Duty of a House holder! | Vana Parva - Section 213 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
தர்மவியாதன் கௌசிகரைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று, தன் தாய் தந்தையை அறிமுகப்படுத்தி, தன் பெற்றோருக்குத் தான் செய்யும் பணிவிடைகளைச் சொன்னது…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! யுதிஷ்டிரா, முக்தி சம்பந்தமான இந்தப் புதிர்கள் அந்தணருக்கு விளக்கப்பட்ட போது, அவர் {அந்தணர் - கௌசிகர்}, பெரிதும் திருப்தியடைந்து, அந்த வேடனிடம் {தர்மவியாதனிடம்}, "நீ விளக்கிய யாவையும் பகுத்தறிவு கொண்டதாக இருக்கிறது. அறப்புதிர்கள் சம்பந்தமாக உனக்குத் தெரியாதது எதுவும் இல்லை என்று எனக்குப் படுகிறது" என்றார். வேடன் {தர்மவியாதன்}, "ஓ! நல்ல பெரும் அந்தணரே {கௌசிகரே}, நான் கோரும் அனைத்து அறத்தையும், இந்த அருள்நிலையை நான் அடைந்ததற்கான காரணத்தையும் உமது கண்களால் நீர் காண்பீர். வழிபடத்தகுந்த ஐயா, எழுந்து விரைவாக இந்த உள் அறைக்குள் நுழையும். ஓ! அறம் சார்ந்த மனிதரே {கௌசிகரே}, நீர் எனது தந்தையையும், தாயையும் காண வேண்டியது முறையாகும்" என்று சொன்னான் {வேடன் தர்மவியாதன்}.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இப்படிச் சொல்லப்பட்ட அந்தணர் {கௌசிகர்}, உள்ளே சென்று ஒரு அழகிய மாளிகையைக் கண்டார். தேவர்களால் போற்றப்படும் அவர்களது {தேவர்களது} அரண்மனைகளில் ஒன்றைப் போல, நான்கு அறைகளாகப் பிரிக்கப்பட்டு, இருக்கைகளுடனும், படுக்கைகளுடனும், சிறந்த நறுமணப் பொருட்களால் மணம் நிறைந்த அற்புதமான வீடாக அது இருந்தது. அவனது {வேடனின்} மரியாதைக்குரிய பெற்றோர், உணவுண்டு முடித்து, வெள்ளை ஆடைகளை உடுத்தி வசதியாக அமர்ந்திருந்தனர். அவர்களைக் கண்ட வேடன் {தர்மவியாதன்}, நெடுஞ்சாண் கிடையாக விழுந்து, தன் தலையை அவர்களது பாதங்களில் வைத்தான். அவனது வயது முதிர்ந்த பெற்றோர் அவனிடம் {வேடனிடம்}, "ஓ! பக்திமானே எழு. நீதி {தர்மம்} உன்னைக் காக்கட்டும்; உனது பக்திக்கான நாங்கள் உன்னிடம் மிகவும் திருப்தியாக இருக்கிறோம்; நீண்ட வாழ்நாள், ஞானம், உயர்ந்த புத்தி, உனது விருப்பங்கள் நிறைவேற்றம் ஆகியவை உனக்கு அருளப்படட்டும்.
நீ கடமையுணர்ச்சி கொண்ட நல்ல மகன். நாங்கள் நியாயமாகவும், தொடர்ச்சியாகவும் உன்னால் பார்த்துக் {கவனித்துக்} கொள்ளப்படுகிறோம். தேவர்களில் கூட உனக்கு {எங்களைத் தவிர} வேறு ஒரு தேவன் தேவையில்லை. தொடர்ந்து உன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அந்தணர்களின் சுயக்கட்டுப்பாட்டை அடைந்திருக்கிறாய். எங்களிடம் நீ கொண்டிருக்கும் பக்தியையும், சுயக்கட்டுப்பாட்டையும், அறங்களையும் கண்டு உனது முப்பாட்டன்களும், மூதாதையர்களும் தொடர்ந்து உன்னிடம் திருப்தியாகவே இருக்கின்றனர். எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும், எங்களைக் கவனிப்பதில் நீ எப்போதும் தடுமாறியதில்லை. உனது மனதில் {எங்களை எப்படித் திருப்தி செய்வது என்பதைத் தவிர} இப்போது வேறு எண்ணமே இல்லை என்று தெரிகிறது. ஜமதக்னியின் மகன் ராமன் {பரசுராமன்} தனது வயது முதிர்ந்த பெற்றோரைச் சேவித்தது போலவும் அதற்கு மேலும், ஓ! மகனே, நீ எங்களைச் சேவிக்கிறாய்" என்றனர் {தர்மவியாதனின் பெற்றோர்}.
