The Goat head of Bhadrasakha! | Vana Parva - Section 227 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
ஸ்கந்தனின் காயத்தில் பிறந்த ஆண்பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும்; தபஸ் என்கிற அக்னியின் பெண் பிள்ளைகள் ஸ்கந்தனை மகனாக ஏற்று, எட்டாவதாகச் சிசு என்பவனை மகனாகக் கொண்டது; ஸ்கந்தனின் ஆட்டுத்தலை பற்றிய குறிப்பு...
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "{யுதிஷ்டிரா} பயங்கரமான பார்ப்பதற்கு விநோதமான ஸ்கந்தனின் தொண்டர்களைக் குறித்து இப்போது கேள். ஸ்கந்தன் வஜ்ரத்தால் தாக்கப்பட்ட போது, எண்ணற்ற ஆண்பிள்ளைகள் தோன்றினார்கள். அந்தப் பயங்கரமானவர்கள், பிறந்த குழந்தைகளையும், கருவில் உள்ள குழந்தைகளையும் (அவர்களின் ஆவிகளை} களவாடுபவர்களாக {கொல்பவர்களாக} இருந்தார்கள். பெரும் பலம் கொண்ட எண்ணற்ற பெண் பிள்ளைகளும் அவனுக்குப் {ஸ்கந்தனுக்குப்} பிறந்தார்கள் {அவனது காயத்திலிருந்து தோன்றினார்கள்}. அந்தப் பிள்ளைகள் அனைவரும் விசாகனைத் தங்கள் தகப்பனாகச் சுவீகரித்துக் கொண்டார்கள்.
ஆடு போன்ற {சாக முகம் = வெள்ளாட்டு முகம்} முகமும், திறன்மிகுந்த கரங்களும் கொண்ட வணங்கத்தக்க பத்ரசாகன் {ஸ்கந்தன்} அந்நேரத்தில், அந்தத் தாய்மாரின் முன்னிலையில், தன்னால் கவனமாகப் பாதுகாக்கப்பட்ட தன் மகன்கள், மகள்களால் சூழப்பட்டு இருந்தான். இதன் காரணமாகவே, இந்தப் பூமியில் வசிப்பவர்கள் ஸ்கந்தனை குமாரர்களின் (சிறு பிள்ளைகளின்) தகப்பன் என்று அழைக்கிறார்கள். தனக்கு மகன்கள் வேண்டும் என விரும்பும் மக்கள், தங்கள் இடங்களில் ருத்திரனை அக்னித் தேவன் வடிவிலும், உமையைச் சுவாகாவின் வடிவிலும் வழிபடுகிறார்கள். அதன் காரணமாக அவர்கள் மகன்கள் அருளப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
தபமென்ற {தபஸ்} அக்னி பெற்ற பெண் பிள்ளைகள் அனைவரும் ஸ்கந்தனை வந்தடைந்தார்கள். அவன் {ஸ்கந்தன்}, "நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான். அதற்கு அந்தப் பெண்கள், "எங்களுக்கு இந்த உதவியைச் செய்; உனது அருளால், நாங்கள் அனைத்து உலகங்களுக்கும் வணங்கத்தக்க நல்ல தாய்மாராக வேண்டும்" என்று கேட்டனர். அவன் {ஸ்கந்தன்}, "அப்படியே ஆகட்டும்" என்றான். அந்தத் தயாள மனம் கொண்டவன் {ஸ்கந்தன்} மீண்டும் மீண்டும், "நீங்கள் சிவமாகவும், அசிவமாகவும் [1] பிரிக்கப்படுவீர்கள்" என்றான். பிறகு அந்தத் தாய்மார்கள் ஸ்கந்தனை மகனாக ஏற்படுத்திக் {ஏற்றுக்} கொண்டு விடைபெற்றனர். காகி, ஹலிமா, மாலினி {மாதா}, பிருன்ஹிலை {ஹலீ}, ஆர்யா, பலாலா {பாலா}, வைமித்ரா {தாத்ரி} ஆகிய இவ்வெழுவரும் சிசு என்பவனுக்குத் தாயாவார்கள்.
[1] நல்ல மற்றும் தீய ஆவிகளாக என்கிறார் கங்குலி
ஸ்கந்தனின் அருளால் இந்தத் தாய்மாருக்கு வீரியமுள்ள, அதிபயங்கரமான, சிவந்த கண்ணுள்ள, பார்ப்பவர்களை அச்சமூட்டு சிசு என்கிற மகன் உண்டானான். ஸ்கந்தனின் தாய்மார்களுக்குப் பிறந்த எட்டாவது வீரன் என இவன் கூறப்படுகிறான். ஆனால், ஆட்டு முகம் கொண்டவனைச் சேர்த்தால் அவன் {சிசு} ஒன்பதாவது வீரன் என்றும் அறியப்படுகிறான். ஸ்கந்தனின் ஆறாவது முகம் ஆட்டைப் போன்றது என்பதை அறிந்து கொள் {யுதிஷ்டிரா}. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஆறு முகங்களுக்கு நடுவில் இருக்கும் அந்த முகம் எப்போதும் தாயால் வணங்கப்படுகிறது. பத்ரசாகனின் தலை தெய்வீக சக்தியால் படைக்கப்பட்டு, அவனது அனைத்து தலைகளிலும் சிறந்த தலையாகக் கூறப்படுகிறது. ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே {யுதிஷ்டிரா}, இந்த அறம்சார்ந்த அற்புதமான சம்பவங்கள் சந்திரமாதத்தின் ஒளிமிகுந்த பாதியில் {வளர்பிறையில் = சுக்லபட்சத்தில்} வரும் ஐந்தாவது நாளில் {பஞ்சமி திதியில்} நடந்தன. ஆறாவது நாளில் {சஷ்டியில்}, கடுமையும் பயங்கரமும் நிறைந்த ஒரு போர் அந்த இடத்தில் நடந்தது."
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.