The Marriage of Skanda and Devasena! | Vana Parva - Section 228 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
முனிவர்கள் ஸ்கந்தனை அடுத்த இந்திரன் ஆகுமாறு கோரியது; இந்திரனும் அவ்வாறே கோரியது; ஸ்கந்தன் அதை மறுத்து, தேவர்கள் படையின் படைத்தலைவனானது; ஸ்கந்தன் சிவனின் மகனாகக் கருதப்படுவதற்கான காரணம்; ஸ்கந்தன், தேவசேனை திருமணம்...
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஸ்கந்தன் தங்க வளையத்தாலும் மாலையாலும் அலங்கரிக்கப்பட்டு, தங்க கிரீடம் அணிந்து, தங்க நிறக் கண்களுடனும், கூரிய பற்களுடனும் இருந்தான். அவன் {ஸ்கந்தன்} சிவப்பு ஆடையுடுத்தி பார்ப்பதற்கு அழகாக இருந்தான். நல்ல தோற்றமும், அனைத்து நற்குணங்களும் கொண்டு, மூவுலகத்திற்கும் பிடித்தவனாக இருந்தான் {ஸ்கந்தன்}. (தன்னைத் தஞ்சம் அடைந்தவர்களுக்கு} வரங்கள் அருளினான். வீரத்துடனும், இளமையுடனும் இருந்த அவன் பளபளக்கும் காது குண்டலங்களை அணிந்திருந்தான். அவன் இப்படி இளைப்பாறிக் கொண்டிருந்தபோது, பார்ப்பதற்குத் தாமரையைப் போன்று இருந்த நற்பேறின் தேவி {லட்சுமி தேவி} உருவம் கொண்டு வந்து, தன் பற்று உறுதியை அவனுக்கு {ஸ்கந்தனுக்கு} அளித்தாள். இப்படி அவன் நற்பேறுள்ளவனாக ஆன போது, அந்தப் புகழ்பெற்ற மென்மையான தோற்றம் கொண்டவன் {ஸ்கந்தன்} அனைவருக்கும் முழு நிலவைப் போலத் தெரிந்தான்.
உயர்ந்த மனம் படைத்த அந்தணர்கள் அந்தப் பலமிக்கவனை வழிபட்டனர். பிறகு பெரும் முனிவர்கள் ஸ்கந்தனிடம் வந்து, "ஓ! தங்க முட்டையில் பிறந்தவனே {ஸ்கந்தா}, நீ செழிப்படைவாயாக. அண்ட நன்மைக்காகக் கருவியாக நீ ஆகுக. ஓ! தேவர்களில் சிறந்தவனே {ஸ்கந்தா}, நீ ஆறு இரவுகளுக்கு (நாட்களுக்கு) முன் பிறந்தவனாக இருந்தாலும், இந்த முழு உலகமும் உனக்கு (இந்தக் குறுகிய காலத்தில்) தனது பற்றுறுதியை {விசுவாசத்தை} அளித்திருக்கிறது. நீயும் அவர்களது அச்சங்களைப் போக்கினாய். எனவே, நீ மூன்று உலகங்களுக்கும் இந்திரனாகி (தலைவனாகி) அவர்களது அச்சத்தின் காரணத்தை நீக்குவாயாக" என்றனர். அதற்கு ஸ்கந்தன், "பெரும் தவத்தைச் செல்வமாகக் கொண்ட பண்புள்ளவர்களான நீங்கள், மூவுலகங்கள் அனைத்துக்கும் இந்திரன் என்ன செய்கிறான்? தேவர்களின் மன்னன் எப்படித் தேவர்களின் படைகளை இடைவிடாது காக்கிறான்? (என்று என்னிடம் சொல்லுங்கள்)" என்று கேட்டான் {ஸ்கந்தன்}.
