The virtuous Arjuna! | Drona-Parva-Section-197 | Mahabharata In Tamil
(நாராயணாஸ்த்ரமோக்ஷ பர்வம் - 04)
பதிவின் சுருக்கம் : இயற்கையில் தோன்றிய கடும் சகுனங்கள்; போரில் தப்பி ஓடிய கௌரவர்கள் மீண்டும் முன்னேறிவருதைக் கண்டு பாண்டவர்கள் செய்த ஆலோசனை குறித்துச் சஞ்சயனிடம் கேட்ட திருதராஷ்டிரன்; அர்ஜுனனிடம் பேசிய யுதிஷ்டிரன்; அஸ்வத்தாமனின் ஆற்றலையும், துரோணரைக் கொன்றதில் பாண்டவர்களின் அநீதியையும் யுதிஷ்டிரனுக்கு எடுத்துரைத்த அர்ஜுனன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “நாராயணம் என்றழைக்கப்பட்ட ஆயுதம் {இருப்புக்கு} அழைக்கப்பட்டபோது, மழைப்பொழிவுடன் கூடிய கடுங்காற்று வீசத் தொடங்கியது; வானம் மேகமற்றதாய் இருந்தாலும் இடி முழக்கங்கள் கேட்கப்பட்டன.(1) பூமி நடுங்கியது; கடல்கள் கொந்தளித்தன. ஆறுகள் எதிர்த்திசையில் ஓடின.(2) ஓ! பாரதரே! {திருதராஷ்டிரரே}, மலைச்சிகரங்கள் பிளக்கத் தொடங்கின. பல்வேறு விலங்குகள் பாண்டவர்களின் இடதுபுறமாகக் கடந்து செல்லத் தொடங்கின[1].(3) இருளத் தொடங்கியது; சூரியன் மங்கினான். ஊனுண்ணும் பல்வேறு வகைகளிலான உயிரினங்கள் போர்க்களத்திற்கு வரத் தொடங்கின.(4) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் அனைவரும் அச்சமடைந்தனர். (இயற்கையில் ஏற்படும்) பெருங்கலக்கத்தைக் கண்ட அனைவரும், அதன் காரணத்தைக் குறித்து ஒருவரிடமொருவர் கேட்கத் தொடங்கினர்.(5) உண்மையில், துரோணர் மகனால் {அஸ்வத்தாமனால்} {இருப்புக்கு} அழைக்கப்பட்ட பயங்கரமான அந்தக் கடும் ஆயுதத்தைக் {நாராயணய ஆயுதத்தைக்} கண்ட மன்னர்கள் அனைவரும் அச்சமடைந்து பெரும் வலியை {துன்பத்தை} உணர்ந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(6)
[1] “அதாவது, “விலங்குகள் பாண்டவர்களைத் தங்கள் வலப்புறத்தில் கொண்டன” என இங்கே விளக்குகிறார் கங்குலி. வேறொரு பதிப்பில், “மிருகங்கள் பாண்டவ சேனையை அப்ரதக்ஷிணமாகச் சுற்றி வந்தன” என்றிருக்கிறது. தக்ஷிணம் என்பது தெற்குத் திசை அல்லது வலப் பக்கத்தைக் குறிக்கும்; ப்ரதக்ஷிணம் என்பது வலப்பக்கமாகச் சுற்றுதல்; அப்ரதக்ஷிணம் என்பது இடப்பக்கமாகச் சுற்றுதல்; அதாவது ஒரு பொருளை இடப்பக்கமாகக் கொண்டு அதைச் சுற்றுதல் என்று பொருள். இதுவே சரியாகப் படுகிறது.
