Agni and Angiras! | Vana Parva - Section 216 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனிடம் அக்னியின் தவம் மற்றும் அங்கிரஸ் முனி அக்னியாகச் செயல்பட்ட வரலாறு ஆகியவற்றைச் சொன்னது; அக்னி அங்கிரஸ் உரையாடல்; அங்கிரஸ் அக்னியையே மீண்டும் நெருப்புக் கடவுளாகத் தொடரச் சொன்னது;
அங்கிரஸ் முனிவர் |
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அறம்சார்ந்த மன்னனான யுதிஷ்டிரன், இந்த அற்புதமான அறச் சொற்பொழிவைக் கேட்ட பிறகு, மீண்டும் மார்க்கண்டேய முனிவரிடம், "பழங்காலத்தில் நெருப்புக் கடவுள் {அக்னி தேவன்} ஏன் தன்னை நீருக்குள் ஒளித்துக் கொண்டான்? அவன் {அக்னி} மறைந்த போது, பெரும் பிரகாசம் கொண்ட அந்த அங்கிரஸ், {தானப்பலிகளில்} காணிக்கைகளைத் தெரிவிப்பதற்கு {தேவர்களுக்கு எடுத்துச் செல்லப்} பயன்பட்டு [1], நெருப்புக் கடவுளாக {மற்றுமொரு அக்னி தேவனாக} ஏன் அலுவல் புரிந்தார்? இருப்பது ஒரே நெருப்புதான். ஆனால், அதன் செயல்களின் இயல்புக்கு ஏற்ப, அது பலவாகத் தன்னைப் பிரித்துக் கொள்வதைக் காண முடிகிறதே. ஓ! வழிபடத்தகுந்த ஐயா {மார்க்கண்டேயரே}, குமரன் {முருகன்} [2] எப்படிப் பிறந்தான்? அவன் அக்னியின் {நெருப்பு தேவனின்} மகன் என்று எப்படி அறியப்பட்டான்? அவன் ருத்திரனாலோ, கங்கையாலோ, கிருத்திகையாலோ எப்படிப் பெறப்பட்டான்? இவை யாவையும் குறித்து நான் ஞானமடைய நெடுங்காலமாக விரும்புகிறேன். ஓ! பிருகு குலத்தின் உன்னத வாரிசே {மார்க்கண்டேயரே}, நடந்ததை நடந்தவாறே கற்க நான் விரும்புகிறேன். ஓ! பெரும் முனிவரே, நான் பெரும் ஆவலால் நிறைந்திருக்கிறேன்" என்றான் {யுதிஷ்டிரன்}.
அதற்கு மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, "கோபத்தால் நிறைந்திருந்த, தானங்களைச் சுமந்து செல்பவன் (அக்னித் தேவன்), தவமிருப்பதற்காகக் கடலின் நீருக்குள் எப்படிச் சென்றான்? புகழத்தக்க அங்கிரஸ் தன்னை அக்னித் தேவனாக மாற்றிக் கொண்டு, இருளை அழித்து, அவரது சுட்டெரிக்கும் கதிர்களால் எப்படி உலகை விரக்தியடையச் செய்தார்? என்பது தொடர்பாகக் கற்றோர் இந்தப் பழங்கதையைச் சொல்கின்றனர். ஓ! நீண்ட கரம் கொண்ட வீரனே {யுதிஷ்டிரா} பழங்காலத்தில், பெரும் அங்கிரஸ், தனது ஆசிரமத்தில் ஓர் அற்புதமான தவத்தைச் செய்தார்; அதனால் அவர் தானங்களைச் சுமப்பவனான நெருப்பு தேவனையும் {அக்னித் தேவனை} பிரகாசத்தில் விஞ்சி, அந்த நிலையிலேயே முழு அண்டத்துக்கும் ஒளியூட்டினார்.
அந்நேரத்தில் அக்னித் தேவனும் ஒரு தவத்தைச் செய்து கொண்டிருந்தான். அவரது {அங்கிரசின்} பிரகாசத்தால் அவன் பெரும் விரக்தியடைந்திருந்தான். அவன் {அக்னி} விரக்தியடைந்திருந்தானே ஒழிய என்ன செய்வது என்பதை அறியவில்லை. பிறகு, அந்த வழிபடத்தகுந்த தேவன் {அக்னி} தனக்குள்ளேயே, "இந்த அண்டத்திற்காகப் பிரம்மன் மற்றுமொரு அக்னி தேவனைப் படைத்துவிட்டான். நான் தவம் மேற்கொண்டிருப்பதால், நெருப்பில் உறையும் தேவனான எனது சேவைகள் முடிந்துவிட்டனவே" என்று நினைத்து, தன்னை எப்படி மீண்டும் நெருப்புத் தேவனாக நிறுவி கொள்வது என்பதைக் குறித்துச் சிந்தித்தான்.