அதற்கு அந்த முனிவர்கள், "இந்திரன், பலம், சக்தி, குழந்தைகள், மகிழ்ச்சி ஆகியவற்றை அனைத்து உயிர்களுக்கும் கொடுக்கிறான். அவனை {இந்திரனைத்} திருப்தி செய்யும்போது, தேவர்களின் தலைவன் {இந்திரன்} அவர்கள் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுகிறான். அவன் {இந்திரன்} தீயவர்களை அழித்து, நீதிமான்களின் {அறவோரின்} விருப்பங்களை நிறைவேற்றுகிறான். அந்த வலனை அழித்தவன் {இந்திரன்}, அனைத்து உயிரினங்களுக்கும் பல்வேறு கடமைகளை நிர்ணயிக்கிறான். சூரியனில்லாத நேரத்தில் சூரியனாகவும், சந்திரனில்லாத நேரத்தில் சந்திரனாகவும் இருக்கிறான்; சூழ்நிலைக்கேற்ப அவசியம் ஏற்படும்போது, அவனே நெருப்பாகவும், காற்றாகவும், பூமியாகவும், நீராகவும் செயல்படுகிறான். இவையே இந்திரனின் கடமைகளாகும்; அவனது திறமைகளை மகத்தானவையாகும். நீயும் பலம்பொருந்தியவனே, எனவே பெரும் வீரனாக இருக்கும் நீ எங்களுக்கு இந்திரனாக ஆவாயாக" என்றனர்.
சக்ரன் {இந்திரன் - ஸ்கந்தனிடம்}, "ஓ! பலமிக்கவனே {ஸ்கந்தா}, எங்களுக்குத் தலைவனாகி எங்களை மகிழச் செய். ஓ! அற்புதமானவனே எங்கள் மதிப்புக்குத் தகுந்தவன் நீ; எனவே, இன்றே நாங்கள் உனக்குப் பட்டாபிஷேகம் செய்யட்டுமா?" என்று கேட்டான்.
ஸ்கந்தன் {இந்திரனிடம்}, "வெற்றியில் இதயத்தைச் செலுத்தி சுய உடைமையுடன் நீயே தொடர்ந்து மூவுலகங்களையும் ஆட்சி செய். நான் உனது எளிய பணியாளாக இருக்கிறேன். உனக்குச் சொந்தமான அரசுரிமையை விரும்பவில்லை" என்றான்.
சக்ரன் {இந்திரன் - ஸ்கந்தனிடம்}, "உனது பராக்கிரமம் ஒப்பற்றதாகும், ஓ! வீரா {ஸ்கந்தா}, எனவே, தேவர்களின் பகைவர்களை வீழ்த்துவாயாக. உனது பராக்கிரமத்தைக் கண்டு மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். மிகவும் குறிப்பாக, எனது பராக்கிரமத்தை இழந்த நான் உன்னால் வீழ்த்தப்பட்டேன். இப்போது நான் இந்திரனாகச் செயல்பட்டால், அனைத்து உயிரினங்களிடமும் எனக்கு மரியாதை கிடைக்காது. நமக்கிடையே சண்டை மூட்டிக் கொண்டிருப்பதில் மும்முரமாக இருப்பார்கள். என் தலைவா {ஸ்கந்தா}, பிறகு அவர்கள் நம்மில் ஒருவன் அல்லது இன்னொருவனுக்கு ஆதரவாளர்கள் ஆவார்கள். இரண்டு வேறுபட்ட பிரிவுகளாகத் தங்களை அவர்கள் அமைத்துக் கொள்ளும்போது, நம்மிருவருக்கும் இடையில் மக்களின் வேறுபாட்டால் முன்பு போலவே போர் ஏற்படும். அந்தப் போரில் சந்தேகமற நீ என்னை எளிதாக வென்று, அனைத்து உலகங்களுக்கும் தலைவனாவாய்" என்றான்.
