Adbhuta Fire! | Vana Parva - Section 221 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
அத்புத நெருப்பின் மகிமையை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "சுவாகா என்ற {இங்கு குறிப்பிடப்படுவது ஆண்பால் - மற்ற பதிப்புகளில் ஸஹன் என்ற பெயர் குறிப்பிடப்படுகிறது} நெருப்பின் விருப்பமான மனைவியான முதிதை, நீரில் வாழ்பவள் ஆவாள். பூமி மற்றும் வானத்தின் பிரதிநிதியான சுவாகா, தனது மனைவியிடத்தில், அத்வந்தன் {Advanta} என்ற உயர்ந்த புனிதமான நெருப்பைப் பெற்றான். இந்த நெருப்பானவன் {அத்வந்தன்}, அனைத்து உயிரினங்களுடைய அக ஆன்மாவின் ஆட்சியாளன் எனக் கற்றறிந்த அந்தணர்களுக்கு மத்தியில் ஒரு மரபு {ஐதீகம்} உள்ளது. அவன் {அத்வந்தன்} வழிபடத்தகுந்தவன், பிரகாசமுடையவன், இங்குள்ள அனைத்து பெரும் பெரும் பூதங்களின் தலைவனுமாவான். கிரகபதி {Grihapati} என்று அழைக்கப்படும் நெருப்பானவன், அனைத்து வேள்விகளிலும் எப்போதும் வழிபடப்பட்டு, இவ்வுலகில் படைக்கப்படும் காணிக்கைகள் அனைத்தையும் தெரிவிப்பவனாவான். சுவாகாவின் பெருமைமிக்க மகனான பெரும் அத்புதன் {Adbhuta} என்ற நெருப்பு நீர்நிலைகளின் {கடலின்} ஆன்மாவாகவும், வானின் இளவரசனாகவும், பெரியன அனைத்துக்கும் தலைவனாகவும் இருக்கிறான்.
அவனது {அத்புதனின்} (மகன்) பரதன் எனும் நெருப்பு, அனைத்து உயிரினங்களின் சடலங்களையும் உட்கொள்கிறான். அக்னிஷ்டோமா வேள்வியில் அவனது {பரதனின்} முதல் கிராது நியதா என்ற அழைக்கப்படுகிறது. தன்னை அணுகும் நியதனைக் காணும், தலைமை நெருப்பான சுவாகா, மாசு குறித்த பயத்தால் கடலுக்குள் தன்னை ஒளித்துக் கொண்டான். (முன்பொருமுறை) அவனை எல்லாத் திக்குகளிலும் தேடிய தேவர்களால், அவனைக் {சுவாகாவைக்} காண முடிவில்லை. அப்போது அவன் {சுவாகா} அதர்வன் {Atharvan} என்ற நெருப்பைக் கண்டு அவனிடம், "ஓ! வீரனே, நீ தேவர்களுக்கான காணிக்கைகளைச் சுமந்து வா! நான் பலவீனமடைந்து இயலாத நிலையில் இருக்கிறேன். சிவப்புக் கண் கொண்ட நெருப்பாக உன்னத நிலையை அடைந்து, எனக்கு ஆதரவளி" என்று கேட்டான். இப்படி அறிவுறுத்தப்பட்ட அதர்வன் என்ற நெருப்பாவேன் வேறு இடத்திற்குச் சென்று விட்டான். ஆனால் அவன் மறைந்திருந்த இடத்தை மீன்கள் உரைத்தன. அதற்கு அந்த நெருப்பானவன் {அதர்வன்}, "அனைத்து உயிர்களுக்கும், நீங்கள் பல வகைகளிலும் உணவாவீர்கள்" என்று அந்த மீன்களுக்குச் சாபமிட்டான்.
பிறகு காணிக்கைகளைச் சுமந்து செல்பவன் {சுவாகா} அதர்வனிடம் (முன்பு போலவே) சொன்னாலும், தேவர்களால் வேண்டிக் கொள்ளப்பட்டாலும், அவன் {அதர்வன்} அவர்களுக்கான காணிக்கைகளைத் தொடர்ந்து சுமந்து செல்ல சம்மதிக்கவில்லை. அதன்பிறகு அவன் {அதர்வன்} உணர்வற்றுப் போய் உடனே தனது ஆவியை விட்டான். தனது பூதவுடலை விட்ட அவன் {அதர்வன்}, பூமியின் குடலுக்குள் சென்றான். பூமியினுடன் ஏற்பட்ட தொடர்பால், அவன் வித்தியாசமான உலோகங்களைப் படைத்தான். அவனது சீழில் {சீழ்} இருந்து சக்தியும் {கந்தமும்} வாசனையும் எழுந்தன; எலும்புகளிலிருந்து தேவதாரு மரங்களும்; சளியிலிருந்து {கபத்திலிருந்து} கண்ணாடிகளும் {ஸ்படிகங்களும்}; நிண நீரிலிருந்து {பித்தத்திலிருந்து} மரகதக் கற்களும்; கல்லீரலில் இருந்து கருப்பு இரும்பும் {உருக்கும்} எழுந்தன. உலகம் இந்த மூன்று பொருட்களால் {மரம், கல் மற்றும் இரும்பு} அலங்கரிக்கப்பட்டன. மேகங்கள் அவனது நகங்களிலிருந்தும், பவளங்கள் அவனது நரம்புகளிலிருந்தும் உண்டாக்கப்பட்டன. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவனது உடலிலிருந்து பலதரப்பட்ட வேறு உலோகங்களும் உருவாக்கப்பட்டன.
