Kingcraft!| Udyoga Parva - Section 38 | Mahabharata In Tamil
(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 38) {விதுர நீதி - 13}
பதிவின் சுருக்கம் : விருந்தினர்களிடம் நடந்து கொள்ளும் முறைகளை விதுரன் சொன்னது; விருந்தினராக வரும் எவரையும் அன்புடன் நடத்த வேண்டும் என்று சொன்னது; பிக்ஷு வகை யோகியர் யார்? எவற்றை அந்தணர்கள் விற்கக்கூடாது? சகோதரத்துவத்தில் முதன்மையானவன் யார்? யாரிடம் நம்பிக்கை வைக்கக்கூடாது? மனைவியரை ஏன் சிறப்பாகப் பாதுகாக்க வேண்டும்? ஆட்சித்திறன்கள் என்னென்ன? நாட்டைப் பாதுகாக்கும் ஆறுவழிகள் எவை? மரணத்துக்குத் தகுந்தவர்கள் யார்? என்பன போன்றவற்றைத் திருதராஷ்டிரனுக்குச் சொன்ன விதுரன், துரியோதனனிடம் நாட்டின் பொறுப்பைக் கொடுத்ததால் விரைவில் செல்வச்செழிப்பு வீழ்ச்சியடையும் என்று சொன்னது...
{விருந்தினர்}
விதுரன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான் “வயது முதிர்ந்த ஒரு மதிப்பிற்குரிய நபர், தனது இல்லத்திற்கு (விருந்தினராக) வரும்போது, ஓர் இளைஞனின் இதயம் {அவர் மீது கொண்ட மதிப்பால்} உயர எழுகிறது. அவரை நோக்கி முன்னேறி {அவரை எதிர்கொண்டு அழைத்து), வணங்கிய பிறகே அவன் {அந்த இளைஞன்} மீண்டும் வருகிறான். தற்கட்டுப்பாடுடைய ஒருவன் {சுயக்கட்டுப்பாடு கொண்டவன்}, {விருந்தினருக்கு} இருக்கையை அளித்து, நீரைக் கொண்டு வந்து, அவரது காலைக் கழுவச் செய்து, வழக்கமான விசாரிப்புகளைச் செய்த பிறகே, தனது சொந்த விவகாரங்களைப் {அவரிடம்} பேச வேண்டும். அனைத்தையும் கருத்தில் கொண்ட பிறகு, அவருக்கு உணவு அளிக்க வேண்டும்.
ஒருவன் மீது கொண்ட பயத்தினாலோ, அவனது கஞ்சத்தனத்தாலோ, அவனது விருப்பமின்மையாலோ, எவனுடைய வீட்டில், மந்திரங்கள் அறிந்த அந்தணர் ஒருவர் நீர், தேன், தயிர்க்கடைசல் மற்றும் பசுக்கள் ஆகிய தானங்களைப் பெறவில்லையோ, அவன் வீணாக வாழ்பவன் என்று ஞானிகள் கூறியுள்ளனர்.
மருத்துவர், அம்புகள் {[அ] ஆயுதங்கள்} செய்பவர், காலம் முடியும் முன்னரே பிரம்மச்சரிய நோன்பைக் கைவிடுபவன், திருடன், கோணல்புத்திக்காரன், மதுவுண்ணும் பிராமணன், கருச்சிதைவை ஏற்படுத்துபவன், படைக்குச் சேவை செய்து வாழ்பவன், வேதங்களை விற்பவன் ஆகியோர் விருந்தினராக வந்தாலும், அவன் என்னதான் நீர் கொடுக்கத் தகுதியற்றவனாக இருப்பினும், (அந்த வீட்டின் உரிமையாளன்}, அவனை அன்பாகக் கருத {நடத்த} வேண்டும்.
{பிக்ஷு வகை யோகி}
உப்பு, சமைத்த உணவு, தயிர்க்கடைசல், பால், தேன், எண்ணெய், தெளிந்த நெய், எள் இறைச்சி, பழங்கள், கிழங்குகள், கீரைவகைகள், சாயமேற்றப்பட்ட துணிகள், அனைத்து வகைச் சந்தனக்கலவைகள் {நறுமணப்பொருட்கள்} மற்றும் {வெல்லம் போன்ற} பாகு ஆகியவற்றை விற்பனை செய்பவனாக {வியாபாரியாக} ஓர் அந்தணன் இருக்கக்கூடாது.