ஸ்கந்தன் {இந்திரனிடம்}, "ஓ! சக்ரா {இந்திரா}, மூன்று உலகங்களுக்கும் எப்படியோ, அப்படி நீயே எனக்கும் மன்னன்; நீ செழிப்படைவாயாக! நான் கீழ்ப்படிய வேண்டிய உனது கட்டளை என்ன என்பதைச் சொல்?" என்றான்.
இந்திரன் {ஸ்கந்தனிடம்}, "உனது உத்தரவின் பேரில், ஓ! பலமிக்கவனே {ஸ்கந்தா}, நான் தொடர்ந்து இந்திரனாகச் செயல்படுவேன். இதை நீ தீர்மானமாகவும், அக்கறையுடனும் சொல்லியிருந்தால், எனக்குச் சேவை செய்யும் உனது விருப்பத்தை நீ எப்படிச் செய்யலாம் என்பதைச் சொல்கிறேன் கேள். ஓ! பலமிக்கவனே, தேவர்கள் படையின் தலைமையை {படைத்தலைவராக, சேனாதிபதியாக} நீ ஏற்றுக்கொள்" என்றான்.
ஸ்கந்தன் {இந்திரனிடம்}, "தானவர்களின் அழிவுக்காகவும், தேவர்களின் நன்மைக்காகவும், பசுக்கள் மற்றும் அந்தணர்களின் நன்மைக்காகவும், எனக்கு நீ {தேவர்கள் படைக்குப் படைத்தலைவனாக} பட்டாபிஷேகம் செய்" என்றான்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இப்படி இந்திரனால், அனைத்து தேவர்களாலும் பட்டாபிஷேகம் செய்யப்பட்டு, பெரும் முனிவர்களால் மதிக்கப்பட்ட அவன் {ஸ்கந்தன்} மகத்தானவனாகத் தெரிந்தான். (அவன் தலைக்கு மேலே) இருந்த பொற்குடை [1] எரிந்து கொண்டிருக்கும் நெருப்பின் சுடரைப் {ஜுவாலை} போல இருந்தது. திரிபுரனை வீழ்த்தி புகழ்பெற்ற தேவனே {சிவனே}, விஸ்வகர்மாவின் தயாரிப்பான தெய்வீக மாலையை அவனது கழுத்தைச் சுற்றி அணிவித்தான். ஓ! உனது எதிரிகளை வீழ்த்திய பெரிய மனிதா {யுதிஷ்டிரா}, காளையைத் தனது குறியீடாகக் கொண்ட அந்த வணங்கத்தக்க தேவன் {சிவன்}, பார்வதியுடன் சேர்ந்து முன்பே அங்கு வந்திருந்தான். அவன் {சிவன்}, அவனுக்கு {ஸ்கந்தனுக்கு} மகிழ்ச்சியான இதயத்துடன் மரியாதை செலுத்தினான். அந்தணர்களால் அக்னி தேவன் ருத்திரன் என்று அழைக்கப்படுகிறான். இதன் காரணமாக ஸ்கந்தன் ருத்திரனின் {சிவனின்} மகனாக அழைக்கப்படுகிறான்.
[1] ராஜ வாழ்வின் சின்னங்களில் ஒன்றாக இந்துஸ்தானத்தின் {இந்தியாவில்} இது இருந்தது என்கிறார் கங்குலி
ருத்திரனின் வீரிய வெளிப்பாட்டு குவியலால் தான் அந்த வெண்மலை {ஸ்வேத மலை} உருவாக்கப்பட்டது. கிருத்திகைகளுடன் அக்னி தேவனின் சிற்றின்ப விளையாட்டு அந்த வெண்மலையில் தான் நடந்தது. அற்புதமான குஹன் (ஸ்கந்தன்), ருத்திரனால் நன்கு மதிக்கப்பட்ட காரணத்தால், ருத்திரனின் பிள்ளை என அனைத்து தேவர்களும் அழைத்தார்கள். ருத்திரன் அக்னி தேவனின் உடலமைப்புக்குள் நுழைந்து செயல்பட்ட காரணத்தால் இந்தப் பிள்ளை உருவானதால், ஸ்கந்தன், ருத்திரனின் மகன் என்று அறியப்படலானான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, ருத்திரன், அக்னி தேவன், சுவாகா, (ஏழு முனிவர்களின்) ஆறு மனைவியர் ஆகியோர் பெரும் தேவனான ஸ்கந்தனின் பிறப்புக்குக் கருவியாகச் செயல்பட்ட காரணத்தால், அவன் {ஸ்கந்தன்} ருத்திரனின் மகன் எனக் கூறப்படுகிறான்.
