The fire children of Vrihaspati! | Vana Parva - Section 218 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
பிருஹஸ்பதியின் பிள்ளைகள் குறித்து மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்கு விளக்கியது....
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "பிருஹஸ்பதிக்குச் {பிரகஸ்பதிக்கு} சந்திரலோகத்தைச் சேர்ந்த (தாரா என்று அழைக்கப்பட்ட) ஒரு மனைவி இருந்தாள். அவள் {தாரா} மூலமாக அவருக்கு {பிருஹஸ்பதிக்கு} நெருப்பின் சக்தி கொண்ட ஆறு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். சஞ்சு {சம்யு} {1} என்ற பெயர் கொண்ட ஒரு மகன் பிருஹஸ்பதிக்கு இருந்தான். நெருப்பாக இருந்த அவன் {சம்யுவின்} மீதிருக்கும் மரியாதையால், பௌர்ணமஸ்ய மற்றும் இதர வேள்விகளில் அவனுக்கு காணிக்கையாக தெளிந்த நெய் அளிக்கப்படுகிறது. அவன் {சஞ்சு} பெரும் தவத்தகுதி கொண்டவனாக இருந்தான். சதுர்மாஸ்யம் (நான்கு மாத வேள்வி} மற்றும் அஸ்வமேத (குதிரை) வேள்விகளில், அவனுக்கே {சஞ்சுவுக்கே} முதல் மரியாதை செய்யப்படுகிறது. இந்தப் பலமிக்க நெருப்பானவன் {அக்னி} எண்ணற்ற சுடர்களால் குறிக்கப்படுகிறான். சஞ்சுவின் மனைவி சத்யை என்று அழைக்கப்பட்டாள். அவள் ஒப்பற்ற அழகு படைத்தவளாக இருந்தாள். உண்மையின் {சத்தியத்தின்} பொருட்டு அவள் தர்மத்தில் (நீதியில்) இருந்து உதித்தாள்.
அந்தச் சுடர்விட்டெரியும் நெருப்பானவன், அவரது {பிருஹஸ்பதியின்} மகனாவான் {சஞ்சு}, அவனுக்கு {சஞ்சுவுக்குப்} பெரும் அறத்தகுதிகள் கொண்ட மூன்று மகள்களும் இருந்தனர். வேள்விக் காணிக்கைகளில் முதல் மரியாதை செய்யப்படும் நெருப்பானவனான, அவனது {சஞ்சுவின்} முதல் மகன் பரத்வாஜன் என்று அழைக்கப்பட்டான். சஞ்சுவின் இரண்டாவது மகன் பரதன் என்று அழைக்கப்பட்டான். அனைத்து முழு நிலவு நாட்களிலும் செய்யப்படும் (பௌர்ணமாஸ்ய} வேள்விகளில் (சுருவம் என்று அழைக்கப்படும்) வேள்வி அகப்பையால் நீர்க்காணிக்கையான தெளிந்த நெய் அவனுக்கு {பரதனுக்கு} மரியாதை செய்யவே காணிக்கையிடப்படுகிறது. இதைத் தவிர்த்து உள்ள மூன்று மகன்களில் அந்தப் பரதனே மூத்தவன். அந்தப் பரதனுக்கு, பரதன் என்ற {தன்} பெயரிலேயே ஒரு மகனும், பாரதி என்று அழைக்கப்பட்ட மகளும் இருந்தனர். அந்தப் பரத நெருப்பானவர், பிரஜாபதியான பரத அக்னியின் {நெருப்பின்} மகனாவார்.
