Karna stupefied by Bhima! | Drona-Parva-Section-132 | Mahabharata In Tamil
(ஜயத்ரதவத பர்வம் – 48)
பதிவின் சுருக்கம் : பீமனைப் புகழ்ந்த திருதராஷ்டிரன்; கர்ணனை மீண்டும் குதிரைகளற்றவனாகவும், சாரதியற்றவனாகவும் ஆக்கிய பீமன்; கர்ணனைக் காக்கத் தன் தம்பி துர்ஜயனை அனுப்பிய துரியோதனன்; கர்ணன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே துர்ஜயனைக் கொன்ற பீமன்; துயரால் அழுத கர்ணன்...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "பீமசேனன், கர்ணனுடன் போரிடுவதில் செயல்பாட்டு ஒருமையுடனும், சக்தியுடனும் வென்றதால், நான் அவனது ஆற்றலை மிக அற்புதமானதாகக் கருதுகிறேன்.(1) உண்மையில், ஓ! சஞ்சயா, யக்ஷர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களுடன் கூடிய தேவர்களையே தடுக்க வல்லவனும், அனைத்து வகை ஆயுதங்களையும் தரித்தவனுமான அந்தக் கர்ணனால், சுடர்மிகு பிரகாசத்துடன் கூடியவனும், பாண்டுவின் மகனுமான பீமனைப் போரில் ஏன் வெல்ல முடியவில்லை என்பதை எனக்குச் சொல்வாயாக.(2,3) உயிரையே பணயமாக வைத்த அவர்களுக்குள் அந்தப் போர் எவ்வாறு நடந்தது என்பதைச் சொல்வாயாக. அவ்விருவருக்குள்ளான மோதலில், உண்மையில், இருவருக்கும் வெற்றி அடையத்தக்க தொலைவிலேயே இருக்கிறது, அதே போல இருவரும் தோற்கவும் வாய்ப்பிருக்கிறது [1].(4)
[1] "4ஆம் சுலோகத்தின் இரண்டாம் வரியை மிகச் சாதாரணமாக வழங்கியிருக்கிறேன். இரு மனிதர்கள் போரிடும்போது, எவர் வெல்வார் என்பதை ஒருவனால் முன்கூட்டியே சொல்ல முடியாது. வெல்வதற்கும், தோற்பதற்கு இருவருக்கும் சமமான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதே பொருளாக இங்கே தெரிகிறது" என இங்கே விளக்குகிறார் கங்குலி.
ஓ! சூதா {சஞ்சயா}, போரில் கர்ணனை அடைந்த என் மகன் சுயோதனன் {துரியோதனன்}, கோவிந்தன் {கிருஷ்ணன்} மற்றும் சாத்வதர்களுடன் கூடிய பிருதையின் {குந்தியின்} மகன்களை எப்போதும் வெல்லத் துணிகிறான்.(5) எனினும், பயங்கரச் செயல்களைச் செய்யும் பீமசேனனால் போரில் கர்ணன் அடையும் தொடர் தோல்விகளைக் கேட்டு, எனக்கு மயக்கமே வருவதாகத் தெரிகிறது.(6) என் மகனின் {துரியோதனனின்} தீய கொள்கையின் விளைவால் கௌரவர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டதாகவே நான் நினைக்கிறேன். வலிமைமிக்க வில்லாளிகளான பிருதையின் {குந்தியின்} மகன்களை வெல்வதில் கர்ணன் வெற்றி அடையவே மாட்டான்.(7) கர்ணன், பாண்டுவின் மகன்களுடன் போரிட்ட அனைத்துப் போர்களிலும், பின்னவர்களே {பாண்டவர்களே} அவனை {கர்ணனை} எந்த மாற்றமும் இல்லாமல் களத்தில் தோல்வியடையச் செய்திருக்கின்றனர்.(8) உண்மையில் அந்தப் பாண்டவர்கள், ஓ! மகனே {சஞ்சயா}, வாசவனை {இந்திரனைத்} தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களாலும் வெல்லப்பட முடியாதவர்களாவர். ஐயோ, என் தீய மகன் துரியோதனன் இஃதை அறியவில்லையே.