Bhima drove out Alamvusha! | Drona-Parva-Section-107 | Mahabharata In Tamil
(ஜயத்ரதவத பர்வம் – 23)
பதிவின் சுருக்கம் : சோமதத்தன் மகன் சலனுக்கும், திரௌபதியின் மகன்கள் ஐவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; சலனைக் கொன்ற சகாதேவன் மகன் சுருதசேனன்; பீமனைத் தாக்கி மயக்கமடையச் செய்த ராட்சசன் அலம்புசன்; சேதிகள், பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள் ஆகியோரைக் கொன்ற அலம்புசன்; பீமன் பயன்படுத்திய த்வஷ்டாஸ்த்திரம்; பீமனிடம் இருந்து தப்பி ஓடிய அலம்புசன்; மகிழ்ச்சியால் நிறைந்த பாண்டவப் படை...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "சோமதத்தனின் சிறப்புமிக்க மகன் {சலன்}, பெரும் வில்லாளிகளான திரௌபதி மகன்கள் ஒவ்வொருவரையும் ஐந்து கணைகளாலும், மீண்டும் ஏழு கணைகளாலும் துளைத்தான். ஓ! தலைவா, அந்தக் கடும் வீரனினால் மிகவும் பீடிக்கப்பட்ட அவர்கள், என்ன செய்வதென்று அறியாமல் சிறிது நேரம் மலைத்தனர். பிறகு எதிரிகளை நசுக்குபவனும், நகுலனின் மகனுமான சதானீகன், மனிதர்களில் காளையான அந்தச் சோமதத்தன் மகனை {சலனை} இரண்டு கணைகளால் துளைத்து, மகிழ்ச்சியால் உரக்க முழக்கமிட்டான். தீவிரமாகப் போராடிக் கொண்டிருந்த பிற சகோதரர்கள் ஒவ்வொருவரும் மூன்று {மும்மூன்று} நேரான கணைகளால் அந்தக் கோபக்கார சோமதத்தன் மகனை {சலனை} வேகமாகத் துளைத்தனர்.
அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சோமதத்தனின் சிறப்புமிக்க மகன் {சலன்}, அவர்கள் மீது ஐந்து கணைகளை ஏவி, அவர்கள் ஒவ்வொருவரையும் ஒரு கணையால் மார்பில் துளைத்தான். பிறகு, இப்படி அந்த உயர் ஆன்ம வீரனின் {சலனின்} கணைகளால் துளைக்கப்பட்ட அந்தச் சகோதரர்கள் ஐவரும் அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் {சலனைச்} சூழ்ந்து கொண்டு, தங்கள் கணைகளால் அவனை ஆழமாகத் துளைக்கத் தொடங்கினர்.
சினத்தால் நிறைந்த அர்ஜுனனின் மகன் {சுருதகர்மன்}, கூரிய கணைகளால், சௌமதத்தியின் {சலனின்} நான்கு குதிரைகளையும் யமலோகம் அனுப்பினான். பீமசேனனின் மகன் {சுதசோமன்}, சிறப்புமிக்கச் சோமதத்த மகனின் {சலனின்} வில்லை அறுத்து உரக்க முழங்கியபடியே, தன் எதிரியைக் கூரிய கணைகள் பலவற்றால் துளைத்தான். யுதிஷ்டிரனின் மகன் {பிரதிவிந்தியன்} சௌமதத்தியின் {சலனின்} கொடிமரத்தை அறுத்து, பூமியில் வீழ்த்திய அதே நேரத்தில், நகுலனின் மகன் {சதானீகன்}, எதிரியின் தேரோட்டியை அவனது {சலனது} இருக்கையில் இருந்து கீழே வீழ்த்தினான். பிறகு, சகாதேவன் மகன் {சுருதசேனன்}, தன் சகோதரர்களின் விளைவால் எதிரி களத்தை விட்டு நகரப்போவதை உறுதிசெய்து கொண்டு, க்ஷுரப்ரம் ஒன்றால் அந்தச் சிறப்புமிக்க வீரனின் {சலனின்} தலையை அறுத்தான். தங்கத்தாலான காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தத் தலை, பூமியில் விழுந்து, யுக முடிவின் போது எழும் பிரகாசமான சூரியனைப் போல அந்தக் களத்தை அலங்கரித்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உயர் ஆன்ம சோமதத்தன் மகனுடைய {சலனின்} தலை இப்படித் தரையில் விழுந்ததைக் கண்ட உமது துருப்புகள் அச்சமடைந்து அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடின.
