The daughters of Angiras! | Vana Parva - Section 217 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
அங்கிரசின் மகள்களின் பெயர்ப்பட்டியலை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது...
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! குருகுலத்தின் ஆபரணமே {யுதிஷ்டிரா}, பிரம்மனின் மூன்றாவது மகனான அவருக்கு {அங்கிரசுக்கு} சுபை என்ற பெயரில் மனைவி இருந்தாள். அவள் {சுபை} மூலமாக அவர் {அங்கிரஸ்} பெற்ற பிள்ளைகளைக் குறித்துக் கேள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவரது {அங்கிரசின்} மகனான பிருஹஸ்பதி {பிரகஸ்பதி}, புகழ்பெற்றவராகவும், பெரிய இதயம் படைத்தவராகவும், பெரும் உடல் வீரியம் பெற்றவராகவும் இருந்தார். அவரது மேதமை மற்றும் கல்வி ஆழமானதாக இருந்தது. மேலும் அவர் {பிருஹஸ்பதி} ஒரு ஆலோசகராகப் பெரிய புகழை அடைந்திருந்தார். பானுமதியே அங்கிரஸ் பெற்ற மகள்களில் மூத்தவளாவாள். பானுமதியே அவரது {அங்கிரசின்} பிள்ளைகள் அனைவரிலும் மிகவும் அழகானவளாக இருந்தாள். ராகா [1] என்றுஅங்கிரசின் இரண்டாவது மகள் அழைக்கப்பட்டாள். எல்லா உயிரினங்களின் அன்புக்கு அவள் இலக்காக இருந்ததால், அவளுக்கு {ராகாவிற்கு} அப்பெயர் சூட்டப்பட்டது. சினீவாலி என்பவள் அங்கிரசின் மூன்றாவது மகளாவாள். ஒருநேரம் தெரிவது போலவும், ஒரு நேரம் தெரியாதது போலவும் அவள் மெலிதாக இருந்ததால், அவள் ருத்திரனின் மகளைப் போல எண்ணப்பட்டாள். ஆர்ச்சீஸ்மதி அவரது நான்காவது மகளாவாள். அவளது பேரொளி கொண்ட பெரும் பிரகாசத்துக்காக அவளுக்கு அப்பெயர் சூட்டப்பட்டது. ஹவிஷ்மதி என்ற பெயரால் அவரது ஐந்தாவது மகள் அழைக்கப்பட்டாள். அவள் ஹவிஸ்களையோ காணிக்கைகளையோ {தானபலிகளையோ} ஏற்றுக் கொண்டதால் அவளுக்கு அப்பெயர் சூட்டப்பட்டது. மஹிஷ்மதி என்று பக்தையான அங்கிரசின் ஆறுவது மகள் அழைக்கப்படுகிறாள். ஓ! ஆர்வம் கொண்டவனே {யுதிஷ்டிரா}, அங்கிரசின் ஏழாவது மகள் மஹாமதி என்ற பெயரால் அறியப்படுகிறாள். அவள் எப்போதும் பெரும் பிரகாசம் கொண்ட வேள்விகளில் இருந்தாள். ஒப்பற்றவள், பகுதி இல்லாதவள் {without portion} என்ற அழைக்கப்படும் அந்த அங்கிரசின் வழிபடத்தகுந்த மகளைக் {மஹாமதியைக்} கண்டு, ஆச்சரியமடைந்த மனிதர்கள் குஹு, குஹு என்று சொல்வதால், அவள் குஹு என்ற பெயரால் {பெயராலும்} அறியப்படுகிறாள்.
[1] இங்கே ராகா என்பது அன்பு என்ற பொருளாகும் என்கிறார் கங்குலி
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.