Friday, July 08, 2016

சாத்யகியின் ஆற்றலை வியந்த துரோணர்! - துரோண பர்வம் பகுதி – 097

Drona admired the prowess of Satyaki! | Drona-Parva-Section-097 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 13)

பதிவின் சுருக்கம் : சாத்யகிக்கும் துரோணருக்கும் இடையில் நடந்த மோதல்; துரோணரின் விற்களை மீண்டும் மீண்டும் வெட்டிய சாத்யகி; சாத்யகியின் திறனை மனத்தில் மெச்சிய துரோணர்; துரோணரும் சாத்யகியும் தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்தியது; கடுமையாக நடந்த போர்; சாத்யகியைக் காக்க பாண்டவர்களும், துரோணரைக் காக்க கௌரவர்களும் விரைந்தது...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "அப்படி விருஷ்ணி குலத்தில் முதன்மையானவனான யுயுதானனால் {சாத்யகியால்} துரோணரின் கணைகள் வெட்டப்பட்டு, திருஷ்டத்யும்னன் காக்கப்பட்ட பிறகு, ஓ! சஞ்சயா, பெரும் வில்லாளியும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவருமான துரோணர், மனிதர்களில் புலியான சிநியின் பேரனை {சாத்யகியை} என்ன செய்தார்?" என்று கேட்டான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பிறகு, கோபத்தைத் தன் நஞ்சாகவும், வளைக்கப்பட்ட வில்லை தன் அகன்று விரிந்த வாயாகவும், கூரிய கணைகளைத் தன் பற்களாகவும், நாராசங்களைத் தன் நச்சுப் பற்களாகவும் கொண்டு, சினத்தால் தாமிரமாகக் கண்கள் சிவந்து, நீண்ட மூச்சுகளை விடும் ஒரு பெரும் பாம்பைப் போல இருந்தவரும், மனிதர்களில் வலிமைமிக்க வீரருமான துரோணர், தங்கச் சிறகுகள் கொண்ட கணைகளை இறைத்தபடி, வானத்திலோ, பெரும் மலையொன்றின் உச்சியிலோ எழுவதைப் {பறப்பதைப்} போல பெரும் வேகம் கொண்ட தமது சிவப்புக் குதிரைகளால் சுமக்கப்பட்டு, யுயுதானனை {சாத்யகியை} நோக்கி விரைந்தார்.


பகை நகரங்களை அடக்குபவனும், போரில் வெல்லப்பட முடியாதவனுமான அந்த சிநி குலத்து வீரன் {சாத்யகி}, கணைமாரியை மழையாகவும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியை முழக்கமாகவும், நன்கு வளைக்கப்பட்ட வில்லை ஒலியாகவும், நாராசங்களை மின்னல் கீற்றுகளாகவும், ஈட்டிகளையும் வாள்களையும் இடியாகவும், கோபத்தைக் காற்றாகவும் கொண்ட அந்தத் துரோண மேகமானது, குதிரைகளெனும் புயலால் தூண்டப்பட்டுத் தன்னை நோக்கி வருவதைக் கண்டு புன்னகைத்தபடியே தன் தேரோட்டியிடம், "ஓ! சூதா, தன் {பிராமண} வகைக்கான கடமைகளில் இருந்து நழுவியவரும், திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} புகலிடம் ஆனவரும், (குரு) மன்னர்களின் துயரங்கள் மற்றும் அச்சங்களைப் போக்குபவரும், இளவரசர்கள் அனைவரின் ஆசானும், தன் ஆற்றலில் எப்போதும் தற்புகழ்ச்சி செய்யும் வீரருமான அந்த வீரப் பிராமணரை {துரோணரை} எதிர்த்து, குதிரைகளை மிக வேகமாக முடுக்கியபடி மகிழ்ச்சியாகவும், வேகமாகவும், செல்வாயாக" என்றான்.