(9) கருவூலங்களின் தலைவனை {குபேரனைப்} போல இருக்கும் பிருதையின் {குந்தியின்} மகனுடைய {யுதிஷ்டிரனுடைய} செல்வத்தைக் களவாடிய சிறுமதி கொண்ட என் மகன் {துரியோதனன்}, (மலைகளில்) தேனைத் தேடுபவனைப் போல வீழ்ச்சியைக் காணாதிருக்கிறான்.(10) வஞ்சகம் அறிந்த அவன் {துரியோதனன்}, அதைத் திரும்பப் பெற இயலாத அளவுக்குத் தன்னுடையது எனக் கருதி, எபோதும் பாண்டவர்களை அவமதிக்கிறான் [2].(11) தூய்மையற்ற ஆன்மா கொண்ட நானும், உயர் ஆன்ம பாண்டுவின் மகன்கள் அறநெறி நோற்பவர்களாக இருப்பினும், என் பிள்ளைகளின் மீது கொண்ட பாசத்தால் மனவுறுத்தல் கொள்ளவில்லை.(12)
[2] வேறொரு பதிப்பில், "வஞ்சனையில் புத்தியுள்ளவனான என் புத்திரன் மகாத்மாக்களான பாண்டவர்களுடைய ராஜ்யத்தைக் கபடத்தால் கவர்ந்து கொண்டு, "ஜயம் அடையப்பட்டது" என்றே எண்ணிக் கொண்டு பாண்டவர்களை அவமதிக்கிறான்" என்றிருக்கிறது.
பெரும் தொலைநோக்குப் பார்வை கொண்டவனும், பிருதையின் மகனுமான யுதிஷ்டிரன், சமாதானத்தை விரும்புபவனாகவே தன்னை எப்போதும் காட்டிக் கொண்டான். எனினும் என் மகன்கள் அவனைத் {யுதிஷ்டிரனைத்} திறனற்றவனாகக் கருதி, அவனை இகழ்ந்தனர்.(13) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமசேனன், அந்தத் துயரங்கள் அனைத்தையும் (பாண்டவர்களால் தாக்குப்பிடிக்கப்பட்ட) தீங்குகள் அனைத்தையும் மனத்தில் கொண்டு, சூதன் மகனுடன் {கர்ணனுடன்} போரிட்டான்.(14) எனவே, ஓ! சஞ்சயா, போர்வீரர்களில் முதன்மையான பீமன் மற்றும் கர்ணன் ஆகிய இருவரும், ஒருவர் உயிரை மற்றவர் எடுக்க விரும்பி, தங்களுக்குள் எவ்வாறு போரிட்டனர் என்பதை எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.(15)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒன்றையொன்று கொல்லவிரும்பிய இரண்டு காட்டு யானைகளுக்கு ஒப்பாகக் கர்ணனுக்கும், பீமனுக்கும் இடையிலான போர் எவ்வாறு நடந்தது என்பதைக் கேட்பீராக.(16) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்ட விகர்த்தனன் மகன் {கர்ணன்}, தன் ஆற்றலை முன்னெடுத்து, எதிரிகளைத் தண்டிப்பவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான கோபக்கார பீமனை முப்பது கணைகளால் துளைத்தான்.(17) உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்த விகர்த்தனன் மகன் {கர்ணன்}, கூர்முனை கொண்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், பெரும் வேகம் கொண்டவையுமான கணைகள் பலவற்றால் பீமனைத் தாக்கினான்.(18) எனினும், பீமன், தன்னைத் தாக்குவதில் கர்ணன் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, மூன்று கணைகளால் பின்னவனின் {கர்ணனின்} வில்லை அறுத்தான். மேலும் அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, ஒரு பல்லத்தைக் கொண்டு கர்ணனின் தேரோட்டியை அவனது தேர்த்தட்டில் இருந்து கீழே பூமியில் விழ வைத்தான்.(19)
