Narayana Weapon! | Drona-Parva-Section-196 | Mahabharata In Tamil
(நாராயணாஸ்த்ரமோக்ஷ பர்வம் - 03)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனையும், திருஷ்டத்யும்னனையும் நிந்தித்த அஸ்வத்தாமன், பாஞ்சாலர்களையும், பாண்டவர்களையும் கொல்வதாகச் சபதம் ஏற்றது; நாராயணாஸ்திரத்தின் வரலாறு…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, பாவம் நிறைந்த செயல்களைக் செய்யும் திருஷ்டத்யும்னனால், தன் தந்தை கொல்லப்பட்டதைக் கேட்ட துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, துயராலும், சினத்தாலும் நிறைந்தான்.(1) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்த அவனது உடலானது, யுக முடிவின் போது உயிரினங்களைக் கொல்லும் அந்தகனின் உடலைப் போலச் சுடர்விட்டு எரிவதாகத் தெரிந்தது.(2)
கண்ணீர் நிறைந்த தன் கண்களை மீண்டும் மீண்டும் துடைத்தவனும், சினத்தால் சூடான பெருமூச்சுகளை விட்டவனுமான அவன் {அஸ்வத்தாமன்}, துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(3) “என் தந்தை தமது ஆயுதங்களைக் கீழே வைத்தபிறகு, இழிந்த அற்பர்களால் அவர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பதையும், அறத்தின் போர்வையில்[1] மறைந்திருக்கும் யுதிஷ்டிரனால் இந்தப் பாவச் செயல் எவ்வாறு இயற்றப்பட்டது என்பதையும் இப்போது நான் அறிந்தேன்.(4) தர்மன் மகனின் {யுதிஷ்டிரனின்} அந்த அநீதியான, மிகக் கொடூரச் செய்கையை இப்போது நான் கேட்டேன்.
கண்ணீர் நிறைந்த தன் கண்களை மீண்டும் மீண்டும் துடைத்தவனும், சினத்தால் சூடான பெருமூச்சுகளை விட்டவனுமான அவன் {அஸ்வத்தாமன்}, துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(3) “என் தந்தை தமது ஆயுதங்களைக் கீழே வைத்தபிறகு, இழிந்த அற்பர்களால் அவர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பதையும், அறத்தின் போர்வையில்[1] மறைந்திருக்கும் யுதிஷ்டிரனால் இந்தப் பாவச் செயல் எவ்வாறு இயற்றப்பட்டது என்பதையும் இப்போது நான் அறிந்தேன்.(4) தர்மன் மகனின் {யுதிஷ்டிரனின்} அந்த அநீதியான, மிகக் கொடூரச் செய்கையை இப்போது நான் கேட்டேன்.
[1] இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் தர்மத்வஜின் Dharmadhwajin என்ற சொல்லின் பொருள், உண்மையில் அறக்கொடி {தர்மக்கொடி} கொண்ட ஒரு மனிதனையே குறிக்கும்; எனவே, ஒரு வேடதாரியானவன் அறத்தையும், அறநெறியையும் மட்டுமே பேசிக் கொண்டு, வேறு வகையில் செயல்படுபவன் என இங்கே பொருள்படும்” என இங்கே விளக்குகிறார் கங்குலி.