திருதராஷ்டிரன், “ஓ! சஞ்சயா, துயரால் எரிந்தவனும், தன் தந்தையின் படுகொலையைப் பொறுத்துக் கொள்ள முடியாதவனுமான துரோணர் மகனால் {அஸ்வத்தாமனால்} அணிதிரட்டப்பட்டு, மீண்டும் போரில் முன்னேறி வரும் கௌரவர்களைக் கண்டபோது, திருஷ்டத்யும்னனின் பாதுகாப்புக்காக என்ன ஆலோசனையைப் பாண்டவர்கள் பின்பற்றினர்?” என்று கேட்டான்.(7,8)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “முன்பு தப்பி ஓடிய தார்தராஷ்டிரர்கள் கடும்போருக்கு மீண்டும் தயாராவதைக் கண்ட யுதிஷ்டிரன், அர்ஜுனனிடம்,(9) “வலிமைமிக்க அசுரன் விருத்திரன் வஜ்ரதாரியால் {இந்திரனால்} கொல்லப்பட்டதைப் போல ஆசானான துரோணர் போரில் திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டதும்(10) உற்சாகத்தை இழந்தவர்கள் (குருக்கள்), ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, வெற்றியின் மீதான நம்பிக்கைகள் அனைத்தையும் கைவிட்டனர். தங்களைக் காத்துக் கொள்ள விரும்பிய அவர்கள் அனைவரும், போரில் இருந்து தப்பி ஓடினர்.(11)
சில மன்னர்கள், பார்ஷினி சாரதிகள் இல்லாமல், கொடிமரங்கள், கொடிகள், குடைகள் ஆகியவற்றை இழந்து, தங்கள் கூபரங்களும், கூடுகளும் உடைந்து, தங்கள் ஆபரணங்கள் தளர்ந்த நிலையில் பீதியடைந்து, தங்கள் உணர்வுகளை இழந்து, தங்கள் தேர்களின் குதிரைகளைக் காலால் தாக்கி ஒழுங்கற்ற வழிகளில் தேர்களைச் செலுத்தி, அவசரமாகத் தப்பி ஓடினர்.(12,13) அச்சத்தால் பீடிக்கப்பட்ட சிலர், உடைந்த நுகத்தடிகள், சக்கரங்கள், அக்ஷங்கள் {ஏர்க்கால்கள்} ஆகியவற்றுடன் கூடிய தேர்களில் ஏறி தப்பி ஓடினர். குதிரைகளில் ஏறிய சிலர், சேணங்களில் இருந்து தங்கள் பாதி உடல் இடம்பெயர்ந்த நிலையிலேயே சுமந்து செல்லப்பட்டனர்.(14) தங்கள் இருக்கையில் இருந்து விலகி, யானைகளில் கழுத்தோடு சேர்த்து கணைகளால் தைக்கப்பட்ட நிலையில் இருந்த சிலர், அவ்விலங்குகளால் வேகமாகச் சுமந்து செல்லப்பட்டனர்.
சிலர், சுற்றிலும் கணைகளால் சிதைந்து பீடிக்கப்பட்டிருந்த யானைகள் மிதித்ததால் கொல்லப்பட்டனர்.(15) சிலர் ஆயுதங்களை இழந்து, கவசங்களை இழந்து, தங்கள் வாகனங்களில் இருந்தும், குதிரைகளிலிருந்தும் பூமியில் விழுந்தனர். சிலர் தேர்ச்சக்கரங்களால் வெட்டப்பட்டனர், அல்லது குதிரைகள் மற்றும் யானைகளால் நசுக்கப்பட்டனர்.(16) தங்கள் தந்தையர், மகன்கள் ஆகியோரை உரக்க அழைத்த சிலர், ஒருவரையொருவர் அடையாளங்காண முடியாமல், துயரால் தங்கள் சக்தி அனைத்தையும் இழந்து அச்சத்தால் தப்பி ஓடினர்.(17) சிலர் தங்கள் மகன்களையும், தந்தைமாரையும், நண்பர்களையும், சகோதரர்களையும் (வாகனங்களில்) அமர்த்தி, அவர்களது கவசங்களைக் கழற்றி, நீரால் கழுவி கொண்டிருப்பதும் காணப்பட்டது.(18)
