The mothers who nursed Skanda! | Vana Parva - Section 225 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
சுவாகா ஸ்கந்தனிடம் தானே அவனது தாய் என்பதைச் சொன்னது; ஏழு முனிவர்களும் தங்கள் மனைவியரைத் தள்ளிவைத்தது; அனைத்தையும் அறிந்த விஸ்வாமித்திர் ஸ்கந்தனைத் தஞ்சமடைந்து பிறப்புச் சடங்குகளைச் செய்து வைத்தது; தேவர்கள் இந்திரனிடம் ஸ்கந்தனைக் கொல்லும்படி சொல்வது; இந்திரன் அஞ்சுவது; லோகமாதாக்கள் ஸ்கந்தனிடம் சென்றது; அவனைத் தங்களது பிள்ளையாகச் சுவீகரித்து அமுதூட்டியது…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அந்தப் பலமிக்க, உயர்ஆன்மா கொண்டவன் {ஸ்கந்தன்} பிறந்த போது, பல்வேறு வகையான அச்சம் தரும் நிகழ்வுகள் நடந்தன. ஆண்கள் மற்றும் பெண்களின் இயல்புள், வெப்பம் மற்றும் குளிர், மேலும் இதுபோன்ற முரண்பட்ட ஜோடிகளின் இயல்புகள் தலைகீழாக மாறின. கோள்கள், திசைப்புள்ளிகள், ஆகாயம் ஆகியன வெளிச்சத்தால் ஒளிர்ந்தன. பூமியும் கதறத் தொடங்கியது. உலக நன்மையை விரும்பும் முனிவர்களும் கூட இந்தப் பயங்கர அதிசயங்களை எல்லாப் புறமும் கண்டு, அண்டத்தின் அமைதியை மீண்டும் நிலைநாட்ட இதயப்பூர்வமாக முனைந்தனர். சைத்திரரத வனத்தில் வாழ்ந்தவர்கள் அனைவரும், "ஏழு முனிவர்களின் ஆறு மனைவிகளுடன் கூடிய அக்னியினால் நமக்கு இந்த மிக மோசமான நிலை ஏற்பட்டது" என்றனர்.
அந்தத் தேவி {சுவாகா} பறவை உருவை அடைந்ததைக் கண்ட பிறர், "இந்தத் தீமை ஒரு பறவையால் ஏற்பட்டது" என்றனர். எவருமே சுவாகாதான் இந்தத் தீங்குக்குக் காரணமானவள் என்பதை நினைக்கவில்லை. ஆனால் (புதிதாகப் பிறந்த) ஆண்பிள்ளை தனதென்று கேள்விப்பட்ட அவள் {சுவாகா} ஸ்கந்தனிடம் சென்றாள். படிப்படியாக அவனிடம் அவளே அவனது {ஸ்கந்தனின்} அன்னை என்ற உண்மையை வெளிப்படுத்தினாள். அந்த ஏழு முனிவர்களும், (அவர்களுக்கு) ஒரு பலமிக்க மகன் பிறந்திருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்டனர். அந்தக் காட்டில் வசிக்கும் அனைவரும் {முனிவர்களின் மனைவியரான} அறுவரும்தான், அந்தப் பிள்ளை பிறக்கக் காரணம் என்று சொல்லி எதிர்த்ததால், அம்முனிவர்கள், வழிபடத்தகுந்த அருந்ததியைத் தவிர்த்துத் தங்கள் ஆறு மனைவியரையும் தள்ளி வைத்தார்கள் {divorced என்கிறார் கங்குலி}. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்த ஏழு முனிவர்களிடம் சுவாகா, "துறவிகளே {சப்தரிஷிகளே}, இந்தப் பிள்ளை என்னுடையவன். உங்கள் மனைவியர் இவனுக்குத் தாயில்லை" என்று மீண்டும் மீண்டும் சொன்னாள்.
அந்த ஏழு முனிவர்களின் வேள்விகள் முடிந்ததும், பெரும் முனிவரான விஸ்வாமித்திரர், அக்னி தேவன் காமத்தால் துன்பப்பட்டபோது, அவனை {அக்னியை} அவனறியாது பின்தொடர்ந்து சென்றார். எனவே, நடந்தது என்ன என்பது அனைத்தையும் அவர் {விஸ்வாமித்திரர்} அறிவார். மஹாசேனனிடம் {ஸ்கந்தனிடம்} பாதுகாப்புக் கோரியவர்களில் முதல் மனிதன் அவரே. மஹாசேனனுக்கு தெய்வீக துதிகளைக் காணிக்கையாக்கிய பிறகு, பிள்ளைப்பருவத்திற்குரிய, பிறப்பு சார்ந்த பதிமூன்று மங்களச் சடங்குகளும் அந்தப் பெருமுனிவரால் {விஸ்வாமித்திரரால்} அந்தப் பிள்ளைக்குச் {ஸ்கந்தனுக்குச்} செய்யப்பட்டன. பிறகு உலகத்தின் நன்மைக்காக அவர், ஆறு முகம் கொண்ட ஸ்கந்தனுக்குரிய நற்பண்புகளை {அவனுக்கு} அறிவித்தார். சேவல், சக்தி தேவி மற்றும் ஸ்கந்தனின் தொண்டர்களுக்கு மரியாதை செய்யும் சடங்குகளை நடத்தி வைத்தார். {சேவலைக் கொடியாகவும், சக்தியை