உண்மையில், ஓ! மன்னா {துரியோதனா}, போரில் ஈடுபடுவோருக்கு வெற்றியோ, தோல்வியோ இரண்டில் ஏதாவதொன்றே கிடைக்க வேண்டும். போரில் மரணம் என்பது எப்போதும் பாராட்டுக்குரியதாகவே இருக்கிறது. போரிடும் ஒருவனுக்கு நேர்மையான சூழ்நிலைகளின் கீழ் போரில் ஏற்படும் மரணமானது,(5,6) தவசிகளின் நோக்கில் துயருறத் தகாததாகும். வீரர்களின் உலகங்களுக்கே என் தந்தை {துரோணர்} சென்றிருக்கிறார் என்பதில் ஐயமில்லை.(7) இத்தகு மரணத்தை அடைந்த அவருக்காக நான் வருந்தலாகாது. எனினும், அவர் {துரோணர்} போரில் நேர்மையாக ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், வீரர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவரது {துரோணரது} குழலை {கேசத்தைப்} பற்றி இழுத்த அந்த அவமதிப்பானது என் இதயத்தின் மையத்தையே பிளக்கிறது. நான் உயிரோடிருக்கையில் என் தந்தையின் குழல் பிடிக்கப்பட்டது.(8,9) {எனும்போது} மகனற்றோர் ஏன் வாரிசை விரும்ப வேண்டும்?[2]
[2] “இங்கே சொல்லப்பட்டிருக்கும் புத்ரினாஸ் putrinas அல்ல, அபுத்ரினாஸ் aputrinas என்பதே சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இங்கே உண்மையான பொருள் என்பது, “பிள்ளைகளைக் கொண்டோர் ஏன் அவர்களிடம் பாசத்தை உணர வேண்டும்?” என்பதாகும்” என இங்கே விளக்குகிறார் கங்குலி. வேறொரு பதிப்பில், “நான் உயிருடனிருக்கும்போதே என்னைப் பெற்றவரான துரோணர் மயிர் பிடிக்கப்படுதலை அடைந்தமையால் மற்றுள்ள புத்ரவான்கள் புத்ரர்களிடம் எவ்வாறு பிரியம் வைப்பார்கள்?” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “நான் உயிரோடிருக்கும்போதே என் தந்தையின் மயிர் பற்றப்பட்டதால், மகனற்ற மனிதர்கள், (அவர்களுக்கு எவ்வழியில் உதவ முடியாத) மகன்களை அடைய ஏன் விரும்ப வேண்டும்?” என்றிருக்கிறது.
காமத்தாலோ, கோபத்தாலோ, மடமையாலோ, வெறுப்பாலோ, அலட்சியத்தாலோ தான் மனிதர்கள் அநீதியிழைக்கவோ, பிறரை அவமதிக்கவோ செய்கிறார்கள். கொடூரனும், தீய ஆன்மாக் கொண்டவனுமான பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} என்னை முற்றிலும் அலட்சியம் செய்தே இந்த மாபெரும் பாவச்செயலைச் செய்திருக்கிறான். எனவே, அச்செயலின் பயங்கர விளைவுகளைத் திருஷ்டத்யும்னன் நிச்சயம் காண்பான்,(10,11) அதே போலப் பொய்ப்பேசும் அந்தப் பாண்டு மகனும் {யுதிஷ்டிரனும்} இவ்வளவு தவறாக {அகாரியமாக} நடந்து கொண்டதால் {யுதிஷ்டரனும்} அதைக் {அதன் விளைவுகளைக்} காண்பான். வஞ்சகச் செயல் ஒன்றால் ஆசானைத் தமது ஆயுதங்களைக் கீழே வைக்கச் செய்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் இரத்தத்தை இன்று பூமி நிச்சயம் குடிக்கப் போகிறது. ஓ! கௌரவ்யா {துரியோதனா}, பாஞ்சாலர்களை முற்றாக அழிக்கத் தவறினால், அதற்கு மேல் உயிரெனும் சுமையை நான் ஒருபோதும் சுமக்க மாட்டேன் என உண்மையின் பேரிலும், என் அறச்செயல்கள் அனைத்தின் பேரிலும் உறுதியேற்கிறேன். அனைத்து வழிகளிலும் கடுமையாகப் பாஞ்சாலர்களுடன் நான் போரிடுவேன்.(12-15)
