Indra marched against Skanda! | Vana Parva - Section 226 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
ஸ்கந்தனை எதிர்த்து இந்திரன் படை நடத்துவது; தேவர்கள் ஸ்கந்தனைப் பணிவது; இந்திரன் ஸ்கந்தன் மீது வஜ்ரத்தை ஏவுவது; வஜ்ரம் துளைத்ததால் விசாகன் உண்டானது; இருவரைக் கண்டது இந்திரன் அஞ்சி ஸ்கந்தனைப் பணிந்தது; இந்திரனின் அச்சத்தை ஸ்கந்தன் போக்கியது...
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "உப கோள்களுடன் கூடிய கோள்களும், முனிவர்களும், தாய்மாரும், அக்னியும், எண்ணற்ற பிற ஒளிவீசும் சேவகர்களும், கொடூர முகத்தோற்றம் கொண்ட இன்னும் பல தேவலோகவாசிகளும், அன்னையருடன் இருந்த மஹாசேனனுக்காகக் {ஸ்கந்தனுக்காகக்} காத்திருந்தனர். சிறப்புமிக்கத் தேவர்களின் மன்னன் {இந்திரன்}, வெற்றியை விரும்பினாலும், அதை அடைவதில் சந்தேகங்கொண்டு தனது யானையான ஐராவதத்தில் ஏறினான். பிறகு, பிற தேவர்களுடன் சேர்ந்து ஸ்கந்தனை நோக்கி முன்னேறினான். அனைத்து தேவர்களும் தன்னைத் தொடரச் சென்ற அந்தப் பலமிக்கவன் {இந்திரன்}, வஜ்ராயுதத்தை ஏந்தியிருந்தான். மஹாசேனனைக் {ஸ்கந்தனைக்} கொல்லும் நோக்கோடு, பெரும் பிரகாசத்துடன், போர்க்குரல் கொடுத்தப்படி செல்லும் தேவ படையுடன் சென்றான். பலவகையான கொடிகளுடனும், பல்வேறு கவசங்கள் பூட்டிய போர்வீரர்களுடனும், பல விற்களுடனும், பல்வேறு விலங்குகளில் பயணித்தவாறும் அந்தப் {தேவ} படையினர் சென்றனர்.
சிறந்த ஆடைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு, தன்னைக் கொல்லும் தீர்மானத்தோடு வரும் சக்ரனை {இந்திரனை} மஹாசேனன் {ஸ்கந்தன்} கண்டபோது, அவனும் {ஸ்கந்தனும்} (தனது பங்கிற்கு) அந்தத் தேவர்கள் தலைவனைச் {இந்திரனைச்} சந்திக்க முன்னேறினான். ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, பிறகு, தேவர்கள் தலைவனான அந்தப் பலமிக்க வாசவன் {இந்திரன்}, தனது போர்வீரர்களை உற்சாகமூட்ட பெரும் கர்ஜனை செய்தான். அக்னியின் மகனைக் கொல்லும் நோக்கோடு விரைவாகப் படை நடத்தி, திரிதசஸ்களாலும் [1], பெரும் முனிவர்களாலும் புகழப்பட்டு, கார்த்திகேயனின் {ஸ்கந்தனின்} வசிப்பிடத்தை அடைந்தான். பிறகு அவன் {இந்திரன்}, பிற தேவர்களுடன் சேர்ந்து சிம்மநாதம் செய்தான்; இதற்குப் பதிலாகக் குஹனும் {ஸ்கந்தனும்}, கடலின் கர்ஜனையைப் போன்ற பயங்கரமான போர் கர்ஜனையைச் செய்தான்.
[1] தேவர்களின் மற்றொரு பெயர். குழந்தைப் பருவம், பிள்ளைப் பருவம், இளைஞர் பருவம், முதிய பருவம் ஆகிய நான்கு பருவங்களில், நான்காவது பருவத்தைத் தவிர்த்து மற்ற மூன்று பருவங்களை மட்டும் கொண்டிருப்பதால், தேவர்களுக்கு அப்பெயர் வந்தது என்கிறார் கங்குலி.
அந்த ஒலியைக் கேட்ட தேவர்கள் படை, கலங்கிய கடலைப் போல ஆகி, அந்த இடத்திலேயே திகைத்து நின்றது. அந்தப் பாவகனின் {நெருப்பு தேவனின்} மகன் {ஸ்கந்தன்}, தேவர்கள் தன்னைக் கொல்லும் நோக்கோடு தன் அருகில் வருவதைக் கண்டு, கோபத்தால் நிறைந்து, தனது வாயில் இருந்து மூண்டு எரியும் நெருப்புச் சுடர்களை வெளியிட்டான். தரையில் போராடிய அந்தத் தேவ படைகளை அச்சுடர்கள் அழித்தன. அவர்களது தலைகள், உடல்கள், கரங்கள், வாகனங்களான விலங்குகள் அனைத்தும் அந்த நெரிப்பில் எரிந்தன. திடீரென அவை அனைத்தும் முறையான கோளங்களில் இருந்து இடம்பெயர்ந்த நட்சத்திரங்களைப் போலத் தோன்றின.
இப்படிப் பாதிக்கப்பட்ட அந்தத் தேவர்கள், வஜ்ராயுதத்தின் மீதிருந்த நம்பிக்கையைத் துறந்து பாவகன் {நெருப்பு தேவனின்} மகனின் {ஸ்கந்தனின்} பாதுகாப்பை நாடினர். இதனால் மீண்டும் அமைதி நிலைநாட்டப்பட்டது. இப்படித் தேவர்களால் கைவிடப்பட்ட போது, சக்ரன் {இந்திரன்}, ஸ்கந்தன் மீது தனது வஜ்ராயுதத்தை வீசினான். அது அவனை {ஸ்கந்தனை} வலப்பக்கத்தில் துளைத்தது. ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, அது {வஜ்ரம்}, அந்த உயர் ஆன்மா கொண்டவனின் {ஸ்கந்தனின்} உடலைக் {துளைத்துக்} கடந்து சென்றது. இப்படி வஜ்ரத்தால் தாக்கப்பட்ட ஸ்கந்தனின் உடலில் இருந்து, இளமையுடனும், கைகளில் சக்தி {club} ஆயுதத்துடனும், தெய்வீக வளையத்தால் {[அ]குண்டலத்தால்} தன்னை அலங்கரித்திருந்த ஒருவன் எழுந்தான். வஜ்ரம் துளைத்த காரணத்தால் பிறந்ததால், அவன் விசாகன் என்று பெயரிடப்பட்டான்.
கடுமையாக அழிக்கும் அக்னி தேவனைப் போல மற்றொருவன் வந்ததைக் கண்ட இந்திரன், செய்வதறியாமல் அச்சமுற்று, {தனது மரியாதையைத் தெரிவிக்க} உள்ளங்கைகளைக் கூப்பி ஸ்கந்தனின் பாதுகாப்பை நாடினான். அந்த அற்புதமான ஸ்கந்தன், தனது கைகளால் தட்டிக் கொடுத்து, அவனது {இந்திரனின்} அச்சத்தைத் துறக்கச் சொன்னான். பின்பு தேவர்கள் மகிழ்ச்சி கொண்டு, கைகள் கட்டப்பட்டவர்களானார்கள்."
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.