Fire that lurketh in wood!| Udyoga Parva - Section 37b | Mahabharata In Tamil
(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 37) {விதுர நீதி - 12}
பதிவின் சுருக்கம் : ஊழியர்களின் நம்பிக்கையை வெல்வதால் கிடைக்கும் பயன், விரட்டப்பட வேண்டிய ஊழியன் யார்? ஊழியனின் குணங்கள் என்ன? மனிதன் செய்யக்கூடாதவை எவை? எவர் பணப்பறிமாற்றங்களில் ஈடுபடக்கூடாது? மனிதனுக்குப் புகழைத் தரும் எட்டுக் குணங்கள் எவை? புனித நீராடலால் கிடைக்கும் நன்மைகள் யாவை? அளவான உணவால் கிடைக்கும் நன்மைகள் என்ன? யாருக்கு அடைக்கலம் அளிக்கக்கூடாது? யாரிடம் தானம் கேட்கக்கூடாது? யாரிடம் ஊழியம் செய்யக்கூடாது? பலங்களின் வகைகள் என்ன? நம்பத்தகாதவை எவை? புறக்கணிக்கப்படக்கூடாதவை எவை? ஆகியவற்றை விதுரன் திருதராஷ்டிரனிடம் விளக்கிச் சொன்னது...
{ஊழியர்கள் [பணியாட்கள்]}
{விதுரன் திருதராஷ்டிரனிடம் சொன்னான்} “ஓ! அய்யா {திருதராஷ்டிரரே}, ஆர்வத்துடன் தனக்கு நன்மைகள் செய்வதைத் தொடர்ந்து வரும் அர்ப்பணிப்புமிக்க ஊழியர்களிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தாத தலைவன் {முதலாளி}, தன் ஊழியர்களின் நம்பிக்கையை வென்றவர்கள் பட்டியலில் சேர்கிறான். {அந்த முதலாளி, தனது ஊழியனின் மாறாப்பற்றைப் [விசுவாசத்தைப்] பெறுகிறான்}. உண்மையில் பின்னவர்கள் {ஊழியர்கள்} அவனது {முதலாளியின்} துயர்நிறைந்த காலங்களிலும் அவனைப் பின்தொடருவார்கள். தன் ஊழியர்களுக்குக் கிடைக்கும் மானியங்களைப் பறிமுதல் செய்வதாலோ, அவர்களின் ஊதியத்தை நிறுத்துவதாலோ, ஒருவன் தனது செல்வத்தைத் திரட்டக் கூடாது. {அப்படிச் செய்தால்}, தங்கள் வாழ்வு மற்றும் இன்பத்துக்குரிய வழிகள் அடைபட்டுப் போவதால், பாசம் நிறைந்த {அவனது} ஆலோசகர்களும்கூட, அவனுக்கு {அந்த ஒருவனுக்கு} எதிராகத் திரும்பி (அவனது துன்ப காலத்தில்) அவனை விட்டுப் பிரிந்துவிடுவார்கள்.
முதலில் செயல்களின் நோக்கங்கள் அனைத்தையும் ஆலோசித்து, தனது வருமானம் மற்றும் செலவுகளைக் கணக்கில் கொண்டு, ஊழியர்களின் ஊதியத்தையும், படிகளையும் சரிபார்த்து, {ஊழியர்களைக் கொண்ட} சரியான கூட்டணியை ஒரு மன்னன் உருவாக்க வேண்டும். {ஊழியர்களின்} கூட்டணிகளால் அடைய முடியாதது எதுவும் இல்லை.
தனது அரசத் தலைவனின் நோக்கங்களை முழுமையாகப் புரிந்து கொண்டு, அனைத்துக் கடமைகளையும் சுறுசுறுப்பாகச் செய்யும் ஓர் அலுவலர் {ஊழியன்}, மரியாதைக்குரியவனாக இருந்து, தனது தலைவனுக்கு அர்ப்பணிப்போடு இருந்து, தன் தலைவனின் நன்மையையே எப்போதும் சொல்லும் ஒருவன், தனது சொந்த பலத்தின் அளவை முழுமையாக அறிந்து, {ஒரு செயலில் தன்னோடு இணைந்து பணியாற்றப் போகும்} மற்றவர்கள் பலத்தையும் அறிந்து இருப்பவன் ஆகியோரை ஒரு மன்னன் தனது இரண்டாவது பாதி என்றே கருத வேண்டும்.