அப்போது, பீமனைக் கொல்ல விரும்பிய விகர்த்தனன் மகன், தங்கம் மற்றும் வைடூரியக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட ஈட்டி ஒன்றை ஏந்தினான்.(20) காலனின் இரண்டாவது ஈட்டியைப் போல இருந்த அந்தக் கடும் ஈட்டியைப் பிடித்து உயர்த்திக் குறி பார்த்த ராதையின் மகன் {கர்ணன்}, பீமனின் உயிரை எடுக்கப் போதுமான பலத்துடன் அதைப் பீமசேனன் மீது ஏவினான். பெரும்பலம் கொண்ட அந்த ராதையின் மகன் {கர்ணன்}, வஜ்ரத்தை {இடியை} ஏவும் இந்திரனைப் போல அந்த ஈட்டியை ஏவி பெருமுழக்கம் செய்தான். அம்முழக்கத்தைக் கேட்ட உமது மகன்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(21-23) எனினும் பீமன், கர்ணனின் கரங்களில் இருந்து வீசப்பட்டதும், நெருப்பு, அல்லது சூரியனின் பிரகாசத்தைக் கொண்டதுமான அவ்வீட்டியை ஏழு கணைகளைக் கொண்டு ஆகாயத்திலேயே வெட்டினான்.(24) அப்போதுதான் சட்டையுரிந்து வந்த பாம்புக்கு ஒப்பான அவ்வீட்டியை வெட்டிய பீமன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சூதன் மகனுடைய உயிரை எடுக்கப் பார்ப்பவனைப் போலப் பெரும் கோபத்துடன் அந்தப் போரில், மயிலின் இறகுகள் மற்றும் தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், ஒவ்வொன்றும் யமனின் கோலுக்கு ஒப்பானவையுமான பல கணைகளை ஏவினான்.(25, 26)
பெரும் சக்தியைக் கொண்ட கர்ணனும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடி கொண்ட மற்றொரு உறுதியான வில்லை எடுத்துக் கொண்டு, அதைப் பலத்துடன் வளைத்துக் கணைகள் பலவற்றை ஏவினான்.(27) எனினும், பாண்டுவின் மகன் {பீமன்}, ஒன்பது நேரான கணைகளால் அக்கணைகள் அனைத்தையும் வெட்டினான். ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, வசுசேனனால் {கர்ணனால்} ஏவப்பட்ட அந்த வலிமைமிக்கக் கணைகளை வெட்டிய பீமன், ஓ! ஏகாதிபதி, ஒரு சிங்கத்தைப் போலப் பெருமுழக்கம் செய்தான். பருவ காலத்தில் பசுவுக்காக முழங்கும் வலிமைமிக்க இரு காளைகளைப் போல, அல்லது ஒரே இறைச்சித் துண்டுக்காக முழங்கும் இரு புலிகளைப் போல, அடுத்தவனின் மட்டுமீறிய தாமதத்தைக் காண விரும்பி அவர்கள், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(28-30) சில நேரங்களில் அவர்கள் மாட்டுக் கொட்டகையிலுள்ள இரு வலிமைமிக்கக் காளைகளைப் போல ஒருவரையொருவர் கோபக் கண்களால் பார்த்துக் கொண்டனர். பிறகு இரு பெரும் யானைகள் தங்கள் தந்தங்களின் கூர்முனைகளைக் கொண்டு ஒன்றையொன்று தாக்கிக் கொள்வதைப் போல, முழுதாக வளைத்து இழுக்கப்பட்ட தங்கள் வில்லில் இருந்து கணைகளை ஏவி ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் கணை மாரியால் ஒருவரையொருவர் எரித்த அவர்கள், பெரும் கோபத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, ஒருவரின் மேலொருவர் தங்கள் ஆற்றலைச் செலுத்தினர். (31,32) சிலநேரங்களில் ஒருவரை நோக்கி ஒருவர் சிரித்துக் கொண்டும், சில நேரங்களில் ஒருவரையொருவர் நிந்தித்துக் கொண்டும், சில நேரங்களில் தங்கள் சங்குகளை முழங்கிக் கொண்டும் அவர்கள் ஒருவரோடொருவர் போர் புரிந்தனர்.(33)
