந்தவர்களின் நடத்தையில் காணலாம். மனிதர்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கையின் வடிவங்களைக் கேலி செய்யும் ஏமாற்றுகர முட்டாள்களைப் பின்பற்றுபவர்கள், அந்தப் பாவ வழியில் நடந்ததற்காக அழிவுக்குள் இழுத்துச் செல்லப்படுகின்றனர். எனினும், நோன்புகள் நோற்பதில் ஈடுபடும் அறம்சார்ந்தவர்களும், சுருதிகளுக்குத் தங்களை அர்ப்பணிப்பவர்களும், உலக இன்பங்களைத் தவிர்த்து அறத்தைப் பின்பற்றுபவர்களும் {நல்லொழுக்கத்துடன் இருப்பவர்களும்}, உண்மையில் அறத்தின் சுவடுகளில் நடந்து உண்மையான தர்மத்தைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். தங்கள் குருக்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர்களும், சாத்திரங்களின் உணர்வுகளைப் பொறுமையுடனும் கவனத்துடனும் சிந்தித்துப் பார்ப்பவர்களும் அறம்சார்ந்த நடத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஓ! அந்தணரே {கௌசிகரே}, இவையே உயர்ந்த நுண்ணறிவை அடையச் சரியாக வழிகாட்டுபவையாகும்.
நாத்திகர்கள், அறத்தின் வரம்புகளை மீறுபவர்கள், தீய ஆன்மாக்கள், பாவகர வாழ்வு வாழ்பவர்கள் ஆகியோரைக் கைவிட்டு, அறம்சார்ந்தவர்களை மதித்து ஞானம் அடைய முயற்சி செய்வீராக. காமம் மற்றும் மோகம் ஆகியவை, வாழ்வு என்ற நதியில் இருக்கும் சுறாக்கள் போன்றவை; ஐம்புலன்களே {அங்கு} நீராக இருக்கின்றன. நீர் பொறுமை என்ற படகைக் கொண்டு, திரளான உடல் இருப்பைத் (இவ்வுலகில் மறுபடியும் மறுபடியும் பிறத்தலைத்} தவிர்த்து, அந்த {பிறவி} நதியின் அடுத்தக் கரைக்கு கடந்து செல்வீராக. அறிவார்ந்த கொள்கை மற்றும் {நல்லதைப்} பிரித்தெடுத்தலைப் பயிலும் தலைமை அறமானது, படிப்படியாக {நம்மிடம்} சேர்க்கப்படும்போது, வெள்ளைத் துணியில் இருக்கும் சாயம் போல அழகாக இருக்கிறது. சத்தியம், எவருக்கும் தீங்கிழையாமை {அஹிம்சை}, ஆகியவை அனைத்து உயிர்களுக்கும் உயர்ந்த நன்மைகளைச் செய்யும் அறங்களாகும். இவ்விரண்டில் கடைசியானது {அஹிம்சை}, உண்மையை {சத்தியத்தை} அடிப்படையாகக் கொண்ட முக்கியமான அறமாகும். நமது உளவியல், உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்கும்போதே, சரியாக இயங்குகிறது. அறம்பயில்வதில், உண்மையே உயர்ந்த மதிப்புடையதாகும்.
