"Learn Brahmanic Philosophy!'" said the fowler | Vana Parva - Section 209 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
நற்செயல் தீச்செயல் ஆகியவற்றின் தன்மை மற்றும் பிராமணத் தத்துவம் ஆகியவற்றைக் கௌசிகருக்கு தர்மவியாதன் உரைத்தல்...
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! யுதிஷ்டிரா, அந்த அந்தணரால் இப்படி விசாரிக்கப்பட்ட அந்த அறம்சார்ந்த வேடன், அவருக்கு என்ன மறுமொழி கூறினான் என்பதைக் கேள். வேடன் {தர்மவியாதன்}, "மனிதர்களின் மனங்கள் முதலில் அறிவை அடைவதில் முனைகின்றன. அதை அடைந்ததும், ஓ! நல்ல அந்தணரே {கௌசிகரே}, அவர்கள் தங்கள் ஆசைகளிலும், விருப்பங்களிலும் ஈடுபடுகின்றனர். அதற்காகப் பெரிய அளவில் இலக்குகளை நிர்ணயித்து உழைக்கிறார்கள். அழகு, சுவை போன்ற அவர்கள் மிகவும் விரும்பும் காரியங்களில் ஈடுபடுகிறார்கள். அதன் தொடர்ச்சியாக விருப்பம் {பாசம்}, பொறாமை, பின்னர்ப் பேராசையும் வருகின்றன. அதன் பின்னர் அவர்களது ஆன்ம ஒளி அழிகிறது.
மனிதர்கள் பேராசையின் ஆதிக்கத்தில் இருக்கும்போது, அவர்கள் பொறாமையிலும் பாசத்திலும் மூழ்குகிறார்கள். அவர்களது அறிவு, நீதியின் வழிகாட்டுதல் படி நடப்பதில் இருந்து விலகுகிறது. அவர்களது அறப் பயிற்சி கேலிக்குரியதாகிறது. பாசாங்குத்தனத்தோடு அறம் பயில்வதால், கௌரவமற்ற வழிகளில் செல்வத்தைப் பெற்று மனநிறைவு அடைகிறார்கள். இப்படி அடையப்பட்ட செல்வத்தால், அவர்களில் இருந்த புத்திசாலித்தனம் தீய வழிகளில் மயங்குகிறது. மேலும், அவர்கள் பாவமிழைக்கும் விருப்பத்தால் நிரம்புகிறார்கள்.
ஓ! நல்ல அந்தணரே {கௌசிகரே}, அவர்களது நண்பர்களும், ஞானம் கொண்டவர்களும் அவர்களை எச்சரிக்கும்போது, கண்துடைப்பான {போலியான} பதில்களைத் தயாராக வைத்திருப்பார்கள். அந்தப் பதில்கள் வலுவானதாகவோ {ஆரோக்கியமானதாகவோ}, சமாதானம் ஏற்படுத்துவதாகவோ இருக்காது. தீய வழிகளுக்கு அடிமைப் பட்டிருப்பதால், அவர்கள் மூன்று வித பாவங்கள் செய்த குற்றவாளியாகிறார்கள். அவர்கள், எண்ணம், சொல், செயல்களில் {என்ற மூன்று விதங்களில்} பாவமிழைக்கிறார்கள். பொல்லாத வழிகளுக்கு அடிமைப்பட்டிருப்பதால், அவர்களது அனைத்த நல்ல குணங்களும் சாகின்றன {அழிகின்றன}. இது போன்ற தீச்செயல் செய்யும் மனிதர்கள், தன்னைப் போன்ற தன்மை கொண்ட மனிதர்களிடமே நட்பை வளர்ப்பார்கள். அதன் விளைவாக அவர்கள் இவ்வுலகிலும், அடுத்த உலகிலும் துன்பத்தையே அனுபவிக்கிறார்கள்.