மறச் செயல்களைச் செய்யும் அந்தத் திருஷ்டத்யும்னனை போரில் நான் நிச்சயம் கொல்வேன். ஓ! கௌரவா {துரியோதனா}, அமைதி எனதாகும் முன் மென்மையாகவோ, கடுமையாகவோ எவ்வழியைப் பின்பற்றியேனும் பாஞ்சாலர்கள் அனைவரையும் அழிப்பேன். ஓ! மனிதர்களில் புலியே, இங்கேயும் {இம்மையிலும்}, இதன் பிறகும் {மறுமையிலும்} என இரண்டிலும் பேரச்சங்களில் இருந்து மீட்கப்படுவோம் என்பதற்காகவே மனிதர்கள் பிள்ளைகளை விரும்புகின்றனர். எனினும், சீடனும், (வலிமையில்) மலைக்கு ஒப்பான மகனுமான நான் உயிரோடிருக்கும்போதே, நண்பர்களற்ற ஓர் உயிரினத்தைப் போல, என் தந்தை அத்தகு பரிதாப நிலையில் வீழ்ந்தார். மகனாக நான் இருந்தாலும், துரோணரின் குழல்கள் பிடித்து இழுக்கப்பட்டதால், என் தெய்வீக ஆயுதங்களுக்கு ஐயோ! என் கரங்களுக்கு ஐயோ!, என் ஆற்றலுக்கு ஐயோ!(16-19) ஓ! பாரதர்களின் தலைவா {துரியோதனா}, இப்போது மறுவுலகத்திற்குச் சென்ற என் தந்தைக்குப் பட்டிருக்கும் கடனிலிருந்து நான் விடுபட எதை அடைய வேண்டுமோ, அதை இப்போது நான் அடைவேன்.
எவன் நல்லவனோ, அவன் தற்புகழ்ச்சியில் ஈடுபடுவதில்லை.(20,21) எனினும் என் தந்தையின் {துரோணரின்} படுகொலையைப் பொறுத்துக் கொள்ள முடியாமலேயே நான் என் ஆற்றலைக் குறித்துப் பேசுகிறேன். யுகத்தின் முடிவில் (அந்தகனால்) அடையப்படுவது எதுவோ, அஃதை அடைந்து இன்று நான் அவர்களது துருப்புகளைக் கலங்கடிக்கும்போது, பாண்டவர்களும், அவர்களுக்கு மத்தியில் இருக்கும் ஜனார்த்தனனும் {கிருஷ்ணனும்} என் ஆற்றலைக் காணட்டும். தேரில் இருக்கும் என்னைத் தேவர்களோ, கந்தர்வர்களோ, அசுரர்களோ, உரகர்களோ, ராட்சசர்களோ, இல்லை மனிதர்களில் முதன்மையானோர் அனைவரோ இன்று போரில் வெல்ல முடியாது. ஆயுத அறிவில் எனக்கோ, அர்ஜுனனுக்கோ ஈடானவன் இவ்வுலகில் வேறு எவனும் இல்லை.(22-24) தன் சுடர்மிக்கக் கதிர்களுக்கு மத்தியில் இருக்கும் சூரியனைப் போலத் துருப்புகளுக்குள் நுழையும் நான் இன்று என் தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்த போகிறேன்.(25)