அப்போது அந்த மதுகுலத்தவனுக்கு {சாத்யகிக்கு} சொந்தமானவையும், வெள்ளிநிறமும், காற்றின் வேகமும் கொண்டவையுமான அந்தச் சிறந்த குதிரைகள் துரோணரை நோக்கி விரைவாகச் சென்றன. பிறகு, எதிரிகளைத் தண்டிப்பவர்களான துரோணர் மற்றும் சிநியின் பேரன் {சாத்யகி} ஆகிய அவ்விருவரும் ஆயிரக்கணக்கான கணைகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு தங்களுக்குள் போரிட்டனர். மனிதர்களில் காளையரான அவ்விருவரும் தங்கள் கணை மழையால் ஆகாயத்தை நிறைத்தனர். உண்மையில் அவ்வீரர்கள் இருவரும் தங்கள் கணைகளால் திசைப்புள்ளிகள் பத்தையும் {10} மறைத்தனர்.  மேலும் அவர்கள் கோடை காலத்தின் முடிவில் (பூமியில்) தங்கள் உள்ளடக்கம் முழுவதையும் பொழியும் இரு மேகங்களைப் போலத் தங்கள் கணைகளை ஒருவரின் மேலொருவர் பொழிந்தனர். அப்போது சூரியன் காணப்படவில்லை. காற்றும் வீசவில்லை.  ஆகாயத்தை அந்தக் கணைமாரி நிறைத்ததன் விளைவாக அவ்வீரர்களால் உண்டாக்கப்பட்ட அடர்த்தியான இருள் தொடர்ந்து நீடித்தது. அவ்விருள், துரோணர் மற்றும் சிநியின் பேரனால் {சாத்யகியால்} அங்கே உண்டாக்கப்பட்ட போது, கணையேவுதலை இருவரில் எவரும் நிறுத்தியதை யாரும் காணவில்லை. ஆயுதங்களை ஏவுவதில் அவ்விருவரும் வேகம் கொண்டவர்களாக இருந்தனர், மேலும் அவ்விருவரும் மனிதர்களில் காளையராகவே காணப்பட்டனர். அந்த இருவராலும் ஏவப்பட்ட கணைத்தாரைகளால் உண்டான ஒலியானது, சக்ரனால் {இந்திரனால்} ஏவப்பட்ட வஜ்ரத்துக்கு {இடிக்கு} ஒப்பானதாகக் கேட்கப்பட்டது.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நாராசங்களால் துளைக்கப்பட்ட வீரர்களின் வடிவங்களானவை, கடும் நஞ்சுமிக்க பாம்புகளால் கடிக்கப்பட்ட வேறு பாம்புகளைப் போலவே தெரிந்தன [1]. துணிச்சல்மிக்க வீரர்கள், மலை முகடுகளில் விழும் இடியின் ஒலிக்கு ஒப்பாக, விற்களின் நாணொலிகளையும், தங்கள் உள்ளங்கையின் ஒலிகளையும் தொடர்ச்சியாகக் கேட்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவ்விரு வீரர்களின் தேர்களும், குதிரைகளும், தேரோட்டிகளும் தங்கச்சிறகுகள் கொண்ட கணைகளால் துளைக்கப்பட்டுக் காண்பதற்கு அழகாகத் தெரிந்தன. சட்டையுரித்த, கடும் நஞ்சுமிக்க பாம்புகளைப் போலத் தெரிந்தவையும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பிரகாசமாக, நேராக இருந்தவையுமான கணைகளின்மாரி கடுமையானதாக இருந்தது. அவ்விருவரின் குடைகளும், கொடிமரங்களும் வெட்டப்பட்டன.  குருதியில் நனைந்த அவ்விருவரும் வெற்றியின் நம்பிக்கையால் தூண்டப்பட்டிருந்தனர். அங்கங்கள் ஒவ்வொன்றிலும் குருதி வழிந்த அவர்கள், உடல்களில் மதநீர் வழியும் இரு யானைகளுக்கு ஒப்பாகத் தெரிந்தனர். மேலும் அவர்கள் மரணக் கணைகளைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதையும் தொடர்ந்தனர்.