அப்போது பீமன், கர்ணனின் வில்லைக் கைப்பிடியில் அறுத்து, சங்கு போன்ற வெண்மையாக இருந்த பின்னவனின் {கர்ணனின்} குதிரைகளைத் தன் கணைகளின் மூலம் யமனுலகு அனுப்பினான்.(34) மேலும் அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் எதிரியின் {கர்ணனின்} தேரோட்டியையும் அவனது தேர்த்தட்டில் இருந்து வீழ்த்தினான். பிறகு, குதிரைகளற்றவனாக, சாரதியற்றவனாக ஆக்கப்பட்டு, அந்தப் போரில் (கணைகளால்) மறைக்கப்பட்டிருந்த விகர்த்தனன் மகன் கர்ணன், பெரும் துன்பத்தில் மூழ்கினான். பீமனின் கணைமாரியால் மலைத்துப் போன அவன் {கர்ணன்}, என்ன செய்வது என்பதை அறியாதிருந்தான்.(35, 36)
துன்பம் நிறைந்த அவல நிலையில் கர்ணன் நிறுத்தப்பட்டதைக் கண்ட மன்னன் துரியோதனன், கோபத்தால் நடுங்கி, (தன் தம்பியான) துர்ஜயனிடம், "ஓ! துர்ஜயா, செல்வாயாக. அங்கே அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, ராதையின் மகனை {கர்ணனை} விழுங்கப் போகிறான். அந்தத் தாடியற்ற அலியை {பீமனை} விரைவாகக் கொன்று, கர்ணனை வலுப்படுத்துவாயாக" என்றான்.(37, 38) இப்படிச் சொல்லப்பட்ட உமது மகன் துர்ஜயன், துரியோதனனிடம், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி (கர்ணனுடன்) போரில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த பீமசேனனை நோக்கி விரைந்து கணைகளால் அவனை {பீமனை} மறைத்தான்.(39) அந்தத் துர்ஜயன், பீமனை ஒன்பது கணைகளாலும், அவனது குதிரைகளை எட்டாலும், அவனது சாரதியை ஆறாலும், அவனது கொடிமரத்தை மூன்றாலும் தாக்கி, மீண்டும் பீமனை ஏழாலும் {ஏழு கணைகளாலும்} தாக்கினான்.(40)
அப்போது, கோபத்தால் தூண்டப்பட்ட பீமசேனன், தன் கணைகளால் துர்ஜயனின் உயிர் நிலைகளையும், அவனது குதிரைகளையும், சாரதியையும் துளைத்து, அவர்களை யமனுலகு அனுப்பி வைத்தான் [3].(41) அப்போது துயரால் அழுத கர்ணன், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனும், பாம்பைப் போல நெளிந்தபடி பூமியில் கிடந்த அந்த உமது மகனை {துர்ஜயனை} வலம்வந்தான்.(42) பீமன், தனது கொடிய எதிரியான கர்ணனைத் தேரற்றவனாகச் செய்த பிறகு, சிரித்துக் கொண்டே கணைகளால் அவனை மறைத்து, எண்ணற்ற கூர்முனைகளைக் கொண்ட சதாக்னியைப் போல அவனை ஆக்கினான்.(43) எனினும், எதிரிகளைத் தண்டிப்பவனான அந்த அதிரதன் கர்ணன், இப்படிக் கணைகளால் துளைக்கப்பட்டிருந்தாலும், அந்தப் போரில் தன்னுடன் போரிடும் பீமனைத் தவிர்க்கவில்லை" {என்றான் சஞ்சயன்}.(44)
-----------------------------------------------------------------------------------------------------------[3] இந்தத் துர்ஜயனோடு சேர்த்து, இதுவரை பீமன், துரியோதனன் தம்பிகளில் 36 பேரைக் கொன்றிருக்கிறான்.
துரோண பர்வம் பகுதி – 132ல் வரும் மொத்த சுலோகங்கள் 44
ஆங்கிலத்தில் | In English |