The question of Dhritarashtra! | Drona-Parva-Section-195 | Mahabharata In Tamil
(நாராயணாஸ்த்ரமோக்ஷ பர்வம் - 02)
பதிவின் சுருக்கம் : துரோணர் கொல்லப்பட்டதைக் குறித்துக் கேட்டதும் அஸ்வத்தாமன் என்ன சொன்னான் என சஞ்சயனிடம் கேட்ட திருதராஷ்டிரன்...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “ஓ! சஞ்சயா, மனிதம் {மானவாஸ்திரம்}, வாருணம், ஆக்னேயம், பிரம்மம், ஐந்திரம், நாராயணம் ஆகிய ஆயுதங்களை {அஸ்திரங்களை} எப்போதும் தன்னிடம் கொண்டவனான வீர அஸ்வத்தாமன், மறுபிறப்பாளரும் {பிராமணரும்}, முதிர்ந்த வயதினரும், தனது தந்தையுமான துரோணர், நேர்மையற்ற வழிகளில் {அதர்மமாகத்} திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டதைக் கேட்டு என்ன சொன்னான்?(1,2) உண்மையில், அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையான அந்த ஆசான் {துரோணர்}, அநீதியாகத் திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டதை அறிந்ததும், அஸ்வத்தாமன் என்ன சொன்னான்?(3) ராமரிடம் {பரசுராமரிடம்} இருந்து ஆயுதங்களின் அறிவியலை அடைந்த உயர் ஆன்ம துரோணர், தமது மகன் (போர்வீரனுக்குரிய) சாதனைகள் அனைத்தாலும் அலங்கரிக்கப்படுவதைக் காண விரும்பி, பின்னவனுக்கு {அஸ்வத்தாமனுக்கு} தெய்வீக ஆயுதங்கள் அனைத்தையும் (அனைத்தின் அறிவையும்) கொடுத்தார்.(4)
இவ்வுலகில் தங்களை விட மேன்மையடைய வேண்டுமென்று எவனொருவனை மனிதர்கள் விரும்புவார்களோ அவன் தங்கள் மகன் மட்டுமே, வேறு எவனுமல்ல.(5) உயர் ஆன்மா கொண்ட ஆசான்கள் அனைவரும், தங்கள் அறிவியல் புதிர்களைத் தங்கள் மகன்களுக்கோ, அர்ப்பணிப்புள்ள சீடர்களுக்கோ கொடுக்கும் குணத்தையே கொண்டுள்ளனர்.(6) ஓ! சஞ்சயா, தன் தந்தையின் சீடனாகி, விவரங்கள் அனைத்துடன் கூடிய அந்தப் புதிர்கள் அனைத்தையும் அடைந்த அந்தச் சரத்வான் மகளின் {கிருபியின்} மகன் {அஸ்வத்தாமன்}, இரண்டாவது துரோணராகவும், பெரும் வீரனாகவும் இருக்கிறான்.(7) ஆயுத அறிவில் {பரசு} ராமருக்கும், போரில் புரந்தரனுக்கும் {இந்திரனுக்கும்}, சக்தியில் கார்த்தவீரியனுக்கும், ஞானத்தில் பிருஹஸ்பதிக்கும் இணையானவனாக அஸ்வத்தாமன் இருக்கிறான்.(8) மனோபலத்தில் மலைக்கும், சக்தியில் நெருப்புக்கும் இணையானவனாக அந்த இளைஞன் {அஸ்வத்தாமன்} இருக்கிறான். ஆழ்ந்ததன்மையில் பெருங்கடலுக்கும், கோபத்தில் நஞ்சுமிக்கப் பாம்புக்கும் இணையானவனாக அவன் இருக்கிறான்.(9) போரில் அவன் {அஸ்வத்தாமன்} தேர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவனாக, உறுதிமிக்க வில்லாளியாகவும், களைப்பனைத்திற்கும் அப்பாற்பட்டவனாகவும் இருக்கிறான். வேகத்தில் அவன் காற்றுக்கு இணையானவனாக இருக்கிறான்; அடர்த்தியான {நெருக்கமான} போரில் அவன் சீற்றமிக்க யமனைப் போலத் திரிகிறான்.(10)
போரில் கணைகளை ஏவுவதில் அவன் {அஸ்வத்தாமன்} ஈடுபடும்போது, பூமியே அதனால் பீடிக்கப்படுகிறது. கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட அந்த வீரன், உழைப்பால் {முயற்சியால்} எப்போதும் களைப்பதில்லை.(11) வேதங்களாலும், நோன்புகளாலும் தூய்மைப்படுத்தப்பட்ட அவன் {அஸ்வத்தாமன்}, ஆயுத அறிவியலை முற்றாக அறிந்த தேர்ந்த திறனை அடைந்தவனாக இருக்கிறான். தசரதனின் மகனான ராமனைப் போலவே அவன், கலங்கடிக்கப்பட முடியாத பெருங்கடலைப் போன்றவனாவான்.(12) நீதிமிக்க மனிதர்களில் முதன்மையான ஆசான் {துரோணர்}, போரில் திருஷ்டத்யும்னனால் நேர்மையற்ற முறையில் கொல்லப்பட்டதைக் கேட்டு உண்மையில் அஸ்வத்தாமன் என்ன சொன்னான்?(13) உண்மையில், பாஞ்சாலர்களின் இளவரசனும், யக்ஞசேனன் மகனுமான அந்தத் திருஷ்டத்யும்னனைக் கொல்ல அஸ்வத்தாமனே விதிக்கப்பட்டிருக்கிறான்.(14) ஓ!, தன் தந்தையும் ஆசானுமானவர், கொடூரனும், பாவம் நிறைந்தவனும், அற்பனும் முன்னறிதிறனற்றவனுமான அந்தத் திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டதைக் கேட்டு அஸ்வத்தாமன் என்ன சொன்னான்?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.(15)
-----------------------------------------------------------------------துரோணபர்வம் பகுதி 195-ல் உள்ள சுலோகங்கள்: 15
ஆங்கிலத்தில் | In English |