துரோணர் கொல்லப்பட்டதும், பரிதாப நிலையை அடைந்த (குரு) படை மிக வேகமாகத் தப்பி ஓடியது. அப்படியிருக்கையில் யாரால் மீண்டும் அஃது அணிதிரட்டப்படுகிறது? நீ அறிந்தால் அஃதை எனக்குச் சொல்வாயாக.(19) தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியோடு கலந்து குதிரைகளின் கனைப்பொலிகளும், யானைகளின் பிளிறல்களும் உரக்கக் கேட்கின்றன.(20) குரு {குரு படை எனும்} பெருங்கடலில் உண்டாகும் இந்தக் கடும் ஒலிகள் மீண்டும் மீண்டும் அதிகரித்து, என் துருப்புகளை நடுங்கச் செய்கின்றன.(21) மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதும் இப்போது கேட்கப்படுவதுமான இந்தப் பயங்கர ஆரவாரமானது, இந்திரனைத் தலைமையாகக் கொண்ட மூவுலகங்களையும் விழுங்கிவிடுவதைப் போலத் தோன்றுகிறது.(22) துரோணர் வீழ்ந்ததும் கௌரவர்களின் பொருட்டு (நம்மை எதிர்த்து) வாசவனே {இந்திரனே} வருவதாகத் தெளிவாகத் தெரிகிறது.(23) ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, இந்தப் பயங்கரப் பேரொலியைக் கேட்டு நமக்கு மயிர்க்கூச்சம் ஏற்படுகிறது, நமது தேர்வீரர்களில் முதன்மையானோர் அனைவரும் கவலையால் பீடிக்கப்படுகின்றனர்.(24) பயங்கரமானதும், பெருகிவருவதுமான இந்தப் படையைத் தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போலவே மீண்டும் திரும்பச் செய்யும் அந்த வலிமைமிக்கத் தேர் வீரர் யார்?” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(25)
அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, “கடும் சாதனைகளை அடைவதற்காகத் தங்களுக்குள் பேசிக்கொண்ட கௌரவர்கள், எவருடைய சக்தியை நம்பி தங்கள் சங்குகளை முழக்கி அமைதியாகக் காத்திருக்கிறார்களோ,(26) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, ஆயுதமற்றிருந்த ஆசானின் {துரோணரின்} வீழ்ச்சிக்குப் பிறகு, தார்தராஷ்டிரர்களை அணிதிரட்டி முழங்கிக் கொண்டிருப்பவர் எவர் என நீர் ஐயுறுகிறீரோ,(27) பணிவையும், வலிமையான கரங்களையும், யானையின் நடையையும், புலியின் முகத்தையும் கொண்டு, எப்போதும் கடும் சாதனைகளை அடைந்து குருக்களின் அச்சங்களை எவர் விலக்குகிறாரோ, எவர் பிறந்ததும், உயர்ந்த தகுதிகளைக் கொண்ட பிராமணர்களுக்கு ஆயிரம் பசுகளைத் துரோணர் கொடுத்தாரோ, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, எவர் இவ்வளவு உரக்க முழங்குகிறாரோ, அவர் அஸ்வத்தாமன் ஆவார்.(29)
அந்த வீரர் {அஸ்வத்தாமர்}, தான் பிறந்ததும், இந்திரனின் குதிரையை {உச்சைஸ்ரவத்தைப்} போலக் கனைத்து, அவ்வொலியால் மூவுலகங்களையும் நடுங்கச் செய்தவர் ஆவார்.(30) அவ்வொலியைக் கேட்டதும், ஓ! தலைவா {யுதிஷ்டிரரே}, (உரக்கப் பேசிய) கண்ணுக்குப் புலப்படாத உயிரினம் ஒன்று அவருக்கு அஸ்வத்தாமன் (குதிரைக் குரலோன்) என்ற பெயரைச் சூட்டியது. ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, அந்த வீரரே {அஸ்வத்தாமரே} இன்று முழங்கிக் கொண்டிருக்கிறார்.(31) ஏதோ துரோணர் பாதுகாவலர் எவரும் அற்றவர் என்பது போல மிகக் கொடுரச் செயலொன்றால் அவரை அந்தப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} தாக்கினான். துரோணரின் பாதுகாவலர் அதோ இருக்கிறார்.(32) அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, என் ஆசானின் தலைமயிரைப் பற்றினான். எனவே, தமது ஆற்றலில் நம்பிக்கை கொண்டுள்ள இந்த அஸ்வத்தாமன் அவனை {திருஷ்டத்யும்னனை} ஒருபோதும் மன்னிக்க மாட்டார்.