ஓ! பாரதக் குலத்தின் ஆபரணமே {யுதிஷ்டிரா}, அவன் {பரதன்} பெரிதும் மதிக்கப்படுவதால், அவர் பெரியவன் {பாவகன்} என்று அழைக்கப்பட்டான். வீரை என்பவள் பரத்வாஜனின் மனைவியாவாள்; அவள் வீரன் என்பவனைப் பெற்றெடுத்தாள். அவன் {வீரன்} சோமனைப் போலத் தெளிந்த நெய்யால் வழிபடப்படுகிறான் என்று அந்தணர்களால் சொல்லப்படுகிறது. இரண்டாம் கட்ட தெளிந்த நெய் காணிக்கைகளில் அவன் {வீரன்} சோமனுடன் சேர்த்துக் கொள்ளப்படுகிறான். அவன் {வீரன்} ரதப்பிரபு, ரதத்வானன், கும்பரேதன் என்றும் அழைக்கப்படுகிறான். அவன் {வீரன்} தனது மனைவியான சரயு மூலம் சித்தி என்ற மகனைப் பெற்றெடுத்தான். அவன் தனது ஒளியினால் சூரியனையே மறைத்தான். நெருப்பு வேள்விக்குத் தலைமையேற்கும் மேதையாக இருப்பதால், அவன் {சித்தி} நெருப்புக் குறித்த துதிகளில் எப்போதும் குறிக்கப்படுகிறான்.
நிஸ்சயவனன் {2} {பிருஹஸ்பதியின் இரண்டாவது மகன்} என்ற நெருப்பானவன் பூமியை மட்டும் புகழ்கிறான்; அவன் புகழ், பகட்டு மற்றும் செழிப்பால் பாதிக்கப்படுவதில்லை. சுத்தமான சுடரால் ஒளிரும் பாவமற்ற நெருப்பான சத்யன் அவனது மகனாவான். இவன் சுவடுகள் அனைத்திலிருந்தும் விடுபட்டவன். பாவங்களால் இவன் தீட்டுப்படுவதில்லை. காலத்தைச் சீராக்குபவன் இவனே {சத்யனே}. அந்த நெருப்புக்கு {சத்யனுக்கு} நிஷ்கிருதி என்ற மற்றொரு பெயரும் உண்டு. அவன் இங்கிருக்கும் அனைத்து வெளிப்படையான உயிரினங்களுக்கும் நிஷ்கிருதியை {நிவாரணத்தை} அளித்ததால் அவனுக்கு அப்பெயர் உண்டானது. சரியாக வழிபடப்படும்போது அவன் {சத்யன்} நற்பேறை அளிக்கிறான். அனைத்து நோய்களையும் உருவாக்கும் அவனது {சத்யனின்} மகன் சுவனன் என்று அழைக்கப்படுகிறான். அவனால் கடுமையாகப் பாதிக்கப்படும் மக்கள் சத்தம் போட்டு அழுகிறார்கள். அவன் {சுவனன்} புத்திக்கூர்மையுடன் இந்த அண்ட ம் முழுவதும் உலவுகிறான். மற்றுமொரு நெருப்பு (பிருஹஸ்பதியின் மூன்றாவது மகன்), ஆன்ம ஞானம் கொண்ட மனிதர்களால் விஸ்வஜித் {3} என்று அழைக்கப்படுகிறான்.
ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அனைத்து உயிரினங்களிலும் உணவைச் செரிக்கச் செய்யும் அகவெப்பமாக அறியப்படும் அந்த நெருப்பான பிருஹஸ்பதியின் நான்காவது மகனானவன் அனைத்து உலகங்களாலும் விஸ்வபுக் {4} என்ற பெயரால் அறியப்படுகிறான். இவன் சுயக்கட்டுப்பாடு, பெரும் அறத்தகுதி கொண்ட பிரம்மச்சாரியாவான். இவன் பக வேள்விகளில் அந்தணர்களால் வழிபடப்படுகிறான். புனித நதியான கோமதி இவனது {விஸ்வபுக்கின்} மனைவியாவாள். அவள் மூலமாகவே அறமனம் கொண்ட மனிதர்கள் தங்கள் சடங்குகளைச் செய்கிறார்கள். நீரைக் குடிக்கும் பயங்கரமான கடல் நெருப்பான வடவன் {படபன்} {5} பிருஹஸ்பதியின் ஐந்தாவது மகனாவான். இந்தப் பிரம்ம நெருப்புக்கு மேல்நோக்கி நகரும் ஆற்றல் இருக்கிறது. அதனால் அவன் {வடவன்} உத்திரபாக் என்று அழைக்கப்படுகிறான். உயிர்க்காற்றாக அழைக்கப்படும் பிராணனில் அவன் அமர்ந்திருக்கிறான்.
