Kausika departed from the fowler! | Vana Parva - Section 215 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
தர்மவியாதன் தனது முற்பிறப்பு வினையைக் கௌசிகரிடம் சொன்னது; தர்மவியாதனிடமிருந்து பல அறங்களை அறிந்த கௌசிகர் தன் வீட்டுக்குத் திரும்பி, தனது பெற்றோருக்குப் பணிவிடை செய்தது…
வேடன் {தர்மவியாதன்} தொடர்ந்தான், "இப்படி அந்த முனிவரால் சபிக்கப்பட்ட நான், இந்த வார்த்தைகளால் அவரைச் சாந்தப்படுத்த முயன்றேன். "ஓ! முனிவரே, என்னை மன்னியும். இத்தீச்செயலை நான் அறியாமல் செய்துவிட்டேன். அவை அனைத்தையும் மன்னிப்பீராக. ஓ! வழிபடத்தகுந்த ஐயா, உம்மை ஆற்றிக் கொள்ளும்" என்றேன். அதற்கு அந்த முனிவர், "நான் உச்சரித்த தீச்சொல் {சாபம்} பொய்யாக முடியாது, இது உறுதி. ஆனால் உன்மீது ஏற்படும் கருணையால், நான் உனக்கு ஒரு உதவியைச் செய்கிறேன். சூத்திர வர்க்கத்தில் பிறந்தாலும், நீ பக்திமானாகவே இருப்பாய். சந்தேகமற நீ உன் பெற்றோர்களை மதிப்பாய்; அப்படி அவர்களை மதிப்பதால் நீ பெரும் ஆன்ம முழுமையை அடைவாய். உனது முற்பிறவியின் நிகழ்வுகளையும் நினைவில் கொண்டிருந்து நீ சொர்க்கத்திற்குச் செல்வாய்; இந்தத் தீச்சொல்லின் {சாபத்தின்} காலம் நிறைவடையும்போது, நீ மீண்டும் பிராமணனாவாய்" என்றார். ஓ! மனிதர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, முற்காலத்தில் கடுஞ்சக்தி படைத்த அந்த முனிவரால் இப்படியே சபிக்கப்பட்டேன். இப்படியே அவர் {அம்முனிவர்} என்னை ஆறுதலடையச் செய்தார். பிறகு, ஓ! நல்ல அந்தணரே {கௌசிகரே}, நான் அவரது உடலில் இருந்து கணையை உருவி, அவரை ஆசிரமத்திற்குக் கொண்டு சென்றேன். அவர் உயிர் துறக்கவில்லை (குணமடைந்தார்). ஓ! நல்ல அந்தணரே {கௌசிகரே}, இப்படியே, பழங்காலத்தில் எனக்கு என்ன நடந்தது என்பதையும், இதன் பின் நான் எப்படிச் சொர்க்கத்திற்குச் செல்லலாம் என்பதையும் உமக்கு விளக்கிச் சொல்லிவிட்டேன்" என்றான் {தர்மவியாதன்}.
அதற்கு அந்த அந்தணர் {கௌசிகர்}, "ஓ! பெரும் புத்திக்கூர்மை கொண்டவனே {தர்மவியாதா}, அனைத்து மனிதர்களும் இன்பத்திற்கும், துன்பத்திற்கும் ஆட்படுகின்றனர். எனவே, நீ அதற்காகக் கவலைகொள்ளல் ஆகாது. உனது (தற்போதைய) குலத்தின் வழக்கத்திற்குக் கீழ்ப்படிந்தே நீ இத்தகு தீய வழிகளில் செல்கிறாய். ஆனால் நீ எப்போதும் அறத்திற்கு உன்னை அர்ப்பணித்து, உலகத்தின் வழிகளையும் புதிர்களையும் அறிந்திருக்கிறாய். ஓ! கற்றவனே {தர்மவியாதா}, இவை உனது தொழிலின் கடமைகளாகும். அதனால் தீய கர்மத்தின் கறை உன் மீது ஒட்டாது. இங்குச் சிறிது காலம் வசித்த பிறகு, நீ பிராமணனாவாய். இப்போது கூட நான் உன்னைப் பிராமணனாகவே கருதுகிறேன். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. வீணனாக, தற்பெருமை கொண்டவனாக, தீமைகளுக்கு அடிமையாக, தீயவற்றோடு தொடர்பு கொண்டு இழிந்த நடைமுறைகள் கொண்ட ஒரு பிராமணன், சூத்திரனைப் போன்றவனாவான். மறுபுறம், நீதி நேர்மை, சுயக்கட்டுப்பாடு, சத்தியம் ஆகிய அறங்களால் எப்போதும் அலங்கரிக்கப்பட்ட ஒரு சூத்திரனை, நான் பிராமணனாகக் கருதுகிறேன். ஒரு மனிதன் தனது குணத்தால் பிராமணனாகிறான்; தனது சொந்த தீய கர்மத்தால் ஒரு மனிதன் தீமையையும், பயங்கர விதியையும் அடைகிறான். ஓ! நல்லவனே {தர்மவியாதா}, உன்னில் இருந்த பாவங்கள் அழிந்து விட்டன என நான் நம்புகிறேன். நீ இதற்காகத் துயர் கொள்ளல் ஆகாது. அறம்சார்ந்திருந்து, உலகத்தின் வழிகள் மற்றும் புதிர்களை அறிந்திருக்கும் உன்னைப் போன்ற மனிதர்கள் துயர் கொள்ள எந்தக் காரணமும் கிடையாது" என்றார் {கௌசிகர்}.