பிறகு அந்த வேடன் {தர்மவியாதன்}, அந்த அந்தணரை {கௌசிகரை} தனது பெற்றோரிடம் அறிமுகப் படுத்தினான். அவர்கள் வழக்கமான நல்வரவு வழிபாட்டுடன் அவரை வரவேற்றனர். அந்தணரும் அவர்களது மரியாதையை ஏற்றுக் கொண்டு, அவர்களது இல்லத்தில் உள்ள அவர்களது பிள்ளைகள், பணியாட்கள் ஆகியோரின் நலம் குறித்தும், அவர்களது ஆரோக்கியம் குறித்தும் விசாரித்தார். அந்த வயது முதிர்ந்த இணை {ஜோடி}, "ஓ! அந்தணரே, எங்கள் வீட்டில், எங்கள் பணியாட்கள் உட்பட அனைவரும் நலமுடன் இருக்கிறோம். வழிபடத்தகுந்த ஐயா, நீர் இந்த இடத்தை எந்தச் சிரமமும் இல்லாமல் அடைந்தீரா?" என்று கேட்டனர்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அந்த அந்தணர் {கௌசிகர்}, "ஆம், சிரமமின்றி அடைந்தேன்" என்றார். பிறகு அந்த வேடன் அந்த அந்தணரிடம், "வழிபடத்தகுந்த ஐயா, இந்த எனது பெற்றோர்களே நான் வணங்கும் {உயிருள்ள} சிலைகளாகும். தேவர்களுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் நான் இவர்களுக்குச் செய்கிறேன். இந்திரனைத் தலைமையாகக் கொண்ட முப்பத்து மூன்று தேவர்களும் மனிதர்களால் வழிபடப்படுவதைப் போல, இந்த எனது வயதுமுதிர்ந்த பெற்றோர் என்னால் வழிபடப்படுகின்றனர். தேவர்களுக்குக் காணிக்கைகள் பெற அந்தணர்கள் முயற்சிப்பதைப் போல, நானும் இந்த இருவருக்காகவும் (எனது தெய்வச் சிலைகளுக்காக} விடாமுயற்சியுடன் செயல்படுகிறேன். ஓ! அந்தணரே {கௌசிகரே}, இந்த எனது தந்தையும் தாயுமே எனக்குத் தலைமையான தெய்வங்கள். நான் அவர்களுக்கு மலர்களும், கனிகளும், ரத்தினங்களும் காணிக்கையாகக் கொடுத்து அவர்களை எப்போதும் திருப்தி செய்ய முயல்கிறேன். கற்றவர்களால் சொல்லப்படும் மூன்று புனிதமான நெருப்புகளும் எனக்கு இவர்களே; ஓ! அந்தணரே, அவர்கள் எனக்கு வேள்விகளைப் போலவும், நான்கு வேதங்களைப் போலவும் நன்மையானவர்களாகத் தெரிகிறார்கள்.
எனது, ஐந்து உயிரைக் கொடுக்கும் காற்றுகளும் {வாயுக்களும்}, எனது மனைவி, பிள்ளைகள், நண்பர்கள் ஆகிய அனைவரும் (தங்கள் சேவையை அர்ப்பணிப்புடன்) அவர்களுக்காகவே செயல்படுகின்றனர். எனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கூடி நான் எப்போதும் அவர்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். ஓ! நல்ல அந்தணரே, அவர்கள் குளிப்பதற்கும், கால் கழுவுவதற்கும், உணவு உண்பதற்கும், நான் எனது கைகளால் அவர்களுக்கு உதவுகிறேன். அவர்களுக்கு ஏற்பில்லாததை விடுத்து, அவர்களுக்கு ஏற்புடையதை மட்டுமே நான் அவர்களிடம் சொல்கிறேன். நான், அவர்களுக்கு ஏற்புடையதைச் செய்வது, நீதியற்ற காரியமாக இருந்தாலும் அதையே நான் உயர்ந்த கடமையாகக் கருதுகிறேன். ஓ! அந்தணரே {கௌசிகரே}, நான் அவர்களைக் கவனிப்பதில் ஊக்கத்துடன் இருப்பேன். ஓ! நல்ல அந்தணரே {பிராமணோத்தமரே - கௌசிகரே}, பெற்றோர் இருவர், புனித நெருப்பு, ஆன்மா, ஆன்ம குரு ஆகிய ஐவரும், செழிப்பைத் தேடும் ஒருவனின் உயர்ந்த மதிப்புக்கு உரியவர்களாவர். அவர்களை முறையாகச் சேவித்தால், ஒருவன் புனித நெருப்பை நிரந்தரமாக எரிய விட்டதற்கான தகுதியை அடைகிறான். இதுவே இல்லறவாசியின் நித்தியமான தவிர்க்கக்கூடாத கடமையாகும்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.