Reasons for joy and sorrow! | Vana Parva - Section 208 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
மகிழ்ச்சி மற்றும் துக்கங்களுக்குக் காரணம் அறம் மற்றும் பாவமே என்று கௌசிகருக்குச் சொன்ன வேடன்...
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! யுதிஷ்டிரா, கருணையில் {இரக்கத்தில்} மேம்பட்ட அந்த அறம் சார்ந்த வேடன் {தர்மவியாதன்}, மீண்டும் நிபுணத்துவத்துடன் அந்த அந்தணர்களில் முதன்மையானவரிடம் {கௌசிகரிடம்}, "நேர்மையின் வழிகள் நுட்பமானவை, பல்முகப்பட்டவை, எல்லையற்றவை என்று முதிர்ந்தவர்கள் கருதுகிறார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையிலும், திருமணக் காரியத்திலும் பொய் சொல்லத் தக்கதே. சில நேரங்களில் பொய்மை உண்மையின் வெற்றிக்கு வழிவகுக்கும்; உண்மை பொய்மையாய் தேய்ந்து போகும். எது அனைத்து உயிர்களுக்கும் நன்மையை விளைவிக்குமோ அதுவே உண்மை {சத்தியம்} என்று கருதப்படுகிறது. அறம் இப்படி நெறிதவறுவதிலும் இருக்கிறது; நீர் அதன் நுட்பமான வழிகளைக் குறித்துக் கொள்ளும்.
ஓ! அறம் சார்ந்தவர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, நன்மையோ, தீமையோ ஒரு மனிதனின் செயல்களுக்கான கனிகளை {பலன்களை} அந்த மனிதன் நிச்சயமாக அறுப்பான் {பெறுவான்}. இழிவான நிலையை அடையும் அறியாமை கொண்ட மனிதன், தனது தீய கர்மத்தின் விளைவுகளை அறியாமல், தேவர்களை முற்றிலுமாக நிந்திக்கிறான். ஓ! நல்ல அந்தணரே {கௌசிகரே}, மூடனும், கபடனும், நிலையற்றவனும் {சபலனும்} எப்போதும் மகிழ்ச்சியையோ துயரத்தையோ தலைகீழாக அடைகிறார்கள். கற்றலோ, நல்ல ஒழுக்க நெறியோ, சுய முயற்சியோ அவர்களைக் காப்பதில்லை. நமது முயற்சிகளின் கனிகள் {பலன்கள்} வேறு எதையும் சாராது சுதந்திரமாக இருந்தால், மனிதர்கள் தங்கள் விருப்பத்தின் நோக்கத்தை வெறும் முயற்சியிலேயே அடைவார்கள்.
இயன்றவர்கள், புத்திசாலிகள், விடாமுயற்சியுடைய மனிதர்களின் முயற்சிகள் தடைபட்டு, அவர்கள் தங்கள் செயல்களின் கனிகளை அறுப்பதில்லை என்பதைக் காண்கிறோம். மறுபுறம், மற்றவர்களுக்குத் தீங்கிழைப்பதில் சுறுசுறுப்பாக இருப்பவர்களும், உலகத்தை ஏமாற்றுபவர்களும், மகிழ்ச்சியான வாழ்வை நடத்துகிறார்கள். எந்த முயற்சியுமே இல்லாமல் சிலர் செழிப்பை அடைகின்றனர். இன்னும் சிலர் மிகுந்த முயற்சி செய்தும் தங்களுக்கு உரியவற்றை அடைய இயலாமல் இருக்கின்றனர். தங்கள் மகன் பிறப்பதற்காகத் தேவர்களை வழிபட்டு, கடும் தவங்களை இயற்றும் இரக்கப்படத்தக்கவர்களால் {பெற்றோர்}, தொடர்ந்து பத்து மாதங்கள் கருவில் இருக்கும் அவர்களுடைய மகன்கள், தங்கள் குலத்தில் மிக மோசமானவர்களாக {குலத்தைக் கெடுப்பவர்களாக} ஆகிறார்கள். சிலர் அதே போன்ற கர்மங்களால் பெறப்பட்டு, தங்கள் வாழ்வைத் தங்கள் மூதாதையர் சேர்த்த செல்வம் மற்றும் தானியக் குவியல்களைக் கொண்டு தங்கள் வாழ்வை ஒழுங்காகவும் ஆடம்பரமாகவும் கழிக்கிறார்கள்.