[1] வேறொரு பதிப்பில் இவ்வரி, "நாராசங்களால் எதிர்த்து அடிக்கப்பட்ட பாணங்களின் ரூபமானது சர்ப்பங்களால் நன்றாகக் கடிக்கப்பட்ட சர்ப்பங்களுடைய ரூபம் போல விளங்கியது என்றிருக்கிறது. கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் மேற்கண்டவாறே இருக்கின்றன.

எவரும் எந்த ஒலியையும் வெளிடாததால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, படைவீரர்களின் முழக்கங்கள், கூச்சல்கள் மற்றும் பிற ஒலிகள், சங்கொலிகள், துந்துபிகளின் ஒலிகள் ஆகியவை நின்றன. உண்மையில் அனைத்துப் படைப்பிரிவுகளும் அமைதியடைந்தன, வீரர்கள் அனைவரும் போரிடுவதை நிறுத்தினர். ஆவல் கொண்ட மக்கள், அந்தத் தனிப்போரின் பார்வையாளர்களானார்கள். தேர்வீரர்கள், யானைப்பாகர்கள், குதிரைவீரர்கள், காலாட்படைவீரர்கள் ஆகியோர் மனிதர்களில் காளையரான அவ்விருவரையும் சூழ்ந்து கொண்டு அம்மோதலையே நிலைத்த கண்களுடன் சாட்சியாகக் கண்டனர். யானை படைப்பிரிவுகளும், குதிரைப்படைப்பிரிவுகளும், தேர்ப்பிரிவுகளும் அசையாமல் நின்றன. வியூகத்தில் நின்றிருந்தாலும் அனைவரும் அசையாமலேயே நின்றனர்.

பலவண்ணங்களிலான முத்துக்கள், பவளங்கள் ஆகியவற்றைக் கொண்டவையும், தங்கத்தால் நிறைந்தவையும், கொடிமரங்கள், ஆபரணங்கள், தங்கத்தாலான கவசங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், வெற்றிக் கொடிகளுடனும், யானைகளின் அலங்காரத்துணிகளுடனும், மெல்லிய கம்பளங்கள், தீட்டப்பட்ட பளபளப்பான ஆயுதங்கள், குதிரைகளின் தலையில் அலங்காரமாக தங்கம் மற்றும் வெள்ளியாலான சாமரங்கள், யானையின் மத்தகத்திலுள்ள மாலைகள், தந்தவளையங்கள் ஆகியவற்றுடன் இருந்தவையுமான குரு மற்றும் பாண்டவப் படைகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} கோடையின் நெருக்கத்தில் கொக்கு வரிசைகளாலும், விட்டில்பூச்சிக் கூட்டங்களாலும் நிறைந்து, வானவில்லோடும், மின்னல்களோடும் இருந்த மேகக்கூட்டங்களைப் போலக் காணப்பட்டன. நம் மனிதர்கள் மற்றும் யுதிஷ்டிரனுடையோர் ஆகிய இரு தரப்பினரும், யுயுதானன் {சாத்யகி} மற்றும் துரோணருக்கு இடையிலான அந்தப் போரைக் கண்டனர்; பிரம்மனின் தலைமையிலான தேவர்களும், சோமனும், சித்தர்களும், சாரணர்களும், வித்யாதரர்களும், பெரும்பாம்புகளும் கூட வானுலாவும் தேர்களான முதன்மையான தங்கள் தேர்களில் இருந்தபடியே அந்தப் போரைக் கண்டனர். மனிதர்களில் சிங்கங்களான அவர்கள், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு பல்வேறு வகைகளில் முன் நகர்ந்தும், பின்நகர்ந்தும் போரிடுவதைக் கண்ட பார்வையாளர்கள் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.