{பிருஹஸ்பதியின்} ஆறாவது மகன் பெரும் சுவிஸ்டகிருதன் {6} என்று அழைக்கப்படுகிறான். அவனுக்குக் காணிக்கைகள் சுவிஷ்டமாகின்றன (சு என்றால் அற்புதமாக, இஷ்டம் என்று காணிக்கை). உதக்தாரக் காணிக்கையின் போது அவன் எப்போதும் மதிக்கப்படுகிறான். அனைத்து உயிரினங்களும் பொறுமையற்றுப் போகும்போது, மன்யௌதி {Manyauti} என்று அழைக்கப்படும் நெருப்பு பெரும் கோபத்தால் நிறைகிறது. இந்தத் தவிர்க்க முடியாத கொடூரமான மற்றும் எளிதில் மிகவும் கோபம் கொள்ளும் நெருப்பான இவள் பிருஹஸ்பதியின் மகளாவாள். சுவாகா {1} என்று அறியப்படும் இவள் அனைத்துப் பொருட்களிலும் இருக்கிறாள். (சத்வ, ரஜஸ், தமஸ் ஆகிய மூன்று குணங்களின் ஆதிக்கத்தால் சுவாகாவுக்கு மூன்று மகன்கள் இருந்தனர்). முதல் காரணத்தால் அவள் தேவலோகத்திலும் நிகரற்ற அழகு படைத்த மகனைப் பெற்றாள். இதன் காரணமாக அவன் காம நெருப்பு என்று தேவர்களால் அழைக்கப்பட்டான். {காமன் என்பவன் காதல் தேவன் என்கிறார் கங்குலி}. (இரண்டாம் காரணத்தால்) அவள் அமோகன் அல்லது வெல்ல முடியாத நெருப்பு என்ற பெயர் கொண்ட மகனைப் பெற்றாள். அவன் போரில் எதிரிகளை அழிப்பவனாக இருந்தான். வெற்றியில் உறுதிகொண்டு, தனது கோபத்தைத் தடுக்கும் அவன் {அமோகன்}, வில் தாங்கியவனாகவும், தேரில் அமர்ந்தவனாகவும், மலர்மாலைகள் அணிந்தவனாகவும் காட்சி தருகிறான். (மூன்றாவது குணத்தின் செயலால்) அவள், மூன்று உக்தங்களால் புகழப்பட்டு உக்தன் (முக்தி) என்ற பெயர் கொண்ட மகனைப் பெற்றாள். {நமது செயல்களுக்கு அற்புதமான காரணமான உடலே உக்தம், உடலுக்கு உயிரூட்டுகிற ஆன்மா இரண்டாவது உக்தம், ஆன்மாவைத் தூண்டும் பரமாத்மா மூன்றாவது உக்தம் என்று இந்த இடத்தில் சொல்கிறார் கங்குலி}. இவனே {உக்தனே} பெரிய வார்த்தையை {கடவுள் என்ற பெரிய வார்த்தை என்கிறார் கங்குலி} தோற்றுவித்தவன். எனவே இவன் சமஸ்வாசன் அல்லது ஓய்வுக்கான {முக்திக்கான} வழி என்று அறியப்படுகிறான்" என்றார் {மார்க்கண்டேயர்}.
{ } என்ற அடைப்புக்குறிக்குள் இருக்கும் எண்கள் பிருஹஸ்பதியின் பிள்ளைகளைக் குறிப்பதாகும்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.