மனிதனைத் தாக்கும் நோய்கள், சந்தேகமற அவனது சொந்த கர்மத்தின் பலன்களே. அவர்கள் அதன் பிறகு வேடனின் கைகளில் அகப்பட்ட சிறு மான்களைப் போல நடந்து கொள்கின்றனர். மேலும் அவர்கள் மனக்கஷ்டங்களையும் அடுக்கிக் கொள்கின்றனர். ஓ! அந்தணரே {கௌசிகரே}, தங்கள் விளையாட்டின் ஓட்டத்தை இடமறிக்கும் வேடர்களைப் போல, தாங்கள் சேகரித்து வைத்திருக்கும் மருந்துகளைக் கொண்டு, தகுதி வாய்ந்த திறமை மிகுந்த மருத்துவர்களால் அந்த நோய்களின் வீரியம் சரிபார்க்கப்படுகிறது. அறத்தைப் பேணுபவர்களின் சிறந்தவரே {கௌசிகரே}, அதைத் {நோயைத்} தங்கள் கட்டுக்குள் {அதிகாரத்திற்குள்} வைத்து, (இந்தப் பூமியில் உள்ள நல்ல விஷயங்களை) அனுபவிப்பவர்கள், நாள்ப்பட்ட குடல் நோய்களில் இருந்து உண்மையில் தங்கள் துன்பத்தைக் களைகிறார்கள் என்றும், வலுவும் சக்தியும் கொண்டவர்கள், துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்றும், அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை அடையக்கூடப் பெரும் சிரமப்பட வேண்டியிருக்கிறது என்றும் கண்டீர். அனைத்து மனிதனும் இப்படியே ஆதரவற்று, துன்பம் மற்றும் மாயையில் மூழ்கி, மீண்டும் மீண்டும் அலைக்கழிக்கப்பட்டு, பலமிக்கத் தங்கள் சொந்த செயல்களாலேயே (கர்மத்தாலேயே) மூழ்கிப் போகிறார்கள்.
செயல்களில் {எதையும் செய்யலாம் என்ற} முழுச் சுதந்திரம் இருந்திருந்தால் {தெய்வம் இல்லாதிருந்தால்}, எந்த உயிரினமும் சாகாது; யாரும் அழிவுக்கு உள்ளாகவோ, செய்த தீவினையின் தண்டனையை எதிர்நோக்கவோ மாட்டார்கள்; அனைவரும் விரும்பிய அனைத்தையும் அடைவார்கள். எல்லோரும் மற்றவரனைவரையும் {வாழ்வு எனும் பந்தயத்தில்} விஞ்சி நிற்கவே நினைப்பார்கள்; அவர்கள் அதற்காகத் தங்கள் முழுச் சக்தியையும் பயன்படுத்துவார்கள்; ஆனால் பலன் வேறுமாதிரியாக இருக்கும். ஒரு நட்சத்திரத்தின் ஆதிக்கத்தில் பிறந்த பலர் ஒரே மாதிரியான நற்பேறைப் பெறுகிறார்கள்; ஆனால் அவர்களது செயல்ளில் முதிர்ச்சியில் பெரும் வேறுபாடு காணப்படுகிறது. ஓ! நல்ல அந்தணரே {பிராமணோத்தமரே - கௌசிகரே}, எவனும் தன் செல்வத்தைத் தானே செலவழிப்பவனாக இருக்க முடியாது. முற்பிறவிகளில் செய்த செயல்களின் பலன்கள் இந்தப் பிறவியில் காணப்படுகிறது. ஆன்மா நித்தியமானது, முடிவில்லாதது என்பது தொன்றுதொட்டு வரும் பாரம்பரிய கருத்தாகும். ஆனால், அனைத்து உயிர்களின் உடற்கட்டும் இங்கே (கீழே) {அதாவது இவ்வுலகில்} அழிவுக்குள்ளாகிறது. எனவே வாழ்வு முடியும்போது, உடல் மட்டுமே அழிகிறது; ஆனால், ஆவியானது செயல்களோடு தனக்கு இருக்கும் சம்பந்தத்தால் வேறு எங்கோ பயணிக்கிறது {வேறு உடல் கொள்கிறது}" என்றான் {வேடன் = தர்மவியாதன்}.