பெரும் பலம் கொண்ட துரோணர் மற்றும் சாத்யகி ஆகிய இருவரும், ஆயுதப் பயன்பாட்டில் தங்கள் கரங்களின் நளினத்தை வெளிக்காட்டியபடி கணைகளால் ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர். அப்போது தாசார்ஹ குலத்தோன் {சாத்யகி} அந்தப் போரில் தன் வலிமைமிக்க கணைகளால், சிறப்புமிக்க துரோணரின் கணைகளையும், மேலும் ஒரே கணத்தில் அவரது வில்லையும் அறுத்தான். எனினும், கண் இமைக்கும் நேரத்திற்குள்ளாக, பரத்வாஜர் மகன் {துரோணர்} மற்றொரு வில்லை எடுத்து அதற்கு நாண்பூட்டினார். அந்த வில்லும் சாத்யகியால் வெட்டப்பட்டது. துரோணர் மேலும் விரைவாக கையில் வேறொரு வில்லுடன் காத்திருந்தார். எனினும் எப்போதும் போலவே துரோணர் தன் வில்லில் நாண்பூட்டியதும் சாத்யகி அதை வெட்டினான். இப்படியே அவன் {சாத்யகி} பதினாறு முறை செய்தான் {துரோணரின் விற்களை வெட்டினான்}.

போரில் மனித செயலுக்கு அப்பாற்பட்ட யுயுதானனின் செயலைக் கண்ட துரோணர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் மனத்திற்குள், "சாத்வதர்களில் முதன்மையானவனிடம் {சாத்யகியிடம்} நான் காணும் இந்த ஆயுத பலமானது, ராமன் {பரசுராமர்?}, தனஞ்சயன் {அர்ஜுனன்}, கார்த்தவீரியன் மற்றும் மனிதர்களில் புலியான பீஷ்மர் ஆகியோரிடம் மட்டுமே உள்ள பலமாகும்" என்று நினைத்தார். எனவே, பரத்வாஜரின் மகன் {துரோணர்}, சாத்யகியின் ஆற்றலை மனத்துக்குள் மெச்சினார். வாசவனுக்கு {இந்திரனுக்கு} இணையான கர நளினத்தைக் கொண்டவரும், ஆயுதங்களை அறிந்தோர் அனைவரிலும் தலையானவருமான அந்த மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவர் {துரோணர்}, மாதவனிடம் {கிருஷ்ணனிடம்} மிகவும் மனம் நிறைந்தார். வாசவனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களும் அதனால் மனம் நிறைந்தனர். ஓ! ஏகாதிபதி, தேவர்கள், கந்தர்வர்கள் ஆகியோரும், சித்தர்கள் மற்றும் சாரணர்களும், என்னதான் துரோணரால் இயன்ற சாதனைகளை அறிந்திருந்தாலும் விரைவாக நகரும் யுயுதானனின் கர நளினத்தைப் போல அதற்கு முன் கண்டதே இல்லை.

பிறகு, க்ஷத்திரியர்களைக் கலங்கடிப்பவரும், ஆயுதங்களை அறிந்தோரில் முதன்மையானவருமான துரோணர் மற்றுமொரு வில்லை எடுத்துக் கொண்டு சில ஆயுதங்களைக் குறி பார்த்தார். எனினும், சாத்யகி, அவ்வாயுதங்கள் அனைத்தையும் தன் ஆயுதங்களின் மாயையாலும், சிலவற்றைத் தன் கூரிய கணைகளாலும் கலங்கடித்தான். இவையாவும் மிக அற்புதமாகத் தெரிந்தன. உமது போர்வீரர்களுக்கு மத்தியில், திறனைத் தீர்மானிக்கும் வீரர்களாக இருப்போர், போரில் வேறு எவராலும் செய்ய இயலாததும், மனித சக்திக்கு அப்பாற்பட்டதும், பெரும் திறனை வெளிப்படுத்துவதுமான அவனது {சாத்யகியின்} சாதனையைக் கண்டு மெச்சினர்.

