The braveness of Abhimanyu! | Bhishma-Parva-Section-047a | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 05)
பதிவின் சுருக்கம் : பாண்டவப் படையைக் கலங்கடித்துக் கொண்டிருந்த பீஷ்மரைக் கண்ட அபிமன்யு, அவரிடம் விரைவது; ஐந்து பெரும் வீரர்களால் காக்கப்பட்ட பீஷ்மருடன் அபிமன்யு சளைக்காமல் போரிட்டது; பீஷ்மரைப் பலவீனப்படுத்தி, கிருபரின் வில்லை அபிமன்யு இரண்டாகப் பிளப்பது; பனைமரக்கொடியைக் கொண்ட பீஷ்மரின் கொடிக்கம்பத்தை அபிமன்யு வெட்டி வீழ்த்துவது; அபிமன்யுவின் வீரத்தைக் கண்ட பீமன் உரக்க முழக்கமிடுவது; பீஷ்மர் தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்த தொடங்குவது; அபிமன்யுவைக் காக்க பாண்டவத் தரப்பில் இருந்து எட்டு பேர் விரைவது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அச்சம்நிறைந்த அந்த நாளின் முற்பகலில் பெரும்பகுதி கழிந்ததும், மனிதர்களில் முதன்மையானோரின் அழிவுக்கான அந்தப் பயங்கர மோதலில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகனால் {துரியோதனனால்} தூண்டப்பட்ட துர்முகன், கிருதவர்மன், கிருபர், சல்லியன், விவிம்சதி ஆகியோர் பீஷ்மரை அணுகி அவரைப் பாதுகாக்கத் தொடங்கினர். வலிமைமிக்க அந்த ஐந்து {5} தேர்வீரர்களால் {அதிரதர்களால்} பாதுகாக்கப்பட்ட அந்தப் பெரும் தேர்வீரர் {மகாரதர் பீஷ்மர்} பாண்டவப் படைக்குள் ஊடுருவினார்.
சேதிகள் {சேதி நாட்டவர்}, காசிகள் {காசி நாட்டவர்}, கரூசர்கள், பாஞ்சாலர்கள் ஆகியோருக்கு மத்தியில் தொடர்ச்சியாகப் பீஷ்மரின் பனைமரக்கொடி இழைந்து செல்வதாகக் காணப்பட்டது. பெரும் வேகம் கொண்டவையும், நேரானவையுமான பல்லங்களால் {அகன்ற தலை கொண்ட அம்புகளால்}, (எதிரிகளின்) தலைகளையும், நுகத்தடிகள் மற்றும் கொடிகளுடன் கூடிய தேர்களையும் அந்த வீரர் {பீஷ்மர்} துண்டாடினார். மேலும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அதன் பாதையில் ஓடிக்கொண்டிருந்த தனது தேரில், பீஷ்மர் ஆடிக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது. (அவரால்) உயிர் நிலைகளில் {மர்மஸ்தானத்தில்} அடிக்கப்பட்ட சில யானைகள் வேதனையில் அலறின.
அப்போது, மஞ்சட்பழுப்பு நிறக் {பொன்னிறக்} குதிரைகள் பூட்டப்பட்ட தனது தேரில் இருந்த அபிமன்யு, பெரும் கோபத்துடன் பீஷ்மரின் தேரை நோக்கி விரைந்தான். கோங்கு மரத்தைப் போன்றதும், பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்டதுமான தனது கொடியுடன் அவன் {அபிமன்யு}, பீஷ்மரையும், அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானோரையும் (ஐந்து பேரையும்) அணுகினான். பனைமரக்கொடி கொண்ட வீரரின் {பீஷ்மரின்} கொடிக்கம்பத்தைக் கூரிய கணைகளால் அடித்தவண்ணம், அந்த வீரன் {அபிமன்யு}, பீஷ்மருடனும், அவரைப் பாதுகாத்து நின்ற தேர்வீரர்களுடனும் போரில் ஈடுபட்டான்.