கோபவசப்படாதவன், துயரத்தைக் கடந்தவன், எப்போதும் நட்போ சண்டையோ தேவைப்படாதவன், புகழ் மற்றும் பழி ஆகிய இரண்டையும் அலட்சியம் செய்பவன், விருப்பு மற்றும் வெறுப்பு இரண்டையும் விட்டு விலகி நிற்பவன், இவ்வுலகில் இருந்து முழுமையாக விடுபட்டவனாக இருப்பின், அவனே உண்மையான பிக்ஷுவகை யோகியாவான்.
காட்டில் முளைக்கும் தினை {அரிசி போலப் புல்லில் முளைக்கும் சிறுதானியங்கள், உ-ம், கம்பு, சோளம், கேழ்வரகு,வரகு அரிசி, குதிரைவாலி அரிசி}, கிழங்குகள், கீரைகள் ஆகியவற்றைக் கொண்டு வாழ்ந்து, தன் ஆன்மாவை முழுக் கட்டுப்பாட்டுக்கள் வைத்து, தனது வழிபாட்டுக்குரிய நெருப்பைக் கவனமாக வைத்து, விருந்தினர்களை எப்போதும் மதிப்புடன் கருதி, காட்டில் வசிக்கும் அறம்சார்ந்த தவசியே, உண்மையில் சகோதரத்துவத்தில் {சமூக ஒற்றுமை உணர்ச்சி கொண்டோரில்} முதன்மையானவன் ஆவான்.
{நம்பிக்கை}
ஒரு புத்திசாலி மனிதனுக்குத் தீங்கிழைத்துவிட்டு, அந்தத் தீங்குக்குள்ளானவன் உண்மையில் தொலைவில்தான் வாழ்கிறான் என்று உறுதிசெய்தாலும் ஒருவன் அமைதியடையக்கூடாது {சமாதானம் அடையக்கூடாது}. புத்திசாலி மனிதர்களின் கரங்கள் நீளமானவை. அவற்றைக் கொண்டு அவர்கள் அந்தத் தீங்குக்கான பதில் தீங்கைத் திரும்பச் செய்ய முடியும்.
நம்பத்தகாதவனிடம் ஒருவன் நம்பிக்கை கொள்ளக்கூடாது. அதே போல, நம்பத்தகுந்தவனிடமும் அதீத நம்பிக்கை கொள்ளலாகாது. நம்பிக்கையைப் பெற்றவனிடம் இருந்து எழும் ஆபத்து, ஒருவனது வேர்களையே அறுத்துவிடும்.
ஒருவன், பொறாமையைக் கைவிட வேண்டும், தனது மனைவிகளைக் காக்க வேண்டும், பிறருக்கு உரியதைச் சரியாகக் கொடுக்க வேண்டும், பேச்சில் இனிமையுடையவனாகவும் இருக்க வேண்டும். தனது மனைவிகளைப் பொறுத்தவரை, ஒருவன், இனிய நாக்கும், பேச்சும் கொண்டவனாக இருக்க வேண்டும். ஆனால் அவன் அவர்களது அடிமையாக இருக்கக்கூடாது. உயர்ந்த அருள் கொண்டவர்களாவும், அறம்சார்ந்தவர்களாகவும், வழிபடத்தகுந்தவர்களாகவும், தங்கள் குடும்பத்தின் ஆபரணங்களாகவும் திகழும் மனைவிகளே ஒருவனது இல்லச் செழிப்பின் உருவகம் {அந்த வீட்டின் லட்சுமிகள்} என்று சொல்லப்படுகிறது. எனவே, அவர்கள் சிறப்பாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.
தந்தைக்கு அந்தப்புரத்தின் மேற்பார்வையை அளிக்கலாம். தாய்க்கு சமையலறையையும் {பாகசாலையையும்}, தன்னைப் போன்ற ஒருவனுக்குப் பசுக்களை மேற்பார்வையிடும் பொறுப்பையும் அளிக்கலாம். ஆனால், உழவைப் {வேளாண்மையைப்} பொறுத்தவை, தானே நேரடியாக அதை மேற்பார்வையிட வேண்டும்.
வியாபார சாதியைச் சேர்ந்த விருந்தினர்களுக்குப் பணியாட்களைக் கொண்டும், பிராமணச் சாதியைச் சேர்ந்தவருக்குத் தனது மகன்களைக் கொண்டும் பணிவிடை செய்ய வேண்டும்.
