A Sudra may become a Brahmana | Vana Parva - Section 211 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
சத்வ, ரஜஸ், தமஸ் குணங்களின் இயல்புகளையும், அக்குணங்கள் கொண்டவர்களின் தன்மைகளையும் தர்மவியாதன் கௌசிகருக்குச் சொன்னது...
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அந்த வேடன் {தர்மவியாதன்} இந்த மறைபொருள்களை விவரமாக எடுத்துக்கூறிய பிறகு, பெரும் கவனத்துடன் இருந்த அந்த அந்தணர் {கௌசிகர்}, மீண்டும் அவனிடம் நுட்பமானவை குறித்து விசாரித்தார். அந்த அந்தணர் {கௌசிகர்}, "சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய குணங்களுக்கு உரிய ஒழுக்கங்களை உள்ளது உள்ளபடி கேட்கும் எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டார். அதற்கு வேடன் {தர்மவியாதன்}, "நன்றி. நீர் கேட்பதை நான் உமக்குச் சொல்கிறேன். அது அதற்கு உரிய ஒழுக்கங்களை நான் விவரிக்கிறேன், கேளும். அவற்றில் தமஸ் குணம் (ஆன்ம) மாயையால் வகைப்படுத்தப்படுகிறது. ரஜஸ் குணம் (மனிதர்களைச் செயல்படத்) தூண்டுகிறது. சத்வ குணம் பெரும் கம்பீரத்துடன் இருக்கிறது. அதனால் அதுவே அவற்றில் {சத்வ, ரஜஸ், தமஸ் குணங்களில்} பெரியது என்று சொல்லப்படுகிறது.
ஆன்ம அறியாமை, மூடத்தனம், அறிவற்ற தன்மை, கனவிலேயே லயிப்பு, செயலற்ற தன்மை, சுறுசுறுப்பற்ற தன்மை, கோபம் மற்றும் கர்வத்தால் இயக்கம் ஆகியவற்றில் ஆதிக்கத்தில் பெரிதும் மூழ்கியவன், தமஸ் குண ஆதிக்கத்தில் இருப்பவனாகச் சொல்லப்படுகிறது. ஓ! அந்தண முனிவரே {கௌசிகரே}, ஏற்புடைய பேச்சு, சிந்தனாசக்தி, பொறாமையற்ற தன்மை, ஊக்கமான செயல்பாடுகளால் பலன்களை அடைய விருப்பம், நன்னடத்தை ஆகியவற்றைக் கொண்ட அற்புதமான மனிதன், ரஜஸ் குணத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. உறுதி, அமைதி, கோபமடையாமை, துர்க்குணத்தில் இருந்து விடுதலை, தன்னல விருப்பத்தால் கனிகளை {பலன்களை} அறுப்பதற்காக {பெறுவதற்காக} செயல்படுவதில் நிபுணத்துவம் இல்லாமை {லாபம் அடைவதில் விருப்பமில்லாமை}, ஞானம், பொறுமை ஆகியவற்றைக் கொண்டவன் சத்வ குணத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
சத்வ குணத்தைக் கொண்ட மனிதன், உலகப்பற்றால் ஆட்கொள்ளப்படும்போது, அவன் துயரால் பாதிக்கப்படுகிறான்; ஆனால், அவன் அதன் {உலகப்பற்றின்} முழு விளைவையும் அறியும்போது, அவன் உலகப்பற்றை வெறுக்கிறான். பிறகு உலக விவகாரங்களில் அலட்சிய உணர்வு அவனை ஆட்கொள்ளத் தொடங்குகிறது. பிறகு அவனது கர்வம் குறைகிறது, நீதியே அதிக முக்கியமாகிறது, அவனது முரண்பட்ட அறநெறி உணர்வுகள் ஒப்புரவாகின்றன {சமரசம் ஆகின்றன}. பிறகு, எந்தக் காரியத்திலும் சுயக்கட்டுப்பாடு தேவையற்றதாகிறது. ஓ! அந்தணரே {கௌசிகரே}, ஒரு மனிதன் சூத்திர சாதியில் பிறந்திருக்கலாம், ஆனால் அவன் நல்ல குணங்களைக் கொண்டிருந்தானானால், அவன் வைசிய நிலையையும், க்ஷத்திரியருக்கு ஒப்பான நிலையையும் அடையலாம். அவனே நேர்மையில் உறுதியாக இருந்தானானால், அவன் பிராமணனாகக் கூட ஆகலாம். இந்தக் குணங்களை நான் உமக்கு விவரித்துவிட்டேன். நீர் வேறு எதைக் கேட்க விரும்புகிறீர்?" என்று கேட்டான் {தர்மவியாதன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.