Good men are not commended by good men | Vana Parva - Section 207 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
ஊண் உணவு குறித்தும், முற்பிறவி கர்மங்கள் குறித்தும், பிற உயிருக்குத் தீங்கு செய்யாமை குறித்தும் வேடன் கௌசிகருக்கு உரைத்தது...
மார்க்கண்டேயர் {{யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! யுதிஷ்டிரா, பக்திமானான வேடன் {தர்மவியாதன்} அந்த அந்தணரிடம் {கௌசிகரிடம்}, "எனது செயல்கள் அனைத்தும் சந்தேகமற கொடுமையானவையே. ஆனால், ஓ! அந்தணரே {கௌசிகரே}, விதி மிக வலிமையானது. மேலும், நமது பழைய செயல்களின் {முற்பிறப்பில் செய்த வினைகளின்} விளைவால் அதைத் தவிர்ப்பது கடினமாகும். அஃது, முந்தைய பிறவியில் இழைத்த பாவத்தால் எழும் கர்மம் சார்ந்த தீமையாகும் {தோஷமாகும்}. ஆனால், ஓ! அந்தணரே {கௌசிகரே}, நான் எப்போதும் தீமையை ஒழிப்பதில் ஊக்கமுடன் இருக்கிறேன். ஓர் உயிர் தெய்வத்தாலேயே கொல்லப்படுகிறது. அதைக் கொல்பவன், இரண்டாம் நிலை முகவராக மட்டுமே {கருவியாக மட்டுமே} செயல்படுகிறான். ஓ! நல்ல அந்தணரே {கௌசிகரே}, எங்கள் கர்மத்தின் காரணமாக நாங்கள் அத்தகு முகவர்களாக {கொல்லும் கருவியாக} மட்டுமே இருக்கிறோம். என்னால் கொல்லப்படும் விலங்குகளும், நான் விற்கும் அதன் இறைச்சியும் கர்ம பலனை அடைகின்றன. ஏனெனில், (அவற்றின் இறைச்சியை), தேவர்களும், விருந்தினர்களும், பணியாட்களும் சுவைமிகுந்த உணவை விருந்தாக உண்பதால், இறந்தவர்களின் ஆவி சாந்தமடைகிறது. மூலிகைகள், காய்கறிகள், மான்கள், பறவைகள், காட்டு விலங்குகள் ஆகியவை அனைத்து உயிர்களின் உணவாக இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.
ஓ! அந்தணரே {கௌசிகரே}, உசீனரன் மகனான பொறுமைமிக்க மன்னன் சிபி, தனது சொந்த சதையைத் {இறைச்சியைத்} தானமளித்து, அடைவதற்கு அரிதான சொர்க்கத்தை அடைந்தான். ஓ! அந்தணரே {கௌசிகரே}, பழங்காலத்தில், மன்னன் ரந்திதேவனின் சமையலறையில் {மடைப்பள்ளியில்} ஒவ்வொரு நாளும் இரண்டாயிரம் விலங்குகள் கொல்லப்பட்டு வந்தன; அதே போலத் தினமும் இரண்டாயிரம் {2000} மாடுகளும் கொல்லப்பட்டன; ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, மன்னன் ரந்திதேவன் அந்த இறைச்சியைக் {தானம்} கொடுத்து வந்ததால், அவன் நிகரற்ற புகழை அடைந்தான். நான்கு மாதச் சடங்கைச் {சாதுர்மாஸ்யம்} செய்வதற்குத் தினமும் விலங்குகள் பலி கொடுக்கப்பட வேண்டும். 'புனித நெருப்புக்கு விலங்கின் {இறைச்சி} உணவு பிடிக்கும்' என்ற மொழி {ஸ்ருதி} நம்மிடம் இருக்கிறது. வேள்விகளில் மறுபிறப்பாள அந்தணர்களால் விலங்குகள் வகைதொகையின்றிக் கொல்லப்படுகின்றன. மந்திரங்களால் பாவம் அழிக்கப்பட்ட அவ்விலங்குகள் சொர்க்கத்தை அடைகின்றன.