கிருதவர்மனை ஒரு கணையாலும், சல்லியனை ஐந்தாலும் {5 கணைகளாலும்} துளைத்த அவன் {அபிமன்யு}, தனது பூட்டனை {தனது பாட்டனின் தந்தையான பீஷ்மரை} ஒன்பது கணைகளால் அடித்துப் பலவீனப்படுத்தினான். முழுமையாக நீட்டி இழுக்கப்பட்ட தனது வில்லில் இருந்து நன்றாக அடிக்கப்பட்ட கணையால், பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்டிருந்த (தனது எதிரியின்) {துர்முகனாக இருக்க வேண்டும்} கொடிக்கம்பத்தை வெட்டி வீழ்த்தினான். அனைத்து தடுப்புகளையும் {கவசங்களையும்} துளைக்கவல்லதும், நேரானதுமான ஓர் அகன்ற தலை கொண்ட கணையால், துர்முகனுடைய தேரோட்டியின் தலையை அவனது உடலில் இருந்து துண்டித்தான். மற்றுமொரு கூர்முனை கணை கொண்டு, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கிருபருடைய வில்லை இரண்டாகப் பிளந்தான்.
அவர்களும் {அந்த அறுவரும்} பல கூர்முனை கணைகளால், எப்போதும் ஆடிக்கொண்டிருப்பவனாகத் தெரிந்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரனை {அபிமன்யுவை} தாக்கினர். அவனது {அபிமன்யுவின்} கரங்களின் வேகத்தைக் கண்டு தேவர்களும் கூட மனம் நிறைந்தனர். இலக்கை அடிப்பதில் அவனுக்கு {அபிமன்யுவுக்கு} இருந்த நிச்சயத்தன்மையின் விளைவால், பீஷ்மரின் தலைமையில் இருந்த தேர்வீரர்கள் அனைவரும், அவன் {அபிமன்யு}, தனஞ்சயனின் {அர்ஜுனனின்} திறமையைக் கொண்டிருப்பதாகவே கருதினர். காண்டீவத்தைப் போன்றே நாணொலியை எழுப்பிய அவனது வில் நீட்டி வளைக்கப்பட்ட போது, அது நெருப்பு வளையமாகச் சுழல்வதைப் போலத் தெரிந்தது.
பிறகு, எதிரிவீரர்களைக் கொல்பவரான பீஷ்மர், அவனிடம் {அபிமன்யுவிடம்} மூர்க்கமாக விரைந்து, அந்த மோதலில் ஒன்பது {9} கணைகளால் அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} துளைத்தார். மேலும் அவர் {பீஷ்மர்}, அகன்ற தலை கொண்ட மூன்று {3} கணைகளால், பெரும் சக்தி கொண்ட அந்த வீரனின் {அபிமன்யுவின்} கொடிக்கம்பத்தை அறுத்தார். கடும் நோன்புகளைக் கொண்ட பீஷ்மர், அவனது (எதிரியான அபிமன்யுவின்) தேரோட்டியையும் தாக்கினார். கிருதவர்மன், கிருபர், சல்லியன் ஆகியோரும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அர்ஜுனன் மகனை {அபிமன்யுவைத்} துளைத்தாலும், மைநாக மலை போல உறுதியாக நின்ற அவனை {அபிமன்யுவை} அவர்களால் நடுங்கச் செய்ய முடியவில்லை.
தார்தராஷ்டிரப்படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களால் சூழப்பட்டாலும், அர்ஜுனனின் அந்த வீர மகன் {அபிமன்யு}, அந்த ஐந்து தேர்வீரர்கள் மேலும் இன்னும் கணைமாரியைப் பொழிந்து கொண்டே இருந்தான். தனது கணைகளின் மழையால், அவர்களது வலிமைமிக்க ஆயுதங்களைக் கலங்கடித்தும், பீஷ்மர் மீது தனது கணைகளைக் கொட்டிய வண்ணமும், அந்தப் பலம்நிறைந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு} உரத்த முழக்கத்தைச் செய்தான். போரில் இப்படிப் போராடி, (தனது) கணைகளால் பீஷ்மரைப் பீடித்த அவனது கரங்களில் நாம் கண்ட பலம் பெரிதாக இருந்தது. அவன் இத்தகு ஆற்றலைக் கொண்டிருந்தாலும், பீஷ்மரும் அவன் மீது கணைகளை அடிக்கவே செய்தார். ஆனால் பீஷ்மரின் வில்லில் இருந்து அடிக்கப்பட்ட கணைகளை அந்த மோதலில் அவன் வெட்டி வீழ்த்தினான்.
