Dandadhara, the chief of the Magadhas! | Karna-Parva-Section-18 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : அர்ஜுனனுக்கும் தண்டதாரனுக்கும் இடையில் நடைபெற்ற மோதல்; தண்டதாரனையும், அவனது தம்பி தண்டனையும் கொன்ற அர்ஜுனன்; அர்ஜுனனைத் துதித்த போர்வீரர்கள்; மீண்டும் சம்சப்தகர்களை நோக்கி விரைந்த அர்ஜுனன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில், பாண்டவப்படையின் வடபுறத்தில், தண்டதாரனால் கொல்லப்படும் காலாட்படை வீரர்கள், யானைகள், குதிரைகளாலும் மற்றும் தேர்களாலும் அங்கே உரத்த ஆரவாரம் எழுந்தது.(1) கருடன் அல்லது காற்றின் வேகத்தைக் கொண்ட குதிரைகளை நிறுத்தாமலேயே தேரைத் திருப்பிய கேசவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனிடம்,(2) “(எதிரிகளை) நொறுக்கும் யானையுடன் கூடிய மகதர்களின் தலைவன் {தண்டதாரன்} ஆற்றலில் ஒப்பற்றவனாக இருக்கிறான். பயிற்சியிலும், வலிமையிலும், அவன் பகதத்தனுக்குச் சற்றும் குறைவில்லாதவனாவான்.(3) அவனை {தண்டதாரனை} முதலில் கொன்ற பிறகு, சம்சப்தகர்களைக் கொல்வாயாக” என்று சொன்னான். அந்தக் கேசவன் {கிருஷ்ணன்}, தனது சொற்களின் முடிவில், பார்த்தனை {அர்ஜுனனை} தண்டதாரனின் முன்னிலைக்குக் கொண்டு சென்றான்.(4)
அங்குசத்தைக் கையாள்வதில் ஒப்பற்றவனும்[1], கோள்களனைத்தின் மத்தியில் தலையில்லாத கோளான கேதுவைப் போன்றவனுமான அந்த மகதர்களின் தலைவன் {தண்டதாரன்}, மொத்த உலகையும் அழிக்கும் கடும் வால் விண்மீனைப் போல, பகைவர் படையை அழித்துக் கொண்டிருந்தான்.(5) எதிரிகளைக் கொல்வதும், நன்கு ஆயத்தம் செய்யப்பட்டதும், யானையின் முகத்தையும், வடிவையும் கொண்ட ஒரு தானவனைப் போலத் தெரிந்ததும், மேகக்கூட்டங்களின் திரளுக்கு ஒப்பாகப் பிளிறியதுமான யானையைச் செலுத்திய அந்தத் தண்டதாரன், தன் கணைகளால் ஆயிரக்கணக்கான தேர்களையும், குதிரைகளையும், யானைகளையும், மனிதர்களையும் அழித்துக் கொண்டிருந்தான்.(6) தன் பாதங்களைக் கொண்டு தேர்களை நசுக்கிய அந்த யானையும் கூட, பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களையும், அவர்களது குதிரைகள் மற்றும் சாரதிகளையும் பூமியில் நசுக்கியது. அந்த முதன்மையான யானை, தன்னிரு முன்னங்கால்கள் மற்றும் துதிக்கையைப் பயன்படுத்தி யானைகள் பலவற்றைக் கொன்றது. உண்மையில் அவ்விலங்கு மரணச் சக்கரத்தை {காலச்சக்கரத்தைப்} போல நகர்ந்து கொண்டிருந்தது.(7) உருக்கு கவசங்களால் அலங்கரிக்கப்பட்ட மனிதர்களையும், அவர்களது குதிரைகள் மற்றும் காலாட்படைவீரர்களையும் கொன்ற அந்த மகதர்களின் தலைவன் {தண்டதாரன்}, தடித்த நாணல்களைப் படபடக்கும் ஒலியுடன் நொறுக்குவதைப் போலத் தனக்குச் சொந்தமானதும், வலிமையானதுமான அந்த முதன்மையான யானையைக் கொண்டு அவர்களைப் பூமியில் நசுக்கினான்.(8)