ஓ! அந்தணரே {கௌசிகரே}, பழங்காலத்தில், புனிதமான நெருப்புக்கு விலங்கு {இறைச்சி} உணவு பிடிக்காமல் போயிருந்தால், யாருக்கும் அது {இறைச்சி} உணவாகியிருக்க முடியாது. இந்த விலங்கு {இறைச்சி} உணவு சம்பந்தமாக முனிவர்களால் இவ்விதி விதிக்கப்பட்டுள்ளது. "முதலில் தேவர்களுக்கும், இறந்தவர்களின் ஆவிகளுக்கும் மரியாதையாகக் காணிக்கை செய்யப்பட்ட விலங்கு {இறைச்சி} உணவை உண்பவன், அத்தகு செயலால் {காணிக்கை செய்வதால்} அசுத்தமடையமாட்டான் {தோஷத்துக்கு உள்ளாக மாட்டான்}. பிரம்மச்சாரி ஒருவன், தனது மனைவியின் மாதவிடாய் காலத்தில் {Menstrual period} கூடிவிட்டால்கூட, அவன் நல்ல அந்தணனுக்குக் குறைவாகக் கருதப்படுவதில்லை. அதுபோல, அம்மனிதன் விலங்கு {இறைச்சி} உணவு உண்டவனாகக் கருதப்பட மாட்டான். சரி, சரியில்லை என்று இக்காரியத்தைப் பரிசீலித்த பிறகே இவ்விதி விதிக்கப்பட்டது" {இதுவே விலங்கு {இறைச்சி} உணவு சம்பந்தமாக முனிவர்களால் விதிக்கப்பட்ட விதியாகும்}.
ஓ அந்தணரே {கௌசிகரே}, ஒரு சாபத்துக்கு உட்பட்டிருந்த மன்னன் சௌதாசனே மனிதர்களை இரையாகக் கொண்டான். இவ்விஷயத்தில் உமது கருத்து என்ன? ஓ! நல்ல அந்தணரே {பிராமணோத்தமரே - கௌசிகரே}, எனது சொந்த நடவடிக்கைகளின் விளைவாகவே {சொந்த கர்மங்களினாலேயே}, நான் இந்தத் தொழிலின் மூலம் எனது வாழ்வாதாரத்தை அடைகிறேன். ஓ! அந்தணரே {கௌசிகரே}, ஒருவன், தனது சொந்தத் தொழிலைக் கைவிடுவது, பாவம் எனக் கருதப்படுகிறது. ஒருவன் தனது சொந்தத் தொழிலைச் செய்வதென்பது மெச்சத்தகுந்த செயலே என்பதில் ஐயமில்லை. முந்தைய இருப்பின் {முற்பிறவியின்} செயல்கள் {கர்மங்கள்} எந்த உயிரினத்தையும் விடுவதில்லை. ஒருவனது செயல்களின் விளைவுகளைத் தீர்மானிப்பதில், இவ்விதி, படைப்பாளனின் {பிரம்மனின்} பார்வையைப் பெற்றது. {பல்வேறு தொழில்களை நிர்ணயிக்கும் விஷயத்தில் பிரம்மனே இவ்விதியை விதித்தான்}.
தீய கர்மத்தின் ஆதிக்கத்தில் இருக்கும் ஒரு மனிதன், எப்போதும் தன் கர்மத்திற்கு எப்படிப் பரிகாரம் செய்வது என்பதையே கருத்தில் கொள்ள வேண்டும். தீவினையில் இருந்து தன்னைத் தானே விடுவித்துக் கொண்டால், தீய கர்மம் பல்வேறு வழிகளில் ஈடு {சரி} செய்யப்படும். அதற்கேற்றவாறே, ஓ! நல்ல அந்தணரே {பிராமணோத்தமரே}, நான் தானம் செய்கிறேன், உண்மையுடன் இருக்கிறேன், பெரியவர்களைக் கவனிப்பதில் சிரத்தை கொள்கிறேன், மறுபிறப்பாள {இருபிறப்பாள} பிராமணர்களை முழுமையாக மதிக்கிறேன், கர்வம் கொள்வதில்லை, அதிகமாகப் பேசாமலும் இருக்கிறேன்.
