Bring Vyasa and Gandhari hither! | Udyoga Parva - Section 67 | Mahabharata In Tamil
(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 27) {யானசந்தி பர்வம் - 21}
பதிவின் சுருக்கம் : சஞ்சயன் சொன்ன எதையும் துரியோதனன் மதிக்காமல் இருப்பது; எஞ்சிய பிறரும் அமைதியாக இருப்பது; சபை கலைவது; இருதரப்புப் பலம் மற்றும் பலவீனங்களைச் சஞ்சயனிடம் தனிமையில் திருதராஷ்டிரன் கேட்பது; சஞ்சயன், வியாசரையும், காந்தாரியையும் வரவழைக்கச் சொல்வது; சஞ்சயன் மற்றும் திருதராஷ்டிரன் மனநிலைகளைப் புரிந்து கொண்ட வியாசர், கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் குறித்துச் சஞ்சயன் அறிந்த யாவற்றையும் திருதராஷ்டிரனுக்குச் சொல்லச் சொன்னது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "திருதராஷ்டிரன் மகனான துரியோதனன், சஞ்சயன் கூறிய வார்த்தைகளைச் சிறிதும் மதிக்கவில்லை, எஞ்சியவர்களும் அமைதியாக இருந்தனர். அப்போது, அங்கே கூடியிருந்த மன்னர்கள் எழுந்து சென்றனர். பூமியின் மன்னர்கள் அனைவரும் சென்றபிறகு, தனது மகன் {துரியோதனன்} மீது தான் கொண்ட பாசத்தால், அவனது {துரியோதனனின்} ஆலோசனைகளை எப்போதும் பின்பற்றுபவனான மன்னன் திருதராஷ்டிரன், அங்கே கூடிய மன்னர்கள் அனைவரும் வெற்றியடைய விரும்பி, தன் தரப்பு மற்றும் தனக்கு எதிரான பாண்டவர்கள் தரப்புத் தீர்மானங்கள் குறித்துச் சஞ்சயனிடம் தனிமையில் விசாரிக்கத் தொடங்கினான்.
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! கவல்கணன் மகனே {சஞ்சயா}, பாண்டவர்களின் விவகாரங்களை நுணுக்கமாக நீ தெரிந்து வைத்திருப்பதால், நமது படையின் பலமும் பலவீனமும் எதில் அடங்கி இருக்கிறது என்பதை எனக்கு உண்மையாகச் சொல்வாயாக. அவர்களின் {பாண்டவர்களின்} மேன்மையும், தாழ்மையும் எதிலிருக்கிறது என்பதையும் எனக்குச் சொல்வாயாக. நீ இருதரப்பு பலங்களையும் முழுதாய் அறிந்திருக்கிறாய். நீ அனைத்தையும் அறிந்தவனாகவும், அறம் மற்றும் பொருள் குறித்த அனைத்துக் காரியங்களை அறிந்தவனாகவும் இருக்கிறாய். ஓ! சஞ்சயா, என்னால் கேட்கப்படும் நீ, போரில் ஈடுபடும்போது, எத்தரப்பு அழிந்து போகும் என்பதை எனக்குச் சொல்வாயாக" என்றான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நான் உம்மிடம் எதையும் கமுக்கத்தில் {இரகசியத்தில், தனிமையாகச்} சொல்ல மாட்டேன். ஏனெனில், {அப்படிச் சொன்னால்} எனக்கெதிரான தீய உணர்வுகள் {அருவருப்பு} உமக்கு உண்டாகலாம். ஓ! அஜமீடரே {திருதராஷ்டிரரே}, உயர்ந்த நோன்புகளைக் கொண்ட உமது தந்தை வியாசரையும், உமது ராணி காந்தாரியையும் இங்கே அழைப்பீராக. அறநெறி அறிவும், நுண்ணிய நோக்கும், உண்மை அறியும் திறனும் பெற்ற அவர்கள் {வியாசரும், காந்தாரியும்}, உமக்கு என் மீது அருவருப்பு உண்டானால் அவற்றை நீக்குவார்கள். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களின் முன்னிலையில், கேசவன் {கிருஷ்ணன்} மற்றும் பார்த்தனின் {அர்ஜுனனின்} நோக்கங்கள் பற்றிய அனைத்தையும் நான் உமக்குச் சொல்கிறேன்" என்றான் {சஞ்சயன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இப்படிச் {சஞ்சயனால்} சொல்லப்பட்ட திருதராஷ்டிரன், காந்தாரி மற்றும் வியாசர் ஆகியோரை அங்கே அழைத்து வர ஏற்பாடு செய்தான். விதுரனால் வரவேற்கப்பட்ட அவர்கள் {காந்தாரியும் வியாசரும்}, தாமதமின்றிச் சபைக்குள் நுழைந்தார்கள். பெரும் ஞானம் கொண்டவரான கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, சஞ்சயன் மற்றும் தன் மகன் {திருதராஷ்டிரன்} ஆகிய இருவரது நோக்கங்களையும் புரிந்து கொண்டு, "ஓ! சஞ்சயா, அறிந்து கொள்ளும் விருப்பத்தில் திருதராஷ்டிரன் விசாரிக்கும் அனைத்தையும் அவனுக்கு {திருதராஷ்டிரனுக்குச்} சொல்வாயாக. வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் குறித்து நீ அறிந்தது அத்தனையும் அவனுக்குச் சொல்வாயாக" என்றார் {வியாசர்}.