நடத்தையில் சுத்தம் என்பது, நல்ல மனிதர்கள் அனைவரின் குணமாகும். புனிதமான வாழ்வுக்காக {மற்றவரிலிருந்து} வேறுபட்டிருப்பவர்கள், நல்லவர்களும் அறம்சார்ந்தவர்களும் ஆவர். அனைத்து உயிரினங்களும் தங்கள் தன்மைக்குகந்த உள்ளார்ந்த நடத்தை கொள்கைகளைப் பின்பற்றுகின்றன. தன்னடக்கம் இல்லாத பாவிகள் காமத்தையும், கோபத்தையும், பிற தீங்குகளையும் அடைகிறார்கள். அறச்செயல்கள் அனைத்தும் நீதியில் இருந்தே தோன்றுகின்றன என்பது தொன்றுதொட்டு வரும் விதியாகும். அநீதியான நடத்தைகள் அனைத்தும் பாவமே என்று புனிதமானவர்களால் சொல்லப்பட்டுள்ளது. கோபம், கர்வம், இறுமாப்பு, பகைமை ஆகியவற்றால் இயக்கப்படாமல், அமைதியாக, வெளிப்படையாக {நேர்முகமாக} இருப்பவர்கள் அறம்சார்ந்த நடத்தை கொண்டவர்கள். மூன்று வேதங்களில் சொல்லப்பட்டுள்ள சடங்குகளை ஊக்கமுடன் செய்பவர்களும், ஞானம் கொண்டவர்களும், சுத்தமான நல்லொழுக்கம் கொண்டவர்களும், சுயக்கட்டுப்பாட்டுடன் இருப்பவர்களும், பெரியவர்களைக் கவனிப்பவர்களும் அறம்சார்ந்த நடத்தை கொண்டவர்களாவார்கள். பெரும் சக்தி கொண்ட அத்தகைய மனிதர்களின் செயல்களையும், நடத்தைகளையும் {நாம்} அடைவது மிகக் கடினமாகும். தாங்கள் செய்யும் {நற்}செயல்களின் மூலமாகவே ஒருவன் சுத்திகரிக்கப்படுகிறான். அதன் தொடர்ச்சியாகப் பாவம் தானாக அழிகிறது. நன்னடத்தை எனும் அறம் அற்புதமானது, பழமையானது, மாற்றமுடியாதது, நித்தியமானது; இவ்வறத்தைப் புனிதமாக நோற்கும் ஞானிகள் சொர்க்கத்தை அடைகிறார்கள். தெய்வத்தின் இருப்பை நம்பும் மனிதர்கள், போலிப்பெருமைகளில் இருந்து விடுபட்டவர்கள், புனிதமான சாத்திரங்களை அறிந்தவர்கள், மறுபிறப்பாளரை (இரு பிறப்பாளரை = பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் ஆகியோரை} மதிப்பவர்கள் ஆகியோர் சொர்க்கத்தை அடைகிறார்கள்.
புனிதமான மனிதர்களில் வேதங்கள் கற்பிக்கும் உயர்ந்த அறம், தர்மசாத்திரங்கள் கற்பிக்கும் அறம், அறம்சார்ந்தவர்கள் {நல்லவர்கள்} நடத்தை {கற்பிக்கும் அறம்} என மூன்று வழிகளில் அறம் வேறுபட்டிருக்கிறது. ஞானம் அடைதல், புண்ணிய இடங்களுக்குப் புனிதப் பயணம், சத்தியம், பொறுமை, சுத்தம், வெளிப்படையான தன்மை {கபடமின்மை} ஆகியவை அறம் சார்ந்த நடத்தையைக் குறிக்கின்றன. அறம் சார்ந்த ,அனைத்து உயிர்களிடமும் எப்போதும் அன்புடனும், மறுபிறப்பாளர்களிடம் நன்றாகவும் நடந்து கொள்வார்கள். அவர்கள் எந்த உயிருக்கும் தீங்கை விளைவிக்கமாட்டார்கள் {அஹிம்சையை மேற்கொள்வார்கள்}, முரட்டுத்தனமாகப் {கொடுஞ்சொல்} எப்போதுமே பேசமாட்டார்கள். செய்யும் நல்ல மற்றும் தீய காரியங்கள் தரும் பலன்களின் விளைவுகளை நன்கு அறிந்த நல்ல மனிதர்கள், அறம் சார்ந்தவர்களால் பாராட்டப்படுகின்றனர். நீதிமானாக, நன்னடைத்துக் கொண்டவனாக, அறம் கொண்டவனாக, அனைத்து உயிருக்கும் நன்மை விரும்புபவனாக, அறத்தின் பாதையில் உறுதியாக இருப்பவனாக, சொர்க்கத்தை வென்றவனாக, தானம் செய்பவனாக, தன்னலமில்லாதவனாக, அப்பழுக்கற்ற குணம் கொண்டவனாக, துன்புறுபவர்களுக்கு உதவுபவனாக, கற்றவனாக, அனைவராலும் மதிக்கப்படுபவனாக, துறவை மேற்கொள்பவனாக, அனைத்து உயிர்களிடமும் அன்புள்ளவனாக இருப்பவர்களை அறம்சார்ந்தவர்கள் பாராட்டுகிறார்கள்.