அதற்கு அந்த வேடன் {தர்மவியாதன்}, "உடல்சார்ந்த துன்பங்களை மருந்துகள் கொண்டு களைய வேண்டும்; மனம் சார்ந்தவைகளை ஆன்ம ஞானம் கொண்டு களைய வேண்டும். இதுவே ஞானத்தின் சக்தியாகும். இதை அறிந்த ஞானிகள் சிறுபிள்ளைகளைப் போல நடந்து கொள்ளக்கூடாது. தனக்கு ஏற்பில்லாத ஏதோ ஒரு சம்பவம் நடப்பதால், அல்லது தனக்கு ஏற்புடையதோ மிகவும் விருப்பமுள்ளதோவான ஏதோ ஒன்று நடைபெறாததால், சிறுபுத்தி கொண்டவர்களே துயரடைவர். உண்மையில் இந்தக் குணத்திற்கு (இன்பம் அல்லது துன்பம்) அனைத்து உயிரினங்களும் ஆட்படுகின்றன. இந்தத் துயரத்திற்கு ஆட்படாத உயிரினமோ, வர்க்கமோ ஒன்றுகூடக் கிடையாது. இத்தீமையை அறிந்த மக்கள் விரைவில் தங்கள் பாதையைச் சீர் செய்து கொள்கின்றனர். ஆரம்பத்திலேயே இதைக் கண்டு கொண்டால், அவர்கள் மொத்தமாக இதில் வெற்றி கொள்கின்றனர். இதற்காகத் {நடந்துவிட்டதே, நடக்கவில்லையே என்று} துயர் கொள்பவன், தன்னைத்தானே சிரமத்திற்கு உட்படுத்திக் கொள்கிறான். தங்களை இன்பமாகவும் மனநிறைவுள்ளவனாகவும் மாற்றும் ஞானத்தைக் கொண்டு ஞானிகள், இன்ப துன்பங்களை அலட்சியப்படுத்தி, உண்மையில் இன்பமாக இருக்கிறார்கள். ஞானிகள் எப்போதும் மனநிறைவுடன் இருக்கிறார்கள். மூடர்கள் எப்போதும் நிறைவடையாமலேயே இருக்கிறார்கள். இந்த அதிருப்திக்கு எல்லையே இல்லை. மன நிறைவே உயர்ந்த இன்பமாகும். சரியான வழியை அடைந்த மக்கள், துன்பப்படுவதில்லை. அவர்கள் எப்போதும் அனைத்து உயிர்களின் விதியின் முடிவை உணர்ந்திருக்கின்றனர்.
ஒருவன் அதிருப்திக்கு {விஷாதம்} வழி கொடுக்கக்கூடாது. அது {விஷாதம்} கடும் நஞ்சைப் போன்றது. ஒரு சீற்றம் கொண்ட பாம்பு, குழந்தையைக் கொல்வதைப் போல, அது {விஷாதம்} வளர்ச்சியற்ற புத்தி கொண்ட மனிதர்களைக் கொல்கிறது. தனது வீரியத்தைக் காட்ட வேண்டிய தருணம் தன்னை அணுகும்போது, மனக்கலக்கமடைந்து, சக்தியை இழக்கும் ஒரு மனிதன் ஆண்மையற்றவனாவான். நமது செயல்கள் அனைத்தும் அதன் விளைவுகளால் நம்மைத் தொடர்கின்றன. செயலற்ற அலட்சியப் போக்குக்குத் தன்னை ஒப்படைக்கும் எவனும் எந்த நல்லதையும் அடைவதில்லை. முணுமுணுப்பதை விட, ஒருவன் (ஆன்ம) துயரத்தில் இருந்து விடுபட வழியைக் கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும். முக்திக்கான வழியைக் கண்டடைந்த பிறகு ஒருவன் தன்னை உணர்வுகளில் இருந்து {சிற்றின்பத்தில் இருந்து} விடுவித்துக் கொள்ள வேண்டும். ஆன்ம ஞானத்தின் உயர்ந்த நிலையை அடைந்த மனிதன், அனைத்துப் பொருட்களுக்கும் எப்போதும் ஏற்படும் பெரும் பற்றாக்குறையைக் (உறுதியற்றவைகளைக்) குறித்த உணர்வுடனேயே {விழிப்புடனேயே} இருக்கிறான். விதியின் முடிவை கருத்தில் கொண்டிருக்கும் அப்படிப்பட்ட மனிதன், துயரப்பட மாட்டான். ஓ! கற்றவரே {கௌசிகரே}, நானும் கூடத் துயரப்படுவதில்லை; நான் எனது (இவ்வாழ்வின்) நேரத்தைக் கழித்துக் கொண்டு இங்கே இருக்கிறேன். ஓ! மனிதர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, இக்காரணத்திற்காக நான் (சந்தேகங்களால்) மனக்கலக்கம் அடைவதில்லை" என்றான் {தர்மவியாதன்}.