பிறகு, தோற்காத கணைகளைக் கொண்ட அந்தப் போர்வீரன் {அபிமன்யு}, அந்த மோதலில், ஒன்பது {9} கணைகளைக் கொண்டு, பீஷ்மரின் கொடிக்கம்பத்தை அறுத்தான். அச்சாதனையைக் கண்ட மக்கள் பெரும் கூச்சலிட்டார்கள். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், வெள்ளியால் செய்யப்பட்டதும் பனைமரம் பொறிக்கப்பட்ட கொடியைக் கொண்டதுமான அந்த நெடிய கொடிக்கம்பம், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சுபத்திரையின் மகனால் {அபிமன்யுவால்} வெட்டப்பட்டுப் பூமியில் வீழ்த்தப்பட்டது. ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} கணைகளால் சாய்க்கப்பட்ட கொடிக்கம்பத்தைக் கண்டு பெருமையடைந்த பீமன், சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} உற்சாகமூட்டும் பொருட்டு உரத்த முழக்கமிட்டான்.
பிறகு, வலிமைமிக்கப் பீஷ்மர், பெரும் திறம் கொண்ட தெய்வீகக் கணைகளை, அந்தக் கடும் மோதலில் தோன்றச் செய்தார். அளவிடமுடியாத ஆன்மா கொண்ட அந்தப் பூட்டன் {பீஷ்மர்}, சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} ஆயிரக்கணக்கான கணைகளால் மூழ்கடித்தார். இதன்பேரில், பாண்டவத் தரப்பில் வலிமைமிக்கத் தேர்வீரர்களான பத்து {10} பெரும் வில்லாளிகள், சுபத்திரையின் மகனைப் {அபிமன்யுவைப்} பாதுகாக்க தங்கள் தேர்களில் விரைந்து சென்றனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனது மகனுடன் {உத்தரனுடன்} கூடிய விராடன், பிரிஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், பீமன், கேகயச் சகோதரர்கள் ஐவர், சாத்யகி ஆகியோரே அவர்கள் {அந்த பத்து (10)பெரும் வில்லாளிகள்}.
அந்த மோதலில், சந்தனுவின் மகனான பீஷ்மரை நோக்கி கடும் வேகத்துடன் பாய்ந்து சென்றவர்களில், பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னன்} மூன்று {3} கணைகளாலும், சாத்யகியை பத்து {10} கணைகளாலும் அவர் {பீஷ்மர்} துளைத்தார். இறகு படைத்ததும், சாணைக்கல்லில் கூர் தீட்டப்பட்டுக் கூர்மையாக இருந்ததுமான ஒரு கணையைக் கொண்டு, வில்லை முழுமையாக இழுத்து, பீமசேனனின் கொடிக்கம்பத்தை அவர் {பீஷ்மர்} அறுத்தார். ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, தங்கத்தாலானதும், சிங்கம் பொறிக்கப்பட்ட கொடி கொண்டதுமான பீமசேனனின் கொடிக்கம்பம், பீஷ்மரால் வெட்டப்பட்டு, தேரில் இருந்து விழுந்தது. பிறகு பீமன், அந்த மோதலில், சந்தனுவின் மகனான பீஷ்மரை மூன்று{3} கணைகளாலும், கிருபரை ஒரு கணையாலும், கிருதவர்மனை எட்டு{8} கணைகளாலும் துளைத்தான்.
ஆங்கிலத்தில் | In English |