அக்னி தேவனின் அந்த மகன் மாசற்ற சிவப்பு நிறமுள்ள இரண்டு ஆடைகளை உடுத்தியிருந்தான். அதனால் அவன் மகத்தானவனாகவும், சிவந்த மேகக்கூட்டங்களுக்கிடையில் இருந்து எட்டிப் பார்க்கும் சூரியனைப் போலவும் தெரிந்தான். அக்னி தேவனால் அவனுக்குக் கொடுக்கப்பட்ட சிவப்பு சேவல் அவனது குறியீடாக ஆனது; அது {சேவல் குறியீடு}, அவனது {ஸ்கந்தனின்} தேருக்கு மேல் இருந்த போது அனைத்தையும் அழிக்கும் நெருப்பின் உருவம் போலத் தெரிந்தது. அனைத்து உயிரினங்களின் செயல்களும், ஒளியும், சக்தியும், பலமுமான, தேவர்களுக்கு வெற்றியைத் தரக்கூடிய சக்தி ஆயுதமானது அந்த ஸ்கந்தனுக்கு எதிரில் வந்தது. அந்தத் தேவனுக்கு {ஸ்கந்தனுக்கு} வெற்றியை விளைவிக்கும், அனைத்து உயிரினங்களின் முயற்சிகளையும் இயக்கும், தேவர்களின் பெருமை, உரிமை, அடைக்கலம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் சக்தி உறையும் தெய்வம் அவனுக்கு {ஸ்கந்தனுக்கு} முன்பாகச் சென்றது. ஒரு புதிர் நிறைந்த அழகு, அதாவது போர்க்களத்தில் தனது சக்திகளை வெளிப்படுத்தும் அழகு அவனது {ஸ்கந்தனின்} உடலுக்குள் நுழைந்தது. அழகு, பலம், பக்தி, சக்தி, வலிமை, சத்தியம், மேன்மை, அந்தணர்களுகுக அர்ப்பணிப்பு, மாயை அல்லது குழப்பத்தில் இருந்து விடுதலை, தொண்டர்களின் பாதுகாப்பு, எதிரிகளின் அழிவு, அனைத்து உயிரினங்களின் பாதுகாப்பு ஆகிய இவை அனைத்தும், ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, ஸ்கந்தனுடன் பிறந்த அறங்களாக இருந்தன.