எனினும், (தனது தலைவனால்) கட்டளையிடப்பட்டும், அந்தத் தலைவன் சொன்ன தடைகளை அலட்சியம் செய்து, தன் அறிவில் செருக்குக் கொண்டு, {தன் தலைவனால்} அறிவுறுத்தப்பட்ட எதையும் ஏற்க மறுத்து, தனது தலைவனுக்கு எதிராகப் பேசும் ஊழியனைச் சிறு தாமதமும் இன்றி விரட்டி விட வேண்டும்.
{ஊழியனின் எட்டு குணங்கள்}
செருக்கில்லாமை, திறமை, தாமதம் செய்யாமை, அன்பு, தூய்மை, கறைபடியாமை, நோய்ச்சுவடு இல்லாத குடும்பத்தில் பிறப்பு, மதிப்புமிக்கப் பேச்சு ஆகிய எட்டுக் குணங்கள் ஓர் ஊழியனிடம் இருக்க வேண்டும் என்று கற்றவர்கள் சொல்கிறார்கள்.
{ஊழியன் செய்யக்கூடாதது}
முன்னறிவிப்புச் செய்திருந்தாலும், எந்த மனிதனும் அந்திப்பொழுதிற்குப் {மாலைநேரத்திற்குப்} பிறகு, நம்பிக்கையுடன், ஓர் எதிரியின் வீட்டில் நுழையக்கூடாது. இரவு நேரத்தில், மற்றவர் இடத்தின் முற்றத்தில், ஒருவன் பதுங்கக் கூடாது. மன்னனால் விரும்பப்படும் பெண்ணிடம் இன்பம் பெற முயலக்கூடாது. இழிந்தோர் சேர்க்கையும், தான் சந்திக்கும் அனைவரிடமும் ஆலோசிக்கும் பழக்கமும் கொண்ட ஒருவன் எடுத்திருக்கும் முடிவுக்கு எதிராக உம்மை அமைத்துக் கொள்ளாதீர். “நான் உன்னை நம்பவில்லை” என்று எப்போதும் அவனிடம் சொல்லாதீர்; மாறாக ஏதாவதொரு காரணத்தைக் கற்பித்து, சாக்குபோக்கு சொல்லி {அவனை} அனுப்பிவிடுவீராக.
{பணப் பறிமாற்றம்}
ஆதீத கருணை கொண்ட மன்னன், கீழ்த்தரமான நடத்தை கொண்ட பெண், மன்னனின் ஊழியன், மகன், தம்பி, ஓர் ஆண் குழந்தையுடைய {மகனுடைய} விதவை, படையில் ஊழியம் செய்பவன், பெரும் இழப்புகளால் பாதிக்கப்பட்டவன் {பெரும் நஷ்டமடைந்தவன்}, ஆகியோர் கடன் கொடுக்கவோ, கடன் வாங்கவோ கூடிய பணப்பரிமாற்றங்களில் ஈடுபடக்கூடாது.
{மனிதனைப் பிரகாசிக்கச் செய்யும் எட்டு குணங்கள்}
ஞானம், நற்குடி {நல்ல குலத்தில் பிறப்பு}, சாத்திரங்களறிதல், தன்னடக்கம், ஆற்றல், மிதமான உரை {பேச்சு}, தனது சக்தியின் அளவுக்குத்தக்க தானம், நன்றியறிதல் ஆகிய எட்டு குணங்களும் மனிதர்கள் மேல் மிளிர்வைச் சிந்தும். ஓ! அய்யா {திருதராஷ்டிரரே}, தானத்தினால், இந்த உயர்ந்த குணங்கள் அத்தனையும் ஒருவனால் அவசியம் ஒன்றாகக் அடையப்படுகிறது. ஒரு மனிதனுக்கு மன்னன் உதவி செய்யும்போது, அந்த (அரச உதவி) நிகழ்வு அனைத்து குணங்களையும் ஒன்றாகக் கொண்டு வந்து, அவற்றை ஒன்றாகப் பிணைக்கிறது.