வேளாண்மை என்பது போற்றுதலுக்குரிய தொழிலாகக் கருதப்படுகிறது. அதில் கூட, விலங்கின வாழ்வுக்குப் பெரிய தீங்கு செய்யப்படுகிறது என்பது நன்கு அறியப்படுகிறது; நிலத்தை உழுவதால் தரையில் ஒளிந்திருக்கும் எண்ணற்ற உயிரினங்களும், பல்வேறு உருவங்களில் உள்ள விலங்குகளின் வாழ்வும் அழிக்கப்படுகின்றன. இது குறித்து நீர் என்ன நினைக்கிறீர்? ஓ! நல்ல அந்தணரே {கௌசிகரே}, விரிகியும் {அரிசியும்} மற்ற அரிசி விதைகளும் {நெல் முதலிய அரிசி வகைகள் அனைத்தும்} உயிருள்ளவையே. இவ்விஷயத்தில் உமது கருத்து என்ன?
வேளாண்மை என்பது போற்றுதலுக்குரிய தொழிலாகக் கருதப்படுகிறது. அதில் கூட, விலங்கின வாழ்வுக்குப் பெரிய தீங்கு செய்யப்படுகிறது என்பது நன்கு அறியப்படுகிறது; நிலத்தை உழுவதால் தரையில் ஒளிந்திருக்கும் எண்ணற்ற உயிரினங்களும், பல்வேறு உருவங்களில் உள்ள விலங்குகளின் வாழ்வும் அழிக்கப்படுகின்றன. இது குறித்து நீர் என்ன நினைக்கிறீர்? ஓ! நல்ல அந்தணரே {கௌசிகரே}, விரிகியும் {அரிசியும்} மற்ற அரிசி விதைகளும் {நெல் முதலிய அரிசி வகைகள் அனைத்தும்} உயிருள்ளவையே. இவ்விஷயத்தில் உமது கருத்து என்ன?
ஓ! அந்தணரே {கௌசிகரே}, மனிதர்கள் காட்டுவிலங்குகளை வேட்டையாடிக் கொன்று, அவற்றின் இறைச்சியைப் புசிக்கின்றனர்; அவர்கள் மரங்களையும், மூலிகைகளையும் {செடிகளையும்} கூட அறுக்கின்றனர்; ஆனால், ஓ! அந்தணரே {கௌசிகரே}, மரங்களிலும், பழங்களிலும், ஏன் நீரிலும் கூட எண்ணற்ற உயிரிகள் இருக்கின்றன; நீர் அப்படி எண்ணவில்லையா? ஓ! அந்தணரே {கௌசிகரே} முழுப் படைப்புமே, உயிரிகளை உணவாக ஏற்கும் விலங்குகளின் உயிரால் நிறைந்திருக்கிறது. மீன்கள் மீனை இரையாக்குகின்றன; பல்வேறு விலங்கு வகைகள் பிற விலங்கு வகைகளை இரையாகக் கொள்கின்றன; ஒன்றை ஒன்று உண்ணும் விலங்கு வகைகளும் இருக்கின்றன என்பதை நீர் காணவில்லையா? ஓ! அந்தணரே {கௌசிகரே}, மனிதர்கள் அங்கேயும் இங்கேயும் நடக்கும்போது, தரையில் ஒளிந்திருக்கும் எண்ணற்ற உயிர்களை மிதித்துக் கொல்கின்றனர். விவேகிகளும் ஞானிகளும் கூட, தூங்கும்போதும், நிலைகளை மாற்றும்போதும் எனப் பல்வேறு வழிகளில் விலங்குகளின் உயிரை அழிக்கின்றனர். இதற்கு நீர் என்ன சொல்லப் போகிறீர்? பூமியிலும், காற்றிலும் மொய்த்துக் கொண்டு இருக்கும் அனைத்து உயிர் வகைகளையும், மனிதர்கள், சுயநினைவற்ற நிலையிலும், அறியாமையிலும் அழித்து விடுகின்றனர். இப்படி நடக்கவில்லையா?