இன்று, இந்தப் பயங்கரப்போரில் என் வில்லில் இருந்து ஏவப்பட்டு என்னால் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், தங்கள் பயங்கர சக்தியை வெளிப்படுத்திப் பாண்டவர்களைக் கலங்கடிக்கப்போகின்றன.(26) இன்று, ஓ! மன்னா {துரியோதனா}, அனைத்துத் திசைப்புள்ளிகளும் மழைத்தாரைகளால் மறைக்கப்படுவதைப் போலச் சிறகுகள் படைத்தவையும், கூர்முனை கொண்டவையுமான என் கணைகளால் நிறையப்போவதை நம் படையின் போர்வீரர்கள் காணப் போகிறார்கள்.(27) பேரொலியுடன் அனைத்துப் பக்கங்களிலும் கணை மாரியை இறைத்து, மரங்களை வீழ்த்தும் புயலைப் போல என் எதிரிகளை நான் வீழ்த்தப் போகிறேன்.(28) ஏவுவதற்கும், திரும்பப் பெறுவதற்கும் உரிய மந்திரங்களுடன் நான் கொண்டிருக்கும் அந்த ஓர் ஆயுதத்தை, ஓ! கௌரவ்யா {துரியோதனா}, பீபத்சுவோ {அர்ஜுனனோ}, ஜனார்த்தனனோ {கிருஷ்ணனோ}, பீமசேனனோ, நகுலனோ, சகாதேவனோ, மன்னன் யுதிஷ்டிரனோ, தீய ஆன்மா கொண்ட பிருஷதன் மகனோ (திருஷ்டத்யும்னனோ), சிகண்டியோ, சாத்யகியோ அறியமாட்டார்கள்.(29,30)
முன்பொரு சந்தர்ப்பத்தில், நாராயணன், ஒரு பிராமணனின் வடிவத்தை ஏற்று என் தந்தையிடம் வந்தான். அவனை {நாராயணனை} வணங்கிய என் தந்தை {துரோணர்}, முறையான வடிவத்தில் அவனுக்குக் காணிக்கைகளை அளித்தார்.(31) அப்போது என் தந்தை {துரோணர்} நாராயணம் என்று அழைக்கப்பட்ட அந்த உயர்ந்த ஆயுதத்தை {நாராயணனிடம்} கேட்டார்.(32) தேவர்கள் அனைவரிலும் முதன்மையான அந்தத் தெய்வீகத் தலைவன் {நாராயணன்}, “போரில் எந்த மனிதனும் உமக்கு இணையானவனாக இருக்க மாட்டான். ஓ! பிராமணரே, இந்த ஆயுதத்தை அவசரத்தில் ஒருபோதும் {திடீரெனப்} பயன்படுத்தக் கூடாது. எதிரிக்கு அழிவை ஏற்படுத்தாமல் இஃது ஒருபோதும் திரும்பாது.(34) ஓ! தலைவா, இதனால் கொல்லப்படத் தகாதவன் எவனையும் நான் அறியவில்லை. உண்மையில், கொல்லப்பட முடியாதவனையும் இது கொன்றுவிடும். எனவே, (ஆழமான பெரும் ஆலோசனை இல்லாமல்) இது பயன்படுத்தப்படக்கூடாது.(35) ஓ! எதிரிகளை எரிப்பவரே, போரில் தேர்களை, அல்லது ஆயுதங்களைக் கைவிட்டவர்கள் மீதோ, அபயம் கேட்பவர் மீதோ, சரணடைந்தவர்கள் மீதோ இந்த வலிமைமிக்க ஆயுதத்தை ஒருபோதும் ஏவக்கூடாது. போரில் இதைக் கொண்டு கொல்லப்படத் தகாதவனைப் பீடிக்க முயல்பவன், தானே இதனால் மிகவும் பீடிக்கப்படுவான்[3]” என்றான்.(36,37) இப்படியே என் தந்தை {துரோணர்} அவ்வாயுதத்தைப் பெற்றுக் கொண்டார்.
[3] “பம்பாய்ப் பதிப்பில் இந்த 37வது சுலோகத்தின் கடைசிவரி வேறுமாதிரியாக இருக்கிறது. நீலகண்டர் அஃதையே ஏற்று, இலக்கணப் பிழை நேர்வது ஏற்றுக் கொள்ளக்கூடியதே எனத் தனது அழகான விளக்கங்களால் விளக்குகிறார். எனினும் வங்க உரை அப்படியே இதற்கு முரணாக இருக்கிறது” என இங்கே விளக்குகிறார் கங்குலி. எனவே இங்கே கங்குலி ஏற்றுக் கொண்டிருப்பது வங்க உரையே என்பது தெரிகிறது. வேறொரு பதிப்பில், “யுத்ததில் (பகைவர்களைப்) பீடிக்கின்றவன் எல்லா விதத்தாலும் துன்பப்பட்டானேயாகில் கொல்லத்தகாதவர்களையும் கொல்லலாம்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை அறியமுடியவில்லை.