{ஆட்சித்திறம்}
நெருப்பு அதன் தோற்றத்தை {மூலத்தை} நீரில் கொண்டுள்ளது; க்ஷத்திரியர்கள், தங்கள் தோற்றத்தை பிராமணர்களில் கொண்டுள்ளனர், இரும்பு தனது தோற்றத்தை கற்களில் கொண்டுள்ளது. தங்கள் முன்னோடிகளுடன் தொடர்பு ஏற்படும்போது, அனைத்தையும் பாதிப்படையச் செய்யும் (நெருப்பு, க்ஷத்திரியர்கள் மற்றும் இரும்பு ஆகிய) அவற்றின் சக்தி, விரைவில் சமநிலை அடைந்துவிடும்.
நெருப்புத் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மரத்தில் மறைந்திருக்கிறது. நெருப்பு சக்தி கொண்டவர்களான நற்குடியில் பிறந்த நல்லவர்களும், மன்னிக்கும் இயல்பு கொண்ட பொறுமைசாலிகளும், அவர்களுக்குள் இருக்கும் {நெருப்பு போன்ற} அறிகுறிகளை {சக்திகளை} வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள்.
தன்னைச் சார்ந்தவர்களாலும், வெளியில் இருப்பவர்களாலும் தனது ஆலோசனைகள் அறியப்படாமல் இருக்கச் செய்யும் அதே வேளையில், பிறரின் ஆலோசனைகளை ஒற்றர்கள் மூலமாக எந்த மன்னன் அறிந்து கொள்கிறானோ, அவன் நீடித்த செழிப்பில் மகிழ்ச்சியாக இருக்கிறான்.
தான் செய்ய நினைப்பதை ஒருவன் பேசக்கூடாது. அறம், பொருள், இன்ப வகைகளில் நீர் செய்யும் எதுவும், அது நிறைவடையும் வரை அறியப்படாமல் இருக்கட்டும். {செய்யப்படும்} ஆலோசனைகள் பலரால் அறியப்படாதிருக்கட்டும்.
மலையின் உச்சிக்கோ, மாளிகையின் மேல்தளத்திற்கோ {உப்பரிகைக்கோ}, மரங்களோ செடிகளோ அற்ற காட்டுப்பகுதிக்கோ சென்று, கமுக்கமாக உமது ஆலோசனைகளில் முதிர்வீராக.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கல்வியறிவில்லாத நண்பன், கல்வியறிவுள்ள, ஆனால் புலனடக்கம் இல்லாத நண்பன் ஆகியோர், அரசாங்க இரகசியத்தின் களஞ்சியங்களாக இருக்கத் தகுதிற்றவர்களாவர்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரு மன்னனின் நிதிகள், அவனது ஆலோசனைகள் ஆகிய இரண்டையும் பாதுகாக்கும் பொறுப்பு ஓர் அமைச்சனுடையது. எனவே, ஒருவனை நன்றாகச் சோதியாமல் உமது அமைச்சர்களில் ஒருவனாக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதீர்.
எவனுடைய அமைச்சர்கள், அவன் செய்யும் அறம், பொருள், இன்பம் சார்ந்த செயல்களை, அவை நிறைவேறிய பிறகு அறிகிறார்களோ, அந்த மன்னனே ஆட்சியாளர்களில் முதன்மையானவன் ஆவான்.
எவனுடைய ஆலோசனைகள் சந்தேகமில்லாமல் கமுக்கமாகப் பேணப்படுகிறதோ, அந்த மன்னனே வெற்றியடைவான்.
அறியாமையால் நிந்திக்கத்தக்க செயல்களைச் செய்பவன், அந்தச் செயல்களின் விளைவால் தனது வாழ்வையே {உயிரையே கூட} இழக்கிறான்.
புகழத்தக்க காரியங்களைச் செய்யும்போது, அஃது எப்போதும் சுகத்தையே அளிக்கும். அத்தகு செயல்களைச் செய்யாமல் இருப்பதே மனவருத்தத்திற்கு வழிவகுக்கும்.
