A way to cross grief | Vana Parva - Section 212 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
ஐந்து வகைக் காற்றுகளையும், அவை உடலில் எப்படிச் செயல்படுகின்றன என்பதையும், ஒரு யோகி அவற்றை எவ்வாறு உணர்ந்து பரமாத்மாவை அடைகிறான் என்பதையும், முக்குணங்களுடனும் ஆவி எப்படிக் கலந்திருக்கிறது என்பதையும் தர்மவியாதன் கௌசிகருக்குச் சொன்னது...
அந்தணர் {கௌசிகர்}, "நெருப்பு (உயிர் சக்தி), பூமியின் தனிமத்தோடு (தாது) கூடி (உயிரினங்களின்) உடல்சார்ந்த வசிப்பிடமாக எப்படி ஆகிறது? மேலும், உயிர்க்காற்று (உயிர்மூச்சு) அதன் இருக்கையின் (தசைகள் மற்றும் நரம்புகளின்) இயல்பால் எப்படிச் (உடலெனும் சட்டகத்தைச்) செயல்படத் தூண்டுகிறது?" என்று விசாரித்தார்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! யுதிஷ்டிரா, அந்தணர் {கௌசிகர்} இக்கேள்வியை அந்த வேடனிடம் {தர்மவியாதனிடம்} கூறிய போது, அவன் {வேடனான தர்மவியாதன்}, உயர்ந்த மனம் கொண்ட அந்த அந்தணரிடம் {கௌசிகரிடம்}, "உயிர் ஆவி, உணர்வுநிலை {மூளை} எனும் இருக்கையில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, உடல் கட்டமைப்பின் செயல்பாட்டுக்குக் காரணமாக இருக்கிறது. ஆன்மாவானது அவ்விரண்டிலும் {ஆவியிலும், மூளையிலும்} இருந்து கொண்டு (அவை மூலமாகச்) செயல்படுகிறது. கடந்த காலம் {சென்றது}, நிகழ்காலம் {இருப்பது}, எதிர்காலம் {வருவது} ஆகியவை ஆன்மாவிலிருந்து பிரிக்க முடியாதபடி கலந்திருக்கிறது. உயிரினங்களில் இருப்பனவற்றில் அதுவே {ஆன்மாவே} உயர்ந்தது; அதுவே பரமாத்மாவின் சாரம்; நாம் அதை வணங்குகிறோம். அதுவே {ஆன்மாவே} உயிரினங்களின் இயக்க சக்தியாக, நித்திய (ஆவியாக) புருஷனாக {நித்தியமானதாக} இருக்கிறது. அதுவே பெரியது; அதுவே புத்தியும் அகங்காரமாகவும் இருக்கிறது. அதுவே பூதங்களின் {பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகியவற்றின்} பல்வேறு பண்புகளுக்கான அகநிலை {தன்னிலை} இருக்கையாக இருக்கிறது.
இங்கே {உடற்கட்டுக்குள்} இப்படி {ஆன்மாவானது} அமர்ந்து கொண்டு, வெளிப்புறமாகவோ {புறமாகவோ}, உட்புறமாகவோ {அகமாகவோ} (பொருளிலோ மனதிலோ), பிராணன் என்ற நுட்பமான ஐம்புலன்களின் காற்று {பிராணவாயு} மூலம் அனைத்துடனும் உறவுகளைத் {தொடர்புகளைத்} தக்க வைத்துக் கொள்கிறது. அதன் பிறகு ஒவ்வொரு உயிரினமும், சமானம் என்ற மற்றொரு நுட்பமான காற்றின் செயல்பாட்டால் அதன் வழியிலேயே செல்கின்றன. பின்னது {சமானம் என்ற காற்று [சமான வாயு]} அபானக் காற்றாகத் தன்னை மாற்றிக் கொண்டு, வயிற்றின் தலைப்பகுதியால் தாங்கப்பட்டு, உடலால் புறக்கணிக்கப்பட்ட பொருட்களான மலஜலங்களைச் சிறுநீரகம் மற்றும் குடலுக்குள் சுமந்து செல்கிறது. அதே காற்று {சமான [அ] அபான வாயு}, முயற்சி, உழைப்பு மற்றும் சக்தி ஆகிய மூன்று கூறுகளிலும் இருக்கிறது. அந்த நிலையில் இருக்கும் அது {சமான [அ] அபான வாயு}, இயற்பியலாளர்களால் {persons learned in physical science} உதானக் காற்று {உதான வாயு} என்று அழைக்கப்படுகிறது. மனித உடலமைப்புக்குள் இருக்கும் அனைத்துச் சந்திப்பு புள்ளிகளிலும் {junctional points} அது {சமான அல்லது உதான வாயு} தன் இருப்பை வெளிப்படுத்தும்போது, அது வியானம் என்று அழைக்கப்படுகிறது.