(33) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, அரசுக்காக நீர் உமது ஆசானிடமே பொய்யுரைத்தீர். அறவிதிகளை நீர் நன்கறிந்தவராயிருப்பினும், மிகவும் பாவம் நிறைந்த ஒரு செயலை நீர் செய்தீர்.(34) வாலியின் கொலையால் ராமனுக்கு விளைந்ததைப் போலத்[2] துரோணரின் கொலையால் விளைந்த உமது கெடுபுகழானது {அபகீர்த்தி}, அசைவன மற்றும் அசையாதன ஆகிய உயிரினங்களுடன் கூடிய மூவுலகங்களிலும் அழிவில்லாததாக இருக்கும்.(35)
[2] “தசரதன் மகனான ராமன், தான் நாடு கடத்தப்பட்டிருந்த காலத்தில், குரங்குத் தலைவன் வாலி சுக்ரீவனோடு போரிட்டுக் கொண்டிருந்தபோது அவனை {வாலியை} ராமன் கொன்றான். வாலியோ ராமனுக்கு எந்தத் தீங்கையும் இழைத்தவனல்ல. எனவே, அந்தச் செயல் ராமனின் மீதான களங்கமாகவே எப்போதும் கருதப்படுகிறது” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
“பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} அனைத்து அறங்களையும் {நற்குணங்களையும்} கொண்டவன்; அதையும் தவிர அவன் என் சீடனுமாவான். அவன் {யுதிஷ்டிரன்} என்னிடம் ஒருபோதும் பொய் பேச மாட்டான்” என்றே துரோணர் உம்மைக் குறித்து நினைத்திருந்தார். இதை நினைத்தே நீர் சொன்னதில் அவர் நம்பிக்கைக் கொண்டார்.(36) அஸ்வத்தாமனின் மரணத்தைக் குறித்துச் சொல்லும்போது யானை என்ற வார்த்தையைச் சேர்த்து நீர் சொல்லியிருந்தாலும், ஆசானுக்கு நீர் சொன்ன அந்தப் பதிலானது, உண்மையின் போர்வையில் இருந்த பொய்மையே ஆகும்.(37) உம்மால் இப்படிச் சொல்லப்பட்டதும், பலமிக்க அந்தத் துரோணர் தமது ஆயுதங்களை வைத்துவிட்டு, (அனைத்தையும்) அலட்சியம் செய்துவிட்டு, மிகவும் கலங்கிப் போய், கிட்டத்தட்ட தமது உணர்வுகளையும் இழந்தார் என்பதை நீர் கண்டீர்.(38)
உண்மையில் தமது மகன் {அஸ்வத்தாமன்} மீது பாசம் நிறைந்திருந்த அந்த ஆசான் {துரோணர்}, துயரில் நிறைந்து, போரிடும் விருப்பமின்றி இருந்தபோது, அறநெறிகள் அனைத்தையும் கைவிட்ட ஒரு சீடனே அவரை இவ்வாறு கொன்றிருக்கிறான். (39) ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்ட உமது ஆசானை, நேர்மையற்ற முறையில் கொல்லச் செய்த நீர், உமது ஆலோசகர்கள் அனைவருடனும் கூடி உம்மால் முடிந்தால் இப்போது பிருஷதன் மகனைப் {திருஷ்டத்யும்னனைப்} பாதுகாத்துக் கொள்வீராக.(40) கோபமும், துயரமும் கொண்டிருக்கும் ஆசான் மகனால் {அஸ்வத்தாமரால்} தாக்கப்படும் பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை}, ஒன்று சேர்ந்திருப்பவர்களான நம் அனைவராலும் இன்று காக்க முடியாது.(41) மனிதசக்திக்கு அப்பாற்பட்ட எவர் உயிரினங்கள் அனைத்திடமும் நட்பை வெளிக்காட்டும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறாரோ, அந்த வீரர் {அஸ்வத்தாமர்} தமது தந்தையின் {துரோணரின்} தலைமயிர் பற்றப்பட்டதைக் கேட்டு, இன்றைய போரில் நம் அனைவரையும் நிச்சயமாக எரிக்கப் போகிறார்.(42)