அனைத்து தேவர்களாலும் இப்படி {படைத்தலைவன்} பட்டமளிக்கப்பட்ட அவன் {ஸ்கந்தன்} மகிழ்ச்சியுடனும் சுயதிருப்தியுடனும் காணப்பட்டான். அற்புதமாக உடுத்தியிருந்த அவன் {ஸ்கந்தன்}, முழு நிலவைப் போல மிகவும் அழகாகக் காணப்பட்டான். மிகுந்த மதிப்பிற்குரிய வேத மந்திரங்கள் உரைத்தல், தெய்வீக இசைக்குழுவின் இசை, தேவர்கள் மற்றும் கந்தர்வர்களின் கானம் ஆகியன எல்லாப்புறமும் ஒலித்தன. அழகாக உடுத்தியிருந்த அப்சரசுகள், மகிழ்ச்சியாகத் தெரிந்த பிசாசங்கள், தேவர்களின் படைகள் ஆகியவை சூழ பாவகனின் மகனுடைய பட்டமளிப்பு விழா பகட்டாக நடந்தது. இப்படிப் பட்டமேற்ற மஹாசேனன் {ஸ்கந்தன்} தேவலோக வாசிகளுக்கு நீண்ட இருளுக்குப் பின் தெரியும் சூரியனைப் போலத் தெரிந்தான். பிறகு தேவர்களின் படை, அவனைத் தங்கள் தலைவனாகக் கண்டு, ஆயிரக்கணக்கில் அவனைச் சூழ்ந்து நின்றது. அனைத்து உயிர்களாலும் தொடரப்பட்ட அந்த வழிபடத்தகுந்தவன் {ஸ்கந்தன்}, அவர்களது உத்தரவுகளையும், புகழ்ச்சிகளையும், மரியாதைகளையும் ஏற்றுக் கொண்டு பதிலுக்கு அவர்களுக்கு உற்சாகமூட்டினான்.
ஆயிரம் வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்}, முன்பு அவனால் காக்கப்பட்ட தேவசேனையை நினைத்துப் பார்த்தான். இவனே {ஸ்கந்தனே} அவளுக்குப் பிரம்மனால் நிச்சயக்கப்பட்ட கணவன் என்பதைச் சந்தேகமற கருதிய அவன் {இந்திரன்}, சிறந்த முறையில் ஆடைகள் உடுத்தியிருந்த அவளை {தேவ சேனையை} அங்கு அழைத்து வந்தான். பிறகு வலனை வீழ்த்தியவன் {இந்திரன்} ஸ்கந்தனிடம், "ஓ! தேவர்களில் முதன்மையானவனே {ஸ்கந்தா}, நீ பிறப்பதற்கு முன்பே சுயம்புவால் [2] இந்த மங்கை உனக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கிறாள். எனவே தாமரை போன்ற அழகிய இவளது வலக்கரத்தை, உரிய (திருமண) மந்திரங்களுடன் முறையாகப் பற்றுவாயாக" என்றான்.
[2] பிரம்மனால் என்கிறார் கங்குலி
இப்படிச் சொல்லப்பட்ட அவன் {ஸ்கந்தன்}, அவளை {தேவசேனையை} முறையாக மணந்து கொண்டான். மந்திரங்கள் கற்ற பிருஹஸ்பதி உரிய வேண்டுதல்களையும், காணிக்கை சடங்குகளையும் செய்தான். ஷஷ்டி, லக்ஷ்மி, ஆசா, சுகப்பிரதா, சினிவாலீ, குஹூ, சைவிருத்தி, அபராஜிதை என்ற அழைக்கப்படும் அவள் மனிதர் மத்தியில் ஸ்கந்தனின் மனைவியான தேவசேனை என்று அறியப்படுகிறாள். கலைத்துவிட முடியாத திருமண உடன்படிக்கையால் தேவசேனையுடன் ஸ்கந்தன் இணைக்கப்பட்ட போது, செழிப்பின் தேவியானவள் {லட்சுமி} உருவம் கொண்டு வந்து அவனுக்கு {ஸ்கந்தனுக்கு} ஊக்கத்துடன் சேவை செய்ய ஆரம்பித்தாள். ஸ்கந்தன், ஐந்தாவது சந்திர நாளில் {பஞ்சமியில்} செழிப்பை {லட்சுமி தேவியை} அடைந்ததால் அந்த நாள் ஸ்ரீபஞ்சமி (அல்லது மங்களகரமான ஐந்தாவது நாள்) என்று அழைக்கப்படுகிறது. ஆறாவது நாளில் {ஸ்கந்தன்} வெற்றியடைந்ததால், அந்தச் சந்திர நாள் {ஷஷ்டி திதி} மகிமை பொருந்திய நாளாகக் கருதப்படுகிறது."
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.