கண்ணை மூடித் திறப்பதற்குள் நான்கு நாவல்களை முடித்தவிட்டாரே. வெண்முரசின் ஒவ்வொரு பதிவையும் படிப்பதே ஒரு யுகத்தில் வாழ்ந்த அனுபவத்தைத் தரும் எனும்போது, இதற்குள் நான்கு நாவல்களை முடித்துவிட்டாரே! நான்கு நாவல்களையும் படித்த வாசகர்கள் அடைந்த அனுபவத்தையும் உள்ளக் கிளர்ச்சியையும் எண்ணிப் பார்க்கிறேன். ஜெயமோகன் சார், நான் உங்களைக் கண்டு பொறாமை அடைகிறேன். என்னால் உங்களோடும், உங்கள் வாசகர்களோடும் ஓடி வரமுடியவில்லையே.
ஜெயமோகன் அவர்கள் முதற்கனல் செய்து கொண்டிருந்தபோது, ஒவ்வொரு நாளும் விடாது பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வந்தேன். அவ்வப்போது சிறு விமர்சனங்களும் ஒப்பீடும் கூட செய்து வந்தேன். அவரது பீஷ்மராகவும், அம்பையுமாகவும் நானே வாழ்ந்து வந்தேன். மழைப்பாடலில் சற்றுத் தொய்வடைந்தேன். நிற்காமால் மடைதிறந்த அருவி போல வேகமாகச் சென்ற அவரது வேகத்துக்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை.
ஜெயமோகன் அவர்களது வரிகள் ஒவ்வொன்றையும் லேசாகப் படித்துவிட்டு சென்றுவிட முடியாது. ஒவ்வொரு வரிக்குள்ளும் ஞானத்தையும், விவாதத்திற்குரிய வார்த்தைகளையும் பொதிந்து வைத்திருப்பார். சில புதிய தமிழ் சொற்களைத் திடீரெனத் தந்து நம்மை அசத்துவார். அந்தச் சொல்லிலேயே சற்று நேரம் செலவிட வேண்டியிருக்கும். பாத்திரங்கள் உணர்ந்த உள்ளக்கிடக்கையை தான் மெய்யாக உணர்ந்தது போலவே எழுத்துகளில் வடித்து, நம்மையும் அந்தப் பரவச அனுபவத்தை உணரச் செய்வார்.
அப்படியிருக்கும்போது, நில்லாமல் வேகமாகப் படித்துச் செல்வது, நானும் படித்தேன் என்று மட்டுமே சொல்ல வைக்கும். அந்தப் பாத்திரங்களோடு பாத்திரமாக நம்மால் வாழ முடியாது. விட்டதில் இருந்து தொடரலாம் என்றால், வண்ணக்கடல் மற்றும் நீலம் பதிவுகளைக் காணும் போது ஏக்கமாக இருந்தது. சரி கடைசி பதிவைப் படித்து விட்டு பின் தொடர்வோம் என்றால், ஏதோ இழந்ததைப் போன்ற உணர்வு... ஹ்ம்ம்... மீண்டும் படிக்க ஆரம்பிக்க வேண்டும்.
நான் படித்த முதற்கனல் மற்றும் மழைப்பாடலில் பாதி அளவை வைத்துச் சொல்வதாயிருந்தாலே, ஜெயமோகன் அடைந்த உச்சத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது எனும் போது, வரிசையாக நான்கு நாவல்கள் எப்படி இருந்திருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது.
"மஹாபாரதமா? ஏன்டா இப்படி கர்னாடகமா இருக்கிற" என்று விமர்சிக்கும் முற்போக்கு அறிவுஜீவிகளுக்கு மத்தியில் இருந்து கொண்டும், தான் கண்ட மஹாபாரத அகத்தரிசனத்தை, இப்படிப்பட்ட பொக்கிஷமாக நமக்கு வடித்து அளித்திருக்கும் ஜெயமோகன் அவர்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை. வணங்குகிறேன்.
‘வெண்முரசு’ மகாபாரத தொடரின் நூல்களான முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் ஆகிய நூல்களின் அறிமுகம் மற்றும் வெளியீட்டு விழா சென்னை எழும்பூரில் உள்ள மியூசியம் தியேட்டர் அரங்கில் வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் எழுத்தாளர்கள் அசோகமித்திரன், பி.ஏ.கிருஷ்ணன், பிரபஞ்சன், நாஞ்சில்நாடன், பேராசிரியர் ஸ்ரீனிவாசன், ஓவியர் ஷண்முக வேல், நடிகர் கமல்ஹாசன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
சென்னைவாசிகளும், இலக்கிய ஆர்வலர்களும் திரு.ஜெமோகன் அவர்களைப் பாராட்டும் விதமாகவும், அவருக்கு உற்சாகமூட்டும் விதமாகவும் பெருமளவில் அவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டும். அனைவரும் சேர்ந்து எழுத்துலக ரத்தினத்தை ஆராதித்துப் பெருமையடைவோம். வாருங்கள் நண்பர்களே...
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
05.11.2014
********************************************
நண்பர் திரு.ராமராஜன் மாணிக்கவேல் அவர்களின் வாழ்த்து யூடியூபில் காணக்கிடைத்தது. அதைக் கீழுள்ள காணொளியில் கேட்கலாம்.
நன்றி: திரு.ராமராஜன் மாணிக்கவேல்
உணர்ந்து அருமையாக வாழ்த்து சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே.