Ghatotkacha killed Alamvusha! | Drona-Parva-Section-108 | Mahabharata In Tamil
(ஜயத்ரதவத பர்வம் – 24)
பதிவின் சுருக்கம் : கடோத்கசனுக்கும் அலம்புசனுக்கும் இடையில் ஏற்பட்ட போர்; மாயைகளைப் பயன்படுத்திப் போரிட்ட ராட்சசர்கள்; அந்த ராட்சசர்களுக்கிடையில் நடைபெற்ற போரில் தலையிட்ட பாண்டவ வீரர்கள்; தன் தேரில் இருந்து அலம்புசனின் தேருக்குப் பறந்து சென்ற கடோத்கசன்; அலம்புசன் கொல்லப்பட்டது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பீமனிடம் இருந்து தப்பி ஓடிய அலம்புசன், களத்தின் மற்றொரு பகுதியில் போரில் அச்சமற்று உலவினான். இப்படி அவன் {அலம்புசன்} போரில் அச்சமற்று உலவி கொண்டிருந்த போது, ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்} அவனை நோக்கி மூர்க்கமாக விரைந்து, கூரிய கணைகளால் அவனைத் துளைத்தான். ராட்சசர்களில் சிங்கங்களான அவ்விருவருக்கிடையில் நடைபெற்ற போரானது மிகப் பயங்கரமாக மாறியது. (பழங்காலத்தின்) சக்ரனையும் {இந்திரனையும்}, சம்பரனையும் போல அவ்விருவரும் மாயைகளை இருப்புக்கு அழைத்தனர்.
சினத்தால் தூண்டப்பட்ட அலம்புசன், கடோத்கசனைத் தாக்கினான். உண்மையில், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் நடைபெற்றதற்கு ஒப்பாக ராட்சசர்களில் முதன்மையான அவ்விருவருக்கும் இடையிலான மோதல் இருந்தது. கடோத்கசன், இருபது நாராசங்களால் அலம்புசனின் மார்பைத் துளைத்து மீண்டும் மீண்டும் ஒரு சிங்கத்தைப் போல முழங்கினான். ஓ! மன்னா, சிரித்துக் கொண்டே அலம்புசனும், வெல்லப்படாத ஹிடிம்பையின் மகனை {கடோத்கசனை} மீண்டும் மீண்டும் துளைத்து மொத்த ஆகாயத்தையும் நிறைக்கும்படி மகிழ்ச்சியால் உரத்த முழக்கங்களை இட்டான்.
பிறகு, பெரும் வலிமை கொண்டவர்களும் ராட்சசர்களில் முதன்மையானவர்களுமான அவ்விருவரும் சினத்தால் நிறைந்தனர். தங்கள் மாய சக்திகளை வெளிப்படுத்தியபடி தங்களுக்குள் போரிட்டுக்கொண்ட அவர்களில் ஒருவராலும் தங்களில் மற்றவன் மேல் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் நூறு மாயைகளை உண்டாக்கி மற்றவனை மலைக்கச் செய்தனர். மாயைகளை உண்டாக்குவதில் சாதித்தவர்களான அவ்விருவரில், ஓ! மன்னா, கடோத்கசன் வெளிப்படுத்திய மாயைகள் அனைத்தும் அப்போரில், அது போன்றே மாயைகளை உண்டாக்கிய அலம்புசனால் அழிக்கப்பட்டன. மாயைகளை உண்டாக்குவதில் சாதித்தவனான ராட்சச இளவரசன் அலம்புசன், அப்படிப் போரிடுவதைக் கண்ட பாண்டவர்கள் கவலையால் நிறைந்து, அவனைச் சுற்றி தேர்வீரர்களில் முதன்மையானோர் பலரை நிற்கச் செய்தனர்.
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீமசேனனும், பிறர் அனைவரும், அவனை {அலம்புசனை} எதிர்த்துச் சினத்துடன் விரைந்தனர். ஓ! ஐயா, எண்ணற்ற தேர்களால் அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் சுற்றி வளைத்த அவர்கள், காட்டில் மனிதர்கள் கொள்ளிக்கட்டைகளுடன் ஒரு யானையைச் சூழ்ந்து கொள்வதைப் போல அனைத்துப் பக்கங்களிலும் கணைகளால் அவனை அடைத்தனர். அவனோ {அலம்புசனோ}, தன் ஆயுதங்களின் மாயையால் அந்தக் கணை மழையைக் கலங்கடித்து, காட்டுத்தீயில் இருந்து விடுபட்ட யானையைப் போல, அந்தத் தேர்களின் நெருக்கத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டான்.
அப்போது, இந்திரனின் வஜ்ரத்துக்கு ஒப்பான நாணொலியைக் கொண்ட தன் பயங்கர வில்லை வளைத்த அவன் {அலம்புசன்}, வாயுத் தேவனின் மகனை {பீமனை} இருபத்தைந்து கணைகளாலும், பீமனின் மகனை {கடோத்கசனை} ஐந்தாலும், யுதிஷ்டிரனை மூன்றாலும், சகாதேவனை ஏழாலும், நகுலனை எழுபத்துமூன்றாலும், திரௌபதி மகன்கள் ஐவரில் ஒவ்வொருவரையும் ஐந்து கணைகளாலும் துளைத்து உரத்த முழக்கம் செய்தான். பிறகு, பீமசேனன் ஒன்பது கணைகளாலும், சகாதேவன் ஐந்தாலும் பதிலுக்கு அவனைத் துளைத்தனர். யுதிஷ்டிரன் அந்த ராட்சசனை {அலம்புசனை} ஒரு நூறு கணைகளால் துளைத்தான். நகுலன் அவனை மூன்று கணைகளால் துளைத்தான்.
ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, ஐநூறு கணைகளால் அவனை {அலம்புசனைத்} துளைத்தான். அந்த வலிமைமிக்க வீரன் {கடோத்கசன்}, எழுபது கணைகளால் மீண்டும் ஒரு முறை அலம்புசனைத் துளைத்து உரக்க முழங்கினான். ஓ மன்னா, கடோத்கசனின் அந்த உரத்த முழக்கத்தால், மலைகள், காடுகள், மரங்கள் மற்றும் நீர்நிலைகளுடன் கூடிய பூமாதேவி நடுங்கினாள். பெரும் வில்லாளிகளும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அவர்களால் அனைத்துப் பக்கங்களிலும் ஆழத் துளைக்கப்பட்ட அலம்புசன், பதிலுக்கு அவர்கள் ஒவ்வொருவரையும் ஐந்து கணைகளால் துளைத்தான். அப்போது, ஓ! பாரதர்களில் தலைவரே {திருதராஷ்டிரரே}, ராட்சசனான அந்த ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, அந்தப் போரில் கோபக்கார ராட்சசனான மற்றொருவனை {அலம்புசனை} பல கணைகளால் துளைத்தான். ஆழத் துளைக்கப்பட்டவனும், ராட்சசர்களில் வலிமைமிக்க இளவரசனுமான அந்த அலம்புசன், தங்கச் சிறகுகள் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான கணக்கிலடங்காக் கணைகளை விரைவாக ஏவினான். முற்றிலும் நேராக இருந்த அந்தக் கணைகள் அனைத்தும், மலைச்சிகரத்திற்குள் நுழையும் பெரும்பலங்கொண்ட கோபக்காரப் பாம்புகளைப் போலக் கடோத்கசனின் உடலுக்குள் நுழைந்தன.
அப்போது துயரத்தால் நிறைந்த பாண்டவர்களும், ஹிடிம்பையின் மகனான கடோத்கசனும், ஓ! மன்னா, தங்கள் எதிரியின் மீது அனைத்துப் பக்கங்களில் இருந்து கூரிய கணை மேகங்களை ஏவினர். வெற்றியை விரும்பிய பாண்டவர்களால் அந்தப் போரில் இப்படித் தாக்கப்பட்ட அலம்புசன் அழிவுடையவனே, ஆகையால் அவனுக்கு {அலம்புசனுக்கு} என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்போது, போரில் மகிழ்பவனான வலிமைமிக்கப் பீமசேனன் மகன் {கடோத்கசன்}, அலம்புசனின் அந்நிலையைக் கண்டு, அவனுடைய அழிவில் தன் இதயத்தை நிறுத்தினான். அவன் {கடோத்கசன்}, எரிந்த மலைச்சிகரத்திற்கோ, சிதறிப்போன கறுத்த மைக்குவியலுக்கோ ஒப்பாக இருந்த அந்த ராட்சச இளவரசனுடைய {அலம்புசனுடைய} தேரை நோக்கி மிக மூர்க்கமாக விரைந்தான்.