அந்தணர் {கௌசிகர்}, "ஓ! கர்மக் கோட்பாட்டையும் அறிந்தவர்களிலும், சொற்பொழிவு ஆற்றுபவர்களிலும் சிறந்தவனே, ஆத்மா எப்படி நித்தியமானதாகிறது என்பதைத் துல்லியமாக அறியவிரும்புகிறேன்" என்று கேட்டார். வேடன் {தர்மவியாதன்}, "ஆவி {Spirit, ஜீவன் } இறப்பதில்லை; வெறுமனே குடியிருப்பு மற்றமே நடக்கிறது. உயிர்கள் இறக்கின்றன என்று மடமையினால் தவறுதலாகச் சொல்கின்றனர். ஆன்மா மற்றொரு {உடல்} கட்டுக்குள் தன்னை வழிப்படுத்திக் கொள்கிறது. மேலும் அதன் {ஆத்மாவின்} வாழ்விட மாற்றமே மரணம் என்று அழைக்கப்படுகிறது. மனிதர்களின் உலகில், எந்த மனிதனும் வேறொரு மனிதனுடைய கர்மத்தின் பலன்களைப் பெறுவதில்லை. ஒருவன் எதைச் செய்தாலும், அதன் பலனை அவன் நிச்சயம் பெறுவான் என்பது நிச்சயம்; ஒருமுறை செய்யப்பட்ட கர்மத்தின் பலன்களை அகற்றவே முடியாது. அறம்சார்ந்தவர்கள் {நல்லவர்கள்} பெரும் நற்பண்புகள் கொண்டவர்களாகவும், பாவிகள் தீச்செயல்கள் புரிபவர்களாகவும் ஆகிறார்கள். மனிதர்களின் செயல்கள் அவர்களைத் தொடர்கின்றன; அதன் தாக்கத்தால் அவர்கள் மறுபடி பிறக்கிறார்கள்" என்றான் {வேடன் தர்மவியாதன்}. அதற்கு அந்தணர் {கௌசிகர்}, "ஆவி {ஜீவன்} ஏன் பிறப்பெடுக்கிறது? அதன் {ஆவியின்} பிறப்பிடம் {உடல்கள்} ஏன் பாவகரமாகவோ அறம்சார்ந்தவையாகவோ ஆகின்றன {மனிதன் ஏன் பாவியாகவோ நல்லவனாகவோ ஆகிறான்}? ஓ! நல்லவனே {தர்மவியாதா}, அது {ஆவி, ஜீவன்} எவ்வாறு பாவிகள் குலத்திற்கோ, நல்லவர்கள் குலத்திற்கோ உடையதாகிறது?" என்று விசாரித்தார்.
வேடன் {தர்மவியாதன்}, "இம்மர்மம் இனப்பெருக்கத்தின் {ஆவி கருவில் சேரும்} பொருள் சார்ந்ததாகத் தெரிகிறது. ஆனாலும், ஓ! அந்தணரே {கௌசிகரே}, நேர்மையானவர்கள் நல்லவர்களிடமும், தீயவர்கள் பாவிகளிடமும் {முற்பிறவியில் செய்த} கர்மத்தால் குவிக்கப்பட்ட சுமையுடன், {அந்த ஆத்மா} மீண்டும் எவ்வாறு பிறக்கிறது என்பதை நான் உமக்குச் சுருக்கமாகச் சொல்வேன். அறம்சார்ந்த செயல்களைச் செய்வதனால் அது {ஆத்மா} தேவர்களின் நிலையை அடைகிறது; நல்ல மற்றும் தீய செயல்களின் கலவையால், அது {ஆத்மா} மனித நிலையை அடைகிறது. உணர்ச்சியில் மிகுதியான ஈடுபாடு கொண்டு, அதற்கு ஒப்பான சீரழிவான நடைமுறைகளைச் செய்வதால், அது {ஆத்மா} தாழ்ந்த இனங்களான விலங்குகளிடம் பிறக்கிறது {விலங்கின் நிலையை அடைகிறது}; பாவச் செய்லகளே செய்வதால், அது {ஆத்மா} நரகத்திற்கு {அல்லது, Infernal region = கொடிய இடத்திற்கு} செல்கிறது. பிறப்பு மற்றும் முதுமையினால் ஏற்படும் மனத்தளர்ச்சி ஆகிய துக்கங்களால் பாதிக்கப்பட்ட மனிதன், தனது சொந்த செயல்களின் தீய விளைவுகளை அடைய, இங்கே கீழே {பூமியில்} வாட விதிக்கப்படுகிறான். நரகப் பகுதிகள் உட்படப் பல ஆயிரக்கணக்கான பிறவிகளைக் கடந்து வரும் நமது ஆவிகள் {ஜீவன்கள்}, தங்கள் சொந்த கர்மத்தின் கட்டுகளில் இருந்து பாதுகாக்கப்படுகின்றன.