[1] “இங்கே குறிப்பிடப்படும் அங்குசக்கிரகம் Ankusa-graha என்பது “அங்குசத்தைக் கையாள்தல்” என்ற பொருளைத் தரும். விகாச கிரகம் Ankusa-graha என்பது தலையற்ற கோளான கேது, அல்லது பேராபத்தைவிளைவிக்கும் கோளான கடும் வால்விண்மீன் என்ற பொருளைத் தரும் என்று நீலகண்டர் விளக்குகிறார்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அப்போது முதன்மையான தேரில் ஏறிவந்த அர்ஜுனன், ஆயிரக்கணக்கான தேர்கள், குதிரைகள், யானைகள் நிறைந்ததும், எண்ணற்ற மிருதங்கங்கள், பேரிகைகள், சங்குகள் ஆகியவற்றின் இசையால் எதிரொலிக்கப்பட்டதும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி, வில்லின் நாண்கயிறினால் உண்டான நாணொலி, உள்ளங்கையொலி ஆகியவற்றின் ஆரவாரத்துடன் கூடியதுமான படைக்கு மத்தியில் இருந்த அந்த யானைகளின் இளவரசனை நோக்கி வேகமாக விரைந்தான்.(9) பிறகு தண்டதாரன், முதன்மையான பன்னிரு கணைகளால் அர்ஜுனனையும், பதினாறால் ஜனார்த்தனனையும் {கிருஷ்ணனையும்}, மூன்றால் குதிரைகள் ஒவ்வொன்றையும் துளைத்து, உரக்க முழங்கி, மீண்டும் மீண்டும் சிரித்தான்.(10) அப்போது பார்த்தன் {அர்ஜுனன்}, பெரும் எண்ணிக்கையிலான அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} தன் எதிரியின் வில்லை அதன் நாண்கயிற்றோடும், அதில் பொருத்தப்பட்ட கணையோடும் அறுத்து, நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்த அவனது கொடிமரத்தையும், அவனது விலங்கின் வழிகாட்டிகளையும், அவ்விலங்கைப் பாதுகாத்த காலாள்களையும் வெட்டினான். இதனால், அந்தக் கிரிவ்ரஜத் [2] தலைவன் {தண்டதாரன்} சினத்தால் நிறைந்தான்.(11) ஆவலால் கன்னக்கதுப்பு {கபோலம்} பிளந்ததும் {மதநீர் ஒழுகியதும்}, மேகத்திரள்களுக்கு ஒப்பானதும், காற்றின் வேகத்துடன் கூடியதுமான தன் யானையைக் கொண்டு ஜனார்த்தனனை கலங்கடிக்க விரும்பிய தண்டதாரன், பல வேல்களால் தனஞ்சயனை {அர்ஜுனனைத்} தாக்கினான்.(12)
[2] கிரிவ்ரஜம், மகதத்தின் தலைநகரமாகும்.
அப்போது கிட்டத்தட்ட அதே நேரத்திலேயே அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, ஒரு யானையின் துதிக்கையைப் போலத் தெரிந்த தன் எதிரியின் இரு கரங்களில் ஒவ்வொன்றையும், முழு நிலவுக்கு ஒப்பான தலையையும் கத்தித் தலை கணைகள் {க்ஷுரப்ரங்கள்} மூன்றைக் கொண்டு வெட்டினான்.(13) தங்கக் கவசத்துடன் கூடிய அந்த யானை, தங்கத்தால் அலங்கரிக்கபட்ட பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் மறைக்கப்பட்டு, இரவில் சுடர்விட்டெரியும் காட்டுத்தீயில், செடிகள் மற்றும் மரங்களுடன் கூடிய மலையொன்றைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(14) வலியால் பீடிக்கப்பட்டு, மேகங்களின் திரளைப் போல முழங்கி, மிகவும் பலவீனமடைந்திருந்த அந்த யானை, பிளிறிக் கொண்டே தள்ளாடிய நடையுடன் திரிந்து, இடியால் பிளக்கப்பட்ட மலைச் சிகரம் ஒன்றைப் போலத் தன் கழுத்தில் இருந்த வழிகாட்டியுடன் கீழே விழுந்தது.(15)
போரில் தன் அண்ணன் வீழ்ந்ததும், தண்டனானவன், இந்திரனின் தம்பியையும் {விஷ்ணுவான கிருஷ்ணனையும்}, தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} கொல்ல விரும்பி, பனி போன்ற வெண்மையானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், இமயச் சிகரத்தைப் போலத் தெரிந்ததுமான தன் யானையில் அவர்களை எதிர்த்துச் சென்றான்.