வேலாகவும், தொண்டர்களைப் பரிவாரங்களாகவும் வைத்துக் கொள்ள வேண்டிய சடங்குகளைச் செய்வித்தார்}. இந்தக் காரணத்திற்காக அவர் அந்தத் தெய்வீக இளைஞனுக்கு மிகவும் பிடித்தமானவராக ஆனார். அந்தப் பெரும் முனிவர் {விஸ்வாமித்திரர்}, அந்த ஏழு முனிவர்களுக்கும் {சப்தரிஷிகளுக்கும்}, சுவாகா மாற்றுரு கொண்டதைச் சொல்லி, அவர்களது மனைவியர் அப்பாவிகள் என்பதையும் சொன்னார். ஆனால், அந்த ஏழு முனிவர்களும் இதை அறிந்து கொண்ட பிறகும் கூடத் தங்கள் துணைகளை நிபந்தனையற்ற முறையில் கைவிட்டனர்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஸ்கந்தனின் பராக்கிரமத்தைக் கேள்விப்பட்ட தேவர்கள் வாசவனிடம் {இந்திரனிடம்} சென்று, "ஓ! சக்ரா {இந்திரா}, தாமதமின்றி அந்த ஸ்கந்தனைக் கொல், அவனது பராக்கிரமம் தாங்க முடியாததாக இருக்கிறது. அவனை நீ அழிக்கவில்லையென்றால், அவன் நம்முடன் கூடிய மூவுலகங்களையும் வென்று, உன்னை வீழ்த்தி, தானே தேவர்கள் தலைவன் ஆகிவிடுவான்" என்றனர். மனதால் குழம்பிய சக்ரன், அவர்களிடம், "இந்தப் பிள்ளை பெரும் பராக்கிரமத்தைக் கொண்டிருக்கிறான். போர்க்களத்தில் தனது பலத்தைக் கொண்டு அண்டத்தைப் படைத்தவனையே {பிரம்மாவையே} இவன் அழித்துவிடுவான். எனவே, அவனிடம் செல்லத் துணிய மாட்டேன்" என்றான். அதற்குத் தேவர்கள் {இந்திரனிடம்}, "உன்னிடம் ஆண்மையில்லாததால் நீ இவ்வகையில் பேசுகிறாய். இந்த அண்டத்தின் பெரும் அன்னையர் {லோகமாதாக்கள்} இன்று ஸ்கந்தனிடம் செல்லட்டும். அவர்கள் எப்படிப்பட்ட சக்தியையும் அடக்குவார்கள். அதன் பிறகு இந்தப் பிள்ளைக் கொல்லப்படட்டும்" என்றனர். அந்தத் தாய்மாரும், "அப்படியே ஆகட்டும்" என்று சொன்னார்கள்.
பிறகு அவர்கள் {லோகமாதாக்கள்} சென்றுவிட்டனர். ஆனால் அவனைக் {ஸ்கந்தனைக்} கண்ட மாத்திரத்தில் அவர்கள் ஊக்கமிழந்து, அவன் வெல்லப்பட முடியாதவன் என்று கருதி, அவனை {ஸ்கந்தனை} தஞ்சம் அடைந்து, அவனிடம் {ஸ்கந்தனிடம்}, "ஓ! பலமிக்கவனே, நீ எங்கள் (வளர்ப்பு) மகனாவாய். நாங்கள் உன்னிடம் பாசத்தால் நிறைந்திருக்கிறோம். உனக்குப் பால் கொடுக்க விரும்புகிறோம் {desirous of giving thee suck}. இதோ எங்கள் மார்புகளில் பால் சுரக்கிறது" என்றனர். இவ்வார்த்தைகளைக் கேட்ட பலமிக்க மஹாசேனன் {ஸ்கந்தன்}, அவர்களது முலையுண்ண விரும்பி, அவர்களை மரியாதையுடன் வரவேற்று, அவர்களது கோரிக்கைகளை ஏற்றான். பிறகு அந்தப் பலசாலிகளில் பலசாலியானவன் {ஸ்கந்தன்} தனது தந்தையான அக்னி தன்னை நோக்கி வருவதைக் கண்டான். நல்லது அனைத்தையும் செய்யும் அந்தத் தேவன், அவனது தாயார்களுடன் இருந்த தனது மகனால் உரிய முறையில் மதிக்கப்பட்டு, அவனை {ஸ்கந்தனை} வளர்க்க அவனது பக்கத்திலேயே தங்கினான். அந்தத் தாய்மாரில் கோபத்துக்குப் பிறந்தவள் [1], {குரோதசமுத்பவை} கைகளில் சூலத்தை ஏந்தி, தனது சொந்த வாரிசைக் காப்பது போலவே ஸ்கந்தனைக் கண்காணித்தாள். {லோஹிதம் என்கிற} கடலின் மகளானவள் {கரூரை}, சிவப்பு நிறத்துடன், எளிதில் கோபம் கொள்பவளாக இருந்தாள். இரத்தத்தை உண்டு வாழும் அவள், மஹாசேனனை {கந்தனை} மார்போடு அணைத்து தாயைப் போல அவனுக்குப் பாலூட்டினாள். அக்னி, பல பிள்ளைகள் தன்னைத் தொடர, ஆட்டுவாய்க் கொண்ட ஒரு வணிகனைப் போலத் தன்னை மாற்றிக் கொண்டான். தன் வசிப்பிடமான அந்த மலையில் பொம்மைகளைக் கொண்டு அந்தப் பிள்ளையைத் {ஸ்கந்தனைத்} திருப்தி செய்யத்தொடங்கினான்.
[1] தெய்வமாக உருவகப்படுத்தப்பட்ட கோபம் = குரோதசமுத்பவை
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.