அசையும் தன்மை கொண்ட உயிரினங்கள், தங்களால் செய்யப்பட்ட இச்செயல்களினால் அடுத்த உலகில் பரிதாப நிலையை அடைகின்றன. அந்தத் துயரங்களின் எதிர்வினையால், அவை தாழ்ந்த பிறப்பை அடைகின்றன. பிறகு அவை புதிதான செயல்தொடரைக் குவிக்கின்றன. அதன் தொடர்ச்சியாக, நோயுள்ள மனிதன் நோயை உண்டாக்குகிற உணவைப் பெற்று மகிழ்ச்சிஅடைவதைப் போல அவை மீண்டும் துயரத்தையே அடைகின்றன. அதன் விளைவாக, தங்கள் சங்கிலிகள் தளர்த்தப்படாததால் அவற்றுக்குப் புதிய கர்மங்கள் {கர்மாக்கள்} எழுகின்றன. பல்வேறு துயரங்களால் பாதிக்கப்படுவதால், இவ்வுலகில் அவை {அசையும் உயிரினங்கள்} சக்கரங்களைப் போலச் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, தங்கள் சங்கிலிகளை அவை கைவிட்டால், தங்கள் செயல்களால் தங்களைச் சுத்திகரித்துக் கொண்டு தவமும் அறத்தியானமும் பயின்று, எண்ணற்ற இதுபோன்ற செயல்களால் சொர்க்கம் சார்ந்த பகுதிகளை {Elysian Regions} அடைகின்றன. தங்கள் சங்கிலிகளைக் கைவிடுவதாலும் கர்மத்தை சுத்திகரிப்பதாலும், மனிதர்கள் அருள் உலகத்தை அடைகின்றனர். அங்கே செல்பவர்களுக்கு துன்பம் என்பதே தெரியாது.
தீயவைக்கு அடிமையாகும் பாவிகள், தங்கள் அக்கிரமப் பாதைக்கு ஒரு முடிவை அடைய மாட்டார்கள். எனவே, எது அறம்சார்ந்ததோ {நன்மையோ} அதை நாம் செய்ய முயல வேண்டும். எது அறம்சாராததோ அதைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இதயம் நிறைந்த நன்றியுணர்வுடனும், துர்குணத்தில் இருந்து விடுபட்டும், எது நன்மையோ அதைச் செய்பவன், செல்வம், அறம், மகிழ்ச்சி மற்றும் சொர்க்கத்தையும் {இதற்கு அடுத்த உலகத்தையும்) அடைகிறான். பாவங்களில் இருந்து சுத்தமடைந்தவர்கள், ஞானமுள்ளோர், பொறுமைசாலிகள், நேர்மையில் நிலைத்திருப்பவர்கள், சுயக்கட்டுப்பாடு கொண்டவர்கள் ஆகியோர், இவ்வுலகத்திலும், இதைத் தொடரும் அடுத்த உலகத்திலும் {இம்மையிலும் மறுமையிலும்} தொடர்ச்சியான இன்பநிலையை அனுபவிக்கின்றனர். மனிதர்கள் நல்லவர்களின் நிலையான அறத்தைப் பின்பற்ற வேண்டும். அவனது செயல்கள் நேர்மையானவர்களின் செயல்களை உதாரணமாகக் கொண்டிருக்க வேண்டும். புனித சாத்திரங்களை அறிந்த, ஞானத்தின் அனைத்துக் கிளைகளையும் கற்ற அறம்சார்ந்த மனிதர்கள் இருக்கிறார்கள். மனிதனின் சரியான கடமை, தனக்குச் சரியான தொழிலைச் செய்வதில் அடங்கியிருக்கிறது. இதுவே வழக்கென்றால் பின்னது {தொழில்} குழப்பமானதாகவும், கலவையானதாகவும் இருக்காது.