சாத்யகி, துரோணர் ஏவிய அதே கணைகளையே ஏவினான். இதைக் கண்டவரும், எதிரிகளை எரிப்பவருமான ஆசான் {துரோணர்}, எப்போதையும் விட குறைந்த துணிவுடனேயே போரிட்டார். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, படையறிவியலின் ஆசானான அவர் {துரோணர்}, கோபத்தால் நிறைந்து, யுயுதானனின் அழிவுக்காகத் தெய்வீக ஆயுதங்களை இருப்புக்கு அழைத்தார். எதிரியைக் கொல்லும் பயங்கரமான ஆக்நேய ஆயுதத்தைக் கண்ட வலிமைமிக்க வில்லாளியான சாத்யகி வருணாயுதம் என்ற மற்றொரு தெய்வீக ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான். இருவரும் தெய்வீக ஆயுதங்களை எடுப்பதைக் கண்டு "ஓ", என்றும் "ஐயோ" என்றும் அலறல்கள் அங்கே எழுந்தன. வானில் செல்லும் உயிரினங்களும் கூட அதன் ஊடாகச் செல்லவில்லை {பறவைகளும் வானத்தில் பறக்கவில்லை}. வாருணம் மற்றும் ஆக்நேயம் ஆகிய இரண்டு ஆயுதங்களும் கணைகளோடு ஒட்டி ஏவப்பட்டு ஒன்றையொன்று எதிர்த்து பயனற்றதாகின [2]. சரியாக அதே வேளையில் சூரியன் தன் வழியைக் கீழ்நோக்கிக் கடந்தான் {உச்சியில் இருந்து சாய்ந்தான்}.

[2] "தெய்வீக ஆயுதங்கள் என்பன மந்திரங்களைச் சார்ந்த சக்திகளாக இருந்தன. இந்த மந்திரங்களால் ஈர்க்கப்பட்ட சாதாரணக் கணைகளே தெய்வீக ஆயுதங்களாக மாற்றப்பட்டன" என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.

அப்போது பாண்டுவின் மகன்களான மன்னன் யுதிஷ்டிரன், பீமசேனன், நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர் சாத்யகியைப் பாதுகாக்க விரும்பி, மத்ஸ்யர்கள் மற்றும் சால்வேய துருப்புகளுடன் {சால்வத் துருப்புகளுடன்} சேர்ந்து துரோணரை நோக்கி வேகமாக விரைந்தனர் [3]. பிறகு துச்சாசனன் தலைமையிலான ஆயிரம் இளவரசர்கள், எதிரிகளால் சூழப்பட்ட துரோணரை நோக்கி (அவரைப் பாதுகாப்பதற்காக) வேகமாக விரைந்தனர். அப்போது, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களுக்கும், உமது வில்லாளிகளுக்கும் இடையில் ஒரு கடும்போர் தொடங்கியது. பூமியானது புழுதியாலும், (இருதரப்பிலும்) ஏவப்பட்ட கணைகளின் மழையாலும் மறைந்தது. அனைத்தும் இப்படி மறைக்கப்பட்டதால், அதற்கு மேல் எதையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. உண்மையில், துருப்புகள் புழுதியில் மூழ்கியபோது, போரானது (மனிதர்களையோ, விதிகளையோ) முற்றிலும் கருதிப்பாராமல் நடந்தது" {என்றான் சஞ்சயன்}.

[3] வேறொரு பதிப்பில், "பிறகு, யுதிஷ்டிரராஜரும், பீமசேனனும், நகுலனும், ஸஹதேவனும் நான்குபக்கமும் சூழ்ந்து சாத்யகியைக் காப்பாற்றினார்கள். திருஷ்டத்யும்னன் முதலானவர்களோடும், கேகயர்களோடும் கூடிய விராட ராஜனும், சால்வனுடைய சைனிகர்களும் வேகமாகத் துரோணரை எதிர்த்தார்கள்" என்று இருக்கிறது.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top