பாவம் நிறைந்த மனிதன் {மேற்சொன்ன} இந்த இயல்பிலேயே இருக்கிறான். இப்போது அறம்சார்ந்த மனிதனைப் பற்றிக் கேளும். அவன் {அறம்சார்ந்தவன்}, இத்தீமைகளைத் தனது ஆன்ம உட்பார்வையால் {Spiritual Insight - ஆன்மிகப் பார்வையால்} கண்டுகொண்டு, இன்பம் மற்றும் துயரம் ஆகியவற்றுக்கிடையே உள்ள பாகுபாட்டை அறியும் ஆற்றல் பெறுகிறான். அறம்சார்ந்தவர்களை மரியாதையுடன் கவனிப்பதாலும், அறங்கள் பயில்வதாலும், அவனது மனம் நீதியை நோக்கி உயர்கிறது" என்றான் வேடன் {தர்மவியாதன்}. அந்தணர் {கௌசிகர்}, "எவரும் விளக்க முடியாத அறத்தின் உண்மை நிலையை விளக்கியிருக்கிறாய். உனது ஆன்ம சக்தி பெரிதானது. நீ எனக்குப் பெரும் முனிவரைப் போலத் தெரிகிறாய்" என்று மறுமொழி கூறினார்.
அதற்கு மறுமொழியாக வேடன் {தர்மவியாதன்}, "எங்களது மூதாதையர்களைப் போல, பெரும் அந்தணர்கள் {எங்களால்} வணங்கப்படுகிறார்கள். எப்போதும் மற்றவர்களுக்கு முன் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு {எங்களால்} திருப்தி செய்யப்படுகிறார்கள். இவ்வுலகத்தில் ஞானியாக இருப்பவர்கள், அவர்களுக்குத் {அந்தணர்களுக்குத்} திருப்தியானதை முழு இதயத்துடன் செய்கிறார்கள். ஓ! நல்ல அந்தணரே {பிராமணோத்தமரே, கௌசிகரே}, ஒரு வர்க்கமாக அந்தணர்களுக்கு அடிபணிந்த பின் {அவர்களை வணங்கிய பின்}, அவர்களுக்கு {அந்தணர்களுக்கு} எது திருப்தியானது என்பதை நான் உமக்கு விவரிக்கிறேன். பிராமணத் தத்துவத்தை நீர் என்னிடம் கற்றுக் {அறிந்து} கொள்ளும் {learn from me tha Brahmanic philosophy}. பெரும் கூறுகள் {ஐம்பூதங்கள்} நிறைந்த வெல்ல முடியாத முழு அண்ட மே பிரம்மம். இதை {பிரம்மத்தை} விட உயர்ந்தது எதுவும் இல்லை. பூமி, காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் ஆகியவையே பெரும் கூறுகள் {பெரும் பூதங்கள் - பெரிய அடிப்படைக் கூறுகள்} ஆகும். உருவம், மணம், ஒலி, தொடு உணர்ச்சி, சுவை ஆகியவையே அவற்றின் குணப் பண்புகளாகும். பிந்தையதின் {குணப் பண்புகளின்} தன்மைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக இருக்கிறது. முன்னுரிமை வரிசையில் {முதலில்} இருக்கும் மனம் என்று அழைக்கப்படும் விழிப்புணர்வால், {அவை = குணப்பண்புகள்} படிப்படியாக ஒவ்வொன்றாக {அவை} மூன்று குணங்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. {And of the three qualities, which are gradually characterised by each, in order of priority is consciousness which is called the mind} {இங்கு, பிரம்மத்தின் குணங்கள் உலகத்திலும், உலகத்தின் குணங்கள் பிரம்மத்திலும் காணப்படுகின்றன என்ற பொருள் வரும் என்று சொல்லப்படுகிறது}. ஏழாவதாக நுண்ணறிவு {புத்தி} வருகிறது. இதற்கடுத்தே சுயநலம் {அகங்காரம்} வருகிறது. அதன்பிறகு ஐம்புலன்கள் {ஐந்து இந்திரியங்கள்}, அதன் பிறகு ஆன்மா, அதன்பிறகு தார்மீகப் பண்புகளான சத்வ, ரஜஷ், தமஸ் வருகின்றன. இவை பதினேழும் அறியப்படாத அல்லது புரிந்து கொள்ள முடியாத குணங்கள் என்று {அவியக்தம் என்ற பெயரில்} சொல்லப்படுகின்றன. இவை அனைத்தையும் உமக்கு விவரித்துவிட்டேன். மேலும் நீர் அறிய விரும்புவது என்ன?" என்று கேட்டான் {தர்மவியாதன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.