அந்தப் போரில், சினத்தால் நிறைந்திருந்த ராட்சசன் அலம்புசன், (ராமனின் தம்பியான) லக்ஷ்மணனுடன் போரிட்ட ராவணனின் மகனை (இந்திரஜித்தைப்) போல, வலிமைமிக்கப் பீமசேனனுடன் போரிட்டான். ராட்சசனும் {அலம்புசனும்}, மனித வீரனும் {பீமசேனனும்} போரில் ஈடுபடுவதைக் கண்ட அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சி மற்றும் ஆச்சரியம் ஆகிய இரண்டையும் அடைந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிரித்துக் கொண்டிருந்த பீமன், கோபம் நிறைந்த ராட்சச இளவரசனான அந்த ரிஷ்யசிருங்கன் மகனை (அலம்புசனை) ஒன்பது கூரிய கணைகளால் துளைத்தான். இப்படிப் போரில் துளைக்கப்பட்ட அந்த ராட்சசன், உரத்த பயங்கர ஒலியை எழுப்பி, தன்னைப் பின்தொடர்பவர்கள் அனைவருடன் சேர்ந்து பீமனை எதிர்த்து விரைந்தான்.
நேரான ஐந்து கணைகளால் பீமனைத் துளைத்த அவன் {அலம்புசன்}, அந்தப் போரில் பீமனை ஆதரித்த முப்பது தேர்களை வேகமாக அழித்தான். மேலும் பீமசேனனின் நானாறு {400} தேர்களை அழித்த அந்த ராட்சசன் {அலம்புசன்}, சிறகுகள் கொண்ட கணைகளால் பீமசேனனையும் துளைத்தான். அந்த ராட்சசனால் ஆழத்துளைக்கப்பட்டவனான வலிமைமிக்கப் பீமன், மயக்கமடைந்து கீழே தன் தேர்த்தட்டில் அமர்ந்தான். பிறகு, தன் உணர்வுகள் மீண்ட அந்தக் காற்று தேவனின் மகன் {வாயுவின் மகனான பீமன்}, சினத்தால் நிறைந்தான். மிகக் கடியதையும் தாங்கவல்லதும், சிறப்பானதும், பயங்கரமானதுமான தன் வில்லை வளைத்த அவன் {பீமன்}, கூரிய கணைகளால் அலம்புசனின் உடலில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் பீடித்தான். அதன்பேரில், கறுத்த பெரும் மைக்குவியலுக்கு ஒப்பான அந்த ராட்சசன் {அலம்புசன்}, ஓ! மன்னா, மலர்ந்திருக்கும் கின்சுகத்தைப் {பலாச மரத்தைப்} போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.
அந்தப் போரில் பீமனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகளால் தாக்கப்படும்போது, சிறப்புமிக்கப் பாண்டவனால் {பீமனால்} தன் சகோதரன் (பகன்) கொல்லப்பட்டதை அந்த ராட்சசன் {அலம்புசன்} நினைவுகூர்ந்தான். பிறகு பயங்கர வடிவத்தை ஏற்ற அவன் {அலம்புசன்}, பீமனிடம், "ஓ! பார்த்தா {பீமா}, இந்தப் போரில் சிறிது நேரம் காத்திரு {நிற்பாயாக}. என் ஆற்றலை இன்று பார்ப்பாயாக. ஓ! தீய புரிதல் {கெட்ட புத்தி} கொண்டவனே, ராட்சசர்களில் முதன்மையான வலிமைமிக்கப் பகன் என் சகோதரனாவான். அவன் உன்னால் கொல்லப்பட்டான் என்பது உண்மையே. ஆனால், அஃது என் கண்களுக்கு அப்பால் நடந்தது" என்றான். பீமனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்ன அலம்புசன், கண்ணுக்குப் புலப்படாத நிலையை அடைந்து, அடர்த்தியான கணைமாரியால் பீமசேனனை மறைக்கத் தொடங்கினான். இப்படி ராட்சசன் {அலம்புசன்} மறைந்து போனதால், ஓ! ஏகாதிபதி, நேரான கணைகளால் ஆகாயத்தையே மறைத்தான் பீமன்.
இப்படிப் பீமனால் பீடிக்கப்பட்ட அலம்புசன், விரைவில் தன் தேருக்குத் திரும்பினான். மீண்டும் விரைவில் பூமியின் குடல்களுக்குள் நுழைந்த அவன் {அலம்புசன்}, மீண்டுமொருமுறை சிறுத்து {வடிவம் சுருங்கி} திடீரென வானத்தில் பறந்தான். கணக்கிலடங்கா வடிவங்களை அலம்புசன் ஏற்றான். இதோ நுட்பமானவனாக {சிறிய உருவம் கொண்டவனாக}, இதோ பெரியவனாக, இதோ ஒட்டுமொத்தமான திரளாக என மாறிய அவன் {ராட்சசன் அலம்புசன்} மேகங்களைப் போல முழங்கத் தொடங்கினான். மேலும் அவன் பல்வேறு வகைகளான வார்த்தைகளையும், பேச்சுகளையும் சுற்றிலும் உதிர்த்தான். ஆகாயத்தில் இருந்து ஆயிரக்கணக்கான கணைத்தாரைகள், ஈட்டிகள், குணபங்கள், வேல்கள், பரிகங்கள், பிண்டிபாலங்கள், பட்டசங்கள், வாள்கள், இடிகள் {வஜ்ரங்கள்} ஆகியவையும் விழுந்தன.