மேலும், அக வெப்பம் {உடலுக்குள் உருவாகும் வெப்பம்} நமது உடலமைப்புக்குள் இருக்கும் அனைத்துத் திசுக்களின் மீதும் பரவுகிறது. இவ்வகைக் காற்றுகளின் {பிராண வாயு [ஆக்சிஜன்], சமானம், அபானம், உதானம், வியானம்} மூலம் தாங்கப்பட்டு, இது {வெப்பம்} நாம் உண்ணும் உணவை, திசுக்களுக்கும் உடல் நீர்மங்களுக்கும் கடத்துகிறது. பிராணத்துடன் {பிராண வாயுவுடன்} கூட்டமைக்கும் பிற காற்றுகளால், ஒரு (கலவையான) எதிர்வினை உருவாகிறது. அதன் {அந்த எதிர்வினை} மூலம் உருவாக்கப்பட்ட வெப்பமே மனித அமைப்பின் அக வெப்பம் {Internal Heat} என்று அறியப்படுகிறது. அதுவே {அந்த வெப்பமே} நமது உணவின் செரிமானத்திற்குக் காரணமாகிறது. பிராண மற்றும் அபான காற்றுகள் {வாயுக்கள்}, சமான மற்றும் உதான காற்றுகளுக்கு {வாயுக்களுக்கு} இடையிலேயே நிலைபெற்றிருக்கின்றன. அவற்றின் கூட்டணியில் {உராய்வால்} உற்பத்தியாகும் வெப்பமே (ஏழு பொருட்கள், எலும்புகள், தசைகள் மற்றும் இதரவை அடங்கிய) உடலின் வளர்ச்சி காரணமாக அமைகிறது.
பெருங்குடல் வரை விரிந்து இருக்கும் பகுதியை இருக்கையாக {தான் இருக்கும் இடமாகக்} கொண்டது அபானம் என்று அழைக்கப்படுகிறது. தமனிகளில் {இரத்தக் குழாய்களில் இருந்து (பிராணம் முதற்கொண்ட) ஐந்து காற்றுகளும் {பிராணம், சமானம், அபானம், உதானம், வியானம்} எழுகின்றன. பிராணக் காற்று {ஆக்சிஜன்} வெப்பத்தால் செயல்பட்டு, அபானப் பகுதியின் எல்லையைத் தாக்குகிறது. பின்னர்த் திகைத்து நின்று, அந்த வெப்பத்துடன் எதிர்வினை புரிகிறது. தொப்புளுக்கு {நாபிக்கு} மேலே செரிக்காத உணவுள்ள பகுதியும் {ஆமாசயம்}, அதற்கு {தொப்புளுக்குக்} கீழே செரிமானம் செய்யும் பகுதியும் {பக்வாசயம்} இருக்கின்றன. பிராணக்காற்றும், உடலமைப்புக்குள் இருக்கும் மற்ற பிற காற்றுகளும், தொப்புளிலேயே {நாபியிலேயே} அமர்ந்திருக்கின்றன {நிலைபெற்றிருக்கின்றன}. இதயத்திலிருந்து வெளிவந்து தமனிகள் {இரத்தக்குழாய்கள், நரம்புகள்} மேலும் கீழுமாகவும், சாய்வான திசைகளிலும் ஓடுகின்றன; அவை நம் உணவில் இருந்து சிறந்த சாரத்தை எடுத்துக் செல்கின்றன. அவற்றுடன் {உணவின் சிறந்த சாரத்தை} பத்து பிராணக் காற்றுகள் {பிராணவாயுக்கள்} வினைபுரிகின்றன.