(பித்ருக்களை மதிக்கும் வண்ணம் {பித்ருக்களின் நினைவாகச்} செய்யப்படும்) சிரதங்களைச் செய்ய, வேதமறியாத பிராமணனுக்குத் தகுதியில்லாதது போல, (நாட்டைப் பாதுகாக்கும் வழிகளான) ஆறு வழிகளைக் [1] குறித்துக் கேள்விப்படாதவன் அரசியல் கருத்தரங்குகளில் {மந்திராலோசனைகளில்} பங்கு பெற தகுதியற்றவனாவான்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, {வருவாய்} அதிகரித்தல், குறைதல், உபரி ஆகியவற்றில் ஒரு கண் கொண்டு, ஆறு வழிகளை [2] அறிந்து, தனது சுயத்தை அறிந்து, மெச்சத்தகுந்த நடத்தை கொண்டிருக்கும் ஒருவன் முழு உலகத்தையும் தன் கட்டுக்குள் கொண்டு வருவான். விளைவை உண்டாக்கும் கோபத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு, எது செய்யப்பட வேண்டுமோ அதை நேரடியாகக் கண்காணித்து, தனது கருவூலத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒருவன் முழு உலகத்தையும் தன் கட்டுக்குள் கொண்டு வருவான்.
...........................................................................................................
[1], [2] குறள் 381 :படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்உடையான் அரசரு ளேறு1. படை, 2. குடிமக்கள், 3. குறையாத வளம் {செல்வம்}, 4. அமைச்சன், 5. நட்பு {அண்டை நாட்டு நட்பு}, 6. அரண் {காவல்} ஆகிய ஆறு அங்கங்களைக் கொண்டவனே மன்னர்களில் சிம்மமாவான்.
தனது தலைக்கு மேல் பிடிக்கப்படும் குடையையும், தான் வென்ற பெயரையும் கொண்டு ஒரு மன்னன் மனநிறைவு கொள்ள வேண்டும். தனக்கு ஊழியம் செய்வோருடன் தனது நாட்டின் செல்வத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். தனியாக அனைத்தையும் அவன் {ஒரு மன்னன்} தீர்மானிக்கக்கூடாது. ஓர் அந்தணன், {மற்றொரு} அந்தணனை அறிவான், ஒரு கணவன், மனைவியைப் புரிந்து கொள்வான், ஒரு மன்னன் அமைச்சரை அறிவான், ஏகாதிபதிகளே ஏகாதிபதிகளை அறிவார்கள்.
.............................................................................................................
{மரணத்திற்குத் தகுந்தவர்கள்}
மரணத்துக்குத் தகுந்த எதிரி ஒருவனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டவரப்படும்போது, அவனை விடுவிடக்கக்கூடாது. {எதிரி} மரணத்திற்கே தகுந்தவனென்றாலும், பலம்நிறைந்த எதிரியிடம், பலவீனமாக இருக்கும் ஒருவன் வணக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். ஆனால், பலத்தில் நிறைவடைந்தவுடனேயே, அவன், அந்த எதிரியைக் கொல்ல வேண்டும். அவன் கொல்லப்படவில்லையென்றால், அவனால் {அந்த எதிரியால்} விரைவில் ஆபத்து எழும். தேவர்கள், மன்னர்கள், அந்தணர்கள், முதிர்ந்தோர், குழந்தைகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு எதிரான கோபத்தை ஒருவன் முயற்சியுடன் அடக்க வேண்டும்.
முட்டாள்கள் ஈடுபடுவது போல, ஆதாயமற்ற சண்டைகளில் ஒரு ஞானி ஈடுபடக்கூடாது. அதனால் {அப்படிப்பட்ட சண்டைகளில் ஈடுபடாமல் இருப்பதால்} அவன், இவ்வுலகில் பெரும் புகழை அடைந்து, ஆபத்து மற்றும் பெருந்துயரங்களைத் தவிர்க்கிறான். அலியாக இருக்கும் கணவனை விரும்பாத பெண்களைப் போல, பலனற்ற அருள், விளைவில்லாத கோபம் கொண்டோரைத் தலைவனாக ஏற்றுக் கொள்ள மக்கள் விரும்ப மாட்டார்கள்.
செல்வத்தை அடைய புத்தி காரணமல்ல, அதே போல, வறுமைக்கு மூடத்தனம் காரணமல்ல; இவ்வுலகில் உள்ள வேறுபாடுகளின் காரணங்களை ஞானிகள் மட்டுமே அறிவர்; பிறரல்ல.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வயதில் மூத்தோரையும், நடத்தை, அறிவு, புத்திசாலித்தனம், செல்வம், குலமரபு ஆகியவற்றில் தலைமையாக இருப்போரையும் மூடன் எப்போதும் அவமதிப்பான்.