ஞானி அறத்தில் மகிழ்ந்து, நேர்மையாக வாழ்கிறான். ஓ! நல்ல அந்தணரே {கௌசிகரே}, இப்படி அடையப்பட்ட நேர்மையைச் செல்வமாகக் கொண்ட அப்படிப்பட்ட {அறம்சார்ந்த} மனிதன், தனக்கு எது மிகவும் அறம்சார்ந்தது எனக் கண்டடைகிறானோ அந்தச் செடியின் {அந்த அறச்செயலின்} வேருக்கு நீர் இரைக்கிறான். இப்படியே அறம்சார்ந்த மனிதன் செயல்படுகிறான். அவனது மனமும் அமைதியாக இருக்கிறது. அவன் இவ்வுலகத்தில் உள்ள தனது நண்பர்களிடம் திருப்தியுடன் இருக்கிறான். அதன் பிறகு அவன் எப்போதும் மகிழ்ச்சியையே அடைகிறான். ஓ! நல்ல மனிதரே {கௌசிகரே}, அறம்சார்ந்த மனிதர்கள், தங்கள் விருப்பத்தின்படி அழகு, சுவை, ஒலி, மற்றும் தொடு உணர்வுகளால் மகிழ்ச்சியை அடைகிறார்கள். இவையே அறத்தின் நற்கூலி {தர்மத்தின் பயன்} என்று அறியப்படுகிறது. ஆனால், ஓ! பெரும் அந்தணரே {மஹா பிராமணரே}, ஞானப் பார்வை கொண்ட மனிதன், நீதியால் கிடைக்கும் கனிகளை அறுப்பதால் திருப்தியடைவதில்லை. அதில் மன நிறைவு கொள்ளாமல் ,அவன், தனக்குள் இருக்கும் ஆன்மிக ஞானத்தால், வலி,மகிழ்ச்சி மற்றும் உலகத்தின் தீமைகள் ஆகியவற்றால் பாதிப்படையாமல் அவற்றின் மேல் அலட்சியமாக இருக்கிறான் {வைராக்கியத்தை அடைகிறான்}. தனது சொந்த விருப்பத்தின் பேரில் உலகம் சார்ந்த பொருட்களின் மீது அலட்சியம் கொள்ளும் அவன், அறத்தை மட்டும் கைவிடுவதில்லை.
உலகில் அனைத்தும் நிலையற்றது என்பதைக் கவனிக்கும் அவன் அனைத்தையும் துறப்பதற்கு முயல்கிறான். முக்திக்கான {இரட்சிப்புக்கான} வழி வகைகளை எட்ட சிந்தித்து, பல வாய்ப்புகளைக் கணக்கிட்டுப் பார்க்கிறான். இப்படியே அவன் உலக நோக்கங்களைத் துறந்து, பாவ வழிகளை அடைத்து, அறம்சார்ந்தவனாகி கடைசியாக முக்தியை அடைகிறான். முக்திக்கு ஆன்மிக ஞானமே {தவமே} முக்கியத் தேவையாக இருக்கிறது. துறவு, பொறுமை ஆகியனவே அதன் {முக்தியை அடைய} வேர்கள். இவ்வழிகளில் அவன் தனக்கு விருப்பமானவை அனைத்தையும் அடைகிறான். ஆனால், ஓ! நல்ல அந்தணரே புலன்களை அடக்குதல், சத்தியத்தின் வழிகள், பொறுமை ஆகியவற்றால் அவன், தலைமையான ஆசிரமமான, பிரம்மனின் ஆசிரமத்தை {பிரம்ம நிலையை} அடைகிறான்" என்றான் {தர்மவியாதன்}.
அந்த அந்தணர் {கௌசிகர்}, "ஓ! அறத்திலும் மிகச் சிறந்தவனே, அறக்கடமைகளைச் செய்வதில் நிலையானவனே {தர்மவியாதா}, நீ புலன்களைக் குறித்துப் பேசுகிறாய்; அவை என்ன' அவற்றை எப்படிக் கட்டுப்படுத்துவது? அதைக் கட்டுப்படுத்துவதால் என்ன நன்மை? ஒரு உயிரினம் அதன்மூலமாக எப்படிக் கனிகளை அறுக்கிறது? ஓ! பக்திமானே, இவ்விஷயத்தில் உண்மையை எனக்குத் தெரியப்படுத்த இரந்து கேட்கிறேன்" என்றார் {கௌசிகர்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.