தானம் செய்பவர்கள் இவ்வுலகிலும், (இதற்குப் பின் வரும்) அருள் உலகங்களிலும் செழிப்புடன் இருப்பார்கள். நல்ல மனிதர்களால் உதவிக்கு அழைக்கப்படும் அறம் சார்ந்த மனிதன், தனது மனைவி மற்றும் வேலையாட்களின் வசதிகளை இழந்தாலும் கூட, மிகுந்த சிரமப்பட்டாவது அவர்களுக்கு {உதவி கேட்டவர்களுக்கு} பிச்சையிட வேண்டும். தனது நன்மை, அறம் மற்றும் உலகத்தின் வழிகள் ஆகியவற்றில் ஒரு கண் வைத்திருக்கும் நல்ல மனிதர்கள், இவ்வழியிலேயே செயல்படுகின்றனர். எனவே அவர்களின் அறம், முடிவிலா காலத்தில் வளர்ந்து கொண்டே இருக்கிறது. நல்ல மனிதர்களிடம் இருக்கும் சத்தியம், அஹிம்சை, நன்னெறி, எவருக்கும் தீங்கிழையாமை, அகந்தையின்மை, அடக்கம், {உலகப்பற்று} விலக்கல், சுயக்கட்டுப்பாடு, ஆசையின்மை, ஞானம், பொறுமை, அனைத்துயிர்களிடத்திலும் அன்பு, தீயவை மற்றும் காமத்தில் இருந்து விடுபட்டிருக்கும் குணம் ஆகியவையே {இந்த} உலகத்திற்குச் சாட்சியாக இருக்கின்றன. ஒரு மனிதன் வேறு எவருக்கும் தவறு இழைக்கக்கூடாது, அவன் பிச்சையிட {தர்மகாரியங்களில் ஈடுபடவேண்டும்} வேண்டும், எப்போதும் உண்மையுடன் இருக்க வேண்டும் என்ற மூன்றும் சேர்ந்ததே, அறம் சார்ந்தவர்களின் சரியான வழியாக இருக்கிறது.
தீர்மானமான நம்பிக்கைகளும், அறம்சார்ந்த நடத்தையும், உயர்ந்த ஆன்மாவும், அனைவரிடமும் அன்பு கொண்ட, இரக்கமும் நிறைந்த நல்ல மனிதர்கள், இவ்வுலகில் மனநிறைவு கொண்டு அறத்தின் சரியான பாதையை அடைவார்கள். தீயவற்றிலிருந்து விடுதலை, பொறுமை, மன அமைதி, மன நிறைவு, இன்சொல், ஆசை மற்றும் கோபத்தைக் கைவிடுதல், அறம்சார்ந்த நடத்தை, புனிதமான சாத்திர விதிகளின் படியான கட்டுப்பாடான செயல்கள் ஆகியவையே அறம்சார்ந்தவர்களின் சரியான வழியாக இருக்கிறது. அறத்தில் நிலைத்திருப்பவர்கள் இந்த அறநடத்தை விதிகளைப் பின்பற்றுகிறார்கள். மனித நடத்தைகளுக்கு இடையில் பல்வேறு கட்டங்களில் வரும் வேற்றுமை அறிதல் மற்றும் ஞானம் அடைதல் ஆகியவற்றின் உச்சியை அடைந்தவர்கள், மிகவும் அறம் சார்ந்தவர்களாகவோ, நேர்மாறானவர்களாகவோ {அறமற்றவர்களாகவோ} இருந்து பெரும் ஆபத்துகளில் இருந்து தப்புவார்கள். ஓ! பெரும் அந்தணரே {கௌசிகரே}, இப்படியே அற நடத்தை குறித்து ஓர் அறிமுகத்துடன், எனது ஞானத்தின் படியும், நான் கேள்விப்பட்டதன் படியும், இவை அனைத்தையும் உமக்கு விவரித்திருக்கிறேன்" என்றான் வேடன் {தர்மவியாதன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.