தீய மனநிலை கொண்டோர், அறிவற்றவர்கள், பொறாமை கொண்டோர், பாவிகள், குற்றங்களையே பேசுபவர்கள், கோபமுடையவர்கள் ஆகியோர் விரைவில் துயரத்திற்கு உள்ளாகின்றனர்.
ஏமாற்றுத்தனமில்லாமை {சொல் தவறாமை}, தானம், நிறுவப்பட்டுள்ள புணர்வு விதிகளை நோற்பது, நன்கு அடக்கப்பட்ட பேச்சு ஆகியவை அனைத்து உயிர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.
ஏமாற்றுத்தனமில்லாத, சுறுசுறுப்பான, நன்றியுணர்வு கொண்ட, புத்திசாலித்தனமுள்ள, கபடமற்ற ஒருவனது கருவூலம் வெறுமையாக இருப்பினும், நண்பர்கள், ஆலோசகர்கள், பணியாட்கள் ஆகியோரை அவன் அடைகிறான்.
புத்திக்கூர்மை, மன அமைதி, தற்கட்டுப்பாடு, தூய்மை, கடுஞ்சொல் பேசாமை, நண்பர்களுக்கு ஏற்பில்லாத எதையும் செய்யவிரும்பாமை {நண்பர்களுக்குத் துரோகம் செய்யாமை} ஆகிய ஏழும் ஒருவனுடைய செழிப்பு எனும் சுடருக்கு எரிபொருளாகக் கருதப்படுகின்றன.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிறருக்கு உரியதைக் கொடுக்காத இழிந்தவன், தீய ஆன்மா கொண்டவன், நன்றிமறந்தவன், வெட்கங்கெட்டவன் ஆகியோரைத் தவிர்க்க வேண்டும். {குற்றமற்ற} அப்பாவியைப் பற்றி, அடுத்தவனிடம் தூண்டிவிடும் குற்றவாளி, ஒரே அறையில் பாம்புடன் இரவைக் கடத்தும் மனிதனைப் போல, இரவில் அமைதியாகத் தூங்க முடியாது.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, எவன் கோபம் அடைந்தால், ஒருவனின் உடமைகளும், பொருள் கொள்ளும் வழிகளும் ஆபத்துக்குள்ளாகுமோ, அவனை, தேவர்களை அமைதிப்படுத்துவது போல அமைதிப்படுத்த வேண்டும். பெண்கள், பொறுப்பற்றவர்கள், தங்கள் சாதிக்குரிய கடமைகளில் இருந்து விழுந்தவர்கள், தீய மனநிலை கொண்டவர்கள் ஆகியோரை நம்பியிருக்கும் நோக்கங்களின் {இலக்குகளின்} வெற்றி சந்தேகத்திற்குரியதே. ஓ! மன்னா {திருதராஷ்டரரே}, பெண், ஏமாற்றுக்காரன், குழந்தை ஆகியோரைத் தனது வழிகாட்டியாகக் கொண்டிருப்பவன் கல் தோணியைப் போல ஆதரவற்று மூழ்குவான்.
வேலையின் பொதுவான நெறிமுறைகளில் திறமையுள்ளவர்கள், அவ்வேலையின் குறிப்பிட்ட வகைகளை அறியாதிருந்தாலும், அந்தக் குறிப்பிட்ட வகை வேலைகள் துணை வேலைகளே என்பதால், அவர்கள் கற்றவர்கள் என்றும், அறிவுள்ளவர்கள் என்றும் மனிதர்களால் கருதப்படுகிறார்கள்.
மோசடிக்காரர்கள், கூத்தாடிகள், கெடுபுகழ் கொண்ட மகளிர் {வேசிகள்} ஆகியோரால் புகழப்படும் மனிதன் உயிரோடிருந்தாலும் இறந்தவனாகவே கருதப்படுகிறான்.
அளவிலா சக்தி கொண்ட பலமிக்க வில்லாளிகளான இந்தப் பாண்டு மகனை {யுதிஷ்டிரனை} விட்டுவிட்டு, ஓ! பாரதரே, பலமிக்கப் பேரரசின் பொறுப்பை நீர் துரியோதனனிடம் அளித்திருக்கிறீர். எனவே, மூவுலகங்களில் இருந்து விழுந்த பலியைப் {மகாபலியைப்} போலப் பரந்திருக்கும் இந்தச் செல்வச் செழிப்பு வீழ்ச்சியடைவதை விரைவில் நீர் காண்பீர்” என்றான் {விதுரன்}.