{[புனித] நீராடல்}
{புனித} நீராடாலைச் செய்வதன் மூலம் ஒருவன், பலம், அழகு, தெளிவான குரல், அகரவரிசை ஒலிகள் அனைத்தையும் உச்சரிக்கும் திறன், மென்மை, நறுமணம், தூய்மை, அருள்நிறைவு, உறுப்புகளின் நுண்ணயம், அழகிய பெண்கள் ஆகிய பத்தை {10} வெல்லலாம்.
{மித உணவு}
உடல்நலன், நீண்ட வாழ்நாள், சுகம், உடல்நலமுள்ள குழந்தைகள், பெருந்தீனிக்காரன் என்று எவராலும் நிந்திக்கப்படாமை ஆகியவற்றை அளவாக உண்பவன் வெல்கிறான் {அடைகிறான்}.
{அடைக்கலம்}
எப்போதும் முறையற்ற செயல் செய்பவன், அதிகமாக உண்பவன், எல்லோராலும் வெறுக்கப்படுபவன், பெரும் ஏமாற்றுக்காரன், கொடுமைபுரிபவன், காலம் இடம் ஆகியவற்றின் தன்மைகளை அறியாதவன், பண்பற்ற வகையில் {அநாகரிகமாக} உடுத்துபவன் ஆகியோருக்கு ஒருவன் தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்கக்கூடாது.
{இவர்களிடம் தானம் கேட்கக் கூடாது}
ஒருவன் எவ்வளவுதான் துன்பத்தில் இருந்தாலும், பிச்சையிடாத கஞ்சன், பிறரை குறை பேசுபவன் {நிந்திப்பவன்}, சாத்திரங்களை அறியாதவன் {மூடன்}, காட்டில் வசிப்பவன், தந்திரம் செய்யும் வஞ்சகன், மதிப்புக்குரியோரை மதிக்காதவன், கொடூரமான மூர்க்கன், பிறருடன் சண்டையிடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பவன், நன்றிமறந்தவன் ஆகியோரிடம் தானம் கோரவே கூடாது.
{இந்த ஆறு பேரிடம் ஊழியஞ்செய்யக்கூடாது}
எதிரி, எப்போதும் தவறிழைப்பவன், பொய்மைக்கு இணக்கமானவன் {எந்நாளும் பொய் சொல்பவன்}, தேவர்களிடம் பக்தி இல்லாதவன், அன்பில்லாதவன், அனைத்தையும் செய்ய வல்ல திறமையுள்ளவனாகத் தன்னைக் கருதிக் கொள்பவன் ஆகிய இந்த ஆறு இழிந்த மனிதர்களுக்காகக் காத்திருக்கவே {இந்த ஆறு இழிந்த மனிதர்களிடம் ஊழியஞ்செய்யவே} கூடாது.
ஒருவனின் நோக்கங்கள், (தங்கள் வெற்றிக்கு) வழிவகைகளையே சார்ந்திருக்கின்றன. அதே போல வழிமுறைகளும், {தங்களால் சாதிக்கப்பட வேண்டிய) அந்த நோக்கங்களின் தன்மையையே {இயல்புகளையே} சார்ந்துள்ளன. ஒன்றை ஒன்று சார்ந்து பிணைப்புடன் இருக்கும் இவற்றைச் {வழிமுறைகளும், நோக்கங்களும்} சார்ந்தே வெற்றி இருக்கிறது. மகன்களைப் பெற்று, யாரையும் சார்ந்தில்லாமல் அவர்கள் இருப்பதற்கு, ஏதாவது ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, கன்னிகைகளான தனது மகள்களைத் தக்க மனிதர்களுக்கு அளித்துவிட்டு {மணமுடித்துக் கொடுத்துவிட்டு}, காட்டிற்கு {ஓய்ந்திருக்க} சென்று, முனிவனாக வாழவே ஒரு மனிதன் விரும்ப வேண்டும். தனது மகிழ்ச்சிக்குச் செய்து கொள்வது போலவே, பரமாத்மாவின் உதவிகளை அடைய, அனைத்து உயிர்களுக்கும் நன்மையைச் செய்ய வேண்டும். அதுவே {பிற உயிரினங்களுக்கு நன்மையைச் செய்வதே} ஒரு மனிதனின் நோக்கங்கள் அனைத்தும் வெற்றியடைவதற்கு வேராக இருக்கும்.