கோபத்தால் தூண்டப்பட்ட ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, தன் தேரில் இருந்து அலம்புசனின் தேருக்குப் பறந்து சென்று, பின்னவனை {அலம்புசனைப்} பிடித்தான். பிறகு அவன் {கடோத்சகசன்}, கருடன் பாம்பொன்றைத் தூக்குவது போல அவனை {அலம்புசனைத்} தேரில் இருந்து தூக்கினான். இப்படித் தன் கரங்களால் அவனை {அலம்புசனை} இழுத்த அவன் {கடோத்கசன்}, மீண்டும் மீண்டும் சுழற்றத் தொடங்கி, ஒரு மனிதன் பானையொன்றைப் பாறை மீது வீசித் துண்டுகளாக நொறுக்குவதைப் போல, அவனைப் பூமியில் வீசிச் சிதறச் செய்தான். பலம், சுறுசுறுப்பு, பெரும் ஆற்றல் ஆகியவற்றைக் கொண்ட அந்தப் பீமசேனன் மகன் {கடோத்கசன்}, போரில் கோபத்தால் தூண்டப்பட்டுத் துருப்புகள் அனைத்தின் அச்சத்தையும் தூண்டினான்.
இவ்வாறு அச்சந்தரும் ராட்சசனான அலம்புசன், அங்கங்கள் அனைத்தும் உடைக்கப்பட்டு, எலும்புகள் துண்டு துண்டாகப் போகும்படி வீரக் கடோத்கசனால் கொல்லப்பட்டது, நெடிய சால மரம் ஒன்று காற்றால் வேரோடு சாய்க்கப்பட்டதற்கு ஒப்பாக இருந்தது. அந்த இரவு உலாவியின் {அலம்புசனின்} படுகொலையால் பார்த்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் சிங்க முழக்கங்களைச் செய்தபடி தங்கள் ஆடைகளை அசைத்தனர். எனினும், ஓ! ஏகாதிபதி, ராட்சசர்களில் வலிமைமிக்க இளவரசனான அலம்புசன் கொல்லப்பட்டு, நொறுங்கிய மலை போலக் கிடப்பதைக் கண்ட துணிச்சல்மிக்க உமது வீரர்கள், "ஓ!" என்றும், "ஐயோ!" என்றும் கதறினர்.
ஆவல் கொண்ட மனிதர்கள், (மேலும் எரிய முடியாத) கரித்துண்டைப் போல, பூமியில் ஆதரவற்றுக் கிடக்கும் அந்த ராட்சசனைக் காணச் சென்றனர். அப்போது, வலிமைமிக்க உயிரினங்களில் முதன்மையானவனும், ராட்சசனுமான கடோத்கசன், இப்படித் தன் எதிரியைக் கொன்றதும், (அசுரன்) வலனைக் கொன்ற வாசவனை {இந்திரனைப்} போல உரக்க முழங்கினான். மிகக் கடினமான சாதனையைச் செய்த கடோத்கசன், தன் தந்தைமாராலும், தன் உறவினர்களாலும் மிகவும் புகழப்பட்டான். உண்மையில் அலம்புசக் கனியொன்றைப் போல அந்த அலம்புசனை வீழ்த்திய அவன் {கடோத்கசன்} தன் நண்பர்களோடு சேர்ந்து மிகவும் மகிச்சியடைந்தான். அங்கே (பாண்டவப் படையில்), பல்வேறு வகைகளிலான கணைகளின் ஒலிகளாலும், சங்கொலிகளாலும் பெரும் ஆரவாரம் எழுந்தது. அவ்வொலியைக் கேட்ட கௌரவர்களும் பதிலுக்கு உரத்த முழக்கங்களைச் செய்து, அதன் எதிரொலிகளால் முழுப் பூமியையும் நிறைத்தனர்" {என்றான் சஞ்சயன்} [1].
[1] இந்தப் பகுதியைப் பொறுத்தவரை, கங்குலியின் பதிப்பும், மன்மதநாததத்தரின் பதிப்பும் வரிகளாலும், வர்ணனைகளாலும் ஒத்துப் போகின்றன. வேறொரு பதிப்பில் முற்றிலும் வேறு வகையில், அதிக விவரங்களைக் கொண்ட வர்ணனைகளும், அதிக வரிகளும் இருக்கின்றன.
ஆங்கிலத்தில் | In English |