பொறுமையான யோகிகள் அனைத்துத் துன்பங்களையும் கடக்கும் வழி இதுதான். பொருட்களைச் சார்பற்ற சமமான பார்வையில் பார்க்கும் அவர் அவர்கள் {யோகிகள்}, தங்கள் ஆன்மாக்களை மூளையில் இருத்தி, அனைத்து உயிரினங்களின் உடலுக்குள்ளும் இருக்கும் பரமாத்மாவையும், பிராண மற்றும் அபானக் காற்றுகளையும் கண்டுபிடிக்கின்றனர். உடல் என்ற மாற்றுருவத்தில், (விலங்குகளின் உடலமைப்பில்) பதினொரு புறவேற்றுமைத் தனிமங்களின் நிலையில் {allotropous conditions} ஆவி {Spirit} உள்ளடங்கியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும். அது {ஆவி} நித்தியமாக இருப்பினும், சுத்திகரிக்கப்பட்ட நெருப்பு நித்தியமாக இருப்பினும், அதன் புறச்சூழலுக்கு ஏற்றவாறு மாறுவதைப் போல அதன் இயல்பு தன்னுடன் இருப்பவையின் வெளிப்படையாக மாற்றப்படுகிறது. தெய்வீகப் பொருளுடன் உறவுகொள்ளும் உடல், தாமரை இலையின் பரப்பில் இருக்கும் நீர்த்துளி {அதனுடன் ஒட்டாமல்} உருளுவது போலவே பிந்தையதுடன் {ஆவியுடன்} தொடர்புடையதாகும். {அதாவது உடலுக்கும் உயிருக்கும் உள்ள சம்பந்தம் தாமரை இலை நீர்த்துளி போன்றதாகும் என்று சொல்ல வருகிறார் போலும்}.
சத்வ, ரஜஸ், தமஸ் ஆகியவை அனைத்து உயிர்களின் குணங்கள் என்றும் வாழ்வு என்பது ஆவியின் {உயிரின்} குணம் என்றும், பிந்தையத் {ஆன்மா} பராத்மாவின் குணம் என்று அறிந்து கொள்ளும். மந்தமான, உணர்வற்ற பொருளே {ஆவியே} வாழ்வுக் கொள்கையின் இருக்கையாக இருக்கிறது. அது {ஆவி} தன் இயல்பினால் சுறுசுறுப்பானதும், பிறருக்குள் செயல்பாட்டைத் தூண்டுவதும் ஆகும். ஏழு உலகங்களையும் செயலுக்கான தூண்டுதலைச் செய்யும் அதுவே {ஆவியே} உயர்ந்தது என்று உயர்ந்த ஆன்ம உள்ளொளி கொண்ட மனிதர்களால் சொல்லப்படுகிறது. இப்படியே இந்த அனைத்து கூறுகளிலும், நித்தியமான ஆவி தன்னை வெளிக்காட்டிக் கொள்வதில்லை; ஆனால், அது {ஆவி} ஆன்ம அறிவியலைக் கற்றறிந்தவர்களின் உயர்ந்த ஞானம் கொண்ட கூரிய பார்வையால் காணப்படுகிறது.
சுத்தமான மனம் கொண்ட ஒரு மனிதன், தனது இதயத்தைச் சுத்திகரித்துக் கொள்வதால், தனது செயல்களால் உண்டாகும் நல்ல மற்றும் தீய விளைவுகளை அழிக்கும் திறன் பெறுகிறான். அதனால் அவன் தனது அக ஆன்மாவின் ஞானத்தால் நித்தியமான நற்பேறை {பேரின்பத்தை} அடைகின்றான். அமைதியான நிலையும், இதயத்தைச் சுத்திகரித்துக் கொண்ட நிலையும், மகிழ்ச்சிகரமான மனநிலையில் ஆழ்ந்து உறங்கும் ஒருவனது நிலையைப் போன்றதே; அல்லது நிபுணத்துவம் வாய்ந்த கைகளால் ஒழுங்கமைக்கப்பட்ட விளக்கின் பிரகாசம் போன்றது. அற்பமான உணவை உட்கொண்டு சுத்த மனதோடு வாழும் ஒருவன் தனக்குள் பிரதிபலிக்கும் பரமாத்மாவைச் சுயமாகவே காண்கிறான். மாலைப்பொழுதிலும், இரவின் சில மணிநேரங்களிலும் மனதை ஒருமுகப் படுத்த பயின்று, திகைப்பூட்டும் விளக்கைப் போலப் பிரகாசிக்கும் தனது இதயத்தின் ஒளியில், குணங்களற்ற பரமாத்மாவை அவன் காண்கிறான். இப்படியே அவன் முக்தியையும் அடைகிறான்.