புத்திசாலித்தனம், சக்தி, ஆற்றல், பலம், சுறுசுறுப்பு, விடாமுயற்சி ஆகியவற்றை வாழ்வாதாரமாகக் கொண்டிருப்பவனுக்கு என்ன கவலை இருக்க முடியும்?
பாண்டவர்களிடம் {உமக்கு} முறிவு ஏற்படுவதால் சக்ரனுடன் {இந்திரனுடன்} கூடிய தேவர்களேகூடக் கவலை கொள்வார்கள். அதனால் உண்டாகும் தீமைகளைப் பாரும். முதலில், உமது மகன்களான அவர்கள் அனைவருடனும் {அந்த முறிவால்} பகைமை உண்டாகும்; இரண்டாவது, தொடர்ச்சியாகக் கவலை நிறைந்த வாழ்வு ஏற்படும்; மூன்றாவதாக, குருக்களின் {கௌரவர்களின்} நல்ல புகழுக்கு கேடு உண்டாகும். கடைசியாக, உமது எதிரிகளாக இருப்பவர்களுக்கு அது {பாண்டவர்களுடனான அந்த முறிவு} மகிழ்ச்சியை உண்டாக்கும்.
ஓ! இந்திரனைப் போன்ற பிரகாசம் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, பெரிய அளவிலான வால்நட்சத்திரம் பூமியின் மீது குறுக்காக விழுவதைப் போல, பீஷ்மர், துரோணர், மற்றும் மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோரது கோபம் இந்த முழு உலகையும் எரித்துவிடும். உம்முடைய நூறு மகன்களும் {கௌரவர்களும்}, கர்ணனும், பாண்டுவின் மகன்களும் {பாண்டவர்களும்} ஒன்றாகச் சேர்ந்து கடல்களைக் கச்சையாகக் கொண்ட முழு உலகையும் ஆள முடியும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தார்த்தராஷ்டிரர்கள் {கௌரவர்கள்} காடென்றால், பாண்டவர்களை, நான் புலிகளாக நினைக்கிறேன். ஓ! காட்டை அதன் புலிகளைக் கொண்டு வெட்டிவிடாதீர்! ஓ! புலிகள் காட்டில் இருந்து விரட்டப்படாதிருக்கட்டும்! புலிகளில்லாத காடும், காடில்லாத புலிகளும் இருக்க முடியாது. காடு புலிகளுக்கு உறைவிடம். புலிகள் அக்காட்டைப் பாதுகாக்கும்!
பாவிகளாக இருப்பவர்கள், தங்கள் குறைகளை உறுதி செய்து கொள்ளாததைப் போலப் பிறருடைய நல்ல குணங்களையும் உறுதி செய்ய மாட்டார்கள். உலகம் சார்ந்த ஆதாயத்தோடு {இலாபத்தோடு} இணைந்திருக்கும் அனைத்துக் காரியங்களிலும் உயர்ந்த வெற்றியை விரும்பும் ஒருவன், தொடக்க நிலையில் இருந்தே அறம் பயில வேண்டும். உண்மையான ஆதாயம் சொர்க்கத்தில் இருந்து பிரிந்திருப்பதில்லை. பாவங்களில் இருந்து விடுபட்ட ஆன்மா கொண்டவன், அறத்தில் உறுதியாக நிலைத்து நின்று, அனைத்துப் பொருட்களையும் அதன் இயல்பு மற்றும் இயல்பற்ற நிலைகளைப் புரிந்து கொண்டவனாக இருப்பான். அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைப் பின்பற்றும் ஒருவன், அந்த மூன்றின் கலவையையும் இவ்வுலகிலும், மறு உலகிலும் சரியான காலங்களில் அடைகிறான். கோபம் மற்றும் மகிழ்ச்சியின் சக்தியைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பவன், ஓ! மன்னா, பேரிடர் காலங்களிலும் தனது உணர்வுகளை இழக்காமல் செழிப்பை வெல்கிறான்.