ராட்சசனால் {அலம்புசனால்} உண்டாக்கப்பட்ட அந்தப் பயங்கரக் கணை மழையானது, போர்க்களத்தில் பாண்டு மகனின் {பீமனின்} துருப்புகளைக் கொன்றது. அந்தக் கணை மழையின் விளைவால் யானைகள் பலவும், குதிரைகள் பலவும் கொல்லப்பட்டன, ஓ! மன்னா, காலாட்படை வீரர்கள் பலரும் கொல்லப்பட்டனர். குருதியை நீராகவும், தேர்களை நீர்ச்சுழல்களாகவும் கொண்ட ஆறு ஒன்று அங்கே உண்டானது. அதில் நிறைந்திருந்த யானைகள் அதன் முதலைகளாகின. தேர்வீரர்களின் குடைகள் அதன் அன்னங்களாகின, விலங்குகளின் சதையும், ஊனீரும் அதன் சகதிகளாகின. (வெட்டப்பட்டு) அங்கே நிறைந்திருந்த மனிதர்களின் கரங்கள் அதன் பாம்புகளாகின. பல ராட்சசர்களாலும், பிற மனித உன்னிகளாலும் அது மொய்க்கப்பட்டது. ஓ! மன்னா, சேதிகளையும், பாஞ்சாலர்களையும், சிருஞ்சயர்களையும் அது {அந்த ஆறு} அடித்துக் கொண்டு போனது.
ஓ! ஏகாதிபதி, அந்தப் போரில் அச்சமற்று உலவும் அவனையும் {அலம்புசனையும்}, அவனது ஆற்றலையும் கண்ட பாண்டவர்கள் கவலையால் நிறைந்தனர்; அப்போது உமது துருப்புகளின் இதயங்கள் மகிழ்ச்சியால் நிறைந்தன. உமது துருப்புகளுக்கு மத்தியில் எழுந்த இசைக்கருவிகளின் பயங்கரமான உரத்த ஒலிகள் மயிர்ச்சிலிர்ப்பை உண்டாக்குவதாக இருந்தன. மனிதர்களின் உள்ளங்கை ஒலிகளைத் தாங்கிக் கொள்ள முடியாத பாம்பைப் போல, உமது துருப்புகளின் அந்த ஆரவாரப் பேரொலியை பாண்டுவின் மகனால் {பீமனால்} தாங்கிக் கொள்ள முடியவில்லை.
சினத்தால் தாமிரமாகக் கண்கள் சிவந்து, அனைத்தையும் எரித்துவிடும் நெருப்பு போன்ற பார்வையுடன் கூடிய அந்தக் காற்று தேவனின் மகன் {பீமன்}, துவஷ்ட்ரி என்ற பெயர் கொண்ட ஆயுதத்தைத் துவஷ்ட்ரியைப் போலவே குறி பார்த்தான் [1]. அவ்வாயுதத்தின் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான கணைகள் உண்டாகின. அக்கணைகளின் விளைவாக, உமது துருப்புகளுக்கு மத்தியில் ஓர் உலகளாவிய அழிவு தென்பட்டது. போரில் பீமசேனனால் ஏவப்பட்ட அவ்வாயுதம், ராட்சசனால் {அலம்புசனால்} உண்டாக்கப்பட்ட திறன்மிக்க மாயையை அழித்து, அந்த ராட்சசனையும் பெரிதும் பீடித்தது. பீமசேனனால் தன் உடலின் அனைத்துப் பகுதிகளிலும் தாக்கப்பட்ட அந்த ராட்சசன் {அலம்புசன்}, பீமசேனனைக் கைவிட்டுவிட்டுத் துரோணரின் படைப்பிரிவை நோக்கித் தப்பி ஓடினான். அந்த ராட்சச இளவரசன் {அலம்புசன்}, உயர் ஆன்ம பீமனால் தோற்கடிக்கப்பட்டதும், பாண்டவர்கள் தங்கள் சிங்க முழக்கங்களால் திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் எதிரொலிக்கச் செய்தனர். மகிழ்ச்சியால் நிறைந்த அவர்கள், போரில் பிரகலாதன் தோற்றதும், சக்ரனை {இந்திரனை} வழிபட்ட மருத்துக்களைப் போல, மருத்தனின் வலிமைமிக்க மகனை {பீமனை} வழிபட்டனர்" {என்றான் சஞ்சயன்}.
[1] வேறொரு பதிப்பில், "வாயுபுத்திரனான பீமசேனன், எரிக்கின்ற அக்னி போன்றவனாகிக் கோபத்தினால் கண்கள் சிவந்து த்வஷ்டாவைப் போல் த்வஷ்டாவைத் தேவதையாகக் கொண்ட அஸ்திரத்தைத் தானே சந்தானம் செய்தான்" என்றிருக்கிறது.
ஆங்கிலத்தில் | In English |