ஆசானின் {துரோணரின்} உயிரைக் காப்பதற்காக உச்ச குரலில் நான் மீண்டும் மீண்டும் கதறினாலும், என் கதறல்களை அலட்சியம் செய்து, அறநெறியைக் கைவிட்டு அந்த ஆசானின் உயிரை ஒரு சீடனே எடுத்துவிட்டான்.(43) நாம் அனைவரும் நம் வாழ்வின் பெரும்பங்கைக் கடந்துவிட்டோம். நமக்கு எஞ்சியிருக்கும் நாட்களும் சொற்பமே. நாம் செய்த இந்த அநீதிமிக்கச் செயலானது எஞ்சியிருப்பதையும் களங்கப்படுத்தியிருக்கிறது.(44) நம் மீது கொண்ட பாசத்தின் விளைவாலேயே அவர் {துரோணர்} நமக்கு ஒரு தந்தையைப் போல இருந்தார். சாத்திர விதிகளின்படியும் அவர் நமக்குத் தந்தையாகவே இருந்தார். இருப்பினும் அந்த நமது ஆசான் {துரோணர்}, சொற்பகால அரசுரிமைக்காக நம்மால் கொல்லப்பட்டார்.(45)
ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, திருதராஷ்டிரர், இந்த மொத்த பூமியையும், அதைவிட மதிப்புமிக்கத் தமது பிள்ளைகள் அனைவரையும் பீஷ்மர் மற்றும் துரோணரிடம் கொடுத்தார்.(46) நம் பகைவரால் {திருதராஷ்டிரரால்} இவ்வாறு கௌரவிக்கப்பட்டாலும், அவரிடம் {திருதராஷ்டிரரிடம்} இருந்து இவ்வளவு செல்வத்தையும் பெற்றிருந்தாலும், அந்த ஆசான் {துரோணர்} நம்மிடம் தமது சொந்தப் பிள்ளைகளைப் போலவே அன்பு செலுத்தினார்.(47) மங்காத சக்தியும் ஆற்றலும் கொண்ட அந்த ஆசான் {துரோணர்}, உமது வார்த்தைகளால் தூண்டப்பட்டுத் தமது ஆயுதங்களைக் கீழே வைத்ததால் மட்டுமே போரில் கொல்லப்பட்டார். அவர் {துரோணர்} போரில் ஈடுபட்டிருக்கையில், இந்திரனாலும் அவரைக் கொல்ல முடியாது.(48) வயதால் மதிப்புக்குரிய அந்த ஆசான் நமது நன்மையில் அர்ப்பணிப்புள்ளவராகவே எப்போதும் இருந்தார். எனினும் அலட்சியநடத்தையால் களங்கப்பட்டிருக்கும் அநீதியாளர்களான நாம் அவருக்குத் {துரோணருக்குத்} தீங்கு செய்யத் தயங்கவில்லை.(49)
ஐயோ, அரசுரிமையின் இன்பங்களை அனுபவிக்கும் விருப்பத்தால் உந்தப்பட்ட நாம் அந்தத் துரோணரைக் கொன்றதால் மிகக் கொடூரமான கடும்பாவத்தை இழைத்துவிட்டோம்.(50) என் ஆசான் {துரோணர்}, அவர் மீது நான் கொண்டிருக்கும் அன்பின் விளைவாக, தந்தை, சகோதரன், பிள்ளைகள், மனைவி, உயிர் ஆகிய அனைத்தையும் (அவரின் பொருட்டு) நான் கைவிடுவேன் என்ற எண்ணத்திலேயே எப்போதும் இருந்தார்.(51) எனினும், அரசுரிமையின் மீது கொண்ட விருப்பத்தால் தூண்டப்பட்டிருந்த நான் அவர் கொல்லப்படும்போது தலையிடாமல் இருந்துவிட்டேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, இந்த எனது குற்றத்திற்காக நரகத்தில் ஏற்கனவே மூழ்கிவிட்டவனான நான் வெட்கத்தை அடைகிறேன்.(52) வயதால் மதிப்புமிக்கவரும், எனது ஆசானும், தமது ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டவரும், ஒரு பெரும் தவசியைப் போல அப்போது யோகத்திற்குத் தன்னை அர்ப்பணித்தவருமான ஒரு பிராமணரை நான் கொல்ல செய்ததால், உயிர்வாழ்வதை விட எனக்கு மரணமே விரும்பத்தக்கது” என்றான் {அர்ஜுனன்}.(53)
--------------------------------------------------------------------------------
துரோணபர்வம் பகுதி 197-ல் உள்ள சுலோகங்கள் : 53
--------------------------------------------------------------------------------
துரோணபர்வம் பகுதி 197-ல் உள்ள சுலோகங்கள் : 53
ஆங்கிலத்தில் | In English |