{ஐந்து வகையான பலங்கள்}
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நான் சொல்வதைக் கேளும். மனிதர்கள் ஐந்து வகையான வெவ்வேறு பலங்களைப் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவற்றில், கரங்களில் பலம் மிகத் தாழ்ந்த வகையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது. நீர் அருளப்பட்டிப்பீராக. நல்ல ஆலோசகர்களை அடைவது இரண்டாவது வகைப் பலமாகக் கருதப்படுகிறது. செல்வம் அடைதலை மூன்றாவது வகைப் பலமாக ஞானிகள் கூறியுள்ளனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவனுடைய தந்தை, பாட்டன் மூலம் இயற்கையாக அடையப்படுவதான பிறப்பின் பலம் நான்காவது வகைப் பலமாகக் கருதப்படுகிறது. எனினும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, எதைக் கொண்டு இவை அனைத்தையும் வெல்ல முடியுமோ, அனைத்து வகைப் பலங்களிலும் முதன்மையான அஃது, அறிவின் பலம் என்று அழைக்கப்படுகிறது.
சக உயிரின் மேல் பெரும் தீங்கை விளைவிக்க வல்ல ஒரு மனிதனின் எதிர்ப்பைத் தூண்டிவிட்ட பிறகு, அவன் தொலைவில்தான் இருக்கிறான் என்று நம்பக்கூடாது {நம்பி அமைதியாக இருக்கக்கூடாது}.
{நம்பத்தகாதவை}
பெண்கள், மன்னர்கள், பாம்புகள், தனது தலைவன் {முதலாளி}, எதிரிகள், இன்பங்கள், வாழ்வின் காலம் ஆகியவற்றில் எந்த ஞானிதான் {புத்திமான்தான்} நம்பி வைப்பான்? அறிவு என்ற கணையால் தாக்கப்பட்டவர்களுக்கு மருந்துகளோ மருத்துவர்களோ கிடையாது. அது போன்ற மனிதர்களைப் பொறுத்தவரை, ஹோம மந்திரங்களோ, மங்கள விழாக்களோ, அதர்வண வேத மந்திரங்களோ {ஆபிசார மந்திரங்களோ}, அல்லது விஷத்தினாலான மருந்துகளோ {ரசகுளிகைகளோ} பயனளிப்பதில்லை.
{புறக்கணிக்கக்கூடாதவை}
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாம்புகள், நெருப்பு, சிங்கங்கள், இரத்த உறவுகள் ஆகியவற்றில் ஒன்றையும் எந்த மனிதனும் புறக்கணித்துவிடக்கூடாது; இவை அனைத்துமே பெரும் வல்லமை கொண்டவை.
இவ்வுலகில் நெருப்பு என்பது பெரும் சக்தி வாய்ந்தது. மரத்தில் பதுங்கியிருக்கும் அது {நெருப்பு}, பிறர் தூண்டும் வரை அந்த மரத்தை எரிப்பதில்லை. அதே நெருப்பு, உராய்வினால் உண்டாக்கப்படும்போது, தன் சக்தியைக் கொண்டு அது {நெருப்பு தான்} பதுங்கியிருந்த மரத்தை மட்டுமல்ல, மொத்த காட்டையும், இன்னும் பல பொருட்களையும் சேர்த்தே எரித்துவிடுகிறது.
உயர்ந்த குலத்தில் பிறந்த மனிதர்களும் சக்தியில் நெருப்பைப் போன்றவர்களே. மன்னிக்கும் தன்மையோடு {பொறுமையோடு} இருக்கும் வரை, அவர்கள் கோபத்தின் எந்த வெளிப்புற அறிகுறிகளையும் காட்டிக் கொள்ளாமல், மரத்தில் உள்ள நெருப்பு போலவே அமைதியாக இருக்கிறார்கள்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்களோடு கூடிய நீர், கொடிகளின் தன்மையைப் பெற்றிருக்கிறீர், பாண்டுவின் மகன்களோ சால மரங்களாகக் கருதப்பட்டார்கள். சுற்றிப் படரப் பெருமரம் இல்லாமல் கொடி வளர்வதில்லை. ஓ! மன்னா, ஓ! அம்பிகையின் மகனே {திருதராஷ்டிரரே}, உமது மகன் {துரியோதனன்} காட்டைப் போன்றவன். ஓ! அய்யா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்கள் அந்தக் காட்டின் சிம்மங்கள் என்று அறிந்து கொள்வீராக. அதன் சிங்கங்கள் இல்லாமல் அந்தக் காடு அழிக்கப்பட்டு விடும். அதே போல {தங்கள் புகலிடமான} காடு இல்லாமல் சிங்கங்களும் அழிவுக்குள்ளாகும்” என்றான் {விதுரன்}.