பிறகு, என்னிடம் பேசிய தலைவன் நாராயணன், “இவ்வாயுதத்தின் துணை கொண்டு, நீயும் போரில் பல்வேறு தெய்வீக ஆயுதங்களின் மழையைப் பொழிந்து அதன் விளைவாக சக்தியால் சுடர்விட்டெரியலாம்” என்றான். பிறகு இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தத் தெய்வீகத் தலைவன் {நாராயணன்} சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(38,39) என் தந்தையால் அடையப்பட்ட நாராயண ஆயுதத்தின் {நாராயணாஸ்திரத்தின்} வரலாறு இதுவே. அசுரர்களை முறியடித்துக் கொன்ற சச்சியின் தலைவனை {இந்திரனைப்} போலவே, நானும் அதைக் கொண்டு பாண்டவர்கள், பாஞ்சாலர்கள், மத்ஸ்யர்கள், கைகேயர்கள் ஆகியோரை முறியடித்துக் கொல்வேன். ஓ! பாரதா, என் கணைகள் எவ்வடிவத்தை ஏற்கவேண்டுமென நான் விரும்புவேனோ, அந்தக் குறிப்பிட்ட வடிவங்களை ஏற்கும் அவை {கணைகள்}, போராடும் எதிரிகள் மீது பாயும். போரில் கொல்லும் நான் எனக்கு விருப்பமான ஆயுதங்களின் மழையைப் பொழிவேன்.(40-42)
இரும்பு வாய்களைக் கொண்ட வானுலாவும் கணைகளைக் கொண்டு தேர்வீரர்களில் முதன்மையானோர் அனைவரையும் நான் முறியடித்துக் கொல்வேன். எதிரியின் மீது நான் எண்ணற்ற போர்க்கோடரிகளின் மழையை ஐயமறப் பொழிவேன்.(43) எதிரிகளை எரிப்பவனான நான் அந்த வலிமைமிக்க நாராயணாயுதத்தை {நாராயணாஸ்திரத்தைக்} கொண்டு பாண்டவர்களுக்கு மத்தியில் மகத்தான பேரழிவையுண்டாக்கி {பெரும் படுகொலைகளை நிகழ்த்தி}, அவர்களை அழிப்பேன்.(44) நண்பர்களுக்கும், பிராமணர்களுக்கும், தன் சொந்த ஆசானுக்கும் தீங்கிழைப்பவனும், கண்டிக்கத்தக்க நடத்தையைக் கொண்ட இழிந்த வஞ்சகனுமான அந்தப் பாஞ்சாலர்களில் இழிந்தவன் (திருஷ்டத்யும்னன்) இன்று என்னிடம் இருந்து ஒருபோதும் உயிரோடு தப்ப முடியாது” என்றான் {அஸ்வத்தாமன்}.(45)
துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டு (குரு) படை மீண்டும் அணிதிரண்டது. அப்போது மனிதர்களில் முதன்மையானோரான பலர் தங்கள் பெரும் சங்கங்களை முழக்கினர்.(46) மகிழ்ச்சியால் நிறைந்த அவர்கள், தங்கள் பேரிகைகளையும், டிண்டிமங்களையும் ஆயிரக்கணக்கில் இசைத்தனர். பேரொலிகளால் எதிரொலித்த பூமியானது, குதிரைகளின் குளம்படிகளாலும், தேர்ச்சக்கரங்களாலும் பீடிக்கப்பட்டது.(47) அந்த உரத்த ஆரவாரமானது பூமியையும், வானத்தையும், சொர்க்கத்தையும் எதிரொலிக்கச் செய்தது. மேகங்களின் உருளலைப் போன்ற அந்த ஆழ்ந்த ஆரவாரத்தைக் கேட்டவர்களும், தேர்வீரர்களில் முதன்மையானவர்களுமான அந்தப் பாண்டவர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒருவரோடொருவர் ஆலோசித்தனர். அதேவேளையில், இவ்வார்த்தைகளைச் சொன்ன துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! பாரதரே, நீரைத் தொட்டு, நாராயணம் என்று அழைக்கப்பட்ட அந்தத் தெய்வீக ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான்” {என்றான் சஞ்சயன்}.(48,49)
ஆங்கிலத்தில் | In English |