பேராசையும், கோபமும் எல்லாவகையிலும் அடக்கப்பட வேண்டும். இச்செயலே மனிதர்கள் பயில்வதற்கு ஏற்ற மிகவும் புனிதமான அறத்தைக் கொண்டிருக்கிறது. துயரம் மற்றும் தொல்லைகள் என்ற கடலை மனிதர்கள் கடப்பதற்கான வழிகள் என இதுவே கருதப்படுகிறது. கோபத்தின் தொடர்ச்சியாகத் தீமையில் மூழ்காமல், நேர்மையையும், கர்வத்தின் விளைவுகளில் இருந்து தனது அறங்களையும், மாயையின் விளைவுகளில் இருந்து கல்வியையும், மாயையில் இருந்து தனது சொந்த ஆவியையும் ஒருவன் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
கருணையே அறங்களில் {நற்பண்புகளில்} சிறந்தது. பொறுமையே சக்திகளுள் சிறந்தது. நமது ஆன்ம இயல்பின் ஞானமே அனைத்து ஞானங்களிலும் சிறந்தது. அறக் கடமைகள் அனைத்திலும் உண்மையே {சத்தியமே} சிறந்தது. உண்மை பேசுவது நல்லது. உண்மையின் அறிவும் {சத்தியம் குறித்த ஞானமும்} நல்லதே. ஆனால் எது அனைத்து உயிர்களுக்கும் நன்மையைப் பயக்குமோ அதுவே உயர்ந்த உண்மை {உயர்ந்த சத்தியம்} என்று அறியப்படுகிறது. எந்த வெகுமதியும், அருளும் எதிர்பாராமல் செயல்படும் ஒருவனும், தனது துறவின் தேவைக்காக அனைத்தையும் தியாகம் செய்தவனும் உண்மையான சந்நியாசியாவன். அவனே உண்மையான ஞானி. ஒரு குரு {பிரம்மம் குறித்த} புதிருக்கான குறிப்பைத் தான் தர முடியும். பிரம்மத்துடனான தொடர்பை நமது ஆன்ம குருவாலும் கற்றுத் தரமுடியாது. பொருள் நிறைந்த உலகைத் துறப்பதே யோகம் என்று அழைக்கப்படுகிறது
.
நாம் எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைக்காமல், அனைத்துடனும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். இந்த நமது தற்போதைய இருப்பில், எந்த உயிரினத்தையும் பழி வாங்கக்கூடாது. சுய தியாகம் {தன்னைத் தியாகம் செய்தல்}, நிம்மதி, நம்பிக்கையைத் துறத்தல், மன அமைதி ஆகியவையே ஆன்ம ஞானத்தை எப்போதும் அடைவதற்கான வழிகள். சுயத்தை அறிவதே {ஒருவனது ஆன்ம இயல்பை அறிவதே} ஞானத்தில் சிறந்தது.
இவ்வுலகிலும், அடுத்த உலகிலும் {இம்மையிலும் மறுமையிலும்}, உலகம் சார்ந்த அனைத்து விருப்பங்களையும் துறந்து, விருப்பு வெறுப்பற்ற அலட்சியப் போக்கை எடுத்துக் கொண்டால் அனைத்து துன்பங்களும் ஓய்ந்து போகும். மனிதர்கள் தங்கள் அறக் கடமைகளைத் தங்கள் புத்தியின் துணை கொண்டு நிறைவேற்ற வேண்டும். அடைவதற்கு மிகவும் அரிதான் மோட்சத்தை (முக்தியை) அடைய விரும்பும் முனிவர், துறவில் உறுதியாகவும், பொறுமையுடனும், சுயக் கட்டுப்பாட்டுடனும், தன்னை இந்த உலகத்தில் உள்ள பொருட்களுடன் கட்டிப் போடும் நீண்டகால விருப்பங்களைத் துறக்க வேண்டும். இவற்றையே பரமாத்மாவின் குணங்கள் என்று அழைக்கின்றனர்.
நாம் உணர்ந்திருக்கும் குணங்கள், அவனிடம் அகுணங்களாகச் {குணங்களற்றவையாகத் தன்னைச்} சுருக்கிக் கொள்கின்றன; அவன் எதனுடனும் பிணைப்புடையவன் அல்ல, அவனது ஆன்மப் பார்வையின் விரிவாக்கமும் வளர்ச்சியும் உணர்வால் மட்டுமே நாம் அறிய முடியும். அறியாமையின் மாயை விலக்கப்பட்டதும், இந்தக் கலப்படமற்ற உச்ச பேறு {பேரின்பம்} அடையப்படுகிறது. இன்பம் மற்றும் வலி சம்பந்தமான பொருட்களைக் கைவிடுவதாலும், இவ்வுலகின் பொருட்களில் தன்னைப் பிணைக்கும் உணர்வுகளைத் துறப்பதாலும், ஒரு மனிதன் பிரம்மத்தை (பரமாத்மாவை அல்லது முக்தியை) அடைகிறான். ஓ! நல்ல அந்தணரே {பிராமணோத்தமரே- கௌசிகரே}, நான் கேள்விப்பட்டவாறே, இவை அனைத்தையும், உமக்குச் சுருக்கமாக விவரித்திருக்கிறேன். வேறு எதை நீர் அறிய விரும்புகிறீர்" என்று கேட்டான் {தர்மவியாதன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.