அதற்கு அந்த அந்தணர் {கௌசிகர்}, "நீ ஞானமும், ஆன்ம அறிவில் உயர்வும், பரந்த அறிவும் கொண்டிருக்கிறாய். பிரியா விடை பெறுகிறேன், ஓ! பக்தி மானே {தர்மவியாதா}, நீ செழிப்புடன் இருப்பாயாக, நீதி உன்னைக் காக்கட்டும், அறம் பயில்வதில் சிரத்தையுள்ளவனாக இருப்பாயாக" என்று சொன்னார் {கௌசிகர்}.
அதற்கு அந்த அந்தணர் {கௌசிகர்}, "நீ ஞானமும், ஆன்ம அறிவில் உயர்வும், பரந்த அறிவும் கொண்டிருக்கிறாய். பிரியா விடை பெறுகிறேன், ஓ! பக்தி மானே {தர்மவியாதா}, நீ செழிப்புடன் இருப்பாயாக, நீதி உன்னைக் காக்கட்டும், அறம் பயில்வதில் சிரத்தையுள்ளவனாக இருப்பாயாக" என்று சொன்னார் {கௌசிகர்}.
{மேலே அதிருப்தி என்று குறிப்பிடப்பட்டுள்ள சொல், வடமொழி மூலத்தில் விஷாதம் என்று இருக்கிறது. அதிருப்தி என்பதே அதன் பொருள். ஆனால், இங்கு அதிருப்தி, மனக்கலக்கம், குழப்பம் ஆகியவற்றின் கலவையாகப் பொருள் தருகிறது என்கிறார் கங்குலி}
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அந்த வேடன் {தர்மவியாதன்} அவரிடம் {கௌசிகரிடம்}, "அப்படியே ஆகட்டும்" என்றான். அந்த நல்ல அந்தணர் அவனை வலம் வந்த பிறகு (1) விடைபெற்றுச் சென்றார். தனது வீட்டிற்குத் திரும்பிய அந்த அந்தணர், தனது முதிர்ந்த பெற்றோரைக் கவனிப்பதில் மிகவும் சிரத்தை கொண்டார். ஓ! பக்தியுள்ள யுதிஷ்டிரா, என் நல்ல மகனே, இப்படியே, நீ என்னை உரைக்கக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, கணவர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் பெண்களின் அறத்தையும், மகனுக்குரிய பக்தியையும் சொல்வதற்காக அறநெறி வழிமுறைகள் நிறைந்த இந்த வரலாற்றை உனக்கு விரிவாக உரைத்துவிட்டேன்" என்றார் {மார்க்கண்டேயர்}. யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}, "ஓ! பக்திமிக்க அந்தணரே, முனிவர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, இந்த அற்புதமான நல்ல அறநெறிக் கதையை எனக்கு உரைத்திருக்கிறீர்; ஓ! கல்விமானே, நீர் சொன்னதைக் கேட்டுக் கொண்டே, எனது காலம் ஒரு கணம் போலச் சென்றுவிட்டது; ஆனாலும், ஓ! வழிபடத்தகுந்த ஐயா, அறநெறியைச் சொற்பொழிவைக் கேட்பது (2) இன்னும் எனக்குத் திகட்டவில்லை {தெவிட்டவில்லை}" என்றான் {யுதிஷ்டிரன்}.
(1) இது பிரியாவிடை பெறுவதற்கான ஒரு வகை இந்துமத வழிமுறை [ஆசாரம்] என்கிறார் கங்குலி.
(2) கர்மம் என்ற சொல்லை மொழிபெயர்ப்பது மிகவும் கடினமாகும். அறம், அறநெறி ஆகியவை பழங்காலத்து இந்துவின் மனதில் தவிர்க்க முடியாத அளவுக்கு ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாய் இருந்தது என்கிறார் கங்குலி
கங்குலியின் மொழிபெயர்ப்பில் மேற்கண்ட வேடனின் பெயர் தர்மவியாதன் என்பதற்கான எந்தக் குறிப்பும் இல்லை. வராக புராணத்தில் இந்த வேடனின் பெயர் தர்மவியாதன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனாலேயே அவன் சம்பந்தப்பட்ட பதிவுகள் அனைத்திலும் அடைப்புக்குறிக்குள் {தர்மவியாதன்} தர்மவியாதன் என்ற பெயரை இட்டுவந்திருக்கிறேன். வடமொழியில் வியாதன் என்றால் வேடன் என்று பொருள். அவன் அறம்சார்ந்த வேடனாக இருந்ததால் தர்மவியாதன் என்று பெயர் ஏற்பட்டிருக்கக்கூடும்.மேலும், வேடனுக்கும் {தர்மவியாதனுக்கும்} அந்தணருக்கும் {கௌசிகருக்கும்} ஏற்படும் இந்த விவாதம் வியாத கீதை என்று புகழ்பெற்று இருந்திருக்கிறது.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.