முழு அண்டத்துக்கும் நெருப்பைப் போல வெப்பத்தைத் தந்து கொண்டிருந்த அந்தப் பெரும் முனிவரை {அங்கிரசை} அவன் கண்டு, அச்சத்துடன் மெதுவாக அவரை அணுகினான் {அக்னித் தேவன்}. ஆனால் அங்கிரஸ் அவனிடம் {அக்னி தேவனிடம்}, "அண்டத்தை அசைவூட்டி விரைவாக நீ மீண்டும் உன்னை நிறுவிக் கொள். உறுதியான மூன்று உலகங்களிலும் நீ நன்று அறியப்பட்டிருக்கிறாய். மேலும், இருளை விலக்க நீயே முதலில் பிரம்மனால் படைக்கப்பட்டவன். ஓ! இருளை அழிப்பவனே, உனக்கு உரிய இடத்தை நீ விரைவாக ஆக்கிரமித்துக் கொள்" என்றார் {அங்கிரஸ்}.
அக்னி {அங்கிரஸிடம்}, "என் புகழுக்கு இப்போது இவ்வுலகில் பழுது ஏற்பட்டுள்ளது. நீரே நெருப்பு தேவன் ஆகிவிட்டீர். மக்கள் உம்மையே அறிவர். என்னை அறியமாட்டார்கள். நான் நெருப்பு என்ற நல்ல நிலையைத் துறந்துவிட்டேன். நீரே புராதான நெருப்பாகிக் கொள்ளும். நான் இரண்டாவதாகவோ பிரஜாபத்ய நெருப்பாகவோ {பிரஜாபத்யாக்னியாகவோ} அலுவல் புரிகிறேன்" என்றான் {அக்னி}. அதற்கு அங்கிரஸ் {அக்னி தேவனிடம்}, "நீயே நெருப்பு தேவனாகவும் {அக்னித் தேவனாகவும்}, இருளை விலக்குபவனாகவும் ஆகு. மனிதர்கள் சொர்க்கத்திற்குச் செல்லும் வழியைச் சுத்தப்படுத்தும் புனிதமான உனது கடமையைச் செய். ஓ! தலைவா {அக்னி தேவா}, என்னை விரைவாக உனது மூத்த பிள்ளையாகச் செய்" என்றார் {அங்கிரஸ்}.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அங்கிரசின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அக்னி தேவன் விரும்பியவாறே செய்தான். ஓ! மன்னா, அங்கிரஸ் பிருஹஸ்பதி என்ற பெயர் கொண்ட மகனைப் பெற்றிருந்தார். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அக்னியால், அங்கிரசுக்கு உண்டான முதல் மகன் அவர் {பிருஹஸ்பதி} என்பதை அறிந்த தேவர்கள், அங்கு வந்து அந்தப் புதிரைக் குறித்து விசாரித்தனர். இப்படித் தேவர்களால் கேட்கப்பட்ட அவர் {அங்கிரஸ்} அவர்களுக்கு அவ்விஷயத்தில் ஞானத்தைக் கொடுத்தார். தேவர்களும் அங்கிரசின் விளக்கத்தை ஏற்றனர். இது தொடர்பாக, ஒவ்வொரு பயன்களுக்காக, அந்தணர்களால் பல்வேறு வகையில் அறியப்படும், பெரும் பிரகாசம் கொண்ட நெருப்பின் {அக்னியின்}, அற {தர்ம} வகைகளைக் {Religious sorts} குறித்து நான் உனக்கு விவரிக்கிறேன்.
[1] தேவர்களுக்காக வழங்கப்படும் தானங்களை அக்னியே {அ} நெருப்பே வெளிப்படுத்த வேண்டும் என்கிறார் கங்குலி.
[2]இங்கு குமரன் என்றால் சிறுவன் என்று பொருள் என்கிறார் கங்குலி
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.