(16) கதிர்களைப் போலப் பிரகாசமானவையும், கூராக்கப்பட்டவையுமான மூன்று வேல்களால் ஜனார்த்தனனைத் {கிருஷ்ணனைத்} தாக்கிய தண்டன், ஐந்தால் அர்ஜுனனையும் தாக்கி உரக்க முழங்கினான். பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தண்டனின் இரு கரங்களையும் உரக்க முழங்கிய படியே அறுத்தான்.(17) கத்தித் தலை கணைகளால் {க்ஷுரப்ரங்களால்} அறுக்கப்பட்டவையும், சந்தனக்குழும்பால் பூசப்பட்டவையும், அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், வேல்களைப் பிடித்திருந்தவையுமான அவ்விரு கரங்களும், யானையின் முதுகில் இருந்து விழுந்த அதே வேளையில், மலைச்சிகரத்தில் இருந்து கீழே விழுபவையும், பெரும் அழகுடன் கூடியவையுமான பெரும் பாம்புகள் இரண்டைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தன.(18)
கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனால் (பார்த்தனால் {அர்ஜுனனால்}) பிறைவடிவ {அர்த்தச்சந்திரக்} கணையொன்றைக் கொண்டு வெட்டப்பட்ட தண்டனின் தலையும் யானையின் முதுகில் இருந்து கீழே பூமியில் விழுந்தது. குருதியால் நனைந்து கிடந்த அஃது, அஸ்தமலையில் இருந்து மேற்குப் பகுதியை நோக்கி விழுந்த சூரியனைப் போலப் பிரகாசிப்பதாகத் தெரிந்தது.(19) சூரியக் கதிர்களின் பிரகாசத்துடன் கூடிய சிறந்த கணைகள் பலவற்றைக் கொண்டு பார்த்தனால் துளைக்கப்பட்டதும், வெண்முகில்களின் திரளுக்கு ஒப்பானதுமான அந்த எதிரியின் {தண்டனின்} யானை, இடியால் பிளக்கப்பட்ட இமாலயச் சிகரத்தைப் போல, பேரொலியுடன் கீழே விழுந்தது.(20) அப்போது வெற்றியடையவல்லவையும், ஏற்கனவே கொல்லப்பட்ட {யானைகள்} இரண்டிற்கு ஒப்பானவையுமான வேறு பெரும் யானைகள், அந்தப் போரில் வெட்டப்பட்ட (தண்டனுக்கும், தண்டாதரனுக்கும் சொந்தமான) அந்த இரண்டைப் போலவே சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} வெட்டப்பட்டன. இதனால் அந்தப் பரந்த எதிரிப்படை பிளந்தது.(21) அடர்த்தியான கூட்டங்களாக இருந்த யானைகள், தேர்கள், குதிரைகள் ஆகியவையும், மனிதர்களும் ஒருவரோடொருவர் மோதி களத்தில் விழுந்தனர். தள்ளாடிக் கொண்டிருந்த அவை, ஒன்றோடொன்று பயங்கரமாக மோதிக் கொண்டு உயிரற்றுக் கீழே விழுந்தன.(22)
அப்போது புரந்தரனை {இந்திரனைச்} சூழ்ந்து கொள்ளும் தேவர்களைப் போல அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்ட அவனது படைவீரர்கள், “ஓ! வீரா, காலனைக் கண்ட உயிரினங்களைப் போல நாங்கள் அஞ்சிய பகைவன் உன்னால் கொல்லப்பட்டது நற்பேறாலேயே.(23) ஓ! எதிரிகளைக் கொல்பவனே, வலிமைமிக்க எதிரிகளால் ஆழமாகப் பீடிக்கப்பட்ட மக்களை அச்சத்தில் இருந்து நீ பாதுகாக்கவில்லையெனில், எவர்களது மரணத்தில் இப்போது மகிழ்கிறோமோ அந்த நமது எதிரிகளே இந்நேரத்தில் மகிழ்ந்து கொண்டிருப்பார்கள்” என்றனர்.(24) நண்பர்களும், கூட்டாளிகளும் சொன்ன இவற்றையும், இன்னும் பிற வார்த்தைகளையும் கேட்ட அர்ஜுனன், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், அவரவர் தகுதிகளுக்கேற்ப அம்மனிதர்களை வழிபட்டு, மீண்டும் சம்சப்தகர்களை எதிர்த்துச் சென்றான்” {என்றான் சஞ்சயன்}[3].(25)
[3] வேறொரு பதிப்பில் இந்தப் பகுதி கர்ண பர்வத்தின் 54வது பகுதியாக வருகிறது.
ஆங்கிலத்தில் | In English |