இப்படித் தனது பூதவுடலை விட்ட அவன் {அதர்வன்}, ஒப்பற்ற தவத்தில் இருந்தான். பிருகு மற்றும் அங்கிரசின் தவத்தின் மூலம் அவன் {மீண்டும்} எழுப்பப்பட்டான். இப்படித் தவத்தால் திருப்தியடைந்த அந்தப் பலமிக்க நெருப்பு {அதர்வன்}. உடனே சுடர்விட்டு எரிந்தான். ஆனால் முனிவர்களைக் கண்ட அவன் (அதர்வன்), மீண்டும் நீர்க்கழிவுகளின் பாதுகாப்பை நாடினான். அந்த நெருப்பானவன் ஒளிந்து போனதும், முழு உலகமும் அச்சமடைந்து, அதர்வனின் பாதுகாப்பை நாடின. தேவர்களும் மற்றவர்களும் அவனை வழிபட ஆரம்பித்தனர். எதிர்பார்ப்பு ஆர்வமுமாக இருந்த மனிதர்கள் மத்தியில் அதர்வ முனி கடல் முழுவதையும் ஆராய்ந்து தேடி {கடைந்து} அந்த நெருப்பைக் {அதர்வா நெருப்பை} கண்டுபிடித்துப் படைப்புத் தொழிலை ஆரம்பித்தான்.
இப்படியே பழங்கலாத்தில் நெருப்பு அழிக்கப்பட்டு, மீண்டும் உயிரோடு வழிபடத்தக்க அதர்வனால் அழைக்கப்பட்டது. ஆனால் இப்போது அவன் {நெருப்பு} அநேகமாக அனைத்து உயிரினங்களின் காணிக்கைகளையும் சுமந்து செல்கிறான். கடலில் வாழ்ந்து கொண்டு, பலதரப்பட்ட நாடுகளுக்குப் பயணிக்கும் அவன், வேதங்களில் குறிக்கப்படும் பலதரப்பட்ட நெருப்புகளைப் படைக்கிறான்.
சிந்து நதி {Indus}, (பஞ்சாபின்} ஐந்து நதிகள், சோணம் {Sone}, தேவிகை {Devika}, சரஸ்வதி {Saraswati}, கங்கை {Ganga}, சதக்கும்பை {Satakumbha}, சரயு {Sarayu}, கண்டகி {Gandaki}, சர்மண்வதி {Charmanwati}, மஹி {Mahi}, மேதை {Medha}, மேதாதிதி {Medhatithi}, மூன்று நதிகளான தாமராவதி {Tamravati}, வேத்திரவதி {Vetravati}, கௌசிகி {Kausiki}, தமசை {Tamasa}, நர்மதை {Narmada}, கோதாவரி {Godavari}, வேணை {Vena}, உப வேணை {Upavena}, பீமை {Bhima}, வடவை {Vadawa}, பாரதி {Bharati}, சுப்ரயோகை {Suprayoga}, காவேரி {Kaveri}, மர்முரை {Murmura}, துங்கவேணி {Tungavenna}, கிருஷ்ணவேணி {Krishnavenn}, கபிலை {Kapila} ஆகிய நதிகள், ஓ! பாரதா {யுதிஷ்டிரா} நெருப்புகளுக்கு அன்னையராவர் என்று சொல்லப்படுகிறது!
அத்புதன் {Adbhutha} என்ற அழைக்கப்பட்ட நெருப்புக்கு பிரியா {Priya} என்று பெயரில் ஒரு மனைவி இருந்தாள்; அவள் {பிரியா} மூலமாக அவனுக்குப் பிறந்த மகன்களின் விபூ {Vipu} என்ற பெயரில் மூத்த மகன் ஒருவன் இருந்தான். எத்தனை நெருப்புகள் முன்பு சொல்லப்பட்டனவோ அந்த அளவுக்குப் பலவிதமான சோம வேள்விகளும் உண்டு. இந்த நெருப்புக் குலங்கள் அத்தனையும், பிரம்மனின் ஆவியில் முதலில் பிறந்தவர்களும், அத்ரியின் குலத்தில் இருந்து எழுந்தவர்களும் ஆவர். படைப்புகளை விரிவாக்கம் செய்ய எண்ணிய அத்ரி தனது சுய மனதால் இந்த மகன்களைப் பெற்றார். இச்செயலால், அந்த நெருப்புகள் அத்தனையும் அவரது சொந்த பிரம்ம உடல் கட்டமைப்புக்குள் இருந்து வெளிப்பட்டன. நான் இந்த நெருப்புகளின் மூலம் குறித்த வரலாற்றை உனக்கு விவரித்துவிட்டேன். அவை, பெரும் பிரகாசமும், நிகரற்ற சக்தியும், கொண்ட அவர்கள் {நெருப்புகள்} பெரியவர்களாவர். அவர்களே இருளை அழிப்பவர்களாக இருக்கிறார்கள். அந்த நெருப்புகளின் சக்திகள், வேதங்களில் சொல்லப்பட்டுள்ள அத்புத நெருப்பைப் போன்றனவே என்பதை அறிந்து கொள். இந்த நெருப்புகள் அத்தனையும் ஒன்றே. ஜோதிஷ்டோமா வேள்வியில் வருவதைப் போல, அங்கிரசின் உடலில் இருந்து பலதரப்பட்ட உருவத்தில் வந்ததால், முதலில் பிறந்த அந்த வழிபடத்தகுந்தவன் {அத்புதன்} முதன்மையானவன் என்பதை அறிய வேண்டும். மந்திரங்களால் முறையாக வழிபட்டால், அனைத்து உயிர்களின் காணிக்கைகளைத் தேவர்களுக்குச் சுமந்து செல்லும் அக்னியுடைய {நெருப்புகளுடைய} பெரும் குலத்தின் வரலாற்றை, இப்படியே உனக்கு நான் விவரித்துவிட்டேன்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.