இவ்வழக்கில், மக்கள் எவ்வுயிரினத்துக்கும் தீங்கிழைக்கக்கூடாது என்ற கட்டளை, உண்மை நிலை அறியாமல் இருந்த பழங்காலத்து மனிதர்களால் விதிக்கப்பட்டது. ஓ! அந்தணரே {கௌசிகரே}, எவ்வுயிருக்கும் தீங்கிழைத்த பாவத்தில் இருந்து விடுபட்ட ஒரு மனிதனும் இவ்வுலகில் கிடையாது. முழுமையாகப் பரிசீலித்துப் பார்த்தால், எவ்வுயிருக்கும் தீங்கிழைத்த பாவத்தில் இருந்து விடுபட்டவனாக, இவ்வுலகில் ஒரு மனிதனும் கிடையாது என்ற தவிர்க்க முடியாத தீர்மானத்திற்கே நாம் வர இயலும்.. ஓ! நல்ல அந்தணரே {பிராமணோத்தமரே}, எவ்வுயிருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்று நோன்பு நோற்ற தவசிகள் கூட, விலங்குகளின் உயிருக்கு தீங்கையே செய்கின்றனர். இன்றியமையாத பெரிய தேவைகள் இருக்கும்போது மட்டுமே, தீங்கு குறைவாக இருக்கிறது. உன்னதப் பிறவிகளும், சிறந்த குணங்கள் கொண்டவர்களும் கூட, தீச்செயல்களை இழைத்துவிட்டு, அனைத்தையும் புறக்கணித்துவிட்டு, எதற்கும் வெட்கப்படாமல் இருக்கிறார்கள்.
பின்பற்றத்தக்க வழியில் செயல்படும் நல்லவர்கள், மற்ற நல்லவர்களால் மெச்சப்படுவதில்லை; அதே போல, முரண்பாட்டு வழியில் செயல்படும் தீயவர்கள், தங்கள் உடன் ஒத்த தீயவர்களால் புகழப்படுவதில்லை; உயர் குணங்களைக் கொடையாகக் கொண்டிருந்தாலும், நண்பர்கள், {மற்ற} நண்பர்களுக்கு ஏற்புடையவர்களாக இருப்பதில்லை. மூடப்பண்டிதர்கள் {பண்டிதர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் முட்டாள்கள்}, தங்கள் குருக்களின் அறங்களைச் {சிறப்புகளைச்} சொல்லிக் கதறுகிறார்கள். ஓ! அந்தணரே {கௌசிகரே}, பொருட்களின் இயற்கையான ஒழுங்கு இவ்வுலகில் எல்லா இடங்களிலும் தலைகீழாகவே காணப்படுகிறது. {உலகத்தில் பல பொருட்கள் மாறுபட்டிருப்பனவாகக் காணப்படுகின்றன}. பொருட்களின் நிலை மற்றும் அறம் ஆகியவற்றில் உமது கருத்தென்ன? நமது செயல்களில் நன்மையோ தீமையோ, சொல்வதற்கு அதிகமாகவே இருக்கிறது. ஆனால், எவனொருவன், தனது சொந்த தொழிலில் நிலைபெற்றிருக்கிறானோ